under review

மண்டயம் திருமலாச்சாரியார்

From Tamil Wiki
மண்டயம் திருமலாச்சாரியார்
மண்டயம் சகோதரர்கள்

மண்டயம் திருமலாச்சாரியார் ( ) (ஶ்ரீரங்கப்பட்டணம் குந்தளம் திருமலாச்சாரியார், எஸ்.கே.திருமலாச்சாரியார்) இந்திய விடுதலைவீரர், இதழாளர். பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா இதழின் வெளியீட்டாளர். தமிழகத்தின் தொடக்ககால இதழாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருமலாச்சாரியார் முழுப்பெயர் மண்டயம் ஶ்ரீரங்கப்பட்டணம் குந்தளம் திருமலாச்சாரியார். மண்டயம் மரபு என்னும் வைணவப் பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவர் திருமலாச்சாரியார். மண்டயம் சீனிவாசாச்சாரியார் , மண்டயம் யோகி பார்த்தசாரதி ஐயங்கார் ஆகியோர் இவருடைய சகோதரர்கள். இவர்கள் மண்டயம் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். புதுச்சேரி சகோதரர்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இவர்களின் சகோதரி பெருந்தேவியின் மகன் அளசிங்கப் பெருமாள்

இவர்களின் தந்தை பெயர் மண்டயம் குந்தளம் கிருஷ்ணமாச்சாரியார். தாயார் வேடம்மா. இவர்களின் மூதாதையான பிரதான் திருமலா ராவ் பிரிட்டிஷாரின் ஆட்சியில் கோவை ஆட்சியராகவும் பின்னர் மைசூரில் உயர்பதவியிலும் இருந்தார். சென்னையில் திருமலா ராவ் வசித்த இல்லம் 'பெரிய அகம்' என அழைக்கப்பட்டது. இந்த இல்லம் திருவல்லிக்கேணியில் தெப்பக்குளம் தெரு முதல் ஹனுமந்தராயன் தெரு வரை அமைந்திருந்தது. திருமலா ராவின் வாரிசுகள் அங்கே வசித்தார்கள். திருமலா ராவ் பிரிட்டிஷாரிடமிருந்து ராவ் பகதூர் பட்டம் பெற்றவர். வாரிசுரிமையாக திருமலாச்சாரியார் பெற்ற சொத்துக்களை இந்தியா இதழ் நடத்தி பெரும்பாலும் இழந்தார். கிருஷ்ணமாச்சாரியார் பாண்டிச்சேரியில் குடிபெயர்ந்து வாழ்ந்தமையால் பாரதியாருடன் திருமலாச்சாரியாரும் சகோதரர்களும் புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்தனர்.

இதழியல்

இந்தியா இதழ்

மண்டயம் திருமலாச்சாரியார் சென்னையில் அழகிய சிங்கர் என்பவர் நடத்திவந்த பிரதிவாதி என்னும் வைணவ வேதாந்தப்பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அரசியலிதழ் ஒன்றை நடத்தவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்த அவர் தன் உறவினர்களான மண்டயம் அளசிங்கப் பெருமாள் மற்றும் மண்டயம் எம்.பி.திருமலாச்சாரியார் ஆகியோரின் உதவியுடன் இந்தியா என்னும் இதழை மே 9, 1906 அன்று சென்னையில் தொடங்கி வார இதழாக சனிக்கிழமை தோறும் வெளியிட்டார். இண்டியா ஸ்டீம் பிரிண்டிங் பிரஸ் என்னும் அச்சுநிறுவனத்தை அதன்பொருட்டு நடத்தினார். இரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய திருமலாச்சாரியாரின் பள்ளித் தோழரான எம்.சீனிவாச அய்யங்கார் (முரப்பாக்கம் சீனிவாசன்) ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்தியா இதழ் மண்டயம் திருமலாச்சாரியாரின் மருமகனும் விவேகானந்தரின் மாணவருமான அளசிங்கப் பெருமாள் நடத்திவந்த 'பிரம்மவாதின்' அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

பாரதியார்

சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றிய சி.சுப்ரமணிய பாரதியார் செப்டம்பர் 1906-ல் இந்தியா இதழில் ஆசிரியராகச் சேர்ந்தார். பாரதியாரின் முழுப்பொறுப்பில் இந்தியா இதழ் அதன் பின்னர் வெளிவந்தது. பாரதியின் இதழாகவே அறியப்படுகிறது. திருமலாச்சாரியார் இந்தியா இதழை பாரதியின் பொருட்டே தொடங்கியதாக பாரதியுடன் சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராக இருந்தவரும் , தேசியத்தலைவர்கள் பலருடைய வரலாற்றை எழுதியவருமான எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் எழுதி 1955-ல் வெளிவந்த 'சுப்பிரமணிய பாரதியார்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்

ஆங்கிலேய அரசு அரசத்துரோக நடவடிக்கை எடுத்ததனால் இந்தியா இதழ் 1908-ம் ஆண்டு செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து சென்னையில் வெளிவருவதை நிறுத்திக்கொண்டது. பாரதியாரும், மண்டயம் திருமலாச்சாரியரும் புதுச்சேரிக்குத் தப்பிச்சென்றனர்

புதுச்சேரி வாழ்க்கை

திருமலாச்சாரியார் புதுச்சேரியில் தன் உடன்பிறந்தவர்களுடன் தங்கினார். அங்கே அவர் அரவிந்தரின் அணுக்கமான நண்பராக ஆனார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்வதற்கான உதவிகளையும் புதுச்சேரி சகோதரர்கள் செய்தனர்

திருமலாச்சாரியாரின் நண்பரான வில்லியனூர் எஸ். லட்சுமி நாராயண ஐயர் பிணை அளிக்கவே இந்தியா இதழ் அக்டோபர் 20, 1908 முதல் புதுச்சேரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. மண்டயம் சீனிவாசாச்சாரியார் இந்தியா இதழைப் பொறுப்பேற்று நடத்தினார்.'சரஸ்வதி அச்சகம்' என்ற பெயரில் இந்தியா இதழுக்கு ஓர் அச்சகம் அமைக்கப்பட்டது. புதுவை எத்ரான்ஷேர் தெருவில் 58-ம் எண் உள்ள வீட்டில் இந்த அச்சகம் நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுபிடிகளால் மார்ச் 12, 1910 அன்று இந்தியா வெளிவருவது நின்றது.

விஜயா

மண்டயம் திருமலாச்சாரியார் 1909-ல் விஜயா (இதழ்) என்னும் மாத இதழை தொடங்கினார். இந்தியா இதழ் பிரிட்டிஷ் இந்தியாவில் தடைசெய்யப்பட்டு வினியோகம் செய்ய இயலாமையால் இவ்விதழைத் தொடங்கினார். இந்தியா இதழின் சரஸ்வதி அச்சகத்திலேயே இவ்விதழும் அச்சிடப்பட்டது. இதன் ஆசிரியராகவும் சி.சுப்ரமணிய பாரதியே செயல்பட்டார்.

The Indian Republic

மண்டயம் திருமலாச்சாரியார் தன் சகோதரர்களுடன் இணைந்து 'The Indian Republic' என்னும் ஆங்கில இதழையும் நடத்தினார். அது இந்தியா இதழின் ஆங்கில வடிவமாகவே இருந்தது. சி.சுப்ரமணிய பாரதியார், அரவிந்தர் ஆகியோரின் எழுத்துக்களுடன் மண்டயம் திருமலாச்சாரியார், மண்டயம் சீனிவாசாச்சாரியார் ஆகியோரும் அதில் எழுதி வந்தனர்

அரசியல்

மண்டயம் திருமலாச்சாரியார் காங்கிரஸில் பாலகங்காதர திலகரின் தீவிரவாத அணியைச் சேர்ந்தவர். மிதவாத அணிக்குத் தலைமைதாங்கிய ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயருக்கு எதிரானவர்.

பாலகங்காதர திலகர் 1898-ல் சிறையிலிருந்து விடுதலை பெற்ற சிலநாட்கள் கழித்து, சென்னைக்கு வந்து அளசிங்கப்பெருமாள் மற்றும் மண்டயம் குடும்பத்தவரைச் சந்தித்தார். திலகரின் அணுக்கராகிய வாசுதேவ் ஜோஷி 1902-ல் மண்டயம் குடும்பத்தவரைச் சந்தித்தார் 1902-ல் சகோதரி நிவேதிதாவும் சென்னைக்கு வந்திருந்தார்.

விபின் சந்திரபால் 1907-ம் ஆண்டு, மே மாதத்தில் சென்னைக்கு வந்திருந்து, பத்து நாட்கள் தொடர் விரிவுரைகள் நிகழ்த்தினார். அதில் பங்குகொண்டவர்களில் வி.சக்கரைச் செட்டியாரும், சி.சுப்பிரமணிய பாரதியும் குறிப்பிடத்தக்கவர்கள். விபின் சந்திரபால் தங்கிய இல்லம் மண்டயம் குடும்பத்திற்குச் சொந்தமானது. அது அப்போது 'புதுச்சேரி இல்லம்' என அழைக்கப்பட்டது.

இந்தியா இதழ் காங்கிரஸின் தீவிர அணியை முன்வைக்கும் நோக்கம் கொண்டது. புதுச்சேரியில் அரவிந்தருக்கு அணுக்கமாக இருந்தார். வ.வே. சுப்ரமணிய ஐயர், நீலகண்ட பிரம்மசாரி ஆகியோர் புதுச்சேரியில் இருந்தபோது அவர்களை ஆதரித்தார். வ.வே.சு.ஐயர் ஆயுதப்பயிற்சி பெறவும், துப்பாக்கிகள் வாங்கவும் உதவி செய்தார்.

வரலாற்று இடம்

மண்டயம் திருமலாச்சாரியார் விடுதலைப்போராட்ட வீரர், இதழியல் முன்னோடி என்னும் இரு தளங்களில் தமிழக வரலாற்றில் முதன்மையான இடம் உடையவர். பாரதியின் புரவலராகவும் அவர் மதிக்கப்படுகிறார்

உசாத்துணை


✅Finalised Page