under review

தேவகாந்தன்

From Tamil Wiki
தேவகாந்தன்
தேவகாந்தன்

தேவகாந்தன் (பிறப்பு: 1947) ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். இவரின் 'கனவுச்சிறை' நாவல் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

தேவகாந்தன் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரியில் குமாரசாமி, கனகம்மா இணையருக்கு 1947-ல் பிறந்தார். குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாத காதல் திருமணம் என்பதால் பெற்றோர் சாவகச்சேரியிலிருந்து நயினாத்தீவுக்கு வந்து வசித்தனர். இளம் வயதில் தந்தையை இழந்தார். சாவகச்சேரியிலுள்ள டிறிபேக் கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பு படித்தார். தேவகாந்தன் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசவும் எழுதவும் சிங்களம், கிரேக்கம், பெர்சியன் ஆகிய மொழிகளில் பேசவும் அறிந்தவர். சம்ஸ்கிருதம் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

தேவகாந்தன் மணமானவர். கனடாவின் டொராண்டோவில் மனைவி இரு மகன்களுடன் வசிக்கிறார்.

பணிகள்

தேவகாந்தன் சிறிதுகாலம் கிளிநொச்சி & பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையில் பணி செய்தார். 1974 முதல் 1984 வரை கப்பல்களில் பணியாற்றினார். தொடக்கத்தில் அடிப்படை ஊழியராகப் பணியைத் தொடங்கி, அனுபவத்தின் மூலம் மூன்றாம் நிலைப் பொறியாளராக உயர்ந்தார். கப்பல் வேலை மூலம் அறுபது நாடுகளுக்கு மேல் பயணம் செய்தார். இலங்கையில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக தேவகாந்தன் 1984-ல் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்தார். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் சென்னையில் வாழ்ந்தார். ஆம்னி தொலைக்காட்சியின் ஆரம் தமிழ் ஒளிபரப்பில் செய்தியாளராகப் பணியாற்றினார். 2003-ம் ஆண்டு இலங்கை திரும்பினார். சில ஆண்டுகள் கொழும்பில் வசித்தார்.

இதழியல்

  • தேவகாந்தன் 1968-1974 வரை ஈழநாடு நாளிதழில் பணியாற்றினார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த "இலக்கு" சிற்றிதழின் ஆசிரியராக இருந்தார். இலக்கு இதழ் மூலம் பாரதி, புதுமைப்பித்தன் தொடங்கி தி.ஜானகிராமன், நா.பா. டானியல் உள்ளிட்டோருக்கு இலக்கிய மலர்களை வெளியிட்டார்.
  • தற்போது கனடாவில் இருந்து வெளியாகும் 'கூர்' இலக்கிய இதழின் ஆசிரியராகச் செயல்படுகிறார். கூர் இதழ் மூலம் சில சிறப்பிதழ்களை வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தேவகாந்தனின் முதல் சிறுகதை 'குருடர்கள்' கண்டியிலிருந்து வெளியான 'செய்தி' வாரப்பத்திரிகையில் 1968-ல் வெளியானது. முதல் நாவல் 'உயிர்ப்பயணம்' 1986-ல் வெளியானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, 'சூர்யோதயா', அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை, 'ஞானம்', தாய்வீடு, காலம், 'இலக்கு', 'கூர்', 'பதிவுகள்' முதலான ஊடகங்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் இருந்த காலகட்டத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டார். தனது கப்பல் பயண அனுபவங்களைக் 'கலாபன் கதை' என்னும் நாவலாக எழுதினார்.

கனவுச்சிறை

தேவகாந்தனின் முக்கியமான படைப்பு 'கனவுச்சிறை' திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் என்ற ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் நாவல். 1981 முதல் 2001 வரையான ஈழத்தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்வையும் கேள்விக்குட்படுத்திய இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போரட்ட உணர்வு தீவிரமடைந்த அதே வேளையில் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்த காலப்பகுதியைச் சித்தரிக்கிறது.

விருதுகள்

  • நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது 1996
  • நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக லில்லி தேவசிகாமணி விருது 1996
  • தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு 1998
  • கனவுச் சிறை நாவலுக்காக Tamil Literary Garden Award - 2014
  • தமிழர் தகவல் விருது 2013

திரை வாழ்க்கை

  • 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தில் இலங்கைத் தமிழ் சார்ந்த உரையாடலில் பங்களித்தார்.
  • 'In the Name of Buddha' என்ற சினிமாவில் பங்களிப்பாற்றினார்.

நூல் பட்டியல்

கவிதை
  • மனித அடையாளம்
நாவல்
  • உயிர்ப்பயணம் (1985)
  • விதி (1993)
  • நிலாச்சமுத்திரம்
  • யுத்தத்தின் முதலாம் அதிகாரம் (2004, பூபாலசிங்கம் பதிப்பகம்)
  • திருப்படையாட்சி (1998)
  • வினாக்காலம் (1998)
  • அக்னிதிரவம் (2000)
  • உதிர்வின் ஓசை (2001)
  • ஒரு புதிய காலம் (2001)
  • கனவுச்சிறை (முழுத்தொகுப்பு) (2014, காலச்சுவடு பதிப்பகம்)
  • கலிங்கு (2017, வடலி பதிப்பகம்)
  • கதாகாலம் (மகாபாரதத்தின் மறுவாசிப்பு) (2005)
  • கந்தில்பாவை (2016, காலச்சுவடு)
  • நதிமேல் தனித்தலையும் சிறுபுள் (2019, நற்றிணை பதிப்பகம்)
  • லங்காபுரம் (2007)
  • கலாபன் கதை (2019, காலச்சுவடு)
  • மேகலை கதா (2020, பூபாலசிங்கம் பதிப்பகம்)
சிறுகதைகள்
  • நெருப்பு (1995, பாரிநிலையம்)
  • இன்னொரு பக்கம்
  • காலக்கனா
  • ஆதித்தாய் (2017, ஜீவநதி வெளியீடு)
குறுநாவல்கள்
  • எழுதாத சரித்திரங்கள்
  • திசைகள் (1997, மித்ர வெளியீடு)
கட்டுரைகள்
  • நுண்பொருள் : அறம் பொருள் காமம் (2019, அகம் வெளியீடு)
  • நவீன இலக்கியம் : ஈழம் புகலிடம் தமிழகம் (2019, பூபாலசிங்கம் பதிப்பகம்)
  • எதிர்க் குரல்கள் & பத்தி எழுத்துக்களும் சில கட்டுரைகளும் (2021)
  • காற்று மரங்களை அசைக்கின்றது (2021)
  • திகம்பர நினைவுகள்
உரை
  • ஒரு விடுதலைப் போராளி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 09:56:58 IST