under review

சுப. திண்ணப்பன்

From Tamil Wiki
சுப. திண்ணப்பன் (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன்).
சுப. திண்ணப்பன் (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன்)

சுப. திண்ணப்பன் (பிறப்பு: ஜூன் 19, 1935) கல்வியாளர்; எழுத்தாளர்; பேச்சாளர். தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பணியாற்றினார். கல்விப் பணிகளுக்காக தமிழ்நாட்டிலும், சிங்கப்பூரிலும் பல்வேறு விருதுகள் பெற்றார். சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

சுப. திண்ணப்பன், தமிழ்நாட்டின் தேவகோட்டையில், ஜூன் 19, 1935 அன்று, சுப்பிரமணியன் செட்டியார்-ஆனந்தவல்லி இணையருக்குப் பிறந்தார். இளமையிலேயே தாயை இழந்தார். தந்தை வழிப் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். கொரடாச்சேரி, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் உயர்நிலைக் கல்வி கற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புதுமுக வகுப்பு (இண்டர்மீடியட்) படித்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் (B.A.Hons. Tamil) பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் எம்.லிட். பட்டங்கள் பெற்றார். ‘A Descriptive Study of Civakacinthamani’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மொழியியலில் பட்டயம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய், இந்தி, சமஸ்கிருதம் அறிந்தவர்.

தனி வாழ்க்கை

சுப. திண்ணப்பன், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும், மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகவும் பணிபுரிந்தார். மலேசியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்தியவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1982-ல், சிங்கப்பூர் கல்விக் கழகத்தில், ஆசிய மொழித் துறையின் தமிழ்ப் பிரிவில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், SIM பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சார்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மணமானவர். மகன்கள் அருண்மொழி, அருணாசலம் இருவரும் பொறியாளர்கள். மகள் இன்பமணி.

புத்தக வெளியீடு

இலக்கிய வாழ்க்கை

சுப. திண்ணப்பன், தமிழ் முரசு இதழில் தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார். சிங்கைநகர் அந்தாதி, குதிரைப்பந்தய லாவணி உள்ளிட்ட நூல்கள் பற்றிய திறனாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணிகளை ஆவணப்படுத்தினார். தனித்தும் தம் உடன் பணியாற்றுபவர்களுடனும் இணைந்து பல நூல்களை எழுதினார்.

சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் அதி­பர் எஸ்.ஆர். நாதன் அவர்களுடன் சுப. திண்ணப்பன்

இதழியல் வாழ்க்கை

சுப. திண்ணப்பன், அனைத்திந்திய தமிழ் மொழியியல் கழகம் வெளியிட்ட ’மொழியியல்’ என்னும் ஆய்விதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிடும் ’சிங்கப்பூர் இந்து’ என்னும் இரு மொழி இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். அவ்விதழில் இந்து சமயம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார்

அமைப்புச் செயல்பாடுகள்

சுப. திண்ணப்பன், உலகத் தமிழ் மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தார். பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசித்தார். இலக்கியம் மற்றும் சமயம் சார்ந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல நாடுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். கருத்தரங்குகள் நடத்தினார். சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் அதி­பர் எஸ். ஆர். நாதனுக்­குத் தமிழ் கற்பித்தார். பல்வேறு இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகச் செயல்பட்டார். சிங்கப்பூரில் திருமுறை மாநாடுகள் நடைபெறவும், அது தொடர்பிலான கருத்தரங்குகள் நடைபெறவும் உறுதுணையாக இருந்தார்.

கிருபானந்த வாரியாருடன் சுப. திண்ணப்பன்

கல்வியியல் பணிகள்

சுப. திண்ணப்பன், சிங்கைத் தமிழர் தமிழ்க் கல்வி கற்பதற்கான பல பயிற்றுக் கருவிகள் உருவாக்கினார். சிங்கப்பூரில் தொடக்க,உயர்நிலை,மேநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள பல குறுவட்டுகள் உருவாக மொழியறிஞராக இருந்து பணிபுரிந்தார். புலம்பெயர்ந்த தமிழருக்குப் பாடநூல் உருவாக்க உதவினார். தமிழ்ப் பாட நூல்கள் பலவற்றை தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கிய குழுவின் மதியுரைஞராகப் பணியாற்றினார்.

இந்தியா, இலங்கை, மலேசியாவின் பல்கலைக்கழக ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகச் செயல்பட்டார். மாணவர்களின் பட்டப்படிப்புக்குரிய பாடத்திட்டங்களை வகுத்தார். பல பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக் குழுக்களிலும், தேர்வாளர் குழுக்களிலும் உறுப்பினராகப் பணியாற்றினார். தமிழில் ஆய்வேடு எழுதி முனைவர் பட்டம்பெறலாம் என்ற நிலையைச் சிங்கப்பூரில் ஏற்படுத்தினார். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் சிலர் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார்.

சுப. திண்ணப்பன்

பொறுப்புகள்

  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ராஜராஜன் விருதுத் தேர்வுக்குழு உறுப்பினராகப் பணிபுந்தார்.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
  • தேசிய புத்தக மன்றத்தில் விருதுக்கான தேர்வுக்குழு நடுவராகப் பணியாற்றினார்.
  • சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தில் கல்வி மதியுரைஞராகப் பொறுப்பு வகித்தார்
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞரர்.
  • தமிழவேள் விருதுத் தேர்வுக் குழுவின் தலைவர்.
  • தமிழவேள் நற்பணி மன்றத்தின் ஆலோசகர்.
  • சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் கல்வி மதியுரைஞர்.
  • சிங்கப்பூர் நகரத்தார் கழகத்தில் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றினார்.
சுப. திண்ணப்பன்

விருதுகள்

  • மலாயா அருள் நெறித் திருக்கூட்டம் வழங்கிய அருள்நெறிச் செல்வர் பட்டம்
  • கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருமுறை மாநாட்டில் வழங்கப்பட்ட சைவ மாமணி விருது
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அளித்த தமிழவேள் விருது
  • சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் அளித்த முன்னோடித் தமிழாசிரியர் விருது
  • சிங்கப்பூர் கலாசார, சமூக, இளையர் அமைச்சு அளித்த முன்னோடித் தலைமுறைப் பாராட்டு விருது
  • சிங்கப்பூர் தமிழ், சமூக அமைப்புகள் வழங்கிய சிங்கை செந்தமிழ்ச் செம்மல் விருது
  • திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) வழங்கிய ஜமாலியன் விருது
  • சிங்கப்பூர் மீடியாகார்ப்பின் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு வழங்கிய செஞ்சுடர் விருது
  • தமிழ் முரசு இதழ் வழங்கிய வாழ்நாள் நல்லாசிரியர் விருது
  • கவிமாலை அமைப்பு வழங்கிய கணையாழி விருது
  • சிங்கப்பூர் பெரியார் சமூகச் சேவை அளித்த பெரியார் விருது
  • தேவகோட்டை பால தண்டாயுதபாணி கல்வி அறக்கட்டளை அளித்த தீந்தமிழ்த் தென்றல் பட்டம்
  • புதுக்கோட்டை, திலகவதியார் ஆதீனம் வழங்கிய அன்னை சாய்மாதா சிவபிருந்தாதேவி விருது
  • ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட தகைசால் தமிழ்ச் சான்றோர் விருது
  • தமி­ழக அர­சின் அயலகத் தமிழர் மொழி­யி­யல் அறி­ஞர் விருது
  • பேரூர் ஆதீனம் வழங்கிய தெய்வத் தமிழ்ப் பெரும் புலவர் பட்டம்
  • திருவாவடுதுறை ஆதீனம் அளித்த செந்தமிழ்க் கலாநிதி பட்டம்
  • குன்றக்குடி ஆதீனம் வழங்கிய தமிழாகரர் விருது
  • பேராசிரியர் கண்ணப்பன் வாசுகி பொது அறக்கட்டளை அளித்த செம்மொழிச் செம்மல் பட்டம்
திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் - பாவலர் முருகடியான் நூல்

ஆவணம்

சுப. திண்ணப்பனைப் பற்றி, ‘பேராசிரியர் முனைவர் திண்ணப்பர் பிள்ளைத் தமிழ்’ என்ற தலைப்பில், முருகடியான் நூல் ஒன்றை இயற்றியுள்ளார். சிங்கப்பூரின் தென்றல் பதிப்பகம் அந்நூலை வெளியிட்டுள்ளது.

வரலாற்றிடம்

சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் கல்விசார் உயர் குழுக்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தல் குறித்தும், தமிழரல்லாத மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தலில் எழும் சிக்கல்களைக் குறித்தும் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் மாணவர்கள் உருவாவதற்கும் முக்கியக் காரணமானவராக சுப. திண்ணப்பன் மதிப்பிடப்படுகிறார். சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவராக சுப. திண்ணப்பன் மதிக்கப்படுகிறார்.

சுப. திண்ணப்பன் நூல்கள்

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • தமிழ்க் கவிக்கோவை
  • செந்தமிழும் நாப்பழக்கம்
  • எழுத்துச் சீர்திருத்தக் கையேடு
  • சிங்கப்பூரில் தமிழ் மொழியும் இலக்கியமும்
  • கணினியும் தமிழ் கற்பித்தலும்
  • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய சாதனைகளும் எதிர்காலமும் (டாக்டர் ஏ.ஆர்.ஏ. சிவகுமாரன் மற்றும் டாக்டர் சீதாலட்சுமியுடன் இணைந்து எழுதியது)
  • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம் (டாக்டர் ஏ.ஆர்.ஏ. சிவகுமாரன் உடன் இணைந்து எழுதியது)
  • அனைத்துலக அரங்கில் தமிழ்
  • நம் சாதனையாளர்கள்
தொகுப்பு நூல்கள்
  • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு (1870 – 2010) – சுப. திண்ணப்பன், நா. ஆண்டியப்பன், சுப. அருணாசலம்
  • சிங்கப்பூர்க் கவிதையில் பெரியார் - சுப. திண்ணப்பன் & பூபாலன்
  • கட்டுரைக் கொத்து
  • சிங்கைத் தமிழ் தந்த முன்னோடிகள் - 2016
ஆங்கில நூல்கள்
  • Saivite Hinduism
  • Functional objectives in Language Learning Tamil Language: A Report on Phase 1 of the Project Institute of Education, Singapore (Thinnappan, SP., Ramaiah, K.and Govindasamy.N)
  • Functional objectives in Language Learning Tamil Language. A Report on Phase II of the project. Institute of Education, Singapore (Thinnappan, SP., Ramaiah, K.and Govindasamy.N)
  • Dr Oliver Seet - An Attitudinal Study of A Cross Section of Tamils in Singapore Towards Tamil Language: Perception and Practice, Research Report SOA, NIE (Thinnappan, SP., Ramaiah, K.and Govindasamy.N)
  • Nagarathars in Singapore (Thinnappan, SP & Soundara Nayagi Vairavan)

உசாத்துணை


✅Finalised Page