under review

மு. காசிவிசுவநாதன் செட்டியார்

From Tamil Wiki
மு. காசிவிசுவநாதன் செட்டியார் (படம் நன்றி: தமிழ் வளர்த்த நகரத்தார்கள் நூல்)
அகநானூறு உரையுடன் (மு. காசிவிசுவநாதன் செட்டியார் பதிப்பு)

மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார்; பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார்:செப்டம்பர் 15,1898-நவம்பர் 14, 1986) தமிழார்வலர்; பல்வேறு இலக்கிய நூல்களைச் சேகரித்து நூலகம் அமைத்தவர். சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் இணைந்து பல நூல்களைப் பதிப்பித்தவர்.

பிறப்பு, கல்வி

மு. காசி விசுவநாதன் செட்டியார், சிவகங்கை மாவட்டம் பாகனேரியில், செப்டம்பர் 15, 1898-ல், முத்தையா செட்டியார் - வள்ளியம்மை ஆச்சிக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். சுய முயற்சியால் பல தமிழறிஞர்களை நாடி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் குலமரபுப்படி வணிகத்தில் ஈடுபட்டார். ரங்கூன் சென்று அங்கு நகைக்கடை நடத்தி வந்த தந்தைக்கு உதவியாளராகச் செயல்பட்டார். அக்காலங்களில் புத்தக வாசிப்பிலும், பழைய இதழ்கள், நூல்கள் சேகரிப்பிலும் இவரது கவனம் சென்றது. தமிழகம் திரும்பியதும் 1915-ல், சீதை ஆச்சியுடன் திருமணம் நிகழ்ந்தது. அவர் காலமாகவே, 1928-ல், லட்சுமி ஆச்சியை மணம் செய்துகொண்டார்.

அமைப்புப்பணிகள்

இளம் வயதிலேயே வாசிப்பார்வம் மிக்கவராக இருந்த காசி விசுவநாதன் செட்டியார், தான் சேகரித்து வைத்திருந்த 1500-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு, 1920-ல், பாகனேரியில் 'கருணாகடாட்சி வாசகசாலை' என்ற நூல் நிலையம் ஒன்றை ஏற்படுத்தினார். தனவைசியர் இளைஞர் தமிழ்ச் சங்கத்தை பாகனேரியில் தோற்றுவித்தார்.

ஹிந்து மதாபிமான சங்கத்திலும் உறுப்பினராகச் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் 'திருவள்ளுவர் நூல்நிலையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். கருணாகடாட்சி வாசக சாலையை அதனுடன் இணைத்தார். அவற்றின் மூலம் நகரத்தார் இளைஞர்களிடம் வாசிப்பார்வத்தை ஏற்படுத்தினார்.

பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார், மறைமலை அடிகள், ந.மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோருடன் நட்புக் கொண்டு தனது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

அரசியல்

காசிவிஸ்வநாதன் செட்டியார் தமிழியக்க சார்பு கொண்டவர். 1937-ல், தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது, மறைமலையடிகள் எழுதிய, “இந்தி பொது மொழியா?” எனும் சிறு நூலைப் பதினைந்தாயிரம் படிகள் அச்சிட்டு நன்கொடையாக வழங்கினார். 1938-ல் 'தமிழும் இந்தியும்', ‘இந்தி மொழிப் பயிற்சியா?’, ‘தமிழருக்கு இந்தி வேண்டுமா?’ போன்ற சிறு சிறு வெளியீடுகளையும் பல்லாயிரம் படிகள் அச்சிட்டு விலையின்றி வழங்கினார்.

பதிப்புலக வாழ்க்கை

1922-ல், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் காசி விசுவநாதன் செட்டியாருக்குத் தொடர்பு ஏற்பட்டது. கழகத்தின் தலைவர் வ. சுப்பையாபிள்ளையின் நெருங்கிய நண்பரானார். கழகத்தின் நூறு பங்குகளை வாங்கி, தானும் கழகத்தின் பங்குதாரர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆனார். சுமார் நாற்பது ஆண்டுக் காலம் செயற்குழுக் கூட்டத்தின் தலைவராகச் செயல்பட்டார்.

மு. காசி விசுவநாதன் செட்டியார், சிறந்த நூல்களைக் குறைந்த விலையில் அச்சிட்டு விற்க வேண்டும் எனப் பத்தாயிரம் ரூபாயை நன்கொடையாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரிடம் அளித்தார். கழகத்தின் உறுதுணையுடன், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் போன்றவற்றை மூலத்துடன் பதிப்பித்து மலிவு விலையில் வெளியிட்டார்.

இலக்கிய நூல்கள் பலவற்றை உரையுடன் வெளியிட்டார். அகநானூறின் நித்திலக்கோவை, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் என மூன்றையும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் மற்றும் கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகியோரது உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார். அவ்வுரைபற்றி, மு. காசிவிசுவநாதன் செட்டியார், ”செய்யுட்களைப் பதம் பிரித்து, முதலில் தெளிவாகத் தலைப்புக் கொடுத்துப் பின்பு பொருள் செல்லும் நெறிக்கு ஏற்ப முறைப்படுத்திப் பதவுரை கண்டு, அதன்மேல் முடிவும் விளக்கவுரையும் எழுதி, உள்ளுறை புலப்படுத்தி, மேற்கோள் இடங்களை விளக்கி, உரிய அடிக் குறிப்புக்களுடன் இவ்வுரை தெளிந்து செல்கின்றது.” என்று நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கலித்தொகை முழுமைக்கும் ந.மு.வேங்கடசாமி நாட்டாரை உரை எழுதச் செய்து வெளியிட்டார். ந.மு.வேங்கடசாமி நாட்டார் மற்றும் ஔவை துரைசாமிப் பிள்ளையின் எளிய உரையோடு சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையைப் பதிப்பித்தார். இந்த முயற்சி பற்றி ந.மு.வேங்கடசாமி நாட்டார், நூலின் முகவுரையில், “பாகனேரியிலுள்ள தன வணிகர் குலமணியும் அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையாருமாகிய திருவாளர் வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டியாரவர்கள் சிலப்பதிகாரத்தில் பன்னிரண்டு உறுப்புக்கட்கு அடியார்க்கு நல்லார் உரை இன்மையானும், அரும் பதவுரை கொண்டு நூற்பொருளை முற்றுவுணர்தல் கற்பார் யாவர்க்கும் எளிதன்றாகலானும் நூன் முழுதுக்கும் ஒரு தன்மையாகத் தெளிந்த முறையில் ஓர் உரையெழுதுவித்து வெளியிடுதல் நலமெனக் கருதி, உரையெழுதும் அப்பணியினை எனக்கு அளித்தனர். சிறந்த நூல்களைக் குறைந்த விலையில் அச்சிட்டுப் பரப்ப வேண்டு மென்னும் பெருநோக்கங் கொண்டு சில் யாண்டின்முன் அவர்கள் கலித்தொகையை அழகுறப் பதிப்பித்து வெளியிட்டதனை அனைவரும் அறிவர். தமிழ் வளர்த்தலைக் கடனாகக் கொண்டுள்ள அப் பெருந்தகையின் விருப்பத்தை நிறைவேற்றுங் கருத்தாலும், சில நூல்கட்கு உரையெழுதுதலை மேற்கொள்ளின் அது தலைக்கீடாகத் தமிழ் நூல்களை நன்கு பயிலலாமென்னும் எண்ணத்தாலும் நூலின் பெருமையையும் என் சிறுமையையும் அறிந்துவைத்தும் இதற்கு உரையெழுதுதலை மேற்கொள்வேனாயினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்

மு. காசிவிசுவநாதன் செட்டியாரின் பதிப்புகள் அனைத்துமே பாகனேரி தன வைசியர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு விற்பனை உரிமை கொடுக்கப்பட்டு வெளியானது.

மறைவு

மு. காசிவிசுவநாதன் செட்டியார் வயது மூப்பால், தமது 88-ம் வயதில், நவம்பர் 14, 1986 அன்று காலமானார். அவரது மறைவிற்குப் பின் அவர் உருவாக்கிய நூலகம், மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கிளை நூலகமாக இயங்கி வருகிறது.

வரலாற்று இடம்/ மதிப்பீடு

இலக்கிய நூல்களை எளிமையான உரையுடன் வெளியிட்டது; எளிமை, முழுமை, பாட வேறுபாடு, இலக்கணக் குறிப்பு, சொற்பொருள் விளக்கம், உரை விளக்கம், பாட்டு முதற்குறிப்பு அகராதி, ஆசிரியர் பெயர் அகரவரிசை, மேற்கோள் அகரவரிசை போன்றவற்றை இணைத்து நூல்களைப் பதிப்பித்தது; ஆர்வமுள்ள யாவரும் வாங்கும் வகையில் மலிவு விலையில் நூல்களைப் பதிப்பித்தது. - போன்றவை மு. காசிவிசுவநாதன் செட்டியாரின் மிக முக்கிய பதிப்புலகச் செயல்பாடாக மதிப்பிடப்படுகிறது.

மு. காசிவிசுவநாதன் செட்டியார் பதிப்பித்த நூல்கள்

  • சங்க இலக்கியப் பதிப்பு - அகநானூறு (உரையுடன்); கலித்தொகை (உரையுடன்)
  • காப்பிய இலக்கியப் பதிப்பு - சிலப்பதிகாரம், மணிமேகலை (ந.மு. வேங்கடசாமி நாட்டார் மற்றும் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் உரையுடன்)
  • மூல நூல் பதிப்புகள் - தாயுமானவர் பாடல் மூலம், பட்டினத்தார் பாடல் மூலம், திருவாசகம், செயங்கொண்டார் சதகம், திருமுக விலாசம்.
  • மூலமும் அரும்பொருள் விளக்கமும் வசனமும் - திருமந்திரம், சிவப்பிரகாசர் பிரபந்தத் திரட்டு, நாலடியார், கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை.
விலையில்லா வெளியீடுகள்
  • இந்தி பொது மொழியா? - மறைமலை அடிகள்
  • தமிழும் இந்தியும்
  • இந்தி மொழிப் பயிற்சியா?
  • தமிழருக்கு இந்தி வேண்டுமா?

உசாத்துணை


✅Finalised Page