under review

பாய்ச்சலூர்ப் பதிகம்

From Tamil Wiki

பாய்ச்சலூர்ப் பதிகம் (நங்கையார் பதிகம்)(பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டு) உத்தர நல்லூர் நங்கை என்னும் பெண்பாற்புலவர் பாடிய பதிகம் என்னும் சிற்றிலக்கியம். சாதி அமைப்புகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான கருத்துகளைக் கொண்டது.

ஆசிரியர்

பாய்ச்சலூர்ப் பதிகத்தை இயற்றியவர் உத்தரநல்லூர் நங்கை.

திருச்சிக்கருகிலுள்ள பாய்ச்சலூர் என்ற கிராமத்தில் நந்தனார் குலத்தைச் சேர்ந்த உத்தர நல்லூர் நங்கை என்னும் சிறுமி மாடு மேய்க்கும்போது ஆற்றங்கரையில் வேதம் ஓத வந்த அந்தணச் சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது. அவனிடமிருந்து நங்கை வேதம் ஓதக் கற்றுக் கொண்டாள். கல்வியால் ஞானம் அடைந்தாள். பருவம் அடைந்தபோது ஊராரின் இழிசொல்லுக்கு ஆளானாள். பெண், அதுவும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவள் வேதம் ஓதுவதற்கும் எதிர்ப்பு எழுந்தது. தீவட்டிகளுடன் தன்னைத் தாக்க வந்த பாய்ச்சலூர் மக்களை நோக்கி இப்பதிககத்தை நங்கை பாடியதாகக் கூறப்படுகிறது.

நூல் அமைப்பு

பாய்ச்சலூர்ப் பதிகம் காப்புப் பாடலையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்கள் கொண்டது. காப்புப் பாடலில் விநாயகரையும் முருகனையும் வணங்கி பாய்ச்சலூர் மக்களை நோக்கிப் பத்து பாடல்களில் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் 'பாய்ச்சலூர் கிராமத்தாரே' என முடிவடைகிறது.

மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு(பதினைந்தாம் நூற்றாண்டு) நூலில் இப்பதிகத்தின் எட்டு பாடல்கள் மட்டும் இடம் பெறுகின்றன.

பாடல் நடை

சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர்மணம் வீசக் காணோம்
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேற தாமோ
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே.

உசாத்துணை


✅Finalised Page