being created

நீலக்குயில் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 00:52, 28 October 2023 by Jayashree (talk | contribs)
16467182841226154252539621116125.jpg

நீலக்குயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1970-களில் வெளியான ஒரு தமிழ் இலக்கியச் சிற்றிதழ்.

தோற்றம்

இடைச்செவல் கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன் மற்றும் கு. அழகிரிசாமி ஆகியோரின் நண்பரான எஸ். அண்ணாமலை கோவில்பட்டியின் வணிக பிரமுகர்களில் ஒருவர். இலக்கிய ஆர்வம் கொண்டவர். தன்னிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை மூலதனமாக வைத்து இதழைத் தொடங்கினார்.

அண்ணாமலையை ஆசிரியராகக் கொண்டு நீலக்குயில் மே 1,1974 முதல் வெளிவரத் துவங்கியது.

பெயர்க் காரணம்

பி.பாஸ்கரன் இயக்கி சத்யன் நடித்த 'நீலக்குயில்' என்ற மலையாளத் திரைப்படம் 1954-ல் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. மலையாளத்தின் முதல் தலித் திரைப்படமாகவும் அறியப்படுகிறது. இதன் திரையாக்கம் மற்றும் பாடல்களினால் கவரப்பட்ட எஸ். அண்ணாமலை தன் பத்திரிக்கைக்கு 'நீலக்குயில்' என்ற பெயரைச் சூட்டினார்.

நோக்கம்

"உண்மை இலக்கியங்களுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் வெளியிடப்படுவதுதான் இந்த இலக்கியப் பத்திரிகை" என்று நீலக்குயில் இதழின் நோக்கம் அதன் முதல் இதழில் அறிவிக்கப்பட்டது.

படைப்புகள்/படைப்பாளிகள்

புதுக் கவிதை, சிறுகதை, கட்டுரைகளில் 'நீலக்குயில்' கவனம் செலுத்தியது.

முதல் இதழ்

தனி அட்டை இல்லாமல் வெளியான நீலக்குயிலின் முதலாவது இதழ் அன்றைய விகடன் அளவில் 22 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அதில், காசி விஸ்வநாதன், தேவதச்சன், பரணிகுமார், பானு கவிதைகள் (புதுக் கவிதை), பூமணி, கௌரிஷங்கர் கதைகள், 'குறியீட்டுக் கொள்கை ( ஸிம்பலிஸிம்) பற்றிய ஒரு கட்டுரை (கோபி ) ஆகியவை இடம் பெற்றிருந்தன.

கவிதைகள்

. நீல பத்மநாபன், துரை சீனிச்சாமி, கல்யாண்ஜி, கே. ராஜகோபால், சி. ஆர். ரவீந்திரன், ந. ஜயபாஸ்கரன், ஷண்முக சுப்பையா, சே. சேவற்கொடியோன், தேவதேவன், தேவதச்சன் மற்றும் பலரது கவிதைகள் வெளியாயின. இலங்கை எழுத்தாளர் சிறீபதி புதுக் கவிதை பற்றி எழுதிய கட்டுரையும் பிரசுரமானது.

நகுலன் அஞ்சலி என்ற தலைப்பில் படைத்த ஒரு நீண்ட கவிதை சோதனை முயற்சி தொடர்ந்து வெளிவந்தது.

சிறுகதைகள்

கி. ராஜநாராயணன், பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், நீல பத்மநாபன், மாலன், வா. மூர்த்தி, சிந்துஜா, இரா. கதைப்பித்தன், காசியபன் மற்றும் பல புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றன. வல்லிக்கண்ணன்கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்தன. ஒரு கதையும் அச்சாயிற்று.

சில சோவியத் சிறுகதைகளும் இடம்பெற்றன..

கட்டுரைகள்

காரை சிபி, தமிழவன் கட்டுரைகளையும் நீலக்குயில் வெளியிட்டது. விமர்சனக் கட்டுரைகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியது. அந்தச் சமயத்தில் வெளிவந்த பல நூல்களைப் பற்றிய விரிவான, நேர்மையான கருத்துகளை எழுத்தாளர்கள் கட்டுரையாக்கியிருக்கிறார்கள். வல்லிக்கண்ணனின் கட்டுரைகள் இடம்பெற்றன.

கி. ராஜநாராயணன் சேகரித்த தமிழ்நாட்டு நாடோடிப் பாடல்கள் சில இதழ்களில் வெளிவந்தன. ஆராமுதம் எழுதிய ஒரு நாடகமும் வெளிவந்திருக்கிறது. சோவியத் சிறுகதைகள் சில நீலக்குயில் இதழில் வெளியானது.

23-வது இதழில் 'சிறந்த எழுத்துக்களைப் படைத்த பசித்த வயிறுகள்- ஒரு குறிப்பு, ஏ. ஏ. ஹெச். கே. கோரி கவிதை, வல்லிக்கண்ணன் கதை 'ரசிகன்', அகல்யாவின் அபிப்பிராயங்கள்; சோவியத் வீர விருது பெற்ற தென்னிந்தியர் பற்றிய ஏ. ஏஸ். மூர்த்தி கட்டுரை, கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலிலிருந்து சில பக்கங்கள், உமாபதி கவிதை 'என் தம்பி'- போன்றவை வெளியாயின.

சிறப்பிதழ்

முதல் ஆண்டு முடிந்ததும், இரண்டாவது ஆண்டின் முதல் இதழ் 1975-ஆம் ஆண்டு மே மாதம் "கடித இலக்கியச் சிறப்பிதழ்" என வெளிவந்தது.

"தமிழ் இலக்கிய வகைகளில் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலில் செய்யப்பட்ட முயற்சியே இந்தக் தடித இலக்கிய சிறப்பிதழ். இதில் வெளியாகியுள்ள கடிதங்களை எழுதியுள்ளவர்கள், தங்களது இலக்கிய அனுபவத்தால், எழுத்தாற்றலால் தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளவர்கள். நமது பெரு மதிப்புக்கும் பேரன்புக்கும் உரியவர்கள். இதில் வெளியாகியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் மிகச்சிறப்பாக அருமையாக எழுதப்பட்டுள்ளதால் இவற்றை இங்கு வெளியிடுவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறோம்" என்ற குறிப்புடன் வெளிவந்த சிறப்பிதழில் ரசிகமணி டி.கே.சி. வி.வி. சீனிவாச அய்யங்காருக்கு எழுதியது, ராஜாஜி டி.கே.சி.க்கு எழுதியவை, நீதிபதி எஸ். மகாராஜன் டி.கே.சி.க்கு எழுதியது போன்ற கடிதங்களுடன், மேலும் கி. ராஜநாராயணன், ஆ. மாதவன், தீம். நடராஜன், டி.எஸ். சேதுராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, கல்யாண்ஜி, வண்ணநிலவன் ஆகியோரது கடிதங்களும் இடம் பெற்றிருந்தன.

மதிப்பீடு

கோவில்பட்டியிலிருந்து வெளிவரத் தொடங்கிய நீலக்குயில், சர்ச்சைகளைப் பெரும்பாலும் தவிர்த்த ஓர் இலக்கியச் சிற்றிதழாக மற்ற அம்சங்களில் வழக்கமான இதழாக அமைந்தது. அது வெளியிட்ட 'கடித இலக்கியச் சிறப்பிதழ்' சிற்றிதழ்ப் போக்கில் வித்தியாசமான முயற்சி என கவிஞர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்டுள்ளார்.

நிறுத்தம்

கோபல்ல கிராமம்' நாவல் பற்றி நகுலன் எழுதிய மதிப்புரை, சீனக் கவிஞன் வாங் வெய் கவிதைகள்; தமிழில் துரை சீனிச்சாமி மற்றும் சில கதைகள் ஆகியவற்றைத் தாங்கி 1976-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த 24- வது நீலக்குயில் இதழ்தான் கடைசி இதழாகும். 25-வது இதழ் தயாரிக்கப்பட்டது. ஆனாலும் அது வாசகர்களுக்கு அனுப்பப்படவில்லை.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.