under review

அனந்தலக்ஷ்மி சடகோபன்

From Tamil Wiki
அனந்தலக்ஷ்மி சடகோபன் (இள வயதுப் படம்)

அனந்தலக்ஷ்மி சடகோபன் (ஏப்ரல் 28, 1928 - மே 15, 2013) கர்நாடக இசைப் பாடகர்.

வாழ்க்கைக் குறிப்பு

அனந்தலக்ஷ்மி சடகோபன், ஏப்ரல் 28, 1928-ல், மதுரையில், ஏ.ஆர்.நாராயணன் - அலமேலு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். வருமான வரித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய பி. சடகோபனை மணம் செய்துகொண்டார். மகன்கள்: எஸ். சீனிவாசன், எஸ். நாராயணன். மகள்: ஸுஜாதா விஜயராகவன்.

அனந்தலக்ஷ்மி சடகோபன்
அனந்தலக்ஷ்மி சடகோபன் இசைக்கச்சேரி (படம் நன்றி: சொல்வனம் இணைய இதழ்)
அனந்தலக்ஷ்மி சடகோபன்

இசை வாழ்க்கை

தொடக்கம்

அனந்தலக்ஷ்மி இளம் வயதிலேயே நல்ல குரல் வளமும் இசை ஞானமும் கொண்டிருந்தார். மூன்று வயதிலேயே அவரால் பல்வேறு ராகங்களை அடையாளம் காண முடிந்தது. ஒருமுறை கேட்ட பாடல்களை அப்படியே பாடும் திறன் கொண்டிருந்தார். அதனால், அனந்தலக்ஷ்மியை இசைத்துறையில் பயிற்றுவிக்க எண்ணம் கொண்ட தந்தை, இசைக்கலைஞர் சாத்தூர் ஏ.ஜி. சுப்ரமணியத்தைச் சந்தித்தார். அவரும் அழைப்பிற்கிணங்கி அவர்கள் வீட்டிற்கே வந்து அனந்தலக்ஷ்மிக்கு இசை பயிற்றுவித்தார். இசையின் ஆரம்பப் பாடங்களை அவரிடம் பயின்றார் அனந்தலக்ஷ்மி.

தொடர்ந்து கணேச பாகவதர், செம்மங்குடி சீனிவாச ஐயர், நெடுநூரி கிருஷ்ணமூர்த்தி, டி. முக்தா, வி.வி. சடகோபன் போன்ற வித்வான்களிடம் இசை கற்றார். 1939-ல், தனது பதினோராம் வயதில், மதுரையில், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் முன்னிலையில் தனது முதல் கச்சேரியை நிகழ்த்தினார். தொடர்ந்து வாமன் ராவ் ஸ்தோலிகரிடம் ஹிந்துஸ்தானி இசையைக் கற்றுக் கொண்டார். இப்பயிற்சி, பாடுகையில் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைவடிவங்களைப் புரிந்து சிறப்பாகக் கச்சேரிகளில் பாடுவதற்கு உதவியது.

வானொலி

அனந்தலக்ஷ்மி, பன்னிரெண்டு வயதில் சென்னை வானொலியில் பல பாடல்களைப் பாடி பரவலான இசை ரசிகர்களுக்கு அறிமுகமானார். திருமணத்திற்குப் பின் அனந்தலக்ஷ்மி சடகோபன் புதுதில்லிக்குச் சென்று வசித்தார். அங்கு அகில இந்திய வானொலியில் பாடும் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. தொடர்ந்து பல்வேறு கச்சேரிகளை வானொலியில் வழங்கினார். வானொலியில் ஒலிபரப்பான பல இசை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராகவும், போட்டி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் செயல்பட்டார். அகில இந்திய வானொலியின் 'ஏ கிரேடு' கலைஞராகத் திகழ்ந்தார்

இசைத்தட்டுகள்

அனந்தலக்ஷ்மி சடகோபன் சென்னைக்கு வந்து வசித்தபோது வானொலியில் தொடர்ந்து பல இசைக் கச்சேரிகளை வழங்கி ரசிகர்களிடையே புகழ்பெற்றார். ஹெச். எம். வி. நிறுவனத்தின் முதல் தமிழ் இசைக்கச்சேரி இசைத்தட்டு அனந்தலக்ஷ்மியினுடையதுதான். இதில் சி. ஆர். சுப்பராமன், வி. வி. சடகோபன் இருவரும் இசையமைப்பாளராகப் பங்களித்திருந்தனர். இவ்விசைத்தட்டில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பிரபலப்படுத்திய 'சங்கராபரணனை அழைத்தோடிவாடி கல்யாணி, தர்பாருக்கு' என்கிற சதுர்ராகமாலிகைப் பல்லவியை எல்.பி. ரெக்கார்டின் காலவரயறைக்கு ஏற்ப மிகத் திறமையாகப் பாடியிருந்தார் அனந்தலக்ஷ்மி. நான்கு ராகங்களின் சாரத்தையும் சுருக்கமான ஆலாபனைகளில் வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

டைகர் வரதாச்சாரியாரின் வர்ணம் முதல் அருணாசலக் கவிராயரின் மங்களம் வரை அனைத்துப் பாடல்களும் முழுக்க முழுக்கத் தமிழிலேயே அமைந்த வகையில் தமிழ் இசைத்தட்டு ஒன்றைப் பாடி வெளியிட்டார். தொடர்ந்து அனந்தலக்ஷ்மி சடகோபனின் பல்வேறு இசைத்தட்டுகள் வெளியாகின.

இசைக் கச்சேரிகள்

அனந்தலக்ஷ்மி சடகோபன், சென்னையின் பல அரங்குகளில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தினார். மகள் ஸுஜாதா விஜயராகவனுடன் இணைந்து பல கச்சேரிகளைச் செய்தார். கூடவே மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், வில்லிபாரதம், கிருஷ்ண லீலா தரங்கிணி, குற்றாலக் குறவஞ்சி போன்ற நாட்டிய நாடகங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றினார். அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்களுக்கு இசையமைத்தார். அவை ஒரு தொகுப்பாக வெளியாகின.

விருதுகள்

  • 1943-ல் 'மியூசிக் அகடெமி' நடத்திய போட்டியில் நடுவர்களான ஜி. என். பாலசுப்ரமணியன், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை அளித்த ஹெச்.எம்.வி. நிறுவனத்தின் தங்கப்பதக்கம்
  • நாரத கான சபா வழங்கிய மூத்த இசைக் கலைஞர் விருது.

சீடர்கள்

  • ஸுஜாதா விஜயராகவன்
  • மதுரை சுந்தர்

மறைவு

அனந்தலக்ஷ்மி சடகோபன், மே 15, 2013 அன்று காலமானார்.

மதிப்பீடு

நல்ல குரல் வளம் கொண்டிருந்த அனந்தலக்ஷ்மி சடகோபன், கச்சேரியில் ராகங்களை நேர்த்தியாக வெளிக்கொணர்வதில் தேர்ந்தவர். இலக்கணச் சுத்தமாகப் பாடுவது, ராக ஆலாபனைகளில் முதிர்ச்சி, கச்சேரி மேடைகளில் அதிகம் புழக்கமில்லாத ராகங்களை நேர்த்தியாகப் பாடுவது போன்ற முறைகளைக் கையாண்டார். மூன்று ஸ்தாயிகளிலும் மிக எளிதாகச் சஞ்சரித்துப் பாடும் திறன் கொண்டிருந்தார். செவ்வியல் விழுமியங்களையும் மரபுகளையும் ஆழமாகப் பின்பற்றிய ஒரு இசைக்கலைஞராக அறியப்படுகிறார்.

அனந்தலக்ஷ்மி சடகோபன், டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி, என்.சி. வசந்தகோகிலம் வரிசையில் இடம்பெறத்தக்க தமிழின் முன்னோடிப் பாடகிகளில் ஒருவராகவும், கர்நாடக இசைத் துறையின் முன்னோடிப் பெண் கலைஞர்களில் ஒருவராகவும் மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Sep-2026, 20:47:27 IST