under review

அசதா

From Tamil Wiki
அசதா

அசதா (அ. சகாய ஆரோக்கியதாஸ், முகையூர் அசதா) (பிறப்பு: அக்டோபர் 1, 1973) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கவிதை, சிறுகதைகள், மொழியாக்கங்கள் செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

அசதாவின் இயற்பெயர் அ. சகாய ஆரோக்கியதாஸ். விழுப்புரம் மாவட்டம் முகையூரில் அருளானந்தம், அந்தோணியம்மாள் இணையருக்கு மூத்த மகனாக அக்டோபர் 1, 1973-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். முகையூர் புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். திண்டிவனம் ஆர்.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி வழியில் ஆங்கிலத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.

தனிவாழ்க்கை

அசதா மே 6, 2002-ல் அமலோற்பவ ராணியை மணந்தார். மகன் ஜெயந்தன் ஆனந்த், மகள் அனன்யா ஜெய்மி. அசதா பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அசதாவின் முதல் கவிதை 1995-ல் கணையாழி இதழில் பிரசுரமானது. முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதை 1996-ல் கணையாழியில் வெளியானது. 'வார்த்தைப்பாடு' என்ற சிறுகதைத் தொகுப்பு 2003-ல் யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியீடாக வந்தது. 'பிஷப்புகளின் ராணி' என்ற தலைப்பில் இவரது கவிதைகள் 2004-ல் தொகுப்பாக வெளியாயின. இந்திய ஆங்கிலக் கவிஞர் ஜெயந்த மகாபாத்ராவை செப்டம்பரில் கட்டக்கில் சந்தித்து நேர்காணல் செய்தார். இது 2005 ஜனவரி 'தீராநதி' இதழில் பிரசுரமானது.

ஆதர்ச எழுத்தாளர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், வண்ணநிலவன், ஜெயமோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், தஸ்தயேவ்ஸ்கி, காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

மொழிபெயர்ப்பு

அசதா முதல் மொழிபெயர்ப்பு நூல் 'வீழ்த்தப்பட்டவர்கள்' இளங்கோ நூலக வெளியீடாக 2002-ல் வெளிவந்தது. இது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மெக்சிக நாவல். காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸின் 'முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்' நாவலும், 'நீலநாயின் கண்கள்' என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும் மொழிபெயர்த்தார்.

விருது

  • 'வீழ்த்தப்பட்டவர்கள்' மொழிபெயர்ப்பு நாவலுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2004).
  • 'நீலநாயின் கண்கள்' மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புக்காக ஆனந்த விகடன் விருது (2015).
  • 'நிலத்தின் விளிம்புக்கு' மொழிபெயர்ப்பு நாவலுக்காக அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது (2023).
  • 2004-ம் ஆண்டு சாகித்ய அகாதமியின் 'இளம் எழுத்தாளருக்கான பயண நல்கை' விருது.

இலக்கிய இடம்

அசதா சமகால உலக இலக்கியத்தை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்தவர்களில் ஒருவர். கிறிஸ்தவப் பின்னணியைக் கொண்ட குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • பிஷப்புகளின் ராணி
சிறுகதைத்தொகுப்பு
  • வார்த்தைப்பாடு
பிற
  • இருளில் ஒளிரும் செஞ்சுடர் (வாழ்க்கை வரலாறு)
மொழிபெயர்ப்பு
  • வீழ்த்தப்பட்டவர்கள் (நாவல்)
  • நீலநாயின் கண்கள் (சிறுகதைத் தொகுப்பு)
  • முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் (நாவல்)
  • நிலத்தின் விளிம்புக்கு (நாவல்)
  • மந்திரவாதியின் சீடன் (நாவல்)
  • திராவிடர் இயக்கமும் கருப்பர் இயக்கமும் (ஆய்வு நூல்)
  • அகதி (கட்டுரை)
  • கடவுளின் இறுதி யாத்திரை (நேர்காணல்)
  • பெண்கள் நடுவே (நாவல்)

வெளி இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 12:02:27 IST