under review

கி. வேங்கடசாமி ரெட்டியார்

From Tamil Wiki
வேங்கடசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வேங்கடசாமி (பெயர் பட்டியல்)
ரெட்டியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரெட்டியார் (பெயர் பட்டியல்)
கி. வேங்கடசாமி ரெட்டியார் (படம் நன்றி: அக்ரஹாரம் தளம்)

கி. வேங்கடசாமி ரெட்டியார் (பூதூர் கி. வேங்கடசாமி ரெட்டியார்: பூதூர் சுவாமிகள்) (ஆகஸ்ட் 20, 1911 - டிசம்பர் 22, 1984) தமிழ்ப் புலவர், எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர். பல ஆய்வு நூல்களை, கட்டுரைகளை எழுதினார். சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார்.

பிறப்பு, கல்வி

கி. வேங்கடசாமி ரெட்டியார், ஆகஸ்ட் 20, 1911 அன்று, விழுப்புரம் மாவட்டம், வளவனூர், வி. பூதூரில் ஆர்.கிருஷ்ணா ரெட்டியார், எத்திராஜம் அம்மையார் இணையருக்குப் பிறந்தார். குடும்பச் சூழல்களால் விவசாயப் பணிகளில் ஈடுபட்டார். தாமதமாகப் பள்ளிக் கல்வி கற்றார். பின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், பள்ளிகொண்டாபுரம் மா. வேங்கடகிருஷ்ணபிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்களாகக இருந்தனர்.

பூதூர் கி. வேங்கடசாமி ரெட்டியார், மனைவியுடன். (படம் நன்றி: அக்ரஹாரம் தளம்)

தனி வாழ்க்கை

கி. வேங்கடசாமி ரெட்டியார், மணமானவர். மனைவி அம்புஜம் அம்மையார். ஒரே மகன். வி. இலட்சுமி நாராயணன். மகள்கள்: சரஸ்வதி, ஜாம்பவதி, பத்மாவதி.

கி. வேங்கடசாமி ரெட்டியார் நூல்கள் (படம் நன்றி: அக்ரஹாரம் தளம்)

இலக்கிய வாழ்க்கை

கி. வேங்கடசாமி ரெட்டியார், வே. வேங்கடராஜுலு ரெட்டியார், ராதாபுரம் அப்பாஜி ரெட்டியார் ஆகியோரிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் வேதாந்த இராமாநுஜ மஹாதேசிகன் சுவாமிகள், வேங்கடசாமி ரெட்டியாரின் ஞான ஆசிரியராக இருந்தார்.

வேங்கடசாமி ரெட்டியார், தனது 18-வது வயதில் 'கலைமகள் அந்தாதி' என்ற வெண்பாவை இயற்றினார். அது 1931-ல் 'கலா நிலையம்' வார இதழில் வெளிவந்தது. தனது மூத்த மகள் சரஸ்வதி உடல் நலம் பெற வேண்டி ஓரிரவுக்கு ஒரு பருவமாக 'கலைமகள் பிள்ளைத்தமிழ்' என்ற நூலை எழுதினார். தருமையாதீனத்தில் கவியரங்கேற்றி, 'மணிவாசகர் வரலாறு' பாடினார்.

'வில்லிபாரதத்தில் வினோதத் திருத்தங்கள்' என்னும் தனது ஆய்வு நூலில். தமிழ் இலக்கியங்களின் மூலச் செய்யுள்களை எப்படியெல்லாம் சைவர்கள் மாற்றியுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதழ்களிலும், மலர்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். சிற்றிலக்கியங்கள் சிலவற்றைப் படைத்தார். நூல்கள் சிலவற்றுக்கு உரை எழுதினார். நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார்.

மேடையுரை

கி. வேங்கடசாமி ரெட்டியார், பல வைணவ மாநாடுகளில் தலைமையேற்று சொற்பொழிவுகள் ஆற்றினார்.

பொறுப்பு

பண்ருட்டி ஸ்ரீமத் ராமாநுஜ நாவலர் சுவாமிகள் சபைத் தலைவர் (32 ஆண்டுகள்)

அரசியல்

கி. வேங்கடசாமி ரெட்டியார், காந்தி மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். தன் வாழ்நாள் இறுதிவரை கதர் ஆடையை மட்டுமே அணிந்து வந்தார்.

விருதுகள்

  • கவிச்சக்கரவர்த்தி
  • கவிதார்ச்சிகச் சிம்மம்
  • ஸ்ரீவைணவச் செம்மல்
  • முதுபெரும் புலவர்
  • முப்பால் அறிஞர்

மறைவு

கி. வேங்கடசாமி ரெட்டியார், டிசம்பர் 22, 1984 அன்று காலமானார்.

மதிப்பீடு

கி. வேங்கடசாமி ரெட்டியார், வைணவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். ஆராய்ச்சியாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என்று எழுத்துப் பணியாற்றினார். சிற்றிலக்கியங்கள் சிலவற்றைப் படைத்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் வேங்கடசாமி ரெட்டியாரைப் பற்றி, "அவர் சிறந்த பண்டிதர். தமிழெனும் அளப்பரும் சலதியில் ஆழ்ந்து அனுபவித்தவர். இலக்கண, இலக்கிய அறிவு படைத்தவர்களில் தலை சிறந்தவர்" என்று மதிப்பிட்டார்.

நூல்கள்

ஆய்வு நூல்கள்
உரை நூல்
  • திருவிருத்தம்
பதிப்பு

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Oct-2025, 12:04:56 IST