குறள் வெண்பா
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. குறுகிய அடிகளைக் கொண்டதால் குறள் வெண்பா என்று பெயர் பெற்றது. இது ஒரு விகற்பக் குறள் வெண்பா, இரு விகற்பக் குறள் வெண்பா என இருவகைப்படும்.
குறள் வெண்பா இலக்கணம்
- குறள் வெண்பா இரண்டடிகள் கொண்டதாக அமையும்.
- ஈற்றடி முச்சீராய் ஏனைய அடி நாற்சீராய் வரும் .
- செப்பலோசை பெற்று வரும்.
- இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர் ) வரும். பிற சீர்கள் வராது.
- இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வராது.
- ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு , பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றுகொண்டு முடியும்.
குறள் வெண்பா வகைகள்
குறள் வெண்பா, ஒருவிகற்பக் குறள் வெண்பா, இரு விகற்பக் குறள் வெண்பா என இருவகைப்படும். விகற்பம் என்பது எதுகை (சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது) அமைப்பைக் குறிப்பதாகும். ஒரு பாவில் எல்லா அடிகளிலும் ஒரே எதுகை அமைப்பு மட்டும் இருந்தால் அது ஒரு விகற்பம்; அதற்கு மாறாக இரண்டு வேறான எதுகை அமைப்புக் கொண்டிருந்தால் அது இரு விகற்பம் எனப்படும்.
ஒருவிகற்பக் குறள் வெண்பா
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
- வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்ற இக்குறளில் 'ஈன்ற', 'சான்றோன்' என்னும் ஒரே ஓர் எதுகை மட்டுமே அமைந்துள்ளதால் இது ஒருவிகற்பக் குறள் வெண்பா.
இரு விகற்பக் குறள் வெண்பா
ஞாலங் கருதினும் கைகூடும் காலங்
கருதி இடத்தாற் செயின்
வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ள இக்குறள் வெண்பாவில், 'ஞாலம்', 'கருதி' என எதுகை ஒரே அமைப்பில் இல்லாததால் இது இருவிகற்பக் குறள் வெண்பா.
உசாத்துணை
- யாப்பருங்கலக்காரிகை: சென்னை நூலகம்
- யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்: பதிப்பாசிரியர்: முனைவர் சோ. கண்ணதாசன்: தமிழ் இணைய மின்னூலகம்
- யாப்பிலக்கணம்: விசாகப்பெருமாளையர்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- இலக்கண விளக்கம்: வைத்தியநாத தேசிகர்: பதிப்பாசிரியர்: தி.வே. கோபாலையர்: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Aug-2023, 19:43:57 IST