under review

பதிகம்: Difference between revisions

From Tamil Wiki
(Ready for review marked)
(Moved Category Stage markers to bottom and added References)
Line 91: Line 91:
==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
<references />{{Ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{Ready for review}}

Revision as of 18:13, 17 April 2022

பத்துப் பாடல் அடங்கிய தொகுப்பு பதிகம். பதிகம் நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது. நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். இரண்டும் பழமையான சொற்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருளை உணர்த்துவன.

பத்து பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது.[1] இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பும், பத்து என்றே குறிப்பிடுகிறது. [2] தேவாரத்தில் வரும் பத்து பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். [3] பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின. [4]

பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று பதிகம் (சிற்றிலக்கியம்). [5]

சங்க நூல்களில் பதிகம்

பதிற்றுப்பத்து - பதிகங்கள்

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். பத்துப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பத்து-பத்துப் பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன.

ஆனால் அவை தொகுப்பில் வேறுபடும் முறையினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு என்றும், ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் பத்துப் பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஐங்குறுநூறு - பதிகநெறி

ஐங்குறுநூற்றில் 500 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல் வீதம் 5 திணைக்கு 500 பாடல். அவற்றில் ஒவ்வொரு 100 பாடலும் பத்து-பத்துப் பாடல்களாகப் பகுப்புநிலை கொண்டுள்ளன. ஒவ்வொரு பத்துக்கும் தனித்தனித் தலைப்புகள் உள்ளன. இதே பகுப்பு முறை திருக்குறளிலும் காணப்படுகிறது. ஐங்குறுநூறு அகத்திணை நூல்.

காப்பியங்களில் பதிகம்

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் உள்ள பதிகங்கள் பதிற்றுப்பத்து நூலிலுள்ள பதிகங்களைப் போலவே நூலின் உள்ளடக்கத்தையும், அதனோடு தொடர்புடைய செய்திகளையும் காட்டும் பதிகங்களாக உள்ளன. இந்தப் பதிகங்கள் நூலாசிரியரால் பாடப்பட்டவை அல்ல.

அறநூல்களில் பதிகம்

திருக்குறள் - பதிகம்

திருக்குறளில் உள்ள 1330 பாடல்களும் 133 அதிகாரத் தொகுப்புகளாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பத்து பாடல்.

பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு - ஆகிய நூல்களில் காணப்படும் இந்த முறையானது, பதிற்றுப்பத்து நூலில் 'பதிகம்' என்னும் பெயராலும், ஐங்குறுநூறு நூலில் 'பத்து' என்னும் பெயராலும், திருக்குறளில் 'அதிகாரம்' என்னும் பெயராலும் தொகுக்கப்பட்டிருக்கிறது.

நன்னூல் பதிகம் என்னும் சொல்லைப் பதிவுப்பொருள் எண்ணும் கண்ணோட்டத்தில் பார்க்கிறது.

முதுமொழிக் காஞ்சி - பதிகம்

திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஈரடிப் பாடல்கள் 10 இருக்கின்றன. முதுமொழிக்காஞ்சி நூலில் ஓரடிப் பாடல் பத்து தொகுக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக ஒரு பாடல்:

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

  1. பேரிற் பிறந்தமை ஈரத்தின் அறிப
  2. ஈரம் உடைமை ஈகையின் அறிப
  3. சோரா நன்னட்பு உதவியின் அறிப
  4. கற்றது உடைமை காட்சியின் அறிப
  5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப
  6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
  7. சூத்திரம் செய்தலில் களவனாதல் அறிப
  8. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
  9. அறிவுசோர்வு உடைமையின் பிறிது சோர்பு அறிப
  10. சீருடை ஆண்மை செய்கையின் அறிப

சமய நூல்களில் பதிகம்

சைவத் திருமுறைகள்

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வரின் பாடல்களும், ஒன்பதாம் திருமுறைத் தொகுப்பில் உள்ள காரைக்கால் அம்மையார் போன்றோரின் பாடல்களும் பதிக முறையில் அமைந்துள்ளன.

  • திருக்கடைக் காப்பு - சம்பந்தர், சுந்தரர் பாடல்களில் பதிகத்தின் இறுதியில் பதினோராம் பாடல் ஒன்று வரும். இது பதிகத்தின் கடைசியில் பதிகத்துக்கும், பதிகம் பாடுவோருக்கும் காப்பாக அமையும் பாடல்.
ஆழ்வார் பாடல்கள்

திருவாய்மொழி தொகுப்பில் உள்ள நம்மாழ்வார் பாடல்கள் பா வடிவ அளவினைப் பொருத்த பாடல்களாகவும், பொருள்நோக்குத் தொகுப்புப் பாடல்களாகவும் உள்ளன. பெரியாழ்வார் பாடல்கள் பொருள் நோக்கிலும், ஊர்நோக்கிலும் அமைந்துள்ளன. இவை பத்து-பத்துப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

  • பல சுருதி - பெரியாழ்வார் பாடல்களில் 10 பாடல் (சில பத்தில் 9 பாடல்) முடிந்த பின்னர், 11-ஆவது (சிலவற்றில் 10-ஆவது) பாடல் ஒன்று வரும். இதனைப் பல சுருதி என்பர். இது பதிகத்தைப் பாடுவோர் அடையும் பயனைக் கூறும். பயனைக் குறிக்கும் வடசொல் பலன் என்பர். சுருதி என்பது வேதம். பயனைச் சொல்லும் வேதம் என்பது இதன் பொருள்.

சொல்லமைதி விளக்கம்

முகவுரை, பதிகம் என்னும் சொற்கள் பாயிரத்துக்கு உரிய வேறு பெயர்கள் என நன்னூல் குறிப்பிடுகிறது[6].

பதிகம், பாயிரம் என்னும் பழஞ்சொற்கள் இக்காலத்தில் மேலும் பல சொற்களால் குறிப்பிடப் படுகிறது. நூலின் பெருமைகளை அந்நூலுக்கு அணிவித்து விளக்குவது அணிந்துரை என்றும், நூலைப்பற்றிப் புனைந்து கூறுவது புனைந்துரை என்றும், புறவுரை என்பது அந்நூலில் கூறப்படாத பொருளைப்பற்றிக் கூறுவது என்றும் தந்துரை என்பது நூலில் சொல்லப்பட்டுள்ள பொருள் அல்லாதவற்றைத் தந்து விளக்குவது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

அணிந்துரை நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை நன்னூல்
தந்துரை நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism நன்னூல்
நூன்முகம் உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம் நன்னூல்
பதிகம் பத்து எண்ணிக்கை கொண்ட பாடல்களின் தொகுப்பு திருமுறைகள்
பாயிரம் நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது நன்னூல்
புறவுரை நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி நன்னூல்
புனைந்துரை நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை நன்னுல்
மதிப்புரை நூலை மதிப்பீடு செய்யும் திறனாய்வாளரின் செய்தி இதில் இடம்பெறும் இக்காலம்
முகவுரை முகமன் கூறி நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் உரை நன்னூல்
முன்னுரை நூலாசிரியர் தன் நூலைப்பற்றிக் கூறும் உரையும், கற்போரை ஆற்றுப்படுத்தும் உரையும் இதில் இடம்பெறுவது வழக்கம் இக்காலம்

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்பன ஐங்குறுநூறு மருதத்திணையில் வரும் 100 பாடல்களின் பத்துப் பிரிவுகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்கள்.
  2. 10 பாடல் கொண்டது ஒரு திருமொழி. 10 திருமொழி கொண்டது ஒரு பத்து. இப்படிப் பெரியாழ்வார் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
  3. கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநள்ளாறு பதிகம்.
  4. பாய்ச்சலூர்ப் பதிகம், மயிலாப்பூர் பத்தும் பதிகம்,
  5. பன்னிரு பாட்டியல் நூற்பா 312.
  6. முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் – நன்னூல் - 1

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.