under review

ஹென்ரிக் ஹென்ரிக்கஸ்

From Tamil Wiki
ஹென்ரிக் ஹென்ரிக்கஸ்

ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் (Fr. Henrique Henriques ) (1520 - பிப்ரவரி 22, 1600) (வேறு உச்சரிப்புகள் ஹென்றிக்கு ஹென்றிக்கஸ், என்றீக்கே என்றீக்கசு) போர்ச்சுகீசிய இயேசு சபைப் போதகர், மதப்பரப்புனர். முதன்முதலில் தமிழில் அச்சு நூல்களை வெளியிட்டவர். ’தமிழ் இதழ்களின் தந்தை’ என்றும் ’தமிழ் உரைநடையின் முன்னோடி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இளமை, கல்வி

ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள விலாவிக்கோசாவில் செல்வந்த யூதக்குடும்பத்தில் 1520-ல் பிறந்தார். இவருடைய மூதாதையர் சில தலைமுறைக்கு முன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர்கள். ஹென்ரிக்கஸ் இளமையில் மதக்கல்வியில் ஆர்வம் கொண்டு பிரான்ஸிஸ்கன் குருக்கள் சபையில் சேர்ந்தார். அவர் யூதர் என்பது தெரியவந்தபோது சபைநீக்கம் செய்யப்பட்டார். அக்காலத்தில் பிரான்ஸிஸ்கன் குருக்கள் சபையில் யூதர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. ஹென்ரிக்கஸ் போர்ச்சுக்கல்லில் இருந்த கொம்பேரா நகரில் இருந்த ஏசுசபை குருக்கள் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயின்று 1546-ல் குரு பட்டம் பெற்றார்.

கொம்பேராவில் ஏசு சபை பொறுப்பில் இருந்த அருட்தந்தை சைமன் ரோட்ரிகோஸ் ஹென்ரிக்கஸை இந்தியாவுக்கு பிரான்ஸிஸ் சேவியருக்கு உதவியாக மதப்பணி ஆற்ற அனுப்பலாம் என வாட்டிகனுக்கு எழுதி அனுமதி பெற்றுக்கொடுத்தார். ஏப்ரல் 26, 1546-ல் ஹென்ரிக்ஸ் போப்பாண்டவரின் அனுமதியுடன் இந்தியாவுக்கு பயணமானார்

மதப்பணி

ஹென்ரிக்கஸ் செப்டெம்பர் 17, 1546-ல் இந்தியாவுக்கு வந்து கோவாவில் இறங்கினார். அப்போது சேவியர் கோவாவில் இல்லை, அவர் மலாக்காவில் இருந்தார். மலாக்காவில் இருந்து சேவியர் கடிதம் வழியாக ஹென்ரிக்கஸை இன்றைய தூத்துக்குடி பகுதியின் முத்துக்குளிப்பு பகுதிகளில் மதப்பணியாற்றச் செல்லும்படி ஆணையிட்டார். அங்கே ஏற்கனவே மதப்பணியாற்றி வந்த சேவியர் மலாக்கா செல்லும்போது அந்தோனி கிரிமினாலி என்பவரை அப்பகுதியின் பொறுப்புக்கு நியமித்திருந்தார். டிசம்பர் 1946-ல் தூத்துக்குடி வந்த ஹென்ரிக்கஸ் தூத்துக்குடி,வைப்பாறு, வேம்பாறு ஆகிய இடங்களில் மதப்பணி ஆற்றும் பொறுப்பை அந்தோனி கிரிமினாலியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

போர்ச்சுக்கீசியருக்கும் ராமநாதபுரம் சேதுபதிக்கும் நடந்த போரில் வேதாளை என்னும் ஊரில் 1549-ல் அந்தோனி கிரிமினாலி கொல்லப்பட்டார். அவர் வகித்த பொறுப்புகளை ஏற்க ஹென்ரிக்கஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தோனியோ கோமஸ் என்னும் மதகுரு அவர் யூதர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அந்நியமனத்தை எதிர்த்தாலும் கோவாவில் இருந்த தலைமை பிஷப்பின் ஆணையால் ஹென்ரிக்கஸ் புன்னக்காயல் பகுதியின் மதப்பரப்புச் செயல்பாடுகளின் தலைவராக ஆனார்.

ஹென்ரிக்கஸ் உள்ளுர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சேவியர் ஆணையிட்டார். ஹென்ரிக்கஸ் புன்னக்காயலில் இருந்த தமிழறிஞர்களிடமிருந்து தமிழை முறையாக கற்றுக்கொண்டார்.அக்டோபர் 31,1548-ல் ஏசு சபை நிறுவனரான இக்னேஷியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில் தமிழை முறையாகக் கற்பதாகவும், தமிழில் நூல் எழுதும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஜனவரி 12, 1549 -ல் சேவியர் ஏசு சபை நிறுவனர் இக்னேஷியஸுக்கு எழுதிய கடிதத்தில் ஹென்ரிக்கஸ் தமிழ் கற்றுத்தேர்ந்ததைப் பாராட்டியிருந்தார்.

ஹென்ரிக்கஸ் 'அண்டிரிக் அடிகளார்' என மக்களால் அழைக்கப்பட்டார். 1550-ல் புன்னக்காயலில் ஒரு மருத்துவமனையை அமைத்தார். 1772-ல் சபை அறிக்கைகளின் படி மணப்பாடு, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டணம் , தூத்துக்குடி, வைப்பாறு ஆகிய ஊர்களில் ஏழு மருத்துவமனைகள் செயல்பட்டன. அவற்றில் செயல்பட உள்ளூர் இளைஞர்களுக்கு மருத்துவப் பயிற்சி அளிக்கப்பட்டது. 1570- ல் ஹென்ரிக்கஸ் எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவராக மாற விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மருத்துவமனையில் இடம் உண்டு என்று குறிப்பிடுகிறார்.

1553-ல் இஸ்லாமியப் படையினர் நாயக்கர் படையொன்றுடன் இணைந்து புன்னக்காயலை தாக்கி ஹென்ரிக்கஸை சிறைப்பிடித்தனர். அவருடைய கால்களிலும் கழுத்திலும் இரும்புச் சங்கிலிகள் போட்டு சிறைப்பிடித்து வைத்திருந்தார்கள்.இஸ்லாமியரைத் தோற்கடித்த போர்ச்சுக்கீசியர் ஆயிரம் பர்டா (மராட்டிய தங்கக் காசு) பணத்தை ஈடு கொடுத்து ஹென்ரிக்கஸை மீட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

தம்பிரான் வணக்கம்
கல்விச்சேவை

ஹென்ரிக்கஸ் 1567-ல் புன்னக்காயலில் தமிழ்க் கல்விநிலையம் ஒன்றைத் தொடங்கினார். பேதுரு லூயிஸ் என்று பெயர் மாற்றம் செய்துகொண்ட கேரள பிராமணர் ஒருவர் இப்பணியில் உதவினார். கோவாவில் இருந்துகூட மாணவர்கள் வந்து இங்கே தமிழ் கற்றுக்கொண்டார்கள். 1588-ல் ஹென்ரிக்கஸ் குருத்துவக் கல்லூரி (செமினாரி) ஒன்றை புன்னைக்காயலில் தொடங்கினார். 1572-ல் பெண்களுக்கு சேவைசெய்யும் சேவைக்கூட்டமைப்பு ஒன்றை தொடங்கினார். புன்னக்காயலில் பின்னர் நெடுங்காலம் நடந்த 'கொம்பேரி சபை' என்னும் சேவை அமைப்பு இந்த கூட்டமைப்பின் தொடர்ச்சிதான் என்று அடியார் வரலாறு(1967) என்னும் நூலில் இராசமாணிக்கம் அடிகளார் குறிப்பிடுகிறார்.

நூல்களும் அச்சுப்பணியும்

மதப்பரப்புப் பணியின் ஒரு பகுதியாக ஹென்ரிக்கஸ் நூல்களை எழுதினார். இவை போர்ச்சுக்கல் மொழியில் இருந்த மூலநூல்களை ஒட்டி மறு ஆக்கமாகவோ, மொழியாக்கமாகவோ எழுதப்பட்டவை. அவர் மொழியாக்கம் செய்து முதலில் வெளிவந்த நூல் தம்புரான் வணக்கம்(1578). இரண்டாவது நூல் கிரீசித்தியானி வணக்கம்’ (1579). கிரீசித்தியானி வணக்கம் தம்புரான் வணக்கம் நூலையே கேள்விபதில் வடிவில் மீண்டும் எழுதியது.

தமிழில் மதப்பணிகளைச் செய்யவேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்த ஹென்ரிக்கஸ் தமிழ்நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.அவர் வெளியிட்ட முதல் நூல் கார்ட்டிலா. இது தமிழ்மொழியை போர்ச்சுக்கீசிய எழுத்துக்களில் அச்சிட்டு உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மதப்பணி புரிந்து வந்த போர்ச்சுக்கீசிய மதகுருக்களுக்கு உதவும்பொருட்டு லிஸ்பனில் அச்சிடப்பட்டு அங்கேயே வெளியிடப்பட்டது .1554-ல் அச்சிடப்பட்ட இந்நூலின் பிரதியை சேவியர் தனிநாயகம் அடிகளார் 1954-ல் போர்ச்சுக்கல்லில் லிஸ்பன் நகரில் ஓர் அருங்காட்சியகத்தில் கண்டு ஆவணப்படுத்தினார். தமிழ்மொழியின் ஒலிவடிவம் அச்சிடப்பட்ட முதல் நூல் இதுவே. (பார்க்க கார்ட்டிலா)

அக்டோபர் 20,1578-ல் அச்சிடப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்ட முதல் நூல். 1577-ல் கோவாவில் தமிழ் எழுத்துக்கள் வார்க்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் கோவாவில் அச்சிட்டநூல்கள் பற்றி செய்திகள் இல்லை. 1578-ல் கொல்லத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, கான்ஸ்லாவஸ் என்னும் கருமானால் தமிழ் எழுத்துருக்கள் வார்க்கப்பட்டன. அவ்வெழுத்துக்களைக் கொண்டு கொல்லத்திலேயே தம்பிரான் வணக்கம் அச்சிடப்பட்டது. ஜோர்ஜ் மார்க்கோஸ் பாதிரியார் போர்ச்சுக்கல் மொழியில் எழுதிய கிறிஸ்தவத்தின் அடிப்படைகள், 'டாக்ட்ரினா கிறிஸ்தவம் '(Doctrina Christam Ordenada A Maneira De Dialogo, Para Ensinar Os Meninos (1592[1])) என்ற நூலின் மொழியாக்கம் இது. இந்நூல் போர்ச்சுக்கல் கத்தோலிக்கத்தின் அடிப்படை கல்விநூல். இந்தியாவில் இதன் பல வடிவங்கள் மொழியாக்கத்திலும் மறு ஆக்கத்திலும் வெளிவந்துள்ளன. ஹென்ரிக்கஸ் இந்நூலை பீட்டர் மானுவல் என்னும் துறவியுடன் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். முத்துக்குளித்துறை வட்டார வழக்கிலேயே இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது (பார்க்க தம்பிரான் வணக்கம்). தம்பிரான் வணக்கம், கிரீசித்தியானி வணக்கம் ஆகிய இரு நூல்களும் தமிழில் அச்சிடப்பட்டவை என்றாலும் தமிழகத்துக்கு வெளியே அச்சிடப்பட்டவை.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கடலில் கலக்கும் புன்னக்காயல் என்னும் இந்த அச்சகம் நிறுவப்பட்டது. (புன்னக்காயல் மற்றும் அருகே உள்ள பழைய காயல் ஆகிய பகுதிகள்தான் பழைய கொற்கை எனப்படுகிறது.) அக்காலகட்டத்தில் படகுகள் காயல் வழியாக கடலுக்குள் இருந்து நிலத்திற்குள் வர உகந்ததாக இருந்தமையால் இப்பகுதி ஒரு சிறு துறைமுகமாகச் செயல்பட்டது.

அச்சகம் அமைக்க முத்துக்குளிவயல் பரதவர்கள் சார்பில் நூறு குருசேடோக்கள் ( சிலுவைச் சின்னத்துடன் போர்ச்சுகீசியர்கள் கோவாவில் அச்சிட்ட தங்கநாணயம். மராட்டிய தங்கநாணயம் பகோடா அல்லது பதக்கம் அல்லது பர்டா எனப்பட்டது. குருசேடோ ஒன்றரை பகோடாவுக்கு சமம்) நன்கொடையாக அளித்தனர்.ஜான் டி பாரியா என்னும் மதகுரு கோவாவில் உருவாக்கிய தமிழ் அச்செழுத்துக்கள் 1577-ல் முத்துக்குளிவயல் வழியாக புன்னக்காயலுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த அச்சகத்தில், தமிழ் மண்ணில் அச்சிடப்பட்ட முதல் நூல் கொம்பெசியொனாயரு என்னும் பாவமன்னிப்பு நூல். இது 'பாவசங்கீர்த்தனக் கையேடு' என கத்தோலிக்கர்கள் சொல்லும் நூல் (பார்க்க கொம்பெசியொனாயரு)

புன்னக்காயலில் அச்சிடப்பட்ட அடுத்த நூல் 'அடியார் வரலாறு' கத்தோலிக்கப் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் Flos Sanctorum[2] (Jacobus de Voragine, 1472) என்னும் போர்ச்சுக்கீசிய நூலின் தமிழாக்கம். மொழியாக்கமாக அன்றி தழுவலாகவே எழுதப்பட்டுள்ளது. இது பைபிளில் இருந்து சிலபகுதிகளை மொழியாக்கம் செய்துள்ளது. ஹென்ரிக்கஸின் காலகட்டத்தில் பைபிள் தமிழில் முழுமையாக மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆகவே அடியார் வரலாறு நூலை பைபிள் மொழியாக்கத்தின் தொடக்ககால வடிவங்களில் ஒன்று என்றும் கூறமுடியும் ( பார்க்க அடியார் வரலாறு )

இலக்கணப்பணி

தமிழில் நவீன இலக்கணத்தை அமைத்த முன்னோடியாக வீரமாமுனிவர் குறிப்பிடப்படுகிறார். ஆனால் அவருக்கு முன்னரே ஹென்ரிக்கஸ் தமிழுக்கு நவீன இலக்கணம் ஒன்றையும், அடிப்படைச் சொற்களுக்கான அகராதி ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அக்டோபர் 31, 1548-ல் அவர் இக்னேஷியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில் 'குருவானவர்கள் இம்மொழியை எளிதாகக் கற்றுக்கொள்வதற்காக ஒருவகையான இலக்கணத்தை எழுத ஐயா பிரான்ஸிஸ் கட்டளையிட்டுள்ளார். ஆண்டவரின் உதவியால் இதை நிறைவேற்றுவேன். தமிழில் ஒரு மொழிபெயர்ப்பாளர் வழியாகப் பேசினாலோ மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் நேரிடையாகப் பேசினாலோ பயன்படக்கூடிய இலக்கண விதிகளையும் வினைத்திரிபுகளையும் வேற்றுமை உருபுகளையும் அந்த இலக்கணத்தில் சேர்ப்பேன்’ என்று கூறுகிறார்

ஹென்ரிக்கஸ் நவம்பர் 13,1949-ல் இக்னேஷியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில் அந்த இலக்கண நூலை முடித்துவிட்டதாகவும் அதன் திருந்தாப்படியை அனுப்பியுள்ளதாகவும் கூறுகிறார். அதில் சிலபகுதிகளை நீக்கி சிலபகுதிகளை சேர்த்து செம்மையாக்க வேண்டும் என்றும் கூறுகிறார். (Jeanne H Hein 1977) தொடர்ந்து 17 ஆண்டுகள் இந்நூலை செப்பனிட ஹென்ரிக்கஸ் உழைத்தார். ஒரு போர்ச்சுகீசிய பாதிரியார் எவர் உதவியும் இல்லாமல் பாவமன்னிப்பு கோருபவர்கள் சொல்வதை கேட்கவும், புரிந்துகொள்ளவும் இந்நூல் உதவும் என்று குறிப்பிடுகிறார்.. கிறிஸ்தவ பாதிரிகள் பாவமன்னிப்பு கேட்கும்போது அதில் மொழியாக்கம் செய்ய இன்னொருவர் தலையிடுவது ரகசியக்காப்பு மீறலாகும். ஆனால் ஹென்ரிக்கஸ் இருபதாண்டுக்காலம் உழைத்து உருவாக்கிய இந்நூல் அச்சாகவில்லை.

1954ல் சேவியர் தனிநாயகம் அடிகளார் லிஸ்பன் தேசிய அருங்காட்சியகத்தில் 'A Arte da lingua Malabar' என்னும் தலைப்பு கொண்ட ஒரு கைப்பிரதியை கண்டெடுத்தார். அதுதான் ஹென்ரிக்கஸ் எழுதிய இலக்கண நூல் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நூல் போர்ச்சுகீசிய மொழியில் பரதவர்களின் பேச்சுமொழிக்கு இலக்கணம் அமைக்கிறது. இத்தகைய ஒரு நூல் இந்திய அளவில் இதுவே முதன்முதலானது. இந்நூல் தமிழில் ஒரு கிளைமொழியாக பரதவரின் பேச்சுத்தமிழில் இருந்து ஓர் உரைநடை உருவாவதன் இலக்கணத்தை அளிக்கிறது.

ஹென்ரிக்கஸின் பிறநூல்கள் பற்றிய குறிப்புகள் அவர் எழுதிய கடிதங்களில் உள்ளன, அவை இன்று கிடைப்பதில்லை. அடியார் வரலாறு நூலின் முன்னுரையில் அவர் புறச்சமயத்தார் கிறிஸ்தவர்கள் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக ஒரு நூல் எழுதவிருப்பதாகச் சொல்கிறார். 'Contra as Fabulas dos Gentios 'என்னும் தலைப்பில் போர்ச்சுகீசிய மொழியிலும் 'புற இனத்தாரின் பொய்யான நம்பிக்கைகளுக்கு எதிரான விவாதங்கள்' என்ற தலைப்பில் தமிழிலும் வெளியாகியுள்ளது. 'Criacao do mundo em Lingua Malabar '(மலபார் மொழியில் உலகின் படைப்பு) Vida de Christo nasso senhor em lingua Malabar (மலபார் மொழியில் கிறிஸ்துவின் வரலாறு)' Vacabulario de lingua Malabar' (தமிழ் போர்ச்சுக்கல் அகராதி) ஆகிய நூல்களையும் ஹென்ரிக்கஸ் எழுதியிருக்கிறார்.

மறைவு

ஹென்ரிக்கஸ் பிப்ரவரி 22, 1600-ல் தனது 80-வது வயதில் புன்னைக்காயலில் காலமானார். இவரது உடல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முத்துக்குளித்துறை (புன்னக்காயல்) திருச்சபை தலைமைகுருவாக 47 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

வாழ்க்கை வரலாறு

தமிழ் அச்சுத்தந்தை அண்ட்ரிக் அடிகளார்- ஆ. சிவசுப்பிரமணியன்(இணையநூலகம்)[3]

தமிழ்ப் பங்களிப்பு

ஹென்ரிக்கஸ் தனது இரு முக்கியப் பங்களிப்புகளுக்காக தமிழ் வரலாற்றில் இடம்பெறுகிறார். நவீனத் தமிழ் உரைநடை மற்றும் அச்சுக்கலையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அக்காலத்தில் தமிழில் உரைநடை இருந்ததில்லை. செய்யுள்நடையே அறிவார்ந்த நடையாக கருதப்பட்டது, யாப்பின்றி அந்நடையை எழுதுவதே உரைநடை எனப்பட்டது- (உதாரணம் இறையனார் அகப்பொருள்). உரைநடை என்பது பேச்சுவழக்கின் செவ்விய வடிவம் என ஐரோப்பிய மொழிகளில் ஏற்கனவே வேரூன்றிய கருத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஹென்ரிக்கஸ். அவரே தமிழில் மக்களின் பேச்சுவழக்கை ஒட்டி உரைநடையை உருவாக்கி நூலாக்கியவர். அவருக்கு முந்தைய காலகட்டத்தில் பேச்சுமொழியின் பதிவை நாம் கல்வெட்டுகளில் மட்டுமே காண்கிறோம். கல்வெட்டுகள் பொதுமக்களை நோக்கி எழுதப்பட்டவை, கல்லாசாரிகளால் பொறிக்கப்பட்டவை என்பதனால் அவை பேச்சுமொழியில் அமைந்தன. தமிழில் உரைநடைக்கான இலக்கணமும் ஹென்ரிக்கஸால் உருவாக்கப்பட்டது. பின்னர் பைபிள் மொழியாக்கம் வழியாக அந்நடை இங்கே வேரூன்றியது. ஆனந்தரங்கம் பிள்ளையின் தினப்படி சேதிக்குறிப்பு போன்ற பிற்கால நூல்களில் இந்நடையின் செல்வாக்கைக் காணலாம். தமிழ் உரைநடை இந்தவகையான அன்றாடக்குறிப்புகள், இதழியல் எழுத்துக்கள் வழியாக உருவாகி வந்தது.

"கிறிஸ்தவத் தமிழ் அல்லது பாதிரித்தமிழ் என்று பின்னர் அழைக்கப்பட்ட ஒரு தமிழ் பற்றிய தரவுகளைச் சேகரித்து வழங்கியவர் ஹென்ரிக்கஸ். ஹென்ரிக்கஸின் இலக்கணத்தில்தான் ஒரு புதிய கிளைமொழியின் உருவாக்கத்தைக் காண்கிறோம். இந்தக் கிளைமொழியின் வரலாற்றை உள்ளடக்காமல் தமிழ் மொழியின் எந்த வரலாறும் முழுமை பெறாது" என்று மிக்கேல் மாணிக்கம் அடிகளார் என்னும் ஏசுசபை துறவி மதிப்பிட்டிருக்கிறார்.

ஹென்ரிக்கஸ் தமிழ் மொழியை அச்சிடுவதில் முன்னோடியாக அமைந்தவர். இந்தியமொழிகளில் மிகத்தொடக்க காலத்திலேயே அச்சிடப்பட்ட மொழி தமிழே. உலகமொழிகளிலேயே ரஷ்யமொழியும், ஜப்பானிய மொழியும் கூட ஏறத்தாழ இதே காலகட்டத்திலேயே முதன்முதலாக அச்சுயந்திரத்தால் அச்சிடப்பட்டன என்று ஆ. சிவசுப்ரமணியம் கூறுகிறார். தொடக்ககாலத்தில் கையால் எழுதப்படும் எழுத்துக்களின் அதே வடிவிலேயே அச்சு எழுத்துக்கள் அமைந்திருந்தன. பின்னர் அந்த எழுத்துக்களின் வடிவம் செப்பனிடப்பட்டது. இன்றைய தமிழ் எழுத்துக்களின் அச்சுவடிவம் அடுத்த நூறாண்டுகளில் வெவ்வேறு கலைஞர்களால் படிப்படியாக உருவாக்கப்பட்டது. ஹென்ரிக்கஸ் அந்த பெரும்பயணத்தின் தொடக்கப்புள்ளி.

நூல் பட்டியல்

  • தம்பிரான் வணக்கம்
  • அடியார் வரலாறு (1586)
  • கிரிஸ்தியானி வணக்கம் (1579)
  • கொமபெசயனாயரு (1578)
  • மலபார் இலக்கணம்

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page