under review

நற்றிணை உரை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

From Tamil Wiki
பின்னத்தூரார் உரை,சைவசித்தாந்தக் கழகப் பதிப்பு

நற்றிணை உரை(பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்) தமிழில் பழந்தமிழ் நூல்களுக்கான உரைகளில் முன்னுதாரணமான ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழாய்வாளர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் வாழ்நாள் ஆய்வு நற்றிணை உரைதான் என அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார். இது ஆய்வுக்கான முறைமைகளை முழுமையாகக் கடைப்பிடித்து எழுதப்பட்ட உரை.

எழுத்து, பிரசுரம்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய தமிழறிஞர். அவர் நற்றிணைக்கு உரையெழுதி அச்சுக்குக் கொடுத்திருந்தார் அந்நூல் அச்சாகி வெளிவரும் முன்னரே மறைந்தார். சென்னை ராஜதானி கையெழுத்துப் புத்தகசாலையில் உள்ள நற்றிணை ஏடு, உ.வே. சாமிநாதய்யர் கொடுத்த இரண்டு ஏட்டுப் பிரதிகள், மதுரைத் தமிழ்ச் சங்கப்பிரதிகள், கனகசுந்தரம் பிள்ளை என்பவர் கொடுத்த ஏடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மூலப்பிரதியை உருவாக்கி இந்த உரையை எழுதினார். இவ்வுரை சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சானது. இவர் இறந்த பிறகுதான் நூல் முழுதும் அச்சாகி வெளிவந்தது.

பின்னத்தூரார் உரையின் உரிமையைப் பெற்ற திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அவ்வுரையை அவர் வெளியிட்டவாறே மார்ச் 1952-ல் கழக முதற்பதிப்பாக வெளியிட்டனர். அது ஆகஸ்ட் 1956-ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. ஜனவரி 1962-ல் கற்பார் எளிதாகப் புரிந்துகொள்ளும்பொருட்டுப் பொ.வே.சோமசுந்தரனாரைக் கொண்டு பொழிப்புரையைப் பதவுரையாக மாற்றியும், இலக்கணக் குறிப்பு, ஆய்வுரை ஆகியவற்றை எழுதிச்சேர்த்தும் திருத்திய மூன்றாம் பதிப்பாக வெளியிட்டனர். ஆயினும் இலக்கிய ஆய்வாளர்கள் பின்னத்தூரார் உரையையே ஆதாரமாகக் கொள்கின்றனர். நற்றிணைக்கு முதன்முதலில் திணைவகுத்து, உரையெழுதி, முதற்பதிப்பாசியராகவும் விளங்கியவர் என பின்னத்தூர் நாராயணசாமி ஐயரை ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர் .[1]

சிறப்புகள்

  • செய்யுளின் திணை, துறை, துறை விளக்கம், இலக்கண விளக்கம் கூறுதல்
  • செய்யுளின் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனிப் பொருள் கூறுதல்; செய்யுளுக்கு தெளிவான பொருள் தருதல்
  • அரிய சொல்லுக்குத் தனியே பொருள் தருதல்; சில சொற்களுக்கு விரிவான விளக்கம் அளித்தல்
  • விளக்க உரையில் மெய்ப்பாடு பயன் போன்ற அகப்பொருள் விளக்கம் தருதல்
  • தன் பொருளுக்கு அரண் சேர்க்கும் வகையில் இலக்கிய மேற்கோள்கள் காட்டுதல்; பாடபேதம் கூறுதல்
  • செய்யுளின் வரிகளைச் செய்யுளின் அமைப்புப்படிக் கூறாமல் கொண்டுகூட்டுப் பொருள்கோள் வழி தருதல்

இலக்கிய மதிப்பீடு

பழைய உரையாசிரியர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோரை வழி ஒட்டி வடமொழி இலக்கிய இலக்கணம் சார்ந்த கோணத்தைத் தன் நற்றிணை உரையில் கையாண்டிருக்கிறார் பின்னத்தூரார். 'பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்குச் சொல்லியது’ என்னும் கூற்றில் அமைந்த நற்றிணைப் பாடலில் (எண் 176) பரத்தை, 'காதலன் என்றுமோ உரைத்திசின் தோழி’ என்று சொல்வாள். இங்கு வரும் தோழியைப் பரத்தையின் தோழியாகவே கொண்டு உரை வகுக்கிறார் ஐயர். நற்றிணை உரையில் 'பரத்தையின் தோழி விறலி; விறல் - தத்துவம், இவண் சிருங்காரம் முதலாய ஒன்பான் சுவை என்பர். அத்தலைவன் தன் மெய்க்கண்ணே தோன்றுமாறு அவிநயத்தில் புலப்படுத்திக் காட்டவல்லவன்’ என்கிறார்.

இவ்வாறு வடமொழி பாற்பட்டு விளக்கம் அளித்திருப்பதை இவருடைய சமகாலத்திலும் பின்னரும் பிற ஆய்வாளர்கள் மறுத்திருக்கின்றனர். ஐயர் நற்றிணைப் பாடல்களுக்கு உள்ளுறை, இறைச்சி (உள்ளே செறிவாக அமைந்துள்ள மறைபொருள்) போன்றவற்றைக் காண முற்பட்டுள்ளார். பழைய உரையாளர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் தகுதி ஐயருக்கும் உண்டு என்பதற்கு நற்றிணை சான்று என்று அ.கா.பெருமாள் அவருடைய 'தமிழறிஞர்கள்’ (தமிழினி வெளியீடு) நூலில் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

  • அ.கா.பெருமாள் 'தமிழறிஞர்கள்’ (தமிழினி வெளியீடு)

அடிக்குறிப்புகள்


✅Finalised Page