அசலாம்பிகை
To read the article in English: Asalambikai.
அசலாம்பிகை அம்மையார் (ஜூலை 16, 1875 - 1955) தமிழறிஞர், சொற்பொழிவாளர், எழுத்தாளர். விடுதலை எழுச்சி, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கான பாடல்களை எழுதியவர். சுதந்திரப் போராட்ட தியாகி.
பிறப்பு, கல்வி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், இரட்டணை கிராமத்தில் ஜூலை 16, 1875-ல் பிறந்தார். தந்தை ரா. பெருமாள் அய்யர். பத்து வயதில் அசலாம்பிகைக்குத் திருமணம் நடந்தது. பன்னிரெண்டாம் வயதில் கணவனை இழந்தார். அசலாம்பிகையின் மூத்த சகோதரி ருக்குமணி ஓர் கவிஞர். ருக்குமணியின் கணவர் பாபுராவ் ஐயர். அசலாம்பிகையின் தந்தை பெருமாள் அய்யர் தன் மகள்களைப் படிக்க வைப்பதற்காக கடலூர் அருகில் திருப்பாதிரிப்புலியூரூக்கு குடிபெயர்ந்தார். ஆதீனசுவாமிகள் சுப்பிரமணியம் தம்பிரானை வீட்டுக்கு வரவழைத்து தமிழும் சம்ஸ்கிருதமும் கற்பித்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை பெற்ற அசலாம்பிகை பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி நாட்கள் திருப்பாதிரிப்புலியூரில் கழித்தார். பின்னர் சில காலம் வடலூரில் வாழ்ந்தார்.
இலக்கியப் பங்களிப்பு
அசலாம்பிகை அம்மையார் 'திருவாமாத்தூர் திரிபு அந்தாதி', 'திலகர் புராணம்', ' இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல்', 'ஆத்திச் சூடி வெண்பா', 'குழந்தை சுவாமிகள் பதிகம்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 'திருவுடையூர்த் தல புராணம்' முதல் காண்டம் இவராலும் இரண்டாம் காண்டம் விழுப்புரம் காத்தபெருமாள் பிள்ளை குமாரர் குழந்தைவேலுப்பிள்ளையாலும் பாடப்பட்டது. ’ஆனந்தபோதினி’ இதழின் மாதர் பகுதியில் பல ஆண்டுகள் எழுதியுள்ளார். மகாத்மா காந்தியின் முப்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்து 'காந்தி புராணம்' என்ற பெயரில் எட்டு காண்டங்களாக எழுதியுள்ளார். காந்தி சிறை சென்றது பற்றிய முதல் இரண்டு காண்டங்கள் டிசம்பர் 1923-லும், கதர்த் தொண்டினைப் பற்றிய மூன்றாம் நான்காம் காண்டங்கள் டிசம்பர், 1925-லும் மற்ற நான்கு காண்டங்கள் 1947-க்கு பின்பும் வெளிவந்தன. இவற்றை முடிக்கும்போது அசலாம்பிகையின் வயது 74.
இலக்கிய இடம்
தமிழில் காரைக்கால் அம்மையாருக்குப் பின்னர் அந்தாதிப் பாட்டு எழுதிய பெண் கவிஞர் அசலாம்பிகை. பெண்களுக்கும் இளம் விதவைகளுக்கும் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று தமிழறிஞராக மாறியவர். சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். அசலாம்பிகை பெண்களுக்குக் கல்வி கற்பித்ததுடன் பெண்கள் முன்னேற்றத்திற்கான பாடல்களையும் தேச விடுதலைப் பாடல்களையும் இயற்றினார். அசலாம்பிகையின் கருத்துக்கள் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் இதழ்களில் வெளிவரத் தொடங்கியதும் திருப்பாதிரிப்புலியூர் அசலாம்பிகை அம்மையார் என அறியப்பெற்றார்.
பண்டிதை மனோன்மணி அம்மையார் அசலாம்பிகையின் ’திருவாமாத்தூர் திரிபு அந்தாதி’ நூலுக்கு சாற்றுக்கவி பாடியுள்ளார். அசலாம்பிகையின் சகோதரி ருக்குமணியம்மாள் திருவிடையூர்த் தலபுராணத்திற்கு சிறப்பு பாயிரம் எழுதியுள்ளார்.
"பண்டிதை அசலாம்பிகை அம்மையார் இக்கால ஔவையார். அம்மையார் பழம்பெரும் புலவருள் வைத்துக் கணிக்கத்தக்கவர். பண்டிதை அசலாம்பிகை அம்மையாரின் தமிழ் அமிழ்தை யான் இளைஞனாயிருந்த போது பன்முறை பருகினேன். திருப்பாதிரிப் புலியூரில் அத்தமிழ்த் தாயை நேரிற் கண்டு உறவாடுஞ் சேயானேன்" என்று திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தம் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார் [1].
வடலூரில் தங்கி இருந்தபோது இராமலிங்க அடிகளாரைப் பற்றி `இராமலிங்க சுவாமிகள் பதிகம்’ என்னும் நூலை இயற்றினார். 'குழந்தை சுவாமி பதிகம்' என்னும் நூலையும் இயற்றினார்.
விடுதலைப் போராட்டப் பங்களிப்பு
அசலாம்பிகை அம்மையார் செப்டம்பர் 17, 1921 அன்று காந்தியடிகள் கடலூர் வந்திருந்தபோது தென் ஆற்காடு மாவட்ட மகளிர் சங்கம் சார்பாக அவரைச் சந்தித்தார். பின்னர் காந்தியின் அகிம்சா வழி நின்று 'காந்தி புராணம்' எழுதினார். 1921, 1924, 1929-ம் ஆண்டுகளில் திருவண்ணாமலை முதலிய ஊர்களில் நடைபெற்ற அரசியல், சமய மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். தன்னுடைய பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டினார். `காந்தி புராணம்’, `திலகர் புராணம்’ என்னும் இரு நூல்களை எழுதியுள்ளார். ஜனவரி 1906-ல் ’சக்ரவர்த்தினி’ மகளிர் இதழில் வேல்ஸ் இளவரசரை வரவேற்றுப் பாடல் புனைந்த பாரதியார் தனது பாடலுடன் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் பாடல்களையும் வெளியிட்டார். 1920-ல் ஓ.பி.ஆர். நடத்திய தென் ஆற்காடு மாவட்ட அரசியல் மாநாட்டில் பண்டித அசலாம்பிகை அம்மையார், 'தி ஹிந்து' ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ஆகியோருடன் கலந்து கொண்டார்.
மறைவு
அசலாம்பிகை அம்மையார் இறுதிக் காலத்தில் வடலூரில் வாழ்ந்து 1955-ல் மறைந்தார்.
நூல் பட்டியல்
கவிதை வடிவிலான நூல்கள்
- திருவிடையூர்த் (மேல்சேவூர்) தலபுராணம் (முதல் காண்டம் மட்டும்)
- திருவாமாத்தூர் திரிபு அந்தாதி
- காந்தி புராணம் (எட்டு காண்டங்கள்- 2034 பாடல்கள்)-1923, 1925, 1949
- திலகர் புராணம்
- இராமலிங்க சுவமிகள் சரிதம் (409 பாடல்கள்) - 1934
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- ஆத்திசூடி வெண்பா
- திருவொற்றியூர் பஞ்சகம்
- பாரதத்தாய்
கட்டுரை நூல்
- நீதித்தொகுதி
உசாத்துணை
- 19-ம் நூற்றாண்டின் ஒளவையார் அசலாம்பிகை, கோ.ஜெயலட்சுமி, தினமணி, ஜூலை 2020
- அசலாம்பிகை அம்மையார் வாழ்க்கைக் குறிப்பு, சிலம்புகள்.காம்
- அசலாம்பிகை அம்மையார் பற்றிய குறிப்பு, தமிழ் இணையவழி கல்விக்கழகம்
- திருவிடையூர்த் தலபுராணம், தமிழ் டிஜிட்டல் லைப்ரரி
- Women’s Political Struggle and Achievements in Tamil Nadu
- தமிழ் இணைய கலைக்களஞ்சியம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jun-2022, 18:38:16 IST