under review

மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது

From Tamil Wiki
மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது

மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது (1934), தூது இலக்கியங்களுள் ஒன்று. காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. இதன் ஆசிரியர் கி. வேங்கடசாமி ரெட்டியார். காந்தியின் மீது அன்புகொண்ட அவர், அவரிடமுள்ள நற்பண்புகளும், நற்சிந்தனைகளும் தனக்கும் வேண்டும் என்று நெஞ்சைத் தூதாக விடுப்பதாகப் பாடப்பட்டது.

வெளியீடு

மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது, காந்தியின் மீது அன்புகொண்ட அன்பர் பூதூர் கி. வேங்கடசாமி ரெட்டியார், தன் நெஞ்சை காந்தியிடம் தூதாக விடுப்பதாகப் பாடப்பட்ட நூல். இதன் முதல் பதிப்பு 1934-ல், புதுவை விநஜாம்பிகா பிரஸ் மூலம் அச்சானது. இரண்டாம் பதிப்பு, 1982-ல், சென்னை திருவேங்கடத்தான் திருமன்றம் மூலம் வெளியானது. இதனைப் பதிப்பித்தவர் ந. சுப்புரெட்டியார்.

மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது நூல், சிற்றிலக்கியக் களஞ்சியம் - 5 தொகுப்பு நூலில், நான்காவது நூலாக இடம் பெற்றது. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன்.2023-ல், மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

தமிழ்ப் புலவர்களுள் ஒருவரான கி. வேங்கடசாமி ரெட்டியார், தென்னாற்காடு மாவட்டம் வளவனூருக்கு அருகில் உள்ள வி. புதூரில் வாழ்ந்தவர். மாதர் நீதிக் கலிவெண்பா, கலைமகள் பிள்ளைத்தமிழ், 'வில்லி பாரதத்தில் வினோதத் திருத்தங்கள்' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். பல நூல்களைப் பதிப்பித்தவர். வைணவ அறிஞராகவும், முதுபெரும் புலவராகவும் அறியப்பட்டார். ‘பூதூர் சுவாமிகள்’ என்று போற்றப்பட்டார்.

நூல் அமைப்பு

மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது நூல் தூது என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது. காப்பு, அவையடக்கம் நீங்கலாக 253 கண்ணிகளைக் கொண்டது. கலிவெண்பாக்களால் இயற்றப்பட்டது. காந்தியிடம் நெஞ்சைத் தூதுவிடும் முறையில் காப்பு, அவையடக்கம், நூல், சரித்திரச்சருக்கம், தசாங்கம், தீ நட்பு விலக்கல் ஆகிய தலைப்புகளில் பாடப்பட்டது. இந்நூலை வெளியிடுவதற்கு ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியார், இராதாபுரம் பி .ஆர்.அப்பாஜிரெட்டியார் உள்ளிட்ட பலர் நன்கொடை அளித்து ஆதரித்தனர். நூலின் இறுதியில் வாழ்த்து இடம் பெற்றுள்ளது.

உள்ளடக்கம்

மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது நூலின் காப்புச் செய்யுளில், காந்தி மீதான தனது நெஞ்சு விடு தூது நூல் சிறப்பாக முடிவதற்கு சிவபெருமானை வேண்டுகிறார் ஆசிரியர் கி. வேங்கடசாமி ரெட்டியார். அவையடக்கத்தில் தான் காந்தி மீதான நூல் எழுத முற்பட்டமையை அனுபமில்லாத மூங்கையான செயல் என்று பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வேகத்திற்கும் இணையில்லாத மனோவேகத்தையுடைய நெஞ்சை, ’யாவருக்கும் முன்னதாக நீ இங்கு வந்துதித்தாய்’ என்று கூறி அதன், சிறப்பையும், பெருமையையும் பலவாறாகக் கூறி, ”புண்ணிய புருஷனாக விளங்கும் மகாத்மா காந்தியிடம் சென்று என்னை அடியாராக ஏற்றுக் கொள்ளும்படிக் கூறுவாயாக” என்பதாகப் பாடியுள்ளார்.

பாடல்கள்

காந்தியின் பெருமை

அன்பர்க்கு அருளும் அழகார் திருவிழியார்
வன்புரை செய்வோரும் வணங்கு மாறு அன்பு இயற்றும்
நன்னகையார் தன்னலத்தை நாடாதார் சத்தியவாம்
பொன்னகை யார் சத்துவமாம் போருடையார்

காந்தியிடம் வேண்டுதல்

நாயகராங் காந்தி மகாத்மா நலமாக
மேய பெரும்பதியை மேவியே - தூய்மையாய்ச்
சுற்றி வலம்வந்து தொண்டர் அடிவணங்கிப்
பற்றெலாம் விட்டுப் பதறாமே - நற்றவர்பால்

செவ்வி யுணர்ந்து திருவடியின் வீழ்ந்தெழுந்தே
எவ்வம் அகற்றிடும் எம்பெரும! - இவ்வுலகின்
மன்னுயிர் யாவும் மகாத்மா எனப்புகழ
மன்னு மடிகேள் மகிழ்வுடையீர் - என்னையும்

கையீரே தாமரைக் கையீரே துன்பத்தை
வையீரே மாற்றாரை வையீரே - செய்யஅருட்
கண்ணீரே மாச்சிறையின் கண்ணீரே கீதையாம்
பண்ணீரே நன்கலதைப் பண்ணீரே -தண்ணுரைசொல்

வாயீரே புத்தமுதாய் வாய்ந்தீரே எவ்வெதையும்
காயீரே தீச்சினத்தைக் காய்ந்தீரே - தூய்மைபெற
வந்தீரே தீயர்முன் வாரீரே இன்பெமக்குத்
தந்தீரே தேம்பொலிபூந் தாரீரே - முந்தாகும்

அன்பர் புகழ அருமா மரத்தின்கீழ்
இன்பமாய் வீற்றிருக்கும் எம்மானே - அன்பனேன்
விண்ணப்பம் செய்வதனைக் கேட்டருள வேண்டுமால்
எண்ணப் படாத்துயரம் எய்தினேன் - அண்ணலே

என்துயரம் நீங்க இனிய அருள்மிகுந்து
நன்றெனவே ஓர்சொல் நவிலுவீர் - துன்றியஇம்
மன்னுயிர்க்குத் தொண்டியற்றி மாசின்றி வாழ்வதற்கு
நன்மையாய் உம் அருளே நாடினன்காண்

நெஞ்சிடம் வேண்டுதல்

என்னை யுமதடியார் ஈட்டத் தொருவனாய்
மன்னிடவே செய்யும் வகையருள்வீர் - என்றுரைத்தால்
நம்முடைய எண்ணத்தை மாற்றாமே நல்குவார்
அம்மையாய் அத்தனாய் ஆர்ந்தவர் - செம்மையே

உன்னும் உயர்மனத்தர் உத்தமர் தம்மிடத்தே
என்னுடைய நெஞ்சே யியைந்துநீ - துன்னிடும்இப்
பூவுலகோர் துன்பொழிக்கப் பொங்கும் அருள்பெற்று
மேவுறுவாய் இனபம் மிகுந்து.

மதிப்பீடு

காந்தியைப் பற்றி பலர் பிள்ளைத்தமிழ், புராணம், கலம்பகம், ஆனந்தக் களிப்பு, சிந்தாமணி, காவியம் எனப் பல சிற்றிலக்கிய நூல்களை இயற்றினர். அவ்வகையில் காந்தியின் பெருமை, சிறப்பு, அவரது குணங்கள், வாய்மை, நேர்மை, சத்தியம், அஹிம்சை வழுவாமை போன்ற உயர்ந்த தன்மைகளை சிறப்பித்துக் கூறும் நூலாக ‘மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது நூல்' அமைந்துள்ளது. காந்தியைப் பற்றிய சிற்றிலக்கிய நூல்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக ‘மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சு விடு தூது நூல்' மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.


✅Finalised Page