under review

எஸ்.வி.ராஜதுரை

From Tamil Wiki
எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை, பெரியாருடன் (நன்றி தி ஹிந்து)
எஸ்.வி.ராஜதுரை_ 2000
எஸ்.வி.ராஜதுரை_ 1995
உயிர் எழுத்து. எஸ்.வி.ஆர் மலர்

எஸ்.வி.ராஜதுரை (பிறப்பு: ஏப்ரல் 10, 1940 ) (இயற்பெயர் கே.மனோகரன்) மார்க்ஸிய -திராவிட இயக்கச் சிந்தனையாளர். இலக்கிய விமர்சகர், அரசியல் களச்செயல்பாட்டாளர், சிற்றிதழாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என அறியப்பட்டவர். தமிழ்ச் சிந்தனைச்சூழலில் மார்க்ஸியத்தை அன்னியமாதல் கோணத்தின் படி விளக்கியவர்களில் முன்னோடி. மேலை மார்க்ஸியத்தை அறிமுகம் செய்தவர். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சிந்தனைகளை பொருள்சார்ந்து தொகுத்து முன்வைத்தவர்.

எஸ்.வி.ராஜதுரை

பிறப்பு, கல்வி

எஸ்.வி.ராஜதுரை ஏப்ரல் 10, 1940-ல் தாராபுரத்தில் காளியப்பா - அங்கம்மாள் இணையருக்குப் பிறந்தார். தந்தை காளியப்பா காந்தியவாதி. இந்திய சுதந்திரப்போராட்ட வீரரான காளியப்பா சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவமிழந்தார். எஸ்.வி.ராஜதுரைக்கு பதினாறு வயதிருக்கையில் தந்தை காலமானார். பொருளாதார நெருக்கடி காரணமாக கல்லூரிப் படிப்பு இடைநின்றது.

தனிவாழ்க்கை

எஸ்.வி.ராஜதுரைக்கு பள்ளிப் படிப்பின் அடிப்படையில் 19 வயதில் ஊட்டியில் அரசு வேலை கிடைத்தது. 21-ம் வயதில் காசநோய்க்கு ஆளானதால் ஊட்டியில் நீடிக்கமுடியவில்லை. 1965-ல் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக பதவியிறக்கம் செய்ததால் பணியை ராஜினாமா செய்தார்.

எஸ்.வி.ராஜதுரை பொள்ளாச்சியில் உர நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். க்ரியா ராமகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். ஐராவதம் மகாதேவன் 1980-ல் சென்னையில் பொதுத்துறை நிறுவனமொன்றில் எஸ்.வி. ராஜதுரையை வேலையில் அமர்த்தினார். ஒன்றரை ஆண்டுகளில் அவ்வேலையை துறந்தார்.

எஸ்.வி.ராஜதுரையின் மனைவி பெயர் சகுந்தலா. 2002-ல் எஸ்.வி. ராஜதுரைக்கும், மனைவிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மனைவியின் சொந்த ஊரான கோத்தகிரிக்குக் குடிபெயர்ந்தார்.

பெரியார் மேடையில்...(நன்றி தி ஹிந்து)
எஸ்.வி.ராஜதுரை மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி தலைவர் ஆர்.பாலகிருஷ்ணனுடன்
பெரியார் ஒளி விருது

அரசியல் செயல்பாடுகள்

தொடக்கம்

எஸ்.வி.ராஜதுரை மாணவராக இருந்த காலம் முதலே திராவிடர் கழகத்தில் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் பணிகளில் பங்கெடுத்துவந்தார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)

எஸ்.வி.ராஜதுரை பொள்ளாச்சியில் உர நிறுவனம் ஒன்றில் வேலைசெய்தபோது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ல் உறுப்பினராகச் சேர்ந்தார். பொள்ளாச்சி நகர கமிட்டியின் செயலாளர் சி.ப.வேலுசாமி ,சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோரின் அறிமுகத்தால் முற்போக்கு இலக்கிய நூல்களை வாசித்தார். 1966-ல் கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு நடைபெற்றபோது ஆர்.கே.கண்ணன் அறிமுகமானார். 1965-களில் கோவையில் ‘சிந்தனை மன்றம்’ என்ற அமைப்பு நடத்திவந்த மாதாந்திரக் கூட்டங்களின் வழியாக எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி போன்றவர்கள் அறிமுகமானார்கள்

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மா.லெ)

உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவு ஏற்படத் தொடங்கியதையடுத்து 1967-ல் எஸ்.வி.ராஜதுரை மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகி, மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் (எம்.எல்) இயக்கத்துக்கு முன்னோடியாக இருந்த அமைப்புகளில் சேர்ந்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி(எம்.எல்) யின் நிறுவனர் சாரு மஜூம்தார் கோவை வந்தபோது அவரைச் சந்தித்து அவருடைய தனிநபர் அழித்தொழிப்புக் கொள்கையில் உடன்பாடில்லை என்று தெரிவித்தார். 1970 ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (எம்.எல்) இயக்கங்களில் இருந்து விலகினார். 1971-ல் ‘கசடதபற’ இதழ் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தன் மூலம் எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா) போன்றவர்களுடன் அறிமுகமானார். க்ரியா ராமகிருஷ்ணன் அழைப்பின் பேரில் சென்னையில் குடியேறிய எஸ்.வி.ராஜதுரை ஐராவதம் மகாதேவன் பரிந்துரையால் 1980-ல் சென்னையில் பொதுத்துறை நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.

மீண்டும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மா.லெ.) அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட எஸ்.வி.ராஜதுரை அவர்களின் கலாச்சார அமைப்புகளில் செயல்பட்டார். அதன்பொருட்டு பணியை ராஜினாமா செய்தார். கிளாட் ஆல்வாரிஸின் பரிந்துரையில் டெல்லியில் உள்ள சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தின் (சிஎஸ்டிஎஸ்) ‘லோகாயன்’ (மக்களின் உரையாடல்) என்ற திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றினார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகி பி.யு.சி.எல். அமைப்பில் மனித உரிமை சார்ந்து களச் செயல்பாடுகளில் பங்கேற்றார்.19-ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மா.லெ) அமைப்பில் இருந்து விலகினார்.

பெரியாரியம்

எஸ்.வி.ராஜதுரை 1988-ல் வ.கீதாவிடம் அறிமுகமானார். வ.கீதா திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஆய்வுசெய்துவந்தவர். வ.கீதாவுடன் இணைந்து ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சிந்தனைகளை பேசுபொருள் சார்ந்து தொகுக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதழியல்

எஸ்.வி.ராஜதுரை க்ரியா ராமகிருஷ்ணன், திலீப் குமார் ஆதரவோடு 1986-ல் ‘இனி’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கினார். உயர்தரமான அச்சில் 4,000 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்ட அவ்விதழை முகவர்கள் சிலரின் மோசடியால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பின்னர் 'இனி' இதழை சென்னையில் இருந்து சிலகாலம் தொடர்ச்சியாக நடத்தினார். அதனால் ஏற்பட்ட பண இழப்பை க்ரியா ராமகிருஷ்ணனின் நண்பர் ஒருவரும் சுந்தர ராமசாமியும் ஈடுசெய்ததாகக் குறிப்பிடுகிறார்.

மனித உரிமைப்பணிகள்

எஸ்.வி.ராஜதுரை பியூசிஎல் அமைப்புடன் இணைந்து மனித உரிமை பணிகளில் ஈடுபட்டார். மனித உரிமைச் செயல்பாடுகள், அரசியல் கைதிகளின் விடுதலை இயக்கம், மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் என 2002 வரை களசெயல்பாடுகளில் ஈடுபட்டார்.

எஸ்.வி.ராஜதுரை

அமைப்புச் செயல்பாடுகள்

  • 2007, 2008-ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • டெல்லியில் உள்ள சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தின் (சிஎஸ்டிஎஸ்) ‘லோகாயன்’ (மக்களின் உரையாடல்) என்ற திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டார்.
  • பி.யு.சி.எல். அமைப்பில் மனித உரிமை சார்ந்து களச் செயல்பாடுகளில் பங்கேற்றுவந்தார்.
எஸ்.வி.ராஜதுரை

எழுத்து வாழ்க்கை

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரையின் எழுத்துக்கள் இலக்கியம், அரசியல் சிந்தனைகள் என்னும் இரண்டு வகைமைக்குள் அடங்குபவை.

அரசியல் எழுத்துக்கள்

எஸ்.வி.ராஜதுரையின் அரசியல் எழுத்துக்கள் மூன்று காலகட்டங்களாகப் பார்க்கத்தவை. கருத்தியல் சார்ந்து அவர் மார்க்ஸிய இயக்கங்களில் இருந்து நவீனத்துவ சிந்தனைகள் வழியாக பெரியாரிய ஆய்வுகளுக்குச் சென்றார். இந்த மூன்று காலகட்டங்களிலும் குறிப்பிடத்தக்க நூல்களை உருவாக்கியிருக்கிறார்.

மார்க்ஸிய காலகட்டம்

எஸ்.வி.ராஜதுரை மார்க்சிய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்ட தொடக்க காலகட்டங்களில் பெரும்பாலும் கோட்பாட்டுநூல்களை மொழியாக்கம்தான் செய்திருக்கிறார். கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் ஆகியோர் முன்வைத்த அன்னியமாதல் சார்ந்த மார்க்ஸிய ஆய்வுநோக்கைச் சார்ந்து கட்டுரைகள் எழுதினார்.

நவீனத்துவ காலகட்டம்

197-ல் க்ரியா ராமகிருஷ்ணன் மற்றும் கசடதபற இதழ் சார்ந்த எழுத்தாளர்களுடனான தொடர்பால் எஸ்.வி.ராஜதுரை மார்க்ஸியத்தின் மரபான அணுகுமுறை மீது விமர்சனங்களை முன்வைக்கும் நூல்களை எழுதினார். அவையே தமிழில் அவருக்கு விரிவான வாசகர் வட்டத்தை உருவாக்கியவை. இருத்தலியமும் மார்க்ஸியமும் , ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் ஆகிய நூல்கள் ஐரோப்பிய மார்க்ஸிய மரபை அறிவதற்கான முன்னோடி நூல்களாக கருதப்படுகின்றன.

பெரியாரிய காலகட்டம்

1988-ல் வ.கீதாவின் அறிமுகம் கிடைத்த பின் இருவரும் இணைந்து ஈ.வே.ராமசாமிப் பெரியாரின் சிந்தனைகளை தொகுத்து அவருடைய செயல்பாடுகளின் பின்னணியில் விளக்கும் பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்னும் பெருநூலை எழுதினர். பெரியாரியம் என இன்று அழைக்கப்படும் சிந்தனைமுறையின் அடிப்படைகளை வடிவமைத்த நூலாக அது கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் பெரியாரியப் பார்வையில் 'இந்து இந்தி இந்தியா', 'பசு பதி பாகிஸ்தான்' போன்ற நூல்களை எழுதினார்

இலக்கிய எழுத்துக்கள்

எஸ்.வி.ராஜதுரையின் இலக்கிய எழுத்துக்கள் இலக்கியவரலாற்று எழுத்துக்கள், இலக்கிய கோட்பாட்டு எழுத்துக்கள். இலக்கிய ரசனை எழுத்துக்கள் மற்றும் மொழியாக்கங்கள் என்னும் வகைமைகளுக்குள் அடங்குபவை.

இலக்கிய வரலாற்று எழுத்துக்கள்

எஸ்.வி.ராஜதுரை மார்க்ஸிய வரலாற்றுப் பின்னணியில் இலக்கியத்தை அணுகும் 'ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம்', 'ரஷ்யப்புரட்சி - ஒரு புத்தகத்தின் வரலாறு' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்

இலக்கியக் கோட்பாட்டு எழுத்துக்கள்

எஸ்.வி. ராஜதுரை'அழகும் உண்மையும்', 'மார்க்ஸியப் பார்வை' போன்ற நூல்களில் எஸ்.வி.ராஜதுரை இலக்கியத்தின் மார்க்ஸிய அழகியலை முன்வைத்து எழுதியிருக்கிறார்

இலக்கிய ரசனை எழுத்துக்கள்

எஸ்.வி. ராஜதுரைதஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், அன்னா அக்மதேவா, உம்பர்த்தோ ஈகோ, ஜோஸ் சரமாகோ, குந்தர் கிராஸ், மிலன் குந்தேரா, இதாலோ கால்வினோ, வோலோ சோயிங்கா, கார்லோஸ் புயந்தஸ், நெருதா, ஆக்டோவியா பாஸ், லோசா, கொர்த்தசார், ருல்போ, யஹுதா அமிக்காய், முகமது தார்வீஸ், எட்வரட் ஸைத், சார்த்தர் எனப் பல்வேறு முக்கிய இலக்கிய ஆளுமைகள், அவர்களது படைப்புகள் குறித்து விரிவான விமர்சனங்களை எழுதியிருக்கிறார் .

தனிக்கட்டுரைகளாக எஸ்.வி.ராஜதுரை இலக்கியப்படைப்புகள், படைப்பாளிகளைப் பற்றி எழுதியவை 'சொல்லில் நனையும் காலம்', 'ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்' போன்ற தலைப்புகளில் நூல்களாகியிருக்கின்றன. அவருடைய பிரியத்திற்குரிய எழுத்தாளர் போர்ச்சுக்கல் நாட்டு நாவலாசிரியர் யோஸ் சரமாகோ பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அக்கட்டுரைகள் பார்வையிழத்தலும் பார்த்தலும்,' ஸரமாகோ: நாவல்களின் பயணம்' என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

விவாதங்கள்

எஸ்.வி.ராஜதுரை கிளாட் ஆல்வாரிஸின் தன்னார்வக்குழுவில் செயல்பட்டதை ஒட்டி இடதுசாரி அமைப்புகளில் செயல்பட்டவர்கள் அந்நிறுவனம் அன்னியநிதி பெறும் அமைப்பு என குற்றம்சாட்டி கட்டுரைகள் எழுதினார். புதியஜனநாயகம் ஜூலை 16-31, 1988 இதழில் ஆர்.கெ என்பவர் எழுதிய அதைப்பற்றிய விரிவான கட்டுரை வெளிவந்தது. அசோக் யோகன் என்ற இடதுசாரிச் சிந்தனையாளர் ’இனியொரு’ என்னும் இடதுசாரி இணைய இதழில் ’எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!’ என்ற கட்டுரையில் எஸ்.வி.ராஜதுரை எவாஞ்சலிகா அக்காதமியா என்ற மதப்பரப்பு அமைப்பால் நிதியுதவிசெய்யப்படும் INSD என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டினார்.

தன்மேல் உளவுத்துறை கண்காணிப்பு இருந்தமையால் அதைத் தவிர்க்கவே கிளாட் ஆல்வாரிஸ் பரிந்துரையால் தன்னார்வ நிறுவனத்தில் பணியாற்றியதாகச் சொல்லும் எஸ். வி.ராஜதுரை ‘அந்தக் குற்றச்சாட்டைத் தன்மீதும் சுமத்திவிடுவார்களோ என்று அஞ்சிய மா-லெ இயக்கத் தமிழகத் தலைவர் தனது பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக என்னைப் பலிகொடுக்க முடிவுசெய்தபோது எனக்கும் அந்த இயக்கத்துக்குமான முறிவு 1984-ல் நிரந்தரமாக ஏற்பட்டது’ என்று தமிழ் இந்து பேட்டியில் குறிப்பிடுகிறார்.

எஸ்.வி.ராஜதுரையின் ‘Towards a Non Brahmin Millennium: From Iyothee Thass to Periyar’ என்னும் ஆங்கில நூலின் முதல் பதிப்பின் முன்னுரையில் World Association for Christian Communication என்ற உலகளாவிய கிறிஸ்தவ மரப்பரப்பு அமைப்பின் உதவி அந்நூலுக்கு உண்டு என குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி ஜெயமோகன் தமிழகத்தில் கருத்துருவாக்கத்திற்கு வெளிநாட்டு கிறிஸ்தவ அமைப்புகள் நிதியுதவி செய்வதை பற்றி 2012-ல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அது தன்மீதான அவதூறு என எஸ்.வி.ராஜதுரை நவம்பர் 6, 2012 முதல் வழக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தார். ( C.C.No.66/12 ) அவ்வழக்கு விசாரணைக்கு வராமலேயே மார்ச் 18, 2022-ல் எஸ்.வி.ராஜதுரையால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

விருதுகள்

  • திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி வாழ்நாள் சாதனையாளர் விருது
  • திருச்சி கலைக்காவேரி அமுதன் அடிகள் விருது 2005
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேனி மாநாடு வாழ்நாள் சாதனையாளர் விருது 2016
  • விடுதலைச் சிறுத்தைகள் வழங்கிய பெரியார் ஒளி விருது 2022
  • ஆயல் இலக்கிய விருது 2022

இலக்கிய இடம்

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பை ஆறு தளங்களிலாக வரையறை செய்யலாம் என எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்

  • பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய அவரது ஆய்வுகள். கட்டுரைகள். தோழர் வ. கீதாவுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார் (தமிழிலும் ஆங்கிலத்திலும் )
  • சமகால அரசியல், பண்பாட்டுப் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள். (தமிழிலும்,ஆங்கிலத்திலும்)
  • கம்யூனிச சிந்தனைகள், அரசியல் நிலைப்பாடுகள், களச்செயல்பாடுகள். சர்வதேச அரசியல் மற்றும் தத்துவார்த்த கட்டுரைகள். மார்க்சிய சிந்தனைகள், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்ட மொழியாக்கங்கள்
  • உலக இலக்கிய அறிமுகக் கட்டுரைகள். விமர்சனங்கள், மொழியாக்கங்கள்.
  • ஈழத்தமிழர் பிரச்சனை சார்ந்த விரிவான கட்டுரைகள் மனித உரிமைப்பிரச்சனைகள். குறிப்பாக மரணதண்டனை, அகதிகள், சிறைக்கொடுமைகள் சார்ந்த ஆய்வுகள். கட்டுரைகள். உரைகள். களச்செயல்பாடுகள்,
  • தமிழகக் கலை இலக்கிய அரசியல் பண்பாட்டுக் கட்டுரைகள். ஆய்வுகள், மறுப்புக் கட்டுரைகள், இனி இலக்கிய இதழ், திராவிட இயக்க ஆய்வுகள்.

எஸ்.வி.ராஜதுரை தமிழில் பொதுவான இடதுசாரி அரசியல்சார்ந்த எழுத்துமுறைக்குள் ஐரோப்பிய மார்க்ஸிய சிந்தனைகளை அறிமுகம் செய்து புதிய விவாதங்களை உருவாக்கியவர். எஸ்.என்.நாகராஜன் போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட அன்னியமாதல் சார்ந்த மார்க்ஸியப்பார்வையை தமிழில் விரிவான ஆய்வுப்பின்னணியுடன் எழுதினார். மார்க்ஸியசிந்தனைக்குள் ஏகாதிபத்திய நோக்கை எதிர்த்து சிந்தனைச் சுதந்திரத்தை முன்வைக்கும் நூல்களான ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம் போன்றவற்றை எழுதினார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சிந்தனைகளை அவருடைய பணிகளுடன் இணைத்து கோட்பாட்டுக் கட்டமைப்புடன் உருவாக்கி தமிழ்ச்சூழலில் பெரியாரியம் என்னும் கருத்துருவம் நிலைபெற வழியமைத்தார்.

நூல்கள்

தமிழ்

மொழிபெயர்ப்பு
  • யானிஸ் வருஃபாகிஸின் ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’
  • இரத்தம் கொதிக்கும் போது (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) (வம்சி)
  • பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் (யானிஸ் வருஃபாகிஸ்) (க்ரியா)
  • கார்ல் மார்க்ஸ் (1881-1883) (மார்ஸெல்லோ முஸ்ட்டோ)
  • லெனின் என்னும் மனிதர் (தொமாஸ் க்ரொவ்ஸ்)
  • கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) (கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்)
  • கடைசி வானத்துக்கு அப்பால் (கவிதை)
  • ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் (ஆனந்த் தெல்தும்ப்டே)
  • சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும் (மார்ஸெல்லோ முஸ்ட்டோ)
  • மனித சாரம் (ஜார்ஜ் தாம்ஸன்)
  • அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்
  • அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் (ஷீலா ரௌபாத்தம்)
  • அக்மதோவா: அக்கரைப் பூக்கள்
கட்டுரை
இலக்கியம்
  • ஸரமாகோ: நாவல்களின் பயணம்
  • தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்
  • ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு
  • ரஷ்யப்புரட்சி -இலக்கியசாட்சியம்
  • கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின...
  • பார்வையிழத்தலும் பார்த்தலும்
  • சாட்சி சொல்ல ஒரு மரம்
  • கல் தெப்பம்
  • அழகும் உண்மையும்: மார்க்ஸியப் பார்வை
  • ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்
  • எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்
  • சொல்லில் நனையும் காலம் (கலை இலக்கியக் கட்டுரைகள்)
அரசியல்
  • இருத்தலியமும் மார்க்ஸியமும்
  • ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்
  • இந்து இந்தி இந்தியா
  • அமித் ஷா அயோத்யா
  • கார்ல் மார்க்ஸ் 200
  • மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்
  • தலித்தியமும் உலக முதலாளியமும்
  • பெரியார்: ஆகஸ்ட் 15
  • இந்திய அரசும் மரண தண்டனையும்
  • ஆகஸ்ட்15: துக்கநாள் - இன்பநாள்
  • ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை
  • பதி பசு பாகிஸ்தான் (அடையாளம் பதிப்பகம்)
  • அயர்லாந்தின் போராட்டம்
  • 69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?
தொகைநூல்
  • பெரியார்: சுயமரியாதை சமதர்மம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) (வ.கீதாவுடன்)
வாழ்க்கை வரலாறு
  • கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
  • சார்த்தர்: விடுதலையின் பாதைகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

ஆங்கிலம்

‘Towards a Non Brahmin Millennium: From Iyothee Thass to Periyar’

இணைப்புகள்


✅Finalised Page