under review

மன்னார்குடி விசுவநாதன்

From Tamil Wiki

மன்னார்குடி விசுவநாதன் (ரெ. விசுவநாதன்; ஆர். விசுவநாதன்; மன்னார்குடி விசுவநாதன்) (பிறப்பு: செப்டம்பர் 9, 1941) தமிழ் எழுத்தாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார். இதழாளராகப் பணியாற்றினார். தனது படைப்புகளுக்காகப் பல விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மன்னார்குடி விசுவநாதன், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில், செப்டம்பர் 9, 1941 அன்று, ரெத்தினம்-கமலாம்பாள் இணையருக்குப் பிறந்தார். மன்னார்குடி நகராட்சிப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். கணபதி விலாஸ் நடுநிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வி கற்றார். பின்லே மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். ஹிந்தி மொழியை முழுமையாகக் கற்றார்.

தனி வாழ்க்கை

மன்னார்குடி விசுவநாதன், சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். இதழாளராகப் பணியாற்றினார். மனைவி: மோகனாம்பாள். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.

மன்னார்குடி விசுவநாதன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

மன்னார்குடி விசுவநாதன் கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன் போன்றோரது எழுத்துக்களால் இலக்கிய ஆர்வம் பெற்றார். மன்னார்குடி விசுவநாதனின் முதல் சிறுகதை, ’விதிவழி’, 1961-ல், தமிழ்நாடு இதழில் வெளியானது. தொடர்ந்து சுதேசமித்திரன், கல்கி, ஆனந்த விகடன், கணையாழி, குமுதம், குங்குமம், இலக்கியப்பீடம், தினமலர், தினத்தந்தி, தினமணி, தினமணி கதிர், மாலைமுரசு, தாமரை, ராணி, ராணி முத்து, தமிழ் நேசன், மலேசிய நண்பன் போன்ற இதழ்களில் சிறுகதைகள், தொடர்கள் எழுதினார். முதல் நாவல், ‘அவள் ஒரு பனிமலர்’ 1980-ல், வெளியானது.

மன்னார்குடி விசுவநாதன், 1500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 15-க்கும் மேற்பட்ட நாவல்களையும், சில குறுநாவல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதினார். மன்னார்குடி விசுவநாதனின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின.

நாடகம்

மன்னார்குடி விசுவநாதனின் நாடகங்கள் மலேசியாவின் தமிழ்நேசன், வானம்பாடி போன்ற இதழ்களில் வெளியாகின. மன்னார்குடி விசுவநாதன், அகில இந்திய திருச்சி வானொலி நிலையத்திற்காகாகவும், சிங்கப்பூர் வானொலிக்காகவும் பல நாடகங்களை எழுதினார்

மன்னார்குடி விசுவநாதனின் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின. சிங்கப்பூர் தொலைக்காட்சியில் 50 நாடகங்கள் வெளியாகின. சன் தொலைக்காட்சியில் வெளியான பாலுமகேந்திராவின் கதை நேரத்தில், ‘சிக்கனம்’, ‘மனைவி மனைவிதான்’ என்னும் இரு நாடகங்கள் ஒளிபரப்பாகின.

இதழியல்

மன்னார்குடி விசுவநாதன், தமிழ்நாடு, மக்கள் செய்தி, தமிழ் நேசன், தினமலர் ஆகிய இதழ்களின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

விருதுகள்/பரிசுகள்

  • மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான இலக்கியப் பரிசு.
  • காஞ்சி காமகோடி பீடம் வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான விருது
  • மத்திய அரசின் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட முதியோர் கல்வித் திட்டப் பரிசு (இருமுறை)
  • 2009-ல், நெய்வேலி புத்தகக் காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான பரிசு
  • இலக்கியப்பீடம் இதழ் வழங்கிய சிறந்த நாவலுக்கான பரிசு

மதிப்பீடு

மன்னார்குடி விசுவநாதன், பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். தன் வாழ்க்கை அனுபவங்களையும், தான் கண்டு, கேட்டு அறிந்த நிகழ்வுகளையும், செய்திகளையும் புனைவாக்கினார். சமூகக் கதைகளையே அதிகம் எழுதினார். சமூக அவலங்களைத் தனது படைப்புகளில் சித்திரித்தார். 1960-70 காலகட்டங்களில் லட்சியவாத நோக்குக் கொண்டு இயங்கிய எழுத்தாளர்களின் வரிசையில் மன்னார்குடி விசுவநாதன் இடம் பெறுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • பழியும் பாவமும்
  • அழியாத நினைவுகள்
  • உரிமை மட்டுமா?
  • இப்படிப் பண்ணிட்டியே மீனா?
  • கடமை நெஞ்சம்
  • கனவல்ல வாழ்க்கை
  • கைகாட்டி மரம்
  • சத்தியத்தின் சந்நிதியில்
  • நதிமூலம்
  • பாலின் நிறம் வெண்மை
  • மங்கையர்க்கரசி
  • வாழ நினைத்தால் வாழலாம்
  • வேண்டாம் வரதட்சிணை
நாவல்கள்
  • அவள் ஒரு பனிமலர்
  • ஊமைக்குயில்
  • சர்க்கரைப் பந்ததிலே
  • சின்னச் சின்ன ஆசை
  • தூண்டிலில் சிக்காத மீன்கள்
  • பறந்து வந்த பைங்கிளி
  • பாசத்தில் விளைந்த பயிர்
  • பூங்கதவே தாழ் திறவாய்
  • மண்ணில் வந்த நிலவே
  • வானம் வடித்த கண்ணீர்
  • இனியவே செய்தாலும்

உசாத்துணை


✅Finalised Page