தேசபக்தன்(இதழ்)
- தேசபக்தன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேசபக்தன் (பெயர் பட்டியல்)
தேசபக்தன் (டிசம்பர் 1917 - மே 1921) திருவிக சென்னை மாகாண சங்கத்தின் மூலம் தொடங்கிய இதழ். இவ்விதழ் இந்திய தேசியப் போராட்டத்திற்காக உருவாக்கப்பட்டது. வ.வே.சு.ஐயரும் இதில் ஆசிரியராகப் பணியாற்றினார். (இலங்கையில் கோ. நடேசய்யர் தேசபக்தன் என்னும் இதழ் ஒன்றை நடத்தியிருக்கிறார்)
நோக்கம்
தேசபக்தன்’ என்ற பத்திரிகையின் நோக்கத்தைப் பற்றி திரு.வி.க. எழுதுகையில், ‘தேசபக்தன்’ சுதந்திரத்தை விரும்புகிறான். சுய ஆட்சி கேட்கின்றான். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் சகோதரத்துவத்தை உண்டு பண்ணுகின்றான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தோற்றம்
திரு.வி.கவின் முயற்சியால் சென்னை மாகாண சங்கம் தேசபக்தன் என்னும் இதழையும், அதை வெளியிடும் பொருட்டு பிரிட்டிஷ் இந்தியா அச்சகத்தையும் நிறுவியது. சுப்பராய காமத் , குமாரசாமிச் செட்டியார் இருவரும் அந்த அச்சகத்தை நிறுவினர். திருவிகவின் தமையன் திரு.வி. உலகநாத முதலியார் அச்சகப்பொறுப்பை ஏற்றார். டிசம்பர் 7, 1917-ல் தேசபக்தன் இதழின் ஆசிரியர் பொறுப்பை திருவிக ஏற்றார்.
பொறுப்பாளர்கள்
தேசபக்தனில் வெ. சாமிநாத சர்மா, சேஷாத்ரி சர்மா, வெங்கடாச்சாரியார், பழனிவேல், சம்பத் ஆகியோர் உதவி ஆசிரியர்களாக பணியாற்றினர். குலாம் ஹமீது, பரலி சு. நெல்லையப்பர், இராஜகோபால் நடேசன் ஆகியோர் பின்னர் துணையாசிரியர்கள் ஆயினர். தி.செ.சௌ.ராஜன், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், ஈ.வெ.ராமசாமி பெரியார் போன்றவர்கள் அதன் இயக்குநர்களாக இருந்தார்கள். சுப்பராய காமத் நிர்வாகியாக இருந்தார். டாக்டர் வரதராஜலு நாயுடு, ஆதிநாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப், லாட் கோவிந்த தாஸ் முதலியோரும் பொறுப்பில் இருந்தனர்.
உள்ளடக்கம்
திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 'தேசபக்தன்' இதழ் அவருடைய தனித்தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 'தமிழ் முழக்கமும், தேசிய முழக்கமும் செய்யும் இதழாக இது வெளியானது' என திரு.வி.க தன் வரலாற்றில் சொல்கிறார். தேசபக்தன் தேசிய இயக்கமும் தமிழியக்கமும் இணைந்து வெளியிட்ட செய்தியிதழாக திகழ்ந்தது. 'சிலம்பு 13 - பரல் 11' என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது இந்த இதழ். பாரதமாதா ஆலயம் கட்டவேண்டும் என்னும் தன் ஆசையை முன்வைத்து சுப்பிரமணிய சிவா எழுதிய 'எனது பிரார்த்தனை' என்னும் கவிதை ஜனவரி 1918 இதழில் வெளிவந்தது.
தடை
28 பிப்ரவரி 1919-ல் தேசபக்தன் அரசின் பறிமுதல் ஆணைப்படி தடைசெய்யப்பட்டது . அபராதம் கட்டப்பட்டு மீண்டும் இதழ் வெளிவந்தது.
மறுவெளியீடு
சுப்பராய காமத் இதழை அடகுவைத்து பணம் வாங்கியதை அறிந்ததும் ஜூலை 22, 1920-ல் இதழில் இருந்து திரு.வி.க விலகினார். திருவிக விலகியபின் தேசபக்தன் இதழுக்கு 1920 முதல் 1922 வரை வ.வே. சுப்ரமணிய ஐயர் ஆசிரியராக இருந்தார்.
இதழ் நிறுத்தம்
ஒன்பது மாதங்கள் தேசபக்தனுக்கு ஆசிரியராக இருந்த வ.வே.சு ஐயர் மே 6, 1921-ல் அதில் எழுதிய அடக்குமுறை என்னும் தலையங்கத்திற்காக கைது செய்யப்பட்டார். 1921 மே இதழுடன் தேசபக்தன் நின்றுவிட்டது
இடம்
தேசபக்தன் தமிழில் இதழியலில் ஒரு முன்னோடி முயற்சி. சம்ஸ்கிருதக் கலப்புள்ள செய்திநடையை மாற்றி தூயதமிழ் நடையை செய்திகளுக்குப் பயன்படுத்தி வழிகாட்டியது. இன்று செய்திகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான கலைச்சொற்களை இந்த இதழ்தான் உருவாக்கியது.
உசாத்துணை
- வ.வே.சு.ஐயர். புலவர் அரசு- இணையநூலகம்
- தமிழ் ஊடக வரலாறு- சாவித்ரி கண்ணன்
- இதழியல்கலை அன்றும் இன்றும்
- திருவிக தமிழ் இதழியல் முன்னோடி- அ.பிச்சை
- திருவிகவின் தேசபக்தன் கட்டுரைகள் - பதிப்பாசிரியர் டி.என்.ராமச்சந்திரன்
- Kalyanasunthara Mudaliyar- Hindu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Apr-2025, 22:42:58 IST