under review

ஶ்ரீநேசன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
Line 67: Line 67:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்]]

Latest revision as of 00:34, 21 December 2025

ஶ்ரீநேசன்

ஶ்ரீநேசன் (தே. நேசன்) (பிறப்பு : ஜூலை 28, 1966) தமிழ்க் கவிஞர், கட்டுரையாளர்.

பிறப்பு,கல்வி

ஶ்ரீநேசனின் இயற்பெயர் தே.நேசன். ஶ்ரீநேசன் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள குந்தாணிமேடு கிராமத்தில் ஜூலை 28, 1966 அன்று பிறந்தார்.பெற்றோர் நா.தேவராஜன் - பட்டம்மாள். உடன் பிறந்தவர்கள் ஒரு தம்பியும் இரு சகோதரிகளும்.

ஶ்ரீநேசன் தொடக்கக் கல்வியை குந்தாணிமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விகளை வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளியிலும் கான்கார்டியா மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். வாணியம்பாடி இசுலாமியக் கலைக்கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் கல்வியை(எம்.ஏ. & எம்.பில்) சென்னை புதுக்கல்லூரியில் பெற்றார். சென்னைப் பல்கலைகழகத்தில் பேராசிரியர் வீ.அரசுவின் நெறியாளுகையில் 'நவீன புனைகதை வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஶ்ரீநேசன் 2000 முதல் 2010 வரை பல்வேறு தனியார் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறைப் பேராசிரியாராகப் பணியாற்றுகிறார்.

ஶ்ரீநேசன் பிப்ரவரி 12, 2003 அன்று அ.தமிழ்தென்றலை திருமணம் செய்துகொண்டார். மகன்கள் சர்வஞ்ஞன், பேரிசைஞன்.

இலக்கிய வாழ்க்கை

ஶ்ரீநேசன் கல்லூரிக் காலத்தில் இருந்தே கவிதைகள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். கவிராத்திரி நிகழ்வில் முதல் பரிசு வென்று, இஸ்லாமியக் கல்லூரியின் 1987-ம் ஆண்டின் ஆண்டு மலரில் வெளியான 'கரும்பலகை' என்ற கவிதையே அச்சில் வெளிவந்த முதல் படைப்பு. கல்லூரிக் காலத்தில் கவிஞர்கள் அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், இன்குலாப் ஆகியோரிடம் மாணவராக பயின்றுள்ளார். அவர்களின் வழியாக இலக்கிய வாசிப்பு தீவிரமடைந்ததைக் குறிப்பிடுகிறார். கல்லூரிக் காலத்தில் தன்னுடைய ஆதர்சங்களாக அப்துல் ரகுமான், அபி, அறிவுமதி, கு.ராமலிங்கம், மு.குலசேகரன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

ஶ்ரீநேசனின் முதல் கவிதை 'சிக்கல்' 1997-ல் கனவு காலாண்டிதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு 'காலத்தின் முன் ஒரு செடி' 2002 -ல் ' புது எழுத்து' வெளியீடாகப் பிரசுரமானது. தீவிர இலக்கியத்தில் தன் படைப்பில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக க.நா.சு, விக்ரமாதித்யன், ஞானக்கூத்தன், நகுலன், பிரமிள், ஆத்மாநாம், பிரம்மராஜன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், தேவதச்சன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இதழியல்

ஶ்ரீநேசன் எழுத்தாளர் ஜீ. முருகனுடன் இணைந்து வனம் காலண்டிதழின் எட்டு இதழ்களில் இணையாசிரியராக பங்களித்துள்ளார்.

அமைப்புப் பணிகள்

ஶ்ரீநேசன் 1995-ல் நண்பர்களுடன் இணைந்து வாணியம்பாடியில் உள்ள இலக்கிய வாசகர்களை மையமாக கொண்ட 'நவீனர்' குழுவை உருவாக்கினார், இக்குழுவினர் மாதந்தோறும் இலக்கிய சந்திப்புகளையும் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஏலகிரி, ஜமுனாமரத்தூர் மலைப்பகுதிகளிலும் இலக்கிய கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்தனர்,

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி வளர்க்கும் பொருட்டு 'நூல்வாசி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

ஐதரபாத் உஸ்மானியா பல்கலைகழகம் மற்றும் ஜம்மு பல்கலைகழகத்தின் கவிதை அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

பிரம்மராஜன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஶ்ரீநேசனின் எட்டுக் கவிதைகள் 'Muse India' ஆங்கில இணைய இதழில் பிரசுரமாகின. கே.எஸ் சுப்ரமணியம் மற்றும் லதா ராமகிருஷ்ணன் ஆகியோரின் ஆங்கில மொழியாக்க கவிதைத்தொகுதிகளில் ஶ்ரீநேசனின் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

விருதுகள்

  • உயிர்மை சுஜாதா அறக்கட்டளை விருது - 2011
  • அன்னம் விருது - 2018 (இலக்கிய வீதி)
  • கலைஞர் நவீன கவிதை விருது - 2023 (மாநிலக் கல்லூரி)

ஆவணப்படம்

ஶ்ரீநேசனின் 'புகைப்பவர்கள்' என்னும் கவிதை போடி ராஜ்குமாரால் குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது[1]

இலக்கிய இடம்

"தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கிய கவிஞர்களில் ஒருவராக எழுதத் தொடங்கிய ஸ்ரீநேசன், காலத்தை இயற்கையாக, காலத்தை மலையாக, காலத்தை ஏரியாகத் தொட்டுக் கவிதைகளாக்கும் போது இங்குள்ள பிராந்தியம் மற்றும் ஊர்களின் சுவைகளை, மூலிகை மணங்களைக் கொண்டதாக மாறுகிறது. சென்னைப் பெண்ணின் தோற்றம் கொண்டவளாக ரேணுகா பரமேஸ்வரி அம்மன் எப்படி மாறுகிறாளோ அப்படி. தொன்மையாக கண்ணுக்குத் தோன்றாமல் வீற்றிருக்கும் காலத்தை இயற்கையாகவும் மலையாகவும் ஏரியாகவும் கடவுளாகவும் மாற்றித் தொடக்கூடிய, புரண்டு புணரக்கூடிய அனுபவமாக மாற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த தொகுப்பு 'ஏரிக்கரையில் வசிப்பவன்'" என்று ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.

"காலத்தின் முன் ஒரு தொகுப்பிற்குப் பிறகு அதன் மொழிக்கட்டமைப்பில் இருந்த கச்சித அமைப்பை மட்டும் எடுத்துக்கொண்ட கவிஞர் ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்பில் வாசக பரப்பிற்கு அணுக்கமான மொழிநடைக்குத் தாவிவிடுகிறார். முந்தைய தொகுப்பில் இருந்த பண்டிதத்தன்மையும், சிறிய அளவில் இருந்த மொழித்திருகலும் இத்தொகுப்பில் இல்லாமல் போகிறது. ஸ்ரீநேசனின் சமகாலக் கவிகள் தங்களது மொழி நடையை பிற்காலத்தில் மாற்றி அமைத்து எழுத தொடங்குகையில் தனது முதல் தொகுப்பிற்கு பிறகான கவிதைகள் அனைத்திலும் தனது அரூப மொழியை கைவிட்டதும், அந்த எளிமையின் வழியாகவே இவ்வுலகையும், நிலத்தையும், குடும்பத்தையும், கடவுளையும் காண்பதும், அதனூடாக நிகழும் ஆழ்மனத்தேடலும் கவிஞருக்கு இயல்பாக வாய்த்தது. உணர்ச்சிக்கொந்தளிப்பான வெளிப்பாட்டு முறைகளிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி மயமான தொனியில் அமைந்த கவிதைகள் இவை. எனவே புதிய வாசகன் எளிதில் இக்கவிதைகளுடன் ஒன்றவும், அவர் வாழ்நிலத்தின் தன்மையுடன் இயைந்த தத்துவார்த்த பின்னணியும் இக்கவிதைகளுக்கு மெருகூட்டுவதாக உள்ளன" என்று கண்டராதித்தன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதை தொகுப்புகள்

  • காலத்தின் முன் ஒரு செடி (புது எழுத்து ,2002)
  • ஏரிக்கரையில் வசிப்பவன் (ஆழி பதிப்பகம்,2011)
  • மூன்று பாட்டிகள் (சால்ட் பதிப்பகம்,2021)
  • கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் (தன்னறம்,2023)
  • தப்பு விதை (தன்னறம், 2023)
  • குறுமுப்பத்தாறு (நாதன் பதிப்பகம் 2024)

கட்டுரை நூல்கள்

  • தமிழின் முதல் இரு நாவல்கள்
  • சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள் (நூலாக்கம் பெற்ற ஆய்வேடுகள், தி பார்க்கர் வெளியீடு, 2008)
  • கவிஞயம் (2021)
  • 8 கட்டுரைகள் (இருநூல்களும் யாவரும் பதிப்பகம், 2023)

தொகுப்பு நூல்கள்

  • மகரந்த வாசல் (இசுலாமியாக் கல்லூரி மாணவர் கவிதைகள், தமிழ்த்துறை வெளியீடு, 2004)
  • வனப்பாதையில் (வனம் இதழ் நேர்காணல்கள் தொகுப்பு, 2021)

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Sep-2024, 19:29:36 IST