மா. சின்னு
மா. சின்னு (மாரிமுத்து சின்னு) (பிறப்பு: செப்டம்பர் 01, 1933) (சான்றிதழ் படி பிறப்பு: ஜூலை 01, 1932) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய உரை நூல்களை எழுதினார். 'நொய்யல் அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் 'தாய்த் தமிழ்ப் பள்ளி' தொடங்கி பல நற்பணிகளை மேற்கொண்டார். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
மா. சின்னு, செப்டம்பர் 01, 1933 அன்று, அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள தா. பழூர் எனும் கிராமத்தில், மாரிமுத்து - அலமேலு இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக் கல்வி கற்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் புதுமுக வகுப்பு படித்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1954-ல் புலவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
மா. சின்னு, புதுக்கோட்டை குலபதி பாலையா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். 1955 முதல் 1992 வரை, நாமக்கல் மாவட்டம் சங்கர கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அரங்கநாயகி (அமரர்). மகன்: பாரி. மகள்கள்: தமிழரசி (அமரர்), காந்திமதி (அமரர்).
இலக்கிய வாழ்க்கை
மா. சின்னு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். 'தெளிதமிழ்', 'நற்றமிழ்', 'செந்தமிழ்', 'ஓம் சக்தி', 'தமிழ்ப் பொழில்', போன்ற இதழ்களில் இலக்கிய, ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். மா. சின்னு எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'சங்கப்பலகை' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. மா. சின்னுவின் நூல்களை அன்னம், அகரம், தமிழரசி போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டன.
தினமணி இதழில் மா. சின்னு எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், இலக்கிய விவாதங்களும் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. மா. சின்னு 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும், பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதினார்.
நாலாந்தமிழ்
தஞ்சையில் எட்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா, அறிவியல் தமிழை 'நாலாந்தமிழ்' என்று குறிப்பிட்டார். தமிழறிஞர்கள் பலரும் அதனை எதிர்த்தனர். முத்தமிழைத் தவிர வேறு தேவையில்லை என்றும், அறிவியல் தமிழ் இயற்றமிழில் அடங்கும் என்றும் கூறினர். அதற்கு விளக்கமாக, தமிழகத்தில் அறிவியலை நாலாந்தமிழ் என அறிவித்தால்தான் தமிழ் வளரும் என்பதை மா. சின்னு பல கட்டுரைகள் வாயிலாக விளக்கினார்.
மு. கருணாநிதி எழுதிய 'தொல்காப்பியப் பூங்கா' நூலை அவர் வேண்டுகோளுக்கிணங்க பார்வையிட்டுத் திருத்தங்கள் செய்தார்.
அமைப்புப் பணிகள்
மா. சின்னு, 1991-ல் மருத்துவர் முத்துசாமி மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து 'நொய்யல் அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாய்த் தமிழ்ப் பள்ளியை நடத்தினார். இலக்கியக் கூட்டங்கள், கவிதை வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தினார். வறியவர்களுக்கு நோயாளிகளுக்கு உணவு, ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவி எனப் பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார்.
பொறுப்பு
பரமத்தி வேலூர் - நாமக்கல் கிளை நூலகத்தின் வாசகர் வட்டத் தலைவர்.
விருதுகள்
- இலக்கணச் செம்மல் பட்டம்
- தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது
ஆவணம்
மா. சின்னுவின் வாழ்க்கை வரலாற்றை ஆ. கணேசன் எழுதினார். இதனை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2015-ல் நூலாக வெளியிட்டது.
மதிப்பீடு
மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இலக்கண, இலக்கிய நூல்களில் உரை நூல்களை எழுதிய மூத்த தமிழறிஞர்களுள் ஒருவராக மா. சின்னு அறியப்படுகிறார்.
நூல்கள்
- சங்கப்பலகை
- நாலாந்தமிழ்
- தொழுதகை மடந்தையர்
- கம்பன் காட்டிய வளங்கள்
- கவிச்சக்கரவர்த்திகள் ஹோமரும் கம்பரும்
- தொல்காப்பியம் - எழுத்து, சொல் தெளிவுரை
- தொல்காப்பியம் - பொருளதிகாரம் தெளிவுரை
- நன்னூல் - எழுத்து, சொல், தெளிவுரை
- பரிமேலழகரின் இலக்கண உரைத்திறன்
- தொல்காப்பிய நெறியில் திருக்குறளும், சிலப்பதிகாரமும்
- தோலாமொழியின் சூளாமணி
உசாத்துணை
- மா. சின்னு வாழ்க்கைக் குறிப்பு, எழுத்தாக்கம்: ஆ. கணேசன், கலைஞன் பதிப்பக வெளியீடு. முதல் பதிப்பு: 2015
- மா. சின்னு வாழ்க்கைக் குறிப்பு: தினமணி இதழ்
- மா. சின்னு கட்டுரைகள்: தினமணி இதழ்
- மா. சின்னு நூல்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-May-2024, 17:08:32 IST