under review

மண்டயம் சீனிவாசாச்சாரியார்

From Tamil Wiki
மண்டயம் சகோதரர்கள்
மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார்

மண்டயம் சீனிவாசாச்சாரியார் (1843) (மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாரியார், மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார்) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். இதழாளர். சி.சுப்ரமணிய பாரதியாரின் தோழர். புதுச்சேரியில் இருந்து இந்தியா என்னும் இதழை நடத்தினார். 'மண்டயம் சகோதரர்கள்' என திருமலாச்சார், ஶ்ரீனிவாசாச்சார், பார்த்தசாரதி அழைக்கப்படுகிறார்கள். 'புதுச்சேரி சகோதரகள்' என்றும் அழைக்கப்படுவதுண்டு.

பிறப்பு, கல்வி

மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாரியார் புகழ்பெற்ற மண்டயம் மரபு என்னும் தென்கலை வைணவ பெருங்குடும்பத்தில் தோன்றியவர். மண்டயம் சகோதரர்கள் என மண்டயம் திருமலாச்சாரியார், மண்டயம் ஶ்ரீனிவாசாச்சார், மண்டயம் யோகி பார்த்தசாரதி ஐயங்கார் அழைக்கப்படுகிறார்கள். புதுச்சேரி சகோதரகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்தனர். ஶ்ரீரங்கப்பட்டினம் குடும்பம் என்னும் புகழ்மிக்க குடும்ப மரபைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மூதாதையான பிரதான் திருமலா ராவ் கோவை ஆட்சியராக இருந்தார். பின்னர் மைசூர் அரசரின் அமைச்சர்களில் ஒருவராக ஶ்ரீரங்கப்பட்டினத்தில் பணியாற்றினார்.

மண்டயம் சீனிவாசாச்சாரியாரின் முழுப்பெயர் மண்டயம் ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீனிவாசாச்சாரியர். 1843-ல் பிறந்தார். தந்தை பெயர் மண்டயம் குந்தளம் கிருஷ்ணமாச்சாரியார். தாயார் வேடம்மா . இவரது சகோதரி பெருந்தேவியின் மகன் அளசிங்கப் பெருமாள்.

தனிவாழ்க்கை

மண்டயம் சீனிவாசார்ராரியாருக்கு யதுகிரி, ரங்கநாயகி, பாத்தசாரதி என மூன்று குழந்தைகள். மண்டயம் சீனிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரி அம்மாள் பாரதியின் வாழ்க்கை பற்றிய நினைவுக்குறிப்பை எழுதி புகழ்பெற்றவர். மண்டயம் சீனிவாசாச்சாரியாரின் மகன் மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து தன் 104 -ஆவது வயதில் ஏப்ரல் 12, 2021-ல் காலமானார்.

அரசியல்

மண்டயம் சீனிவாசாச்சாரியார் காங்கிரஸில் பாலகங்காதர திலகரின் தீவிரவாதப் பிரிவில் ஈடுபாடு கொண்டிருந்தார். மிதவாதிகளான வி.கிருஷ்ணசாமி ஐயர் அணிக்கு எதிரியாக இருந்தார். அரவிந்தருடன் அணுக்கமாக இருந்தார். புதுச்சேரியில் வ.வே. சுப்ரமணிய ஐயர், நீலகண்ட பிரம்மசாரி ஆகியோருக்கு ஆயுதப்பயிற்சிகள் எடுப்பதற்கு உதவிசெய்தார்.

இதழியல்

மண்டயம் சீனிவாசாச்சாரியார் இந்தியா , விஜயா ஆகிய இதழ்களின் வெளியீட்டாளர்களில் ஒருவர் என்னும் வகையில் அறியப்படுகிறார். தன் உடன்பிறந்த சகோதரர் மண்டயம் திருமலாச்சாரியாருடன் இணைந்து இந்தியா இதழை நடத்தினார். பின்னர் விஜயா இதழும் இவர்களின் கூட்டுப்பொறுப்பில் வெளிவந்தது.

பாரதியுடன்

மண்டயம் சீனிவாசாச்சாரியார் சி.சுப்ரமணிய பாரதியாரின் அணுக்கமான நண்பர். பாரதியார் புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்தபோது தானும் சென்றார். 'இந்தியா', 'விஜயா' ஆகிய இதழ்களை பாரதிக்காகவே நடத்தினார். புதுச்சேரியில் பாரதிக்கு தேவையான உதவிகளைச் செய்தார். பாரதியின் இல்லத்தின் அருகிலேயே குடியிருந்தார். பாரதி நினைவுகளை எழுதியிருக்கிறார். பாரதி நினைவுகளை இவர் மகள் யதுகிரி அம்மாளும் எழுதியிருக்கிறார்.

இலக்கியப் பணிகள்

மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாரியார் இந்தியா, விஜயா இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அரவிந்தர் பற்றிய கட்டுரைகளை எழுதினார். வ.வே.சு ஐயர், பாரதியார் இருவரையும் ஒப்பிட்டு மார்ச் 1942 கலைமகள் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page