under review

தி. வே. கோபாலையர்

From Tamil Wiki
தி.வே.கோபாலையர்
கோபாலையர்
கோபாலையர்
கோபாலையர்
கோபாலையர் சிறப்பிதழ்

தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1929 - ஏப்ரல் 1, 2007) தமிழறிஞர், உரையாசிரியர், தமிழாசிரியர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர், பன்மொழி அறிஞர். இலக்கண,இலக்கிய நூல்களை ஆய்ந்து, புத்துரைகளுடன் செம்பதிப்பாகக் கொண்டு வந்தார்.

பிறப்பு, கல்வி

தி.வே. கோபாலையர் ஜனவரி 22, 1929 அன்று தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் வேங்கடசாமி ஐயர்-லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 4 தம்பியர், 2 தங்கைகள்.

கோபாலையர் மன்னார்குடியில் சரஸ்வதி அம்மாள் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். 1940-ல் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்தார். 1945-ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் இடம் பெற்று ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். மு. இராகவையங்கார் கோபாலையரைத் தன்னுடன் திருவனந்தபுரத்தில் ஆய்வில் ஈடுபட அழைத்தும், குடும்ப சூழலால் போக முடியவில்லை. 1951-ல் பி.ஓ.எல். பட்டம் பெற்று . 1953-ல் பண்டிதர் தேர்வில் முதலிடத்தில் தேறினார். 1958-ல் பி.ஓ.எல். பட்டப்படிப்பை முதல் இடம் முடித்தார்.

தனிவாழ்க்கை

குடும்பம்

தி.வே. கோபாலையர் 1949-ல் ருக்மணி அம்மாளை மணந்தார். மகன் ராமச்சந்திரன், மகள் புஷ்கலா.

கல்விப்பணி

தி.வே. கோபாலையர் 15 ஆண்டுகள் தஞ்சை செயிண்ட் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரின் மாணவராக இருந்தார்.

1946-ல் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றார். 15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் க.வெள்ளை வாரணர், முனைவர் கு. சுந்தரமூர்த்தி போன்றவர்கள் அவரது மாணவர்களாக இருந்தனர். சேலம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய ஊர்களில் கல்லூரிகளில் பணியாற்றினார். 1965-ல் திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார்.

1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரான்சிய கீழைத்திசை கல்விக்கூடத்தில் (Ecole française d'Extrême-Orient) ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாளராகவும் பணியைத் தொடங்கி தன் இறுதிக் காலம் வரை அப்பணியைச் செய்தார். உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் பலர் வந்து இவரிடம் தமிழ் கற்றனர். அவ்வாறு கற்ற மாணவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்தபோது தி.வே. கோபாலையர் அவர்களுக்கு அப்பணியில் உதவி புரிந்தார்.

கோபாலையர் தமிழ் தவிர சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பதிப்பியல்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலக செயலர் பொறுப்பில் இருந்த நீ. கந்தசாமிப் பிள்ளை கோபாலையர் பதிப்புப்பணிக்கு வர வழிவகுத்தார். 1970 -ம் ஆண்டு இலக்கண விளக்கத்தைப் பதிப்பிக்கும் பணியைத் தி.வே. கோபாலையரிடம் நீ. கந்தசாமிப்பிள்ளை ஒப்படைத்ததோடு அப்பதிப்பை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கான ஒரு திட்ட வரையறையையும் அளித்தார். அதை கோபாலையர் ’முதுபெரும்புலவர் திருவாளர் நீ.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் இட்ட ஆணையை ஒட்டியே இவ்வியல் பதிப்பிக்கப்பட்டுள்ளது” என்று அணியியல் (1973) நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்துக்காக 1970 _ 74 காலப்பகுதியில் இலக்கண விளக்கத்தைப் பல்வேறு தொகுதிகளாகப் பகுத்துத் தொகுத்துப் பதிப்பித்தார். இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், வண்ணத்திரட்டு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 'இலக்கண விளக்கம்' நூலுக்கு முழு உரை எழுதிப் பதிப்பித்தார். தொல்காப்பியம் ,வீரசோழியம்,மாறன் அகப்பொருளும் திருப்பதிக்கோவையும் , மாறனலங்காரம் ஆகியவை அவர் பதிப்பித்த இலக்கண நூல்கள்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக மணிமேகலை காப்பியச் செம்பதிப்புப் பணியை முடித்தார். தொல்காப்பியம்-செம்பதிப்பின் 14 பகுதிகளையும் பதிப்பித்தார். தேவாரத்தை திருஞானசம்பந்தர் தேவாரம் ,திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும்,தேவாரம் ஆய்வுத்-துணை என வெவ்வேறு நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.

பதிப்பு முறை

தி.வே.கோபாலையரின் பதிப்புமுறை பற்றி முனைவர் இளமாறன் அவர் பாடவேறுபாடுகளை அட்டவணையிடுவதில்லை என்றும், விரிவான அடிக்குறிப்புகள் மற்றும் முன்னுரை பின்னுரை ஆகியவற்றின் வழியாக திருத்தங்களை விளங்கவைப்பது வழக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.கோபாலையரின் அடைவுகள் ஆய்வுமாணவர்களுக்கு மிக உதவியானவை என்று குறிப்பிடுகிறார்.

மொழியாக்கங்கள்

மணிமேகலை ஆங்கில மொழியாக்கமும், சேனாவரையத்தின் பிரெஞ்சு மொழியாக்கமும், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய 'சோழர் கால கலைப்பணி' நூலின் தமிழாக்கமும் இவரது முயற்சியால் உருப்பெற்றன.

2005-ல் கலிபோர்னியாவில் வெளியிடப்பட்ட 'சீவக சிந்தாமணி' யின் 1165 பாடல்களின் ஆங்கில மொழியாக்கத்தில் கோபாலையர் பெரிதும் உதவியதாக மொழியாக்கம் செய்த ஜேம்ஸ்.டி. ரயன் குறிப்பிட்டார். இணை ஆசிரியராக கோபாலையரின் பெயரை ரயன் குறிப்பிட விரும்பியதாகவும் கோபாலையர் அதை மறுத்ததாகவும் ரயன் குறிப்பிட்டார்.

2006-ம் ஆண்டு திருமங்கையாழ்வாரின் பாடல்களான பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரையை மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

ஆய்வுகள்

சைவ, வைணவ இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார் கோபாலையர். வைணவ இலக்கியங்களில் பல ஆய்வுகள் புரிந்தார். திருப்பதிக் கோவை பற்றி ஆய்வு செய்தார். வீரசோழிய ஆய்வு, தொல்காப்பியம் சேனாவரையம் _ வினா_விடை விளக்கம் ஆகிய நூல்களையும் எழுதினார்.

கம்பராமாயணத்தை ஆய்வுசெய்து கம்பராமாயணத்தில் முனிவர்கள்,, கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் (இரு தொகுதிகள்) , கம்பராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள், கம்பராமாயண படலச் சுருக்கம் ஆகியவை முக்கியமான நூல்கள். சீவகசிந்தாமணி பற்றிய ஆய்வுநூல்களான சீவகசிந்தாமணி - காப்பிய நலன், சீவகசிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்கள்.

அகராதி

தி.வே. கோபாலையர் வைணவத் தமிழ் அகராதியைத் தயாரித்தார். 2005ல் வெளிவந்த 17 தொகுதிகள் கொண்ட தமிழ் இலக்கணப் பேரகராதி தி.வே.கோபாலையரின் சாதனை என்று கருதப்படுகிறது.

சொற்பொழிவு

தி.வே. கோபாலையர் சிறந்த சொற்பொழிவாளர். பல ஊர்களில் சொற்பொழிவுகள் மூலம் தமிழ் நூல்களை மக்களுக்கு அறிமுகம் செய்தார். பல இதழ்களில், மலர்களில் ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தார். பல கருத்தரங்குகளில் உரையாற்றினார்.

இசைத்தமிழ்

தேவாரத்தை எண்மமயமாக்கும்(digitize) செய்யும் பணியில், பண் முறைப்படியும், ராகங்களின் அடிப்படையிலும் தேவாரத்தை இசை வடிவில் பதிப்பிப்பதில் ழான் லூக் ஷெவியடுக்கு ( Jean -Luc-Chevillard) உதவியாகவும் உறுதுனையாகவும் இருந்தார்.

விருதுகள், பரிசுகள்

  • தருமையாதீனத் திருமடம் 'செந்தமிழ்க் கலாநிதி' - 1994
  • திருப்பனந்தாள் காசித் திருமடம் 'சைவ நன்மணி' - 1997
  • புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் - ""நூற்கடல் - 1982
  • புதுச்சேரி அரசு - 'கலைமாமணி' - 2002
  • சென்னை - வடமொழிச் சங்கம் 'சாகித்திய வல்லப - 2002
  • பொங்கு தமிழ் விருது - 2003
  • தமிழக அரசு - திரு. வி. க. விருது - 2005
  • சடையப்ப வள்ளல் விருது - 2006
  • கபிலர் விருது - 2006
சிறப்பிதழ்
  • முகம் இலக்கிய இதழ் 2006ல் கோபாலையருக்குச் சிறப்பிதழ் வெளியிட்டது.

மதிப்பீடு

தி.வே.கோபாலையரின் பங்களிப்பை ஐந்து களங்களிலாக வகுத்துரைக்கலாம்.

  • தமிழ் இலக்கண நூல்களையும் தேவாரம் முதலிய இலக்கியங்களையும் ஆய்ந்து, புத்துரையுடன் செம்பதிப்பாகப் பதிப்பித்தது தி.வே, கோபாலையரின் முக்கியமான பங்களிப்பாகக் கருதப்படுகிறது. நூல்களை மறுபதிப்புகளாக வெளியிடும்போது மீண்டும் சுவடிகளுடன் ஆராய்ந்து, பாடபேதங்களை கருத்தில்கொண்டு முழுமையான பதிப்புகளாக கொண்டுவந்தார்
  • தி.வே.கோபாலையரின் இலக்கிய ஆய்வுகளை கல்வித்துறை சார்ந்து ஆய்வுசெய்யும் மாணவர்கள் முதன்மையான முற்கோளாகக் கருதுகிறார்கள்.
  • தி.வே.கோபாலையரின் இலக்கண அகராதி தமிழியலில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
  • தி.வே.கோபாலையர் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து நூல்களை உருவாக்கிய பிற்கால அறிஞர்களில் முக்கியமனாவர். குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களையும் செய்துள்ளார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழியக்கம் தமிழ்மொழியின் தனித்தன்மையை முன்னிறுத்தியமையால் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த இலக்கண நூல்கள் அறிஞர்களின் கவனத்திலிருந்து விலகி அழியத்தலைப்பட்டன. அவற்றில் பௌத்த, சமணநூல்களும் பல உண்டு. சம்ஸ்கிருத அறிஞரான கோபாலையர் அந்நூல்களை பிழைநோக்கி செம்பதிப்பாக வெளியிட்டு மீண்டும் ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மறைவு

புதுவையில் வாழ்ந்த தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007-ல் ஸ்ரீரங்கத்தில் உள்ள தமது மகளின் வீட்டில் காலமானார்.

நூல் பட்டியல்

  • இலக்கண விளக்கம்: எழுத்ததிகாரம் 1970
  • இலக்கண விளக்கம்: சொல்லதிகாரம் 1971
  • இலக்கண விளக்கம்: பொருளதிகாரம்
  • அகத்திணையியல் - 2 தொகுதி 1972
  • புறத்திணையியல் 1972
  • அணியியல் 1973
  • செய்யுளியல் 1974
  • பாட்டியல் 1974
  • இலக்கணக் கொத்து உரை 1973
  • பிரயோக விவேக உரை 1973
  • திருஞானசம்பந்தர் தேவாரம் சொற்பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன், 1984
  • திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1985
  • தேவார ஆய்வுத் துணை - தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் 1991
  • வீரசோழிய உரை - விரிவான விளக்கங்களுடன் 2005
  • தமிழ் இலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐம் பகுப்புக்களிலுள்ள இலக்கண மரபுச் சொற்களுக்குத் தொல்காப்பியம் முதல் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விருத்தப்பாவியல் இறுதியான வழக்கத்தில் உள்ள இலக்கண நூல்களையும் அவற்றின் உரைகள் பலவற்றையும் உட்கொண்டு விரிவான மேற்கோள் எடுத்துக்காட்டுக்களுடன் தொகுக்கப்பட்ட தமிழ் இலக்கண மரபுச் சொல் அகர வரிசை 2006
  • திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் - 2006
  • மாறன் அலங்காரம் - பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் 2006
  • மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் - புதிதாக எழுதப்பட்ட விளக்கங்களுடன் 2006
  • இலைமறை கனிகள் - இலக்கணக் கட்டுரைகள் - தெளி தமிழில் வெளிவந்தவை 2006
சிறு நூல்கள்
  • தொல்காப்பியச் சேனாவரையம் - வினா விடை விளக்கம்
  • கம்பராமாயணத்தில் முனிவர்கள் - 1994
  • கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் - 2 தொகுதி 1995, 1996
  • கம்பராமாயத்தில் தலைமைப் பாத்திரங்கள் - 1998
  • சீவக சிந்தாமணி - காப்பிய நலன் - 1999 கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
  • பால காண்டம் - 1999
  • அயோத்தியா காண்டம் - 1999
  • சுந்தர காண்டம் - 1999
  • உயுத்த காண்டம் - 2000
  • சீவக சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் - 2002
மொழியாக்கத்தில் உதவி
  • எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனின் ஆங்கில நூலின் சோழர் காலப் கலைப்பணி - தமிழ் ஆக்கம்.
  • ஆலன் டேனியலுவின் "மணிமேகலை' ஆங்கில மொழிபெயர்ப்பு
  • சேனாவரையத்தின் பிரெஞ்சு மொழி ஆக்கம்.
  • சித்தாந்த வகுப்புகள்
  • உண்மை விளக்கம்
  • திருவருட் பயன்.
தொடர் சொற்பொழிவுகள்
  • பெரிய புராணம்
  • கம்ப ராமாயணம்
  • சீவக சிந்தாமணி
  • திங்கள்தோறும் சதயத் திருநாளில் திருவாமூரில் திருமுறை விளக்கவுரை

உசாத்துணை


✅Finalised Page