under review

மான் விடு தூது

From Tamil Wiki
மான் விடு தூது நூல் (1956) இரண்டாம் பதிப்பு

மான் விடு தூது (1936) மிதிலைப்பட்டி குழந்தைக் கவிராயரால் இயற்றப்பட்ட தூது என்னும் சிற்றிலக்கியம். இந்நூலை உ.வே.சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூலின் பாட்டுடைத் தலைவர் தாண்டவராயப் பிள்ளை. தூது வகையில் இந்நூல் அகத்தூது வகையைச் சார்ந்தது. 301 கண்ணிகளைக் கொண்டது.

பிரசுரம், வெளியீடு

பல்வேறு இலக்கிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் உ.வே. சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களுள் ஒன்று மான் விடு தூது. இந்நூலை, உ.வே.சா., தனது தியாகராச விலாசத்தின் மூலம் 1936-ல், பதிப்பித்து வெளியிட்டார். திருத்தப்பட்ட இதன் இரண்டாம் பதிப்பு, உ.வே.சா.வின் பெயரர் க. சுப்பிரமணிய ஐயரால், 1956-ல் வெளியிடப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

மான் விடு தூது நூலை இயற்றியவர், மிதிலைப்பட்டியில் வாழ்ந்த குழந்தைக் கவிராயர். இவரது காலம் 18-ம் நூற்றாண்டு. இவர் காலத்தில் சிவகங்கை சமஸ்தானத்தில் பிரதானியாக இருந்த முல்லையூர்த் தாண்டவராயப் பிள்ளையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இந்நூலை இயற்றினார்.

தாண்டவராயப் பிள்ளை, சிவகங்கை ராமகிருஷ்ணப்பிள்ளை, புதுக்கோட்டை திருமலைத் தொண்டைமான் ஆகியோர் குறித்துப் பல தனிப்பாடல்களை இயற்றினார். இவர் குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த பல பழைய ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பல இலக்கிய நூல்களை உ.வே. சா. பதிப்பித்தார்.

நூல் அமைப்பு

மான் விடு தூது தூது என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அகத் தூது வகையைச் சார்ந்தது. தலைவி, தலைவன் பால் தூது விடும் பெண் விடு தூது நூல்களுள் ஒன்று. சொற் சிறப்பும், பொருட் சிறப்பும் வாய்ந்தது. தலைவி, பாட்டுடைத் தலைவராகிய தாண்டவராயப் பிள்ளையை அவரது உலாவின் போது கண்டு காதல் கொள்கிறாள். காதல் துன்பம் மேலிட, தலைவனைக் கண்டு மாலை வாங்கி வருமாறு மானைத் தூதாக அனுப்புகிறாள். மானைத் தூதாக விடுத்ததால் இந்நூலுக்கு மான் விடு தூது என்ற பெயர் ஏற்பட்டது.

நூலின் தொடக்கத்தில் காப்புச் செயுள்ளும், தொடர்ந்து 301 கண்ணிகளும் இறுதியில் வாழ்த்துச் செய்யுளும் இடம் பெற்றுள்ளன. காப்புச் செய்யுளை அடுத்து மானின் சிறப்பும், பெருமையும் 53 கண்ணிகளில் பலவாறாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாட்டுடைத் தலைவரான தாண்டவராயரது சிறப்பு, பெருமை, அவரது குடும்பத்தார் செய்த அறங்கள், தாண்டவராயர் பவனி வந்த சிறப்பு, அவரைக் கண்ட தலைவி காதல் கொள்வது போன்றவை இடம் பெற்றுள்ளன. பாட்டுடைத் தலைவர் வள்ளல் என்பதால், தூது நூல்களின் சிறப்புக்குரிய ஒன்றான தசாங்கத்தில் பொதிய மலை, வைகை நதி, தென்பாண்டி நாடு, முல்லை மாநகர், குவளை மாலை, குதிரை, யானை, மேழிக் கொடி, முரசு, வேற்படை ஆகியன இடம்பெற்றுள்ளன. சிவகங்கை சமஸ்தானத்தின் தலைவராகிய ராசபுலி முத்துவடுகநாதப் பெருவுடையாரின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சிற்றின மஞ்சும்’ என்னும் திருக்குறளை 40-ம் கண்ணியிலும், ‘அரியவற்றுள்’ என்னும் குறளை 42-ம் கண்ணியிலும், ‘பிறவிப்பெருங்கடல்’ என்னும் குறளை 44-ம் கண்ணியிலும், "தொகச்சொல்லி" என்ற குறளை 293-ம் கண்ணியிலும் அமைத்து, குறளின் பெருமையைக் கூறியுள்ளார், குழந்தைக் கவிராயர்.

மானின் சிறப்பு

மானுக்குரிய பெயர்களாக அருணம், கலை, சாரங்கம், நவ்வி, பிணை, மறி, மிருகம், வச்சயம் என்பவையாக குழந்தைக் கவிராயர் குறிப்பிட்டுள்ளார். மானின் பெருமையாகப் பின்வரும் புராண, வரலாற்றுச் செய்திகளைக் கூறியுள்ளார்.

  • மான் தேவர் அமுதம் கடைந்தபோது தோன்றிய சந்திரனிடத்தில் இருப்பது.
  • சிவபெருமான் திருக்கரத்தில் இருக்கும் பெருமை வாய்ந்தது.
  • திருமகள் மானுருவம் பெற்ற செய்தி.
  • வள்ளி, மான் வயிற்றில் அவதரித்தது.
  • கலைக்கோட்டு முனிவர், மான்கொம்பைப் பெற்றது.
  • ஒரு மானைத் துரத்திச்சென்றதன் காரணமாக, கௌரவர்களது ஏவலினால், காளமா முனிவர் செய்த யாகத்திலிருந்து தோன்றிய பூதத்திடமிருந்து பாண்டவர்கள் தப்பித்தது.
  • துர்க்கைக்கு மான் வாகனமாக இருப்பது.
  • மானின் மீது தவறுதலாக அம்பு எய்த பாவத்தால் பாண்டு மன்னன் இறந்தது.
  • மான் வாயுவுக்கு வாகனமாக இருப்பது.

பாடல் சிறப்பு

உவமை, உருவகம், சிலேடை, திரிபு, மடக்கு, எனப் பல்வேறு இலக்கிய நயங்கள் மான் விடு தூது பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

ஏடேறச் சைவநிலை யீடேறத் துள்ளுபுனல்
கோடேறக் கூடல் குடியேறப்-பீடேறு

மூரிக் கயன்மகர மோதித் திரையேற
வாரிப் புனலும் வளர்ந்தேறப்-பாரித்து

மண்டு புகழேற மாறன் வியப்பேறக்
கண்டு சமணர் கழுவேறத்-தண்டுளப

மாடேறுஞ் சொக்கர் மதிச்சடையின் மண்ணேற
நாடேறும் வைகை நதியினான்

- என வைகை நதியின் சிறப்பைக் கூறும் போது, அங்கு நிகழ்ந்த அனல்வாதம், புனல்வாதம், சமணர் கழுவேற்றம் போன்ற புராண வரலாற்றுச் செய்திகளைக் கவிராயர் குறிப்பிட்டுள்ளார்.

எப்போது, எந்தச் சமயத்தில் தூது உரைக்கப் போக வேண்டும், எப்போது போகக் கூடாது என்பதை மானுக்குத் தலைவி சொல்லும் கூற்றாய், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், குழந்தைக் கவிராயர்.

பூசைபண்ணும் வேளையினிற் போகேல் சமத்தான
ராசவட்ட வேளையிலு நண்ணாதே-யோசனைசெய்

தானாபதியர் தளகர்த்தர் காரியத்தர்
ஆனாத தூது மணுகாதே-தானாக

ஒப்பமிடும் வேளையிலு மொன்னார் திறைகொணர்ந்து
கப்பமிடும் வேளையிலுங் கட்டுரையேல்-எப்புவிக்கும்

பேராட்டும் வாணர் ப்ரபந்தகவி வந்திருந்து
பாராட்டும் வேளை பகராதே-சீராட்டும்

உல்லாச மன்மதன்போ லொண்டொடியார் கூட்டமிடும்
சல்லாப வேளையிலுந் தானுரையேல்-வல்லாள

போசன் கொலுப்பெருக்கிப் போசனமுந் தான்பண்ணி
வீசுமலர்ச் சப்ரமஞ்ச மீதினிலே-நேச

மிதசனங்க டற்சூழ வீற்றிருக்கும் வேளை
மதுமலர்த்தார் வாங்கிநீ வா.

- “மதுமலர்த்தார் வாங்கிநீ வா” என்று, மாலை வாங்கி வரச் சொல்வதோடு மான் விடு தூது நூல் முற்றுப் பெற்றுகிறது.

இறுதியில் வாழ்த்தாக,

உத்தம வேதிய ரானினம் வாழி யுயர்ந்தசெங்கோல்
முத்தமிழ் வாழி கிளைவாழ வாழி தென் முல்லைநகர்

வித்தகன் றாண்டவ ராசேந்த்ரன் வாழி விளங்குமனை
நித்தியஞ் சோபனங் கல்யாணம் வாழி நிலைபெறவே!

- என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

மதிப்பீடு

தமிழில் வெளியாகியுள்ள பல்வேறு தூது இலக்கிய நூல்களுள் சொற் சுவையும், பொருட் சுவையும் வாய்ந்த நூல் மான் விடு தூது. பல்வேறு புராண, வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ள இந்த நூலில் திசைச் சொற்கள் பல இடம் பெற்றுள்ளன. சந்த நயம் கொண்ட பல பாடல்கள் அமைந்துள்ளன. அஃறிணைத் தூது விடு நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மான் விடு தூது நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page