பாலபாரதி
- பாலபாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலபாரதி (பெயர் பட்டியல்)
பாலபாரதி (இதழ்) (1924-1925) வ.வே.சுப்ரமணிய ஐயர் நடத்திய இதழ். வ.வே.சுப்ரமணிய ஐயர் நடத்திய பாரத்வாஜ ஆசிரமத்தின் சார்பில் இவ்விதழ் வெளியிடப்பட்டது. தேசியக் கருத்துக்களை வெளியிட்டது.
வெளியீடு
வ.வே.சுப்ரமணிய ஐயர் 1924-ல் அவர் சேரன்மாதேவி ஊரில் தொடங்கிய பாரத்வாஜ ஆசிரமம் தமிழ்க்குருகுலப் பள்ளி சார்பில் பாலபாரதி இதழை தொடங்கினார். 1924 அக்டோபர் மாதம் முதல் இதழ் வெளியாகியது. இது ஓர் மாத இதழ். இதில் எண்கள் முழுக்க தமிழிலேயே அமைந்திருந்தன. 1925-ல் வ.வே.சு.ஐயரின் மறைவுடன் இதழ் நின்றுவிட்டது.
நோக்கம்
பாலபாரதி இதழ் பற்றி ஐயர் குறிப்பிடும்போது "இப்பத்திரிக்கை சேரன்மாதேவி தமிழ்க்குருகுலத்தின் வாயிலாகத் தோன்றுகிறது. தமிழ்க் குருகுலத்தின் நோக்கம் தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கிற தமிழுக்கு அதன் இயற்கையான முதன்மை ஸ்தானத்தைத் தந்து, புராதன காலத்துக் கலைகளைப் போலவே, இக்காலத்துக் கலைகளுக்கும் அதைப் பெரியதோர் நிலையமாக ஆக்க வேண்டும் என்பதும் தமிழ் மக்களுக்கு பூரணமான கல்வி - அதாவது இலக்கியக் கல்வியோடு விசுவகர்மக் கலைகளும் - கற்பிக்க வேண்டும் என்பதுமே. அந்நோக்கத்திற்கேற்ப இப்பத்திரிக்கையில் சீனத்தினின்று பெரு தேசம் வரையிலுள்ள சகல நாடுகளிலும் பூத்த இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவோம். சங்ககாலம் முதற்கொண்டு இந்நாள் வரையிலுமுள்ள தமிழ் இலக்கியங்களின் விமர்சனங்கள் வெளியிடப் பார்ப்போம்" என்ற நோக்கத்தை பிரகடனப்படுத்திக் கொண்டு இதழை ஆரம்பித்தார்.
உள்ளடக்கம்
பாலபாரதி இதழில் குருகுலச் செய்திகளுடன் தேசிய அரசியல் செய்திகளும் வெளியிடப்பட்டன. இலக்கியக் குறிப்புகளும், சிற்பச்செல்வங்கள், ஆலயங்கள் பற்றிய கட்டுரைகளும் இருந்தன. வ.வே.சு.ஐயரே பெரும்பாலான பக்கங்களை எழுதினார். ராஜகோபாலன் கடிதங்கள் என்ற பெயரில் பல கடிதங்களை அவரே எழுதினார். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு முதன் முதலில் பாலபாரதியில் தான் தொடராக வெளியானது. கம்பராமாயண ரசனை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் வெளிவந்தது. நெப்போலியன் வரலாற்றையும் எழுதிவெளியிட்ட இதழ் ஆங்கில அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. ஐயர் லைலி மஜ்னூன், எதிரொலியாள், அழேன் ழக்கே போன்ற சிறுகதைகளை இவ்விதழில் எழுதினார்.
வீர சவார்க்கரின் கடிதங்கள் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. எஸ். வையாபுரிப் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, சுத்தானந்த பாரதி, ரா.அனந்தகிருஷ்ணன், ப.ஆதிமூர்த்தி ஆகியோரின் இலக்கியக் கட்டுரைகளும் நா.முத்துவையர் எழுதிய இசைக்கட்டுரைகளும் வெளிவந்தன. ஆலோக அவலோகனம் என்னும் பெயரில் ஐயர் தன் அரசியல் கருத்துக்களை எழுதினார். ஆங்கிலம் மற்றும் தமிழில் தொடர்ந்து விமர்சனங்கள் வெளியானது. ’உத்தரயோகி’ என்ற புனைப்பெயரில் அரவிந்தரின் "யோக ஸாதனம்" நூல் அமுதனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்தது.
பங்களிப்பாளர்கள்
- எஸ். வையாபுரிப் பிள்ளை
- பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை
- சுத்தானந்த பாரதி
- ரா.அனந்தகிருஷ்ணன்
- ப.ஆதிமூர்த்தி
- மகேசகுமார சர்மா
- கி. லஷ்மண சர்மா
உசாத்துணை
- வ.வே.சு. ஐயர் (பகுதி - 3), அரவிந்த், தென்றல் (tamilonline.com)
- வ.வே.சு.ஐயர் கோ.செல்வம். சாகித்ய அக்காதமி வெளியீடு
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:12 IST