under review

வ.வே. சுப்ரமணிய ஐயர்

From Tamil Wiki
வ.வே.சு. ஐயர்
வ.வே.சு. ஐயர்
வ.வே.சு.ஐயர் எஸ்.வி கலைமணி
சக்தி வ.வே.சு ஐயர் மலர்
வ.வே.சு.ஐயர் இலந்தை இராமசாமி
வ.வே.சு.ஐயர் கோ.செல்வம்
வ.வெ.சு.ஐயர், எம்.வி.வெங்கட்ராம்
வ.வெ.சு.ஐயர், பி.எஸ்.மணி

வ.வே.சுப்ரமணிய ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) (வ.வே.சு.ஐயர், வ.வே.சு.அய்யர், வ.வே.சு) (ஏப்ரல் 2, 1881 — ஜூன் 4, 1925) தமிழறிஞர், தமிழாய்வாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழின் முதல் சிறுகதையின் ஆசிரியர் என விமர்சகர்களால் சொல்லப்படுகிறார். விடுதலைப் போராட்ட வீரர். திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, கம்பராமாயணம் பதப்பிரிப்பு பதிப்பு, சங்க இலக்கியங்கள் ஆய்வு, புத்திலக்கிய வடிவங்கள், மொழி நடைகள் ஆகியவை தமிழிலக்கியத்திற்கு இவரின் முக்கிய பங்களிப்புகள்.

பிறப்பு, கல்வி

வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்ற வ.வே.சு. அய்யர் கரூர் சின்னாளப்பட்டி கிராமத்தில் ஏப்ரல் 2, 1881-ல் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வெங்கடேச அய்யருக்கும், சின்னாளப்பட்டி காமாட்சி அம்மையாருக்கும் பிறந்தார். வெங்கடேச ஐயர் எம்.ஏ. படித்து திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார்.

சுப்ரமணிய ஐயர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1895-ல் மெட்ரிகுலேசன் முடித்தார். 1899-ல் பொருளாதாரப் பாடத்தில் பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று வென்றார். சென்னையில் வழக்கறிஞர் தேர்வில் முதல் பிரிவில் தேறினார். 1907-ல் பாரிஸ்டர் கல்விக்காக லண்டன் சென்றார். 1910-ல் படிப்பை முடித்தாலும் பட்டம் பெறவில்லை.

தனிவாழ்க்கை

சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். நான்கு ஆண்டுகள் திருச்சியில் பிளீடராக இருந்துவிட்டு 1906-ல் ரங்கூனில் ஓராண்டு வக்கீலாகப் பணிபுரிந்தார். ரங்கூனில் இருந்த உறவினரான பசுபதி அய்யரின் தூண்டுதலால் 1907-ல் லண்டன் சென்றார்.

1897-ல் தன் பன்னிரண்டாம் வயதில் முறைப்பெண் பாக்கியலட்சுமியை வ.வே.சு. ஐயர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பட்டம்மா, சுபத்திரா என இரண்டு மகள்களும் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் பிறந்தனர்.

அரசியல் வாழ்க்கை

வ.வே.சு.ஐயர் டி.எஸ்.எஸ்.ராஜன்

லண்டனில் படிக்கும்போது வ.வே.சு.ஐயர் இந்தியாஹவுஸ் விடுதியில் தங்கினார். அங்கே இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களுடன் நெருக்கமான தொடர்பு உருவாகியது. அங்கே இருந்தபோது சி.சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா இதழுக்கு அரசியல் கட்டுரைகள் எழுதியனுப்பினார். 1909-ல் இந்தியா ஹவுஸுக்கு வந்த காந்தியைச் சந்தித்தார். அங்கே தங்கியிருந்த முப்பதுபேர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றனர். வ.வே.சு.ஐயருக்கு பயிற்சி அளித்த மதன்லால் திங்ரா 1909-ல் கர்ஸன் வாலியை சுட்டுக்கொன்றார். பாரிஸ்டர் பட்டம் முடித்ததும் ராஜவிசுவாச பிரமாணம் எடுக்க மறுத்தார். அவரை கைது செய்ய ஆங்கில அரசு ஆணை பிறப்பித்தபோது சவார்க்கரின் உதவியால் பிரான்ஸுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து துருக்கி , கொழும்பு வழியாக 1910-ல் இந்தியா வந்தார்.

இந்தியாவில் அவருக்கு கைது வாரண்ட் இருந்தமையால் பாண்டிச்சேரிக்குச் சென்று அங்கே மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், சி.சுப்ரமணிய பாரதியார் ஆகியோருடன் தங்கினார். அங்கிருந்துகொண்டு இந்தியா இதழுக்குக் கடிதங்கள் எழுதினார்.ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனுக்குர் நாதனுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளித்தார். பாண்டிச்சேரி வந்த காந்தியை இரண்டாம் முறையாகச் சந்தித்தார்.

முதல் உலகப்போர் முடிந்ததும் 1920-ல் வ.வே.சு.ஐயருக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் நுழைய அனுமதி கிடைத்தது. வரகனேரிக்கு வந்த வ.வே.சுப்ரமணிய ஐயர் வட இந்தியாவில் பயணம் செய்தார். திரும்பி வந்து தேசபக்தன் இதழில் ஆசிரியராக சேர்ந்தார். 1921-ல் தேசபக்தன் இதழில் மேமாதம் 6- ஆம் தேதி வெளியான 'அடக்குமுறை’ என்னும் கட்டுரை அவர் எழுதியது, அது ராஜத்துரோகம் என குற்றம் சாட்டி அவரை கைதுசெய்த ஆங்கிலேய அரசு பெல்லாரி சிறைக்கு அனுப்பியது. ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தபின் 1923-ல் விடுதலையாகி வந்த வ.வே.சு ஐயர் மீண்டும் ஒரு வட இந்தியப் பயணம் மேற்கொண்டார். பின்பு கோயில்பட்டிக்கு தேசியப்பணிக்காக வந்தவர் அருகே கல்லிடைக்குறிச்சியில் இருந்த திலகர் பள்ளி என்னும் தேசியப்பள்ளிக்கு பொறுப்பேற்றார். அதை தமிழ்க் குருகுலம் என மாற்றினார்.

கல்லிடைக்குறிச்சி தமிழ்க்குருகுலத்தில் பெற்ற அனுபவத்தைக்கொண்டு ஒரு குருகுலக் கல்விநிலையத்தை தொடங்கும் நோக்குடன் 1924-ல் சேரன்மாதேவி அருகே 30 ஏக்கர் நிலம் வாங்கினார். சேரன்மாதேவி ஆசிரமத்தில் மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியங்களையும் கற்பிப்பதையும், ஒழுக்கமும் கைத்தொழிலும் கற்பிப்பதையும் பள்ளியின் முக்கியக் கொள்கை என்றார் வ.வே.சு. ஐயர். இந்தக் குருகுலத்திலிருக்கும் போது பாலபாரதி இதழைத் துவங்கி, ஆசிரியராக இறுதிவரை செயல்பட்டார். 1925-ல் மறைவது வரை இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டார்.

இதழியல்

கல்விப்பணி

இந்திய தேசியக் காங்கிரஸ் 1922-ல் தேசியக் கல்வி இயக்கத்தை தொடங்கியது. ஆங்கிலேயர் அளிக்கும் கல்வியில் தேசத்துக்கு எதிரான செய்திகள் இருப்பதாக குற்றம் சாட்டி இந்தியாவின் மரபையும் ஆங்கிலத்தையும் கைத்தொழிலையும் கற்பிக்கும் கல்விமுறை வேண்டும் என அது கோரியது. அதையொட்டி வ.வே.சுப்ரமணிய ஐயர் அவர் கல்லிடைக்குறிச்சியில் இருந்த திலகர் வித்யாலயாவை தமிழ்க்குருகுல வித்யாலயா என மாற்றி நடத்தினார். தமிழ் குருகுல வித்யாலயா என்னும் அமைப்பை தொடங்கும் அறிவிப்பை ஏப்ரல் 23, 1922-ல் வெளியிட்டார். 1923 டிசம்பரில் கல்லிடைக்குறிச்சியில் அக்கல்வி நிலையம் தொடங்கப்பட்டது.

1924-ல் தமிழ்குருகுல வித்யாலயாவும் பாரத்வாஜ ஆசிரமமும் சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டன. தேசியக்கல்வி, கைத்தொழில் ஆகியவை அங்கே கற்பிக்கப்படும் என வ.வே.சு.ஐயர் அறிவித்தார். கானாடுகாத்தான் வை.சண்முகம் செட்டியாரின் நிதியுதவியால் நிலம் வாங்கினார். அக்கல்விநிலையத்திற்கு காங்கிரஸ் பத்தாயிரம் ரூபாய் அளிக்கவேண்டும் என வ.வே.சுப்ரமணிய ஐயர் கோரினார். நன்கொடைகள் வழியாக அந்தத் தொகையை அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒப்புக்கொண்டது. ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. எஞ்சிய தொகை பின்னர் அரசியல் சூழலால் மறுக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

வ.வே.சுப்ரமணிய ஐயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக எழுதினார். தமிழில் நவீன இலக்கியம் உருவான தொடக்க காலத்தில் வ.வே.சு.ஐயர் எழுதியமையால் நவீன இலக்கியத்தின் எல்லா களங்களிலும் தொடக்ககால எழுத்துக்களை உருவாக்கினார். இலக்கிய ஆய்வு , புனைவிலக்கியம், இலக்கியவிமர்சனம், இலக்கிய அறிமுகம், வரலாற்று அறிமுகம் ஆகிய ஐந்து தளங்களில் வ.வே.சு.ஐயர் எழுதியிருக்கிறார்

இலக்கிய ஆய்வு

தமிழ் பண்டைய இலக்கியங்களையும், சம்ஸ்கிருத இலக்கியங்களையும் கூர்ந்து ஆராய்ந்து நவீன ஆய்வுமுறைப்படி எழுத ஆரம்பித்த முன்னோடிகளில் ஒருவர் வ.வே.சுப்ரமணிய ஐயர். பண்டைய இலக்கியங்களின் காலத்தை அடையாளப்படுத்துதல், இலக்கியக்காலகட்டங்களை வகுத்தல், அவற்றின் வரலாற்றுப்பின்னணியை வரையறை செய்தல், அவற்றின் உள்ளடக்கம் சார்ந்து அவற்றை வகைப்படுத்தல் ஆகியவை நவீன இலக்கிய ஆய்வின் பணிகள். வ.வே.சு.ஐயர் அத்தகைய நவீன இலக்கிய ஆய்வை தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்.

வ.வே,சு.ஐயர் தான் நடத்திய பாலபாரதி பத்திரிகையில் சங்கப்பாடல்களின் அழகியல்தன்மையை விளக்கி எழுதினார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினார். கம்பராமாயணத்தைப் பற்றி நவீன நோக்கில் ஆராய்ந்து வ.வே.சு.ஐயர் எழுதிய ஆங்கிலத்தில் Kamba Ramayana A Study (1950) முன்னோடியான நூல்.

புனைவிலக்கியம்

வ.வே.சுப்ரமணிய ஐயர் தாகூரின் காபூலிவாலா போன்ற சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்தார். அவர் எழுதிய சிறுகதைகள் குளத்தங்கரை அரசமரம் என்னும் கதை தமிழின் முதல் சிறுகதையாக சில விமர்சகர்களால் கருதப்படுகிறது. இது மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் (1910) என்னும் தொகுதியில் உள்ளது. இது முதல் சிறுகதையல்ல என மறுக்கப்பட்டுள்ளது. (பார்க்க குளத்தங்கரை அரசமரம்)

இலக்கிய விமர்சனம்

தமிழில் நவீன இலக்கிய விமர்சனத்திலும் வ.வே.சு.ஐயர் முன்னோடியாக கருதப்படுகிறார். சுப்ரமணிய பாரதியின் கண்ணன்பாட்டு நூலுக்கு வ.வே.சு.ஐயர் எழுதிய முன்னுரை தமிழில் எழுதப்பட்ட அழகியல்நோக்கு கொண்ட முதல் நவீன இலக்கிய விமர்சனம் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். (நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்)

இலக்கிய அறிமுகம்

வ.வே.சு ஐயர் அவர் நடத்திய பாலபாரதி இதழிலும் பிற இதழ்களிலும் இலக்கிய அறிமுகமும் ரசனைக்குறிப்புகளும் எழுதிக்கொண்டிருந்தார். கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய செவ்வியல் படைப்புக்களின் பகுதிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து குறிப்புகளுடன் வெளியிட்டார்.மேலை இலக்கியப் படைப்பாளிகளைத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டு

வரலாற்று அறிமுக நூல்கள்

இந்திய வரலாற்றையும் தமிழ் வரலாற்றையும் புறவயமான தரவுகளுடன் நவீன வரலாற்றுநோக்கில் எழுதத்தொடங்கிய காலத்தில் வ.வே.சு.ஐயர் வரலாற்று ஆளுமைகளை அறிமுகம் செய்யும் நூல்களை எழுதினார். சந்திரகுப்தச் சக்கரவர்த்தி (1919), தன்னம்பிக்கை (1919), குரு கோவிந்த்சிங் (1924) போன்ற நூல்கள் தேசிய இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கமும் கொண்டிருந்தன. ஆகியன. இவை தவிர நெப்போலியன், கரிபால்டி சரித்திரம் என இவர் எழுதிய சில நூல்கள் கிடைக்கவில்லை.

மொழிபெயர்ப்பு

வ.வே.சுப்ரமணிய ஐயர் ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்ச் மொழிகள் அறிந்தவர். திருச்சிக் கல்லூரியில் படிக்கும்போது லத்தின் மொழியைப் பாடமாக எடுத்துப் படித்தார். 1915-ல் சங்க இலக்கியங்களில் தேர்ந்தெடுத்த பாடல்களின் மொழிபெயர்ப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் குறுந்தொகை, கலித்தொகை போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை மொழிபெயர்த்தார். திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Kural or The Maxims of Thiruvalluvar என்னும் தலைப்பில் 1916-ல் வெளிவந்தது. வ.வே.சுப்ரமணிய ஐயரின் குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு, கலிபோர்னியாவிலும் நியுயார்க்கிலும் லண்டனில் இரண்டு புத்தகக் கம்பெனிகளாலும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் பொ.யு. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அகஸ்திஸின் நூலை 'அகஸ்தீன் முனிவரது விண்ணப்பம்’ எனும் இந்நூல் சுப்ரமணிய சிவா நடத்திய ஞானபானு என்னும் இதழில் வெளிவந்தது. எமர்சனிடம் உபநிஷத் செல்வாக்கு இருந்ததால் அவருடைய கட்டுரைகள் சிலவற்றையும் வ.வே.சுப்ரமணிய ஐயர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இலக்கியக் கருத்துக்கள்

வ.வே.சு.ஐயர் நவீனத் தமிழிலக்கியமும் நவீன தமிழிலக்கிய ஆய்வும் உருவான காலகட்டத்தில் இலக்கியம் மற்றும் ஆய்வுகள் சார்ந்து வலுவான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். அவை பின்னாளில் தொடர்விவாதத்துக்கு ஆளாயின.

மொழி நடை

தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ்ப் பண்டிதர்களும் தமிழறிந்த ஆங்கில வல்லுநர்களும் தடையாக உள்ளனர் என்பது வ.வே.சு. ஐயரின் கருத்து. 1916-ல் இவர் புதுச்சேரியில் வாழ்ந்தபோது புதுவையிலிருந்து வெளிவந்த கலைமகள் இலக்கிய இதழில் பிரயோக இலக்கணம் (பயன்பாட்டு இலக்கணம் - Applied Grammar) என்னும் தொடர் கட்டுரையை எழுதினார். இதில் நிகண்டுகளிலும் அகராதிகளிலும் வரும் சொற்களின் பயன்பாட்டை அறிந்தே பயன்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் வரும்போது ஏற்படும் மாற்றத்தை கருத்தில் கொள்ளவேண்டும் என்று அக்கட்டுரையில் கூறினார்.

தமிழ்ப் பண்டிதர்கள் சொற்களை செய்யுளுக்குரிய புணர்ச்சி விதிப்படி எழுதுவதில் வ.வே.சு ஐயருக்குக் கருத்து முரண்பாடு இருந்தது. மரபான சொற்றொடர் அமைப்பை அப்படியே பயன்படுத்தவேண்டும் என்னும் பிடிவாதம் பிழையானது என்றார். புதிய கருத்துக்கேற்ப வாக்கிய அமைப்பை மாற்றலாம் என்றும், மொழிநடை என்பது ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஏற்ப தனித்துவம் உடையது என்றும் 1916-ல் எழுதினார். ஐயர் ஆங்கிலத்தில் உள்ள சொற்களைத் தமிழிற்குத் தரும்போது புதிய சொல்லாட்சியுடன் தர வேண்டும் என்றார். உதாரணமாக தமிழில் மறுமலர்ச்சி (Renaissance) என்ற சொல்லை உருவாக்கியவர் வ.வே.சு ஐயர்

கம்பராமாயணம் ஆய்வு

வ.வே.சுப்ரமணிய ஐயர் கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி நூல்களை வெளியிட்டார். பாலகாண்டத்தின் தேர்ந்தெடுத்த 545 பாடல்களை பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார். இதில் நீண்ட முகவுரையும், பாடல்கள் பதம் பிரிக்கப்பட்டுக் குறிப்புரையும், அருஞ்சொற் பொருள் விளக்கமும் தரப்பட்டுள்ளது. 1917-ல் முதல் பதிப்பு புதுவை கம்பநிலைய வெளியீடாக வந்தது. பாடல்களைப் பதம் பிரித்ததற்காக பேராசியர்களாலும் பண்டிதர்களாலும் அக்காலத்தில் அந்நூல் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது.

பெல்லாரி மத்திய சிறையில் வ.வே.சுப்ரமணிய ஐயர் இருந்தபோது கம்பராமாயணம் பற்றிய நூல் ஒன்று எழுதினார். Kamba Ramayana - A Study என்ற இந்த நூல் 1950 முதல் முதலில் தில்லித் தமிழ் சங்க வெளியீடாக வந்தது. பின்னர் பம்பாய் பாரதிய வித்யாபவன் வெளியிட்டது. இந்த ஒப்பாய்வு நூலில் Paradise Lost; Divine Comedy, Aeneid, Iliad போன்ற காவியங்களுடன் கம்பராமாயணம் ஒப்பிடப்படுகிறது. இந்த வகை ஆராயச்சியில் வ.வே.சுப்ரமணிய ஐயர்தான் தமிழில் முன்னோடி. இந்நூலில் இந்நூலில் இராமன், இலக்குவன், இந்திரஜித், கும்பகர்ணன், வாலி, சுக்கிரீவன், அனுமன், இராவணன், பரதன் எனப் பத்து பாத்திரங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இந்த ஆங்கில நூல் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முன்னோடியானது. இது எழுதப்பட்ட காலத்தில் (1916) தமிழ் இலக்கிய விமர்சனமும் ஒப்பீட்டு ஆய்வும் வளர்ச்சியடையவில்லை. ஆகவே இது ஒரு முன்னோடி நூல்.

கம்பரின் காலம்

வ.வே.சுப்ரமணிய ஐயரின் 90-ம் ஆண்டு நினைவாக "கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை" என்ற நூல் ஒன்றை வ.வே.சுப்ரமணிய ஐயரின் மகன் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார் (1971). இந்த நூலில் கம்பனின் காலம் ஆராயப்படுகிறது. கம்பனும் ஒட்டக்கூத்தனும் சமகாலத்தவர்களல்லர் என்பது வ.வே.சுப்ரமணிய ஐயர் கருத்து. அதோடு இவர் கம்பனின் காலத்தை 9-ம் நூற்றாண்டுக்குக் கொண்டுசெல்கிறார். பொதுவாகத் தமிழ் அறிஞர்கள் அதிக முரண்பாடில்லாமல் சொல்லும் கம்பனின் காலத்தை இவர் மறுத்தார். பிற்காலத்தில் இவரது கருத்து சரியானதல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

மொழி நிலைப்பாடுகள்

இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழ் என்ற வழக்கு பொதுவானதே தவிர சாகுந்தலம், மிருச்சகடிகா போன்ற நாடகங்கள் தமிழில் இல்லை என்பதை முதலில் கூறியவர் வ.வே.சுப்ரமணிய ஐயர். பிற இந்திய மொழிகளில் காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு வந்துவிட்டது என்பதைத் தமிழ்ப் பண்டிதர்கள் உணரவில்லை என்பதும், தமிழறிந்த ஆங்கில அறிஞர்கள் தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்வதில்லை என்பதும் வ.வே.சுப்ரமணிய ஐயரின் நிலைப்பாடாக இருந்தது.சமகால இலக்கியத்தை இவர் புத்திலக்கியம் என்ற சொல்லால் குறித்தார். மூன்றாம்தர இலக்கியத்தின் தன்மைகளில் ஒன்று அறக்கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே போவது என்ற கருத்தக் கொண்டிருந்தார். புத்திலக்கியத்தில் உபதேசம் (பிரச்சாரம்) மீறி ஒலிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

விவாதங்கள்

1924 -ல் வ.வே.சுப்ரமணிய ஐயர் நடத்திய தமிழ்நாடு ஆசிரமம் என்ற குருகுலத்தில் பிராமண சாதி மாணவருக்கு தனி பந்தி போடப்படுவதாக ஈ.வெ.ராமசாமி பெரியார் உருவாக்கிய விவாதம் தமிழகத்தில் காங்கிரஸ் பிளவுபடவும், ஈ.வெ.ராமசாமி பெரியார் வெளியேறி ஜஸ்டிஸ் கட்சியில் சேரவும் பின்னர் திராவிடர் கழகம் தொடங்கவும் வழிவகுத்தது (பார்க்க சேரன்மாதேவி குருகுல தனிப்பந்தி பிரச்சினை)

மறைவு

ஜுன் 4, 1925-ல் குருகுல மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது அம்பாசமுத்திரம் அருவியில் விழுந்த மகள் சுபத்ராவைக் காப்பாற்ற குதித்த வ.வே.சு. ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.

நாட்டுடைமை

வ.வே. சு ஐயரின் படைப்புகள் தமிழக அரசால் 1998-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

நினைவகங்கள், நூல்கள்

நினைவகங்கள்
  • தமிழ்நாடு அரசு வ.வே.சுப்ரமணிய ஐயர் திருச்சியில் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
  • சேரன்மகாதேவியில் வ.வே.சு. ஐயர் மாணவர் விடுதி உள்ளது.
நூல்கள்
  • தி.செ.சௌ.ராஜன் - வ.வெ.ஸு.ஐயர் வாழ்க்கை வரலாறு
  • கோ.செல்வம் வ.வெ.சு,ஐயர் வாழ்க்கை வரலாறு இந்திய இலக்கியச் சிற்பிகள்
  • பெ.சு.மணி வ.வே.சு.ஐயர் அரசியல் இலக்கியப் பணிகள்
  • என்.வி.கலைமணி. வ.வெ.சு.ஐயர் வாழ்க்கை வரலாறு
  • இலந்தை இராமசுவாமி வ.வே.சு ஐயர் ஒரு வாழ்க்கை
  • கம்பன் புகழ் பரப்பிய வ.வே..சு.ஐயர் பி.எஸ்.மணி
  • நாட்டுக்குழைத்த நல்லவர். வ.வே.சு ஐயர். எம்.வி.வெங்கட்ராம்

இலக்கிய இடம்

வ.வே.சுப்ரமணிய ஐயர் தமிழிலக்கியத்தில் மூன்று களங்களில் பங்களிப்பாற்றியிருக்கிறார். புனைவெழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய ஆராய்ச்சியாளர். புனைவெழுத்தாளராக அவருடைய மங்கையர்க்கரசியின் காதல் எனும் தொகுப்பிலுள்ள எட்டு கதைகளே கிடைக்கின்றன. அதிலுள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல்சிறுகதையாக மணிக்கொடி மரபினரால் சுட்டப்பட்டது. ஆனால் அது சிறுகதைவடிவம் அமைந்த கதை அல்ல, அது தாகூரின் காடேர் கதாவின் தழுவலும்கூட. அத்தொகுதியிலுள்ள எல்லா கதைகளுமே வலுவான பிறசாயல்கள் கொண்டவை.

வ.வே.சுப்ரமணிய ஐயரின் மொழியாக்கங்கள் முக்கியமானவை. கம்பராமாயணம், திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அவை மேலைநாட்டு அறிஞர் நடுவே தமிழிலக்கியம் சார்ந்த கவனத்தை உருவாக்கின. தமிழுக்கு தாகூர் போன்றவர்களின் படைப்புகளை அறிமுகம் செய்தார். நவீனத் தமிழிலக்கியம் உருவாவதற்கு அந்த மொழியாக்கங்கள் உதவின.

வ.வே.சு.ஐயர் தமிழிலக்கிய விமர்சனத்தின் முன்னோடி என சொல்லத்தக்கவர். இலக்கியவிமர்சனத்திற்கான அளவுகோல்களை பற்றி விரிவாகப்பேசியிருக்கிறார். பாரதியின் கண்ணன் பாட்டுக்கு எழுதிய முன்னுரை, கம்பராமாயண ரசனை என்ற பெயரில் எழுதிய கட்டுரைத்தொடர், ஆங்கிலத்தில் கம்பராமாயணத்திற்கு எழுதிய அறிமுகவுரை போன்றவை தமிழிலக்கியம் பற்றிய முன்னோடி திறனாய்வு முயற்சிகள்.

நூல்கள்

சிறுகதை
  • குளத்தங்கரை அரசமரம் - முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை
  • மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் - 1910 - முதல் சிறுகதைத் தொகுதி
தமிழ்
  • கம்பராமாயணச் சுருக்கம். பாலகாண்டம் - 1917
  • சந்திரகுப்தச் சக்கரவர்த்தி - 1919
  • தன்னம்பிக்கை - 1919
  • குரு கோவிந்த்சிங் - 1924
ஆங்கிலம்
  • Kamba Ramayana A Study - 1950
  • திருக்குறள் மொழிபெயர்ப்பு - 1915

உசாத்துணை


✅Finalised Page