under review

சிந்தாமணி (இதழ்)

From Tamil Wiki
சிந்தாமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிந்தாமணி (பெயர் பட்டியல்)
சிந்தாமணி இதழ். (படம் நன்றி: 'பாலம்மாள்-முதல் பெண் இதழாசிரியர்' தடாகம் வெளியீடு)

சிந்தாமணி (ஆக்ஸ்ட், 1924) பெண்கள் மாத இதழ். பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டது. இதன் ஆசிரியர் வி. பாலம்மாள்.

வி. பாலம்மாள்

பதிப்பு, வெளியீடு

சிந்தாமணி இதழ் ஆகஸ்ட், 1924-ல் தொடங்கப்பட்டது. 'விவேகாச்ரமம், ஸலிவன் ரோட், மைலாப்பூர், சென்னை' என்ற முகவரியிலிருந்து இவ்விதழ் வெளியானது. வி. பாலம்மாள் இதன் ஆசிரியர். சிந்தாமணி இதழுக்கான சந்தாத் தொகையை வெவ்வேறு வகையில் நிர்ணயித்தார். 1930-க்குப் பிறகும் வெளி வந்த ‘சிந்தாமணி’ இதழ் எப்போது நின்று போனது என்பது பற்றிய தகவல் இல்லை. தமிழர்கள் வசித்த வெளிநாடுகளிலும் 'சிந்தாமணி’ இதழ் வாசிக்கப்பட்டதை வாசகர் கடிதங்கள், கட்டுரைகள் காட்டுகின்றன.

சிந்தாமணி - ஏப்ரல் 1926 இதழ்

நோக்கம்

"தமிழ் நாட்டுப் பெண்மணிகளின் முன்னேற்றத்தை முக்கியமாகக் கொண்டு வெளிவரும் ஓர் உயர்தர மாதாந்தத் தமிழிப் பத்திரிகை" என்ற குறிப்புடன் சிந்தாமணி இதழ் வெளிவந்தது. "நம் தமிழ்நாட்டுச் சகோதரிகளின் அபிவிருத்தியை முக்கியக் காரணமாகவும் மற்ற விஷயங்களைப் பொதுவாகவும் உத்தேசித்து இத்தமிழ் மாதப் பத்திரிகையை வெளியிட முன்வந்திருக்கிறேன். அவசியமான சகலவிஷயங்களும் இதிலடங்கியிருக்கும் என்ற காரணம் பற்றி இதற்குச் சிந்தாமணி என்று பெயரிடலாயிற்று. சிந்தாமணியில் பெண்கல்வி, மாணவர் முன்னேற்றம், தொழிலாளர் நிலைமை, நீதிமொழிகள், சுகாதாரம், நவீனக் கதைகள், புராண ஆராய்ச்சி முதலிய பலவிஷயங்களும் வெளிவருமாகையால் தமிழ்நாட்டிலுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் என் முயற்சியை ஆதரித்து என்னைக் கௌரவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்" என இதழின் நோக்கம் பற்றி வி. பாலம்மாள் குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

பெண்கல்வி , ஓட்டுரிமை , அரசியலில் பங்கேற்பு, பெண்கள் சுகாதாரம், கற்பு - சனாதனச் சிந்தனைகள், பெற்றோர் கடமை, திருக்குறளில் அறமும் அதன் மீதான புனைவும், பெண் புனிதம் பேசும் கதைகள், புராணச் செய்திகள், கவிதை, தமிழுக்குச் சிறப்பு செய்தல், காலனித்துவச் சிந்தனைகள், நாடுகளின் அறிமுகம், போதகர்கள் சிந்தனை போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு சிந்தாமணி இதழ் வெளிவந்தது. இதழில் விளம்பரங்கள் இடம் பெற்றன. பிற மொழிப் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. திருக்குறளில் உள்ள கருத்துக்களும் அதுபற்றிய கட்டுரைகளும் வெளியாகின.அகலிகையின் கதை தொடராக வெளியாகியது. சிந்தாமணி இதழில் ஆண்களின் பங்களிப்பும் இருந்தது.

கட்டுரைகள்

பெண்களின் நலன், பெண் விடுதலையோடு கூடவே தேச விடுதலை, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், பெண்கல்வியின் அவசியம், தற்காலப் பெண் கல்வியில் சீர்திருத்தம், கட்டாயக் கல்வி, எனப் பல தலைப்புகளில் சிந்தாமணியில் கட்டுரைகள் வெளியாகின. சமூக மாற்றம் என்பது பெண்களை உயர்வு செய்யும்போதுதான் உண்மையாக மலரும் என்பதை அடிப்படையாக வைத்துப் பல கட்டுரைகள் வெளிவந்தன.

சிறுகதைகள்

சிந்தாமணியில் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் வெளிவந்தன. வி. பாலம்மாள் எழுதிய சிறுகதைகள் கற்பகமலர்-1, கற்பகமலர்-2, கற்பகமலர்-3 என தனித்தனி தொகுப்புகளாக வெளியாகின.

பத்திராதிபர் குறிப்புகள்

பத்திராதிபர் குறிப்புகள் என்ற பகுதியில் பிற இதழ்களில் வெளியான செய்திகளைச் சிந்தாமணி இதழில் வெளியிட்டு அதற்கான தனது விமர்சனக் கருத்துக்களை வி. பாலம்மாள் முன்வைத்தார்.

பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர் நூல் முகப்புப் படம்

பங்களிப்பாளர்கள்

  • அசலாம்பிகை அம்மாள்
  • பாகீரதி அம்மாள்
  • ஸ்ரீமதி சுந்தரம்
  • மங்களா பாய்
  • ருக்மணி அம்மாள்
  • ஜயம்மாள்
  • கமலாம்பிகை
  • கே. கமலாம்பாள்
  • கோமதியப்பன்
  • ரங்கநாதாச்சாரியார்
  • எம்.சி. கிருஷ்ணசாமி
  • ஏ. சந்தனஸ்வாமி
  • வி. பதுமநாபப் பிள்ளை
  • எம்.எம்.என். அய்யர்
  • சுவாமி அற்புதானந்தர்
  • தேசிக விநாயகம் பிள்ளை

ஆவணம்

“பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர்” என்ற நூலில் சிந்தாமணி இதழ், வி. பாலம்மாள் பற்றிய தகவல்களை பேராசிரியர் கோ. ரகுபதி தொகுத்தார். தடாகம் பதிப்பகம் இதனை வெளியிட்டது.

இலக்கிய இடம்

“பெண்களுக்கெனச் சிறப்பாக முழுப்பொறுப்பையும் ஏற்றுத் தென்னிந்தியப் பெண் ஒருவரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை” என சிந்தாமணி இதழ் குறித்து எழுத்தாளர் அசலாம்பிகை மதிப்பிடுகிறார். பெண்கல்வி, பெண் சுதந்திரம், பெண் சுகாதாரம், பெண் அரசியல் உரிமை, ஓட்டுரிமை, சொத்துரிமை போன்ற பல்வேறு உரிமைகளுக்கான விழிப்புணர்வை சிந்தாமணி இதழ் தோற்றுவித்தது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2022, 09:18:01 IST