சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை: Difference between revisions
No edit summary |
Subhasrees (talk | contribs) mNo edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Chidambaram Vaidhyanatha Pillai.jpg|alt=சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்|thumb|சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள் ]] | |||
சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (1884 -1937) பல்லவி வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர். | சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (1884 -1937) பல்லவி வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர். | ||
== இளமை, கல்வி == | == இளமை, கல்வி == |
Revision as of 00:36, 13 August 2022
சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (1884 -1937) பல்லவி வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர்.
இளமை, கல்வி
வைத்தியநாத பிள்ளை சிதம்பரம் அருகே உள்ள ஆச்சாபுரம் என்னும் கிராமத்தில் 1884-ல் தருமலிங்கத் தவில்காரர் - சௌந்தரவல்லியம்மாள் இணையருக்குப் பிறந்தார்.
வைத்தியநாத பிள்ளை சிதம்பரத்தில் கோட்டை சுப்பராய பிள்ளையிடம் முதலில் நான்காண்டுகள் நாதஸ்வரம் கற்றார். அதன் பிறகு கூறைநாடு நடேச பிள்ளையிடம் பயின்றார். கூறைநாடு நடேச பிள்ளை சுமார் நூறு வர்ணங்களைக் கற்பித்தார். உடன் பயின்ற பிற மாணவர்கள் கீர்த்தனங்கள் வாசிக்கக் கற்றுக்கொள்ளும் போது, தனக்கு வர்ணங்களையே தன் குரு கற்பித்துக் கொண்டிருப்பது குறித்து வருத்தம் கொண்ட வைத்தியநாத பிள்ளை தந்தையிடம் இது குறித்து முறையிட்டார். அவர் தந்தை குரு என்ன கற்பிக்கிறாரோ அதைக் கற்பதுதான் முறை, கீர்த்தனை கற்பிக்கவில்லையே என எண்ணுவது பாவம் என அறிவுரை கூறிவிட்டார். இது குறித்து வைத்தியநாத பிள்ளை பிற்காலத்தில் குறிப்பிடும் போது குரு தனக்கு கற்றுத் தந்ததன் பலனாகவே தனக்கு பல்லவி வாசிப்பதில் தனித்தன்மையும், லயநுட்பம் செறிந்த முக்தாயிஸ்வரங்களும் வாசிக்க வாய்த்ததாகக் கூறுகிறார்.
தனிவாழ்க்கை
வைத்தியநாத பிள்ளைக்கு மங்களாம்பாள், ஞானம்பாள் என்று இரு மூத்த சகோதரிகள்.
வலங்கைமான் சொக்கலிங்க நாதஸ்வரக்காரரின் மகள் சிவபாக்கியம் என்பவரை மணந்தார். சிவபாக்கியம் அம்மாள் குழந்தை பிறக்கும் முன்னரே காலமானார். பின்னர் வைத்தியநாத பிள்ளை, நாகூர் அ.த. சட்டையப்ப பிள்ளையின் மகள் திருநாகவல்லியம்மாள் என்பவரை மணந்து இரண்டு பெண்களைப் பெற்றார். மூத்த மகள் சிவகாம சுந்தரி கீரனூர் சின்னத்தம்பி நாதஸ்வரக்காரரை மணந்தார். இரண்டாவது மகள் கனகவல்லியை ஆச்சாபுரம் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை மணந்தார்.
இசைப்பணி
சிதம்பரம் கோவிந்தராஜர் ஆலயத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்த கூறைநாடு நடேச பிள்ளைக்கு உதவியாக அவ்வப்போது வைத்தியநாத பிள்ளை வாசிக்கத் தொடங்கினார். சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் நவராத்திரி உற்சவத்தில் தனியாக வாசிக்கத் தொடங்கினார். பல்லவி வல்லுனராக அறியப்பட்ட வைத்தியநாத பிள்ளைக்கு பல கச்சேரிகள் அமைந்தன. திருச்செந்தூர் ஆலயத்திலும் திருவாங்கூர் சமஸ்தானத்திலும் தங்கத் தோடாக்கள் பரிசு பெற்றார். வானமாமலை ஜீயர் நாற்பது சவரன் எடையில் தங்க நாதஸ்வரம் செய்து சிதம்பரம் வைத்தியநாத பிள்ளைக்கு பரிசளித்தார். மயிலாப்பூர் கேசவப்பெருமாள் ஆலயத்தில் எட்டுப் பவுன் தங்க சங்கிலியும் நாட்டரசன்கோட்டையில் கைச்சங்கிலியும் தருமபுரம் மற்றும் மேலும் பல்வேறு ஆதீனங்களில் சாதராக்களும் பெற்றிருக்கிறார்.
பல்லவி வாசிப்பில் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையின் காலப்பிரமாணம் புகழ்பெற்றது. வைத்தியநாத பிள்ளை துரிதகாலத்திலோ விளம்ப காலத்திலோ இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட காலப்பிரமாணத்தில் வாசித்து சக கலைஞர்களை வியக்க வைத்து விடுவார். ஹூசேனி ராகத்தில் அமைந்த க்ஷேத்திரக்ஞரின் ‘அலிகிதே’ பதத்தின் முதல்வரியை பல்லவியாக வைத்து வைத்தியநாத பிள்ளை வாசிக்கும் போது அதன் காலப்பிரமாணமும் ஸ்வரச்சுற்றுக்களின் இறுதியில் பல்லவியின் தொடக்கத்தை சற்றும் எதிர்பாராதவாறு அவர் எடுக்கும் விதமும் அவரது தனிச்சிறப்பு.
கூறைநாடு நடேச பிள்ளைக்குப் பிறகு சிதம்பரம் கோவிந்தராஜர் ஆலயத்தின் ஆஸ்தான வித்வானாக வைத்தியநாத பிள்ளை நியமிக்கப்பட்டார். நாகப்பட்டணம் வேணுகோபால பிள்ளைக்குப் பின்னர் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் ஆஸ்தான கலைஞராகவும் ஆனார்.
ஒரு சில வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை கஞ்சிரா வாசித்திருக்கிறார்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- பழனி முத்தையா பிள்ளை
- அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை
- கரந்தை ரத்தினம் பிள்ளை
- பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை
- திருச்செங்காட்டாங்குடி ருத்ராபதி பிள்ளை
- பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை
- வழிவூர் முத்துவீர் பிள்ளை
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை
- கும்பகோணம் தாதக்கிருஷ்ணன்
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- திருக்கடையூர் சின்னையா பிள்ளை (நிரந்தரத் தவில்காரராக இருந்தவர்)
மாணவர்கள்
- வழிவூர் தங்கவேல் பிள்ளை
- சிதம்பரம் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- நல்லடை ராதாகிருஷ்ண பிள்ளை
மறைவு
’பல்லவிச் சுரங்கம்” என அழைக்கப்பட்ட சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை பிப்ரவரி 19, 1937-ல் சிதம்பரம் விளங்கியம்மன் தெருவில் இருந்த அவரது இல்லத்தில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.