under review

பரணர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
Line 153: Line 153:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

பரணர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பரணர் (பெயர் பட்டியல்)

பரணர் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். பரணர் பாடிய எண்பத்தி ஐந்து பாடல்கள் சங்கத்தொகைப் பாடல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய மூவரையும் பழந்தமிழின் முப்பெரும் புலவர்களாக அறிஞர்கள் கருதினர்.

வாழ்க்கைக் குறிப்பு

பரணர் என்னும் பெயர் கொண்ட பல புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளனர். சங்ககாலத்தைச் சேர்ந்த பரணர் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் என்ற சொல் மருவி பரணர் ஆனது. இவர் ஒளவையார் காலத்தைச் சேர்ந்தவர். அதியமானைப் பாடினார். சேரன் செங்குட்டுவனைப் பற்றி அதிகம் பாடினார். செங்குட்டுவன் தன் மகன் பரணர் போல ஆக வேண்டும் என்று கருதி அவரிடம் அனுப்பியதாகத் தகவல் உள்ளது. இவரைப் பற்றிய பிற செய்திகள் கிடைக்கவில்லை.

செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவுடையார் எழுதிய திருவிளையாடற்புராணம், பரஞ்ஜோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம், கடம்பவன புராணம் ஆகிய தமிழ் நூல்களிலும், ஹாலாஸ்ய மஹாத்மியம் எனும் வடநூலிலும் பரணர் பற்றிய தொன்மக் கதைகள் உள்ளன.

இலக்கிய வாழ்க்கை

சங்ககாலப் பரணர் பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அரசர்கள், தலைவர்கள், அவர்கள் ஆண்ட இடங்கள், மலைகள், ஆறுகள், இவ்விடங்களில் நிகழந்த அரிய நிகழ்ச்சிகளைப் பாடினார்.

பாடல்கள்
பாடல்களில் குறிப்பிடப்பட்டவர்கள்
  • சேரர்: எழுமுடி மார்பின் எய்திய சேரல், கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் பெருஞ்சேரலாதன், குட்டுவன், குட்டுவன் சேரல், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெரும்பூண் பொறையன், பொறையன், மாந்தரன் பொறையன் கடுங்கோ.
  • சோழர்: கரிகாலன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, (சோழன் மணக்கிள்ளி), சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி, தித்தன்.
  • பாண்டியர்: செழியன், பசும்பூட் பாண்டியன்.
  • மன்னர்கள்: அழிசி, சேந்தன், அகுதை, அஞ்சி, அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, ஆட்டனத்தி, ஆய், ஆய் எயினன், ஆரியப் பொருநன், (ஆரிய அண்ணல்), எயினன், எவ்வி, ஐயை, ஓரி, கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், திதியன், தித்தன் வெளியன், நள்ளி, நல்லடி, நன்னன், நன்னன் ஆய், நன்னன் உதியன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், பேகன், மத்தி, மருதி, மலையன், மிஞிலி, மோகூர்(மன்னன்), வல்லங்கிழான் நல்லடி, விச்சியர் பெருமகன்,விரான், வெளியன் வேண்மான், (கண்ணகி, கடவுள் பத்தினி), கண்ணகி(பேகன் மனைவி), அன்னி மிஞிலி.
  • மக்கள்: வேண்முது மக்கள், ஆரியர், கொங்கர், கோசர், பூழியர், வேளிர், வேண்மகளிர்
  • ஊர்கள்: அரிமணவாயில், அலைவாய், அழுந்தூர், ஆர்க்காடு, ஆலமுற்றம், இருப்பை, உறத்தூர், உறையூர், ஊணூர், கழார், காழூர், குறும்பூர், குன்றூர், கூடல், தொண்டி, நீடூர், பாரம், பாழி, புகார், போர், மட்டவாயில், மரந்தை, முசிறி, மோகூர், வஞ்சி, வாகை, வெண்ணி.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆறுகள், ஊர்கள், அதன் இயல்புகளைப் பாடியுள்ளார்.
  • வாகைப்பறந்தலை, வெண்ணிப் பறந்தலை, கூடற் பறந்தலை, பாழிப் பறந்தலை ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரித்துள்ளார்.
  • கழார்ப் பெருந்துறை நீர்விழாவில் ஆட்டனத்தி மறைந்தது, கரிகாலன் வெண்ணியில் பெற்ற கன்னிப்போர் வெற்றி குறித்து அழுந்தூரில் விழா நிகழ்ந்தது, நறுமா தின்றாள் ஒரு பெண் என்பதால் நன்னன் அவளைக் கொன்றது, பாழியில் வேளிர் பெரும்பொருள் சேர்த்து வைத்தது, தந்தையின் கண்ணைப் போக்கிய கோசரைப் பழிவாங்க வஞ்சினம் கொண்ட மிஞிலியின் செய்கை, மனைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழ்ந்த பேகன் செய்கை ஆகிய நிகழ்வுகளைப் பற்றி பாடினார்.
  • போரின் பின்விளைவால் நாடு அழிவதை நாட்டாரும், நாடாளும் அரசர் உணரும்படி பாடியுள்ளார். சில அரசர்களிடம் மக்களின் நலனுக்காகப் பேசி போரைத் தடுக்க முயற்சி எடுத்தார்.
  • பரத்தையிடம் சென்ற பேகனுக்கு அறிவுரை வழங்கினார்.
  • பெண்கொலை புரிந்த நன்னனைப் பழித்து பாடல் பாடினார் (அகம்: 152, 181, 208, 258, 396). நன்னனின் படைத்தலைவன் மிஞிலி சேரனின் படைத்தலைவன் ஆஅய் எயினைக் கொன்றதைப் பாடினார் (நற்றினை: 265, 270, குறுந்தொகை: 73, 292, அகநானூறு: 152, 181, 208, 258, 356, 396).
  • அன்னிக்குடி அன்னியும் திருவழுந்தூர் திதியனும் தம்முன் மாறுபட்டுப் போர் புரிந்த கதையைப் பாடினார். (அகநானூறு - 186, 262)
  • பரணர் கொல்லி மலையில் அமைந்த கொல்லிப்பாவையின் அழகையும் அதன் ஈர்ப்பையும் பல பாடல்களில் பாடினார்.(நற்றிணை 201, குறுந்தொகை 89, அகம்: 62, 208)
  • நெடுஞ்சேரலாதனும், பெருவிறற்கிள்ளியும் போர்க்களத்தில் பொருதி இருவரும் மடிந்த செய்தியைப் பாடினார். (புறநானூறு 63)
  • ஊணூரானான தழும்பனைப் பாடியுள்ளார். சேரமான் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் சிறப்பைப் பாடினார். வல்வில் ஓரியின் வள்ளல் தன்மையைப் பாடினார்.

சிறப்பு

  • ஒளவையார் தன் பாடலில் அதியனைப் பற்றி புகழும்போது

                            இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே.

பரணரே அதியனைப் பற்றி பாடியதால் அதியன் பெருமை பெற்றார் என்று கூறியது பரணரின் சிறப்பை விளக்கக்கூடியது.

  • தொல்காப்பிய உரை ஆசிரியரின் "முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி!" என்ற பாடலால் அகத்தியரோடு ஒப்ப பரணரும் நக்கீரரால் வணங்கப்பட்டார் என்று அறியமுடிகிறது.

பாடல் நடை

அகநானூறு 6
  • திணை: மருதம் துறை : பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது

அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,

பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்

கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,

"ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!" என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!

சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
இளமை சென்று தவத் தொல்லஃதே;
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

குறுந்தொகை 19
  • திணை : மருதம்

எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.

நற்றிணை 6
  • திணை: குறிஞ்சி

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,
"இவர் யார்?" என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

புறநானூறு 4
  • திணை: வஞ்சி துறை: கொற்ற வள்ளை
  • பாடப்பட்டோன்: சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி

வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 12:01:15 IST