under review

மடல் பாடிய மாதங்கீரனார்

From Tamil Wiki

மடல் பாடிய மாதங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

மடல் பாடிய மாதங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் தனது இருபாடல்களிலும் மடலேறுதலை குறித்து பாடியுள்ளதால் காரண பெயராக மடல் பாடிய மாதங்கீரனார் என்று அழைக்கப் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மடல் பாடிய மாதங்கீரனார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 182-வது பாடலாகவும் நற்றிணையில் 377-வது பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய இருபாடல்களும் குறிஞ்சித் திணையில் அமைந்து மடலேறும் தலைவனின் துயரத்தை கூறுகின்றன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை - 182
  • தலைவியானவள் தலைவனின் காதலை ஏற்காத போது, ஊராருக்கு முன் தன் காதலை அறிவிக்கும் செயலாக பனை மரத்தால் செய்யப்பட்ட குதிரையால் மடலேறுவர்.
  • முதிர்ந்த பனைமரத்தின் பெரிய மனைமட்டை மற்றும் ஓலையால் மடலேற்றத்திற்கான குதிரையை செய்வர்.
  • குதிரையில் அமர்ந்தவாறு தனது தோழர்கள் சூழ பெண்ணின் ஊர்த்தெருக்களில் வலம் வருவர். தலைவன் கழுத்தில் வெள்ளெலும்புகளாலான மாலையை அணிந்து கொள்வான். இவ்வாறு ஆண்கள் மடலூர்வது நாணமில்லாமல் செய்யும் இழிசெயலாக கருதப்பட்டது.
நற்றிணை - 377
  • தலைவியானவள் தலைவனின் காதலை ஏற்காத போது, ஊராருக்கு முன் தன் காதலை அறிவிக்கும் செயலாக பனை மரத்தால் செய்யப்பட்ட குதிரையால் மடலேறுவர்.
  • முதிர்ந்த பனைமரத்தின் பெரிய மனைமட்டை மற்றும் ஓலையால் மடலேற்றத்திற்கான குதிரையை செய்வர்.
  • குதிரையில் அமர்ந்தவாறு தனது தோழர்கள் சூழ பெண்ணின் ஊர்த்தெருக்களில் வலம் வருவர். தலைவன் கழுத்தில் எருக்கு மாலையை அணிந்து கொள்வான்.
  • உவமை: பசுமையான வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு அகன்ற வானத்தில் தோன்றும் முழு நிலாவைப் கருப்புப் பாம்பு விழுங்குவது போல, கூந்தலுக்குள்ளே தெரியும் அவள் நெற்றியைக் கொண்ட முகம் என்று ஓப்புமை கூறப்பட்டது.

பாடல் நடை

குறுந்தொகை - 182

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: தோழியாற் குறைமறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென்பு அணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிழ்கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள் நாம்விடற்கு அமைந்த தூதே

நற்றிணை - 377

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: சேட்படுக்கப்பட்டுஆற்றானாகியதலைமகன்,தோழிகேட்ப,தன்னுள்ளேசொல்லியது.

மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,
அது பிணி ஆக, விளியலம் கொல்லோ
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2025, 15:41:48 IST