under review

மாலை மாற்று

From Tamil Wiki
மாலை மாற்று (படம் நன்றி: வே. மாதவன், சித்திரக்கவிகள் நூல்)

மாலை மாற்று என்பது சித்திரக்கவி வகைகளுள் ஒன்று. தமிழின் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. ஒரு செய்யுளின் ஆரம்பத்தில் துவங்கி, அது முடியும் இறுதி எழுத்திலிருந்து திரும்ப முதலெழுத்து வரை படித்தாலும் மாறாமல் அதே செய்யுள் திரும்ப வருமாறு பாடப்படுவதே 'மாலை மாற்று' எனப்படுகிறது.

மாலை மாற்று இலக்கணம்

மாலையைப் போல் முதலிருந்து துவங்கி இறுதிவரை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் வரிசை மாறாமல் ஒன்று போன்றே இருப்பது மாலை மாற்று.

ஒருசெயுண் முதலீ றுரைக்கினு மஃதாய்
வருவதை மாலை மாற்றென மொழிப

- என்று மாலை மாற்றுக்கு இலக்கணம் கூறுகிறது மாறனலங்காரம்.

இறுதி முதலாக வெடுத்து வாசிப்பினு
மதுவே யாவது மாலை மாற்றாகும்"

- என்கிறது முத்துவீரியம்.

ஒருபாட்டு இறுதியதாய் இரையினும்
அப் பாட்டாதல் மாலை மாற்று "

-என்று இலக்கணம் கூறுகிறது சுவாமிநாதம்.

மாலை மாற்று (படம் நன்றி: இந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும், தாமரைச் செல்வன்)

மாலை மாற்று உதாரணப் பாடல்கள்

பொதுவாக 'மாலை மாற்று' குறள் வெண்பாவால் இரண்டு அடிகளிலேயே பாடப்படும்.

திருஞானசம்பந்தர் பாடல்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

- இப்பாடல் திருஞான சம்பந்தர் எழுதிய மாலை மாற்றுப் பாடல். இதனை முதலிருந்து தொடங்கி வாசித்தாலும், இறுதியிலிருந்து தொடங்கி வாசித்தாலும் ஒன்றுபோலவே தொடங்கி முடியும்.

இதன் பொருள்: யாம் - சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்; ஆமா - கடவுள் என்பது பொருந்துமோ; நீ - நீ ஒருவனுமே கடவுள் என்றல்; ஆம் ஆம் - பொருந்தும்; பொருந்தும்; மா - பெரிய; யாழீ - யாழை ஏந்தி இருப்பவனே; காமா - அனைவராலும் விரும்பப்படுபவனே; காண் நாகா- காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்து உள்ளவனே; காணா - காண முடியாதவாறு; காமா - மன்மதனை அனங்கனாகச் செய்தவனே; காழீயா - சீர்காழிக்குத் தலைவனே; மாமாயா - பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே; மா - கரிய கொடிய; மாயா - மாயையினின்றும் நீ - எம்மை நீக்கிக் காத்து அருள்வாயாக.

(சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள் கடவுள் என்பது பொருந்துமோ? நீ ஒருவனுமே கடவுள் என்றல் பொருந்தும். பெரிய யாழை ஏந்தி இருப்பவனே, அனைவராலும் விரும்பப்படுபவனே, காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்து உள்ளவனே, காண முடியாதவாறு மன்மதனை அனங்கனாகச் செய்தவனே, சீர்காழிக்குத் தலைவனே, பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே, கரிய கொடிய மாயையினின்றும் நீ எம்மைக் காத்து அருள்வாயாக).

சோழவந்தான் அரசன் சண்முகனார் பாடல்

மாலை மாற்றை நான்கடிகளிலும் சிலர் பாடியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் சோழவந்தான் அரசன் சண்முகனார். 'மாலை மாற்று மாலை' என்பது அரசன் சண்முகனார் இயற்றிய முதல் சித்திரக்கவி நூல்.

வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ
நாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா
மாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா
வீறுத வேயவ மானம வாவல மேலறவே

இதன் விளக்கம்: வேறு - (யாம் நினைத்தபடி இல்லாது) பிறிது; அல - அன்று; மேல் - மேன்மை; அவ் - அவற்றை; அவா - விரும்பும்; மனம் - இதயம்; ஆ - ஆய; வயவு - ஆசைப்பிறவியின்; ஏது - காரணம்; அறு - அற்ற; வீ - மலரின் கண; நாறு - தோன்றும்; சமா - நாப்பண் நிலையே; கய - வேழமுகனே; நாடு - பொருந்து; உர - ஞானவானே; வேள் - செவ்வேளின்; கவி - மாலை மாற்று மாலையை; பாடுற - பாடுதற்கு; மா - பெருமை; மாறு - நீங்கி; அடு - கொல்லும்; பாவிகள் - பாதகரை; வேர் - அடியோடு; அடு - அழிக்கும்; நாயக - விநாயகனே; ஏய் (எம்மிடம்) அமையும்;; அவம் - பயனில் செயலும்; மானம் - செருக்கும்; அவாவு - ஆசையும்; அலம் - துன்பமும்; ஏல - பொருந்துவன; அற - ஒழிய; மாசு - குற்றம்; அறு - நீக்கும்; நா - நாவின்; வீறு - தெளிவை; உதவு - அருளுக; (ஏ- அசை)

(மேலானவற்றையே விரும்புகின்ற மனத்தின் காரணமற்ற பெரும் ஆசையினால் ஏற்படுகின்ற குற்றங்களை நீக்குகின்ற மலரினைப் போன்ற நடுவுநிலைமை உடைய யானை முகத்தானே! பெருமை நீங்கிய கொலை பாதகர்களை அடியோடு அழிக்கின்ற நாயகனே! என்னிடத்தில் உள்ள பயனில் செயல்களும், செருக்கும், ஆசையும், துன்பமும் ஆகிய இவைகள் இனிமேல் ஒழியுமாறு, விரும்புகின்ற திண்மையுடைய செவ்வேளது மாலை மாற்றுக் கவிமாலை பாடுதற்கு குற்றமற்ற நாவன்மையை அருள் புரிய வேண்டும். யாம் நின்னடிமையேயன்றி வேறில்லை.)

முருகப் பெருமானின் மீது தான் பாடக்கூடிய இந்த மாலை மாற்று என்னும் பனுவல் இடையூறுகள் ஏதும் இல்லாமல் நல்லபடியாக நிறைவேற விநாயகப் பெருமானின் அருளை வேண்டி நிற்கிறார் சண்முகனார்.

பிறர் பாடல்கள்

இவர்கள் தவிர்த்து மாதவச்சிவஞான யோகிகள் இயற்றிய காஞ்சி புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருநாகைக் காரோணப் புராணத்திலும் மாலை மாற்றுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு பாவிலக்கண வகைமைகளில் மாலை மாற்றுப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. தற்காலத்திலும் கவிமாமணி இலந்தை சு.ராமசாமி, பேராசிரியர் பசுபதி, முனைவர் அண்ணா கண்ணன் உள்ளிட்ட பலர் மாலை மாற்றுப் பாடல்களை இயற்றியுள்ளனர்.

பார்க்க: வள்ளலார் மீது பக்தர் ஒருவர் பாடிய மாலை மாற்றுப் பதிகம்[1]

இலக்கிய இடம்

மிறைக்கவி என்று போற்றப்படும் தமிழ்ச் சித்திரக் கவிகளுள் ஒன்றாக மாலைமாற்று கருதப்படுகிறது. தமிழின் தனிச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று என, 'மாலை மாற்று மாலை' யை இரா. இளங்குமரனார் குறிப்பிட்டுள்ளார். தமிழின் அரிய இலக்கிய வகைமைகளுள் ஒன்றாக 'மாலை மாற்று' இலக்கியம் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2023, 01:23:56 IST