ஶ்ரீநிவாச கோபாலன்
ஶ்ரீநிவாச கோபாலன் (பிறப்பு: மே 14, 1994) பதிப்பாளர், எழுத்தாளர். அழிசி பதிப்பகத்தின் உரிமையாளர். அச்சில் இல்லாத அரிய நூல்களையும் இலக்கிய முன்னோடிகளின் தொகுக்கப்படாத படைப்புகளையும் கண்டெடுத்து பதிப்பித்து வருகிறார்.
பிறப்பு, கல்வி
ஶ்ரீநிவாச கோபாலன் மே 14, 1994-ம் அன்று திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் கிராமத்தில் வேதாந்த தேசிகன் - ரெங்கநாயகி இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை ஶ்ரீவைகுண்டம் பாளையங்கோட்டை பள்ளியிலும் மேனிலை பள்ளிப்படிப்பை தூய சவேரியார் பள்ளியிலும் நிறைவு செய்தார். கணினி அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பை (2011 - 2014) திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியிலும் மின்னூடகவியலில் முதுநிலை பட்டப்படிப்பை (2014 - 2016) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திலும் நிறைவு செய்தார்.
தனிவாழ்க்கை
ஶ்ரீநிவாச கோபாலன் 2016 முதல் 2020 வரை பெங்களூரில் பணி செய்தார். ஊடகத் துறையில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். 2020-ல் இருந்து அழிசி பதிப்பகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். புத்தகங்களுக்கான பக்க வடிவமைப்பு, அட்டை வடிவமைப்பு, மின்னூலாக்கம், விற்பனை ஆகியவற்றை உப தொழிலாக மேற்கொள்கிறார்.
பதிப்பு பணி
பதிப்பாளர்
ஶ்ரீநிவாச கோபாலன் 2017-ல் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் மூலம் மின்னூல் வெளியீடு குறித்த அறிமுகம் கிடைத்தது என்று குறிப்பிடுகிறார். 2017-ல் அழிசி என்ற பதிப்பகத்தின் பெயரில் மின்னூல்களை அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிடத் தொடங்கினார். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட நூல்களை மின்னூல்களாக வெளியிட்டார். அச்சில் இல்லாத அரிய நூல்களை மின்னூல்களாக வெளியிட்டார். அவை குறைந்த விலையிலும் இலவசமாகவும் நல்ல தரத்துடனும் வெளியிடப்பட்டன. எழுத்தாளர்களின் பழைய நூல்களை மின்னூல்களாக வெளியிட உதவி செய்ததின் வாயிலாக அச்சில் இல்லாத நூல்களை மின்னூல்களாக கிடைக்கப் பங்காற்றினார். அழிசி பதிப்பகம் சார்பில் 2018, 2019-ம் ஆண்டுகளில் விமர்சனக் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
2021-ல் அளிக்கப்பட்ட இரண்டு பொய்ப் புகார்களால் மின்னூல் வெளியீட்டைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. செப்டெம்பர் 2021-ல் அருண்குமார் என்பவர் நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சுப்ரமணியத்தின் படைப்புகளுக்கான வெளியீட்டு உரிமம் தன்னிடமே உள்ளது என்று புகார் அளித்தார். அந்த புகாருக்கு ஶ்ரீனிவாசனால் அளிக்கப்பட்ட பதிலை அமேசான் தளம் ஏற்கவில்லை. எனவே அழிசி பதிப்பகத்தின் வழியாக ஏற்றப்பட்ட மின்னூல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அமேசான் கிண்டில் கணக்கு முடக்கப்பட்டது. பின், நண்பர் சுரேஷ் உதவியுடன் அவரது கணக்கில் இருந்து மின்னூல்கள் பதிவேற்றப்பட்டன. நவம்பர் 2021-ல் எழுத்தாளர் பெருமாள் முருகன் கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்கான பதிப்பு குறித்து புகார் அளித்தார். அதனை தொடர்ந்து அழிசி மின்னூல் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டு, அழிசி பதிப்பித்த அனைத்து நூல்களும் அமேசான் கிண்டில் தளத்தில் இருந்து நீக்கப்பட்டன.
பதிப்பாசிரியர்
ஶ்ரீநிவாச கோபாலன், 2021-ம் அக்டோபர் முதல் அச்சில் இல்லாத அரிய தமிழ் இலக்கிய நூல்களை திருத்தமான பதிப்புகளாக அச்சுக்கு கொண்டு வருவதையும் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளை தொகுத்து பதிப்பிப்பதையும் முதன்மை நோக்கமாக கொண்டு அழிசி பதிப்பகத்தை செயல்படுத்தி வருகிறார்.
2021-ல் புதுமைப்பித்தனின் 'நாரத ராமாயணம்' நெடுங்கதையை முதல் பதிப்பை அடியொற்றி திருத்தமான மறுபதிப்பாகக் கொண்டு வந்தார். 2022-ல் க.நா.சுப்ரமண்யம் எழுத்து இதழில் தமிழ் சிறுகதைகள் குறித்து எழுதிய தொடர் கட்டுரைகளை தொகுத்து 'சிறந்த தமிழ் சிறுகதைகள்' என்ற பெயரில் நூலாகப் பதிப்பித்தார். புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு எழுதியவற்றை தொகுத்து 'புதுமையும் பித்தமும்: ஆளுமை - படைப்பு - விவாதம்' என நூலாக வெளியிட்டார். 2025-ல் க.நா.சு மொழிபெயர்த்த ஜென் கவிதைகளை 'என்ன ஆனந்தம்' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். க.நா.சு கல்கி பத்திரிக்கையில் உலக நாவலாசிரியர்கள் குறித்து எழுதிய தொடரைத் தொகுத்து 'உலகத்து சிறந்த நாவலாசிரியர்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
க.நா.சு பாரதி குறித்து ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளையும் மொழிப்பெயர்த்து வெளியிட்ட பாரதியின் கவிதைகளையும் தொகுத்து 'The Birth of a Poet' (2024) என்னும் தலைப்பில் நூலாக்கினார். க.நா.சுவின் 'வாழ்ந்தவர் கெட்டால்' நாவல் நகுலன் மொழிப்பெயர்ப்பில் Indian Literature இதழில் 'The Fall' என்ற தலைப்பில் வெளிவந்தது. அதனைத் தொகுத்து நூல் வடிவம் கொடுத்தார். இவ்விரு நூல்களும் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் பதிப்பிக்கப்பட்டன. 2025-ல் க.நா.சு தனது மொழியாக்க நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளும் குறிப்புரைகளும் தொகுக்கப்பட்டு 'சிரமமான காரியம்: மொழிப்பெயர்ப்பு முன்னுரைகள்' என்று நூல் வடிவத்தில் யாவரும் பதிப்பகத்தின் வழியாக அவரால் பதிப்பிக்கப்பட்டன.
சிற்றிதழ்கள் மின்னூலாக்கம்
சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து சிற்றிதழின் 119 இதழ்களையும் அமேசான் கிண்டில் தளத்தில் மின்னூலாக பதிவேற்றும் பணியை செப்டெம்பர் 29, 2021 தொடங்கி ஆகஸ்ட் 2025-ல் நிறைவு செய்தார். எழுத்து சிற்றிதழின் 119 இதழ்களும் அமேசான் கிண்டில் தளத்தில் மின்னூலாகக் கிடைக்கின்றன. எழுத்து இதழ்களை வெளியிடுவதற்கான அனுமதி சி.சு. செல்லப்பாவின் மகன் சுப்ரமணியத்திடமிருந்து இருந்து பெறப்பட்டது. க.நா.சுவின் இலக்கிய வட்டம் சிற்றிதழை வெளியிடும் பணியைத் தொடங்கியுள்ளார்.
விருதுகள்
- மின்னூல் வெளியீட்டிற்காக குக்கூ அறக்கட்டளையின் 'முகம்' விருது - 2021'
நூல்கள்
பதிப்பித்த நூல்கள்
- நாரத ராமாயணம் (அழிசி, 2021)
- சிறந்த தமிழ் சிறுகதைகள் (அழிசி, 2022)
- புதுமையும் பித்தமும்: ஆளுமை - படைப்பு - விவாதம் (அழிசி, 2022)
- சிரமமான காரியம் மொழிப்பெயர்ப்பு முன்னுரைகள் (யாவரும், 2024)
- The Birth of a Poet (Zero Degree, 2024)
- The Fall (Zero Degree, 2024)
- என்ன ஆனந்தம்: ஜென் கவிதைகள் (அழிசி, 2025)
- உலகத்து சிறந்த நாவலாசிரியர்கள் (அழிசி, 2025)
எழுதிய நூல்கள்
- புதுதில்லியில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு 1987 (அழிசி 2025)
- ஆமையும் ஏனைய விலங்குகளும் (ஆப்ரிக்க தொல்கதைகளின் தமிழாக்கம்) - 2018: டிமோன் என்னும் புனைப் பெயரில்
இணைப்புகள்
- அழிசி வலைத்தளம்
- அழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018
- இலக்கியத்தை விலைபேசுதல்
- முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு
- ஸ்ரீநிவாச கோபாலன் - பேட்டி: ரம்யா, மதார்
- 'எழுத்து' மின்னூலாக்கம் நிறைவு:ஶ்ரீநிவாச கோபாலன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Sep-2025, 09:13:40 IST