under review

ஜி.ஏ. நடேசன் & கோ

From Tamil Wiki
நடேச என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நடேச (பெயர் பட்டியல்)
ஜி.ஏ. நடேசன் - பதிப்பாளர்

ஜி.ஏ. நடேசன் & கோ (ஜி.ஏ. நடேசன் அண்ட் கம்பெனி) (1897) தமிழின் முன்னோடிப் பதிப்பக நிறுவனங்களுள் ஒன்று. தேசியம், ஆன்மிகம், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பல நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டது. இதழாளரான ஜி.ஏ. நடேசன் இப்பதிப்பக நிறுவனத்தைத் தோற்றுவித்தார். தேசிய விடுதலை உணர்வை வளர்க்கும் நூல்களையும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உரைகள் மற்றும் எழுத்துக்களையும் இந்நிறுவனம் ஆங்கில மொழியில் மலிவு விலையில் வெளியிட்டது.

தோற்றம்

ஜி.ஏ. நடேசன், 1897-ல், ஜி.ஏ. நடேசன் & கோ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு முன் 'லட்சுமி கம்பெனி' என்ற பெயரில் ஒரு புத்தக நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார். அதுவே பின்னர் 'நடேசன் & கோ'வாக உருமாற்றம் பெற்றது. தேசியம், ஆன்மிகம், பொருளாதாரம், தத்துவம், வாழ்க்கை வரலாறு, சமூகவியல் சார்ந்த பல நூல்களை ஜி.ஏ. நடேசன் & கோ ஆங்கிலத்தில் வெளியிட்டது.

ஜி.ஏ. நடேசன் அண்ட் கோ நூல்கள்

நூல் வெளியீடு

அரசியல் நூல்கள்

ஜி.ஏ. நடேசன் & கோ நிறுவனம் தேசியச் சிந்தனை கொண்ட நூல்கள், அரசியல், பொருளாதார நூல்கள், ஆன்மிக நூல்கள், ஞானிகளின் நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் மலிவு விலையில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. Indian Politics என்பது நடேசன் & கோ வெளியிட்ட முதல் நூல். அது 1898-ல் வெளியானது. தொடர்ந்து எஸ். ராதாகிருஷ்ணன், சீனிவாச ராமானுஜன், நீதிபதி முத்துசாமி ஐயர் உள்ளிட்டோரின் படைப்புகள் வெளியாகின.

ஜி.ஏ. நடேசன் & கோ, சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்ட இந்தியர்களின் வாழ்க்கை வரலாற்றை 55 நூல்களாக நான்கணா விலையில் வெளியிட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை, எச்.எஸ்.எல்.போலக் மூலம் ஆங்கிலத்தில் முதன்முதலில் வெளியிட்டது. 1898-ல் இந்திய அரசியலில் தொடங்கி, 1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியின் 'ஹிந்த் ஸ்வராஜ்' வரை பல காந்தியம் சார்ந்த பல அரசியல் நூல்களை ஜி.ஏ. நடேசன் & கோ வெளியிட்டது.

ஆன்மிக நூல்கள்

ஜி.ஏ. நடேசன் & கோ, அன்னிபெசண்ட் எழுதிய பகவத் கீதை விளக்கத்தை ஒரு பக்கம் சம்ஸ்கிருத மூலத்திலும் எதிர்ப்பக்கத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கையடக்கப் பதிப்பாக, ஒரு பிரதி நான்கணா என்ற விலையில் வெளியிட்டது. அந்நூல் 15 பதிப்புகள் கண்டதுடன், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானது.

தேசபக்தியையும் தெய்வபக்தியையும் ஒருங்கிணைக்கும் வகையில் வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், உபநிடதங்கள் போன்ற நூல்கள் வெளியாகின. இந்து சமயம், இஸ்லாம், பிரம்ம சமாஜம் முதலான சமயத்துறைச் சான்றோர்களின் வரலாறுகள் வெளிவந்தன.

இந்திய ஞானியர்களின் வரிசையில் தியானேஸ்வரர், நம்மாழ்வார், அப்பர், ஏகநாத், நந்தனார், கபீர், துகாராம், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், வல்லபாசார்யார், நாமதேவ், குருநானக், குருகோவிந்த் சிங், பக்த ராம்தாஸ், சுவாமி தயானந்தர், சைதன்யர், துளசிதாசர், ராம்தீர்த்தர் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் நூல்களாக வெளிவந்தன. அது போல ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், புத்தர், ராமர், கிருஷ்ணர், இயேசு கிறிஸ்து, முகம்மது நபி போன்றோரின் வாழ்க்கையும், போதனைகளும் நூல்களாக வெளியிடப்பட்டன.

அயல்நாட்டவர்களின் நூல்கள்

அயல்நாடுகளைச் சேர்ந்த இந்தியா மற்றும் இந்தியர்களின் உயர்வில் நாட்டம் கொண்டிருந்த டாக்டர் மில்லர், மார்லி, மிண்டோ, ரிப்பன், சர் வில்லியம் வெட்டர்பர்ன், அன்னிபெசண்ட், எட்மண்ட்பர்க், சார்லஸ் பிராட்லா, ஜான்பிரைட், ஹென்றி பாவ்செட், சர் ஹென்றி காட்டன், சகோதரி நிவேதிதா, ஹார்டிஞ்ச் பிரபு, சர் ஹ்யூ எட்வின் ஆர்னால்ட் போன்ற வெளிநாட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளை ஜி.ஏ. நடேசன் & கோ நூல்களாக வெளியிட்டது.

பொது நூல்கள்

இந்திய விஞ்ஞானிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கையை ஜி.ஏ. நடேசன் & கோ நூல்களாக வெளியிட்டது. மரியாதை ராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், அறிவார்ந்த நகைச்சுவைக் கதைகள், நாட்டுபுறக் கதைகள் போன்றவற்றையும் வெளியிட்டது. ஜி.ஏ. நடேசன் & கோ. தமிழில் ஒரு சில நூல்களை மட்டுமே வெளியிட்டடது. அவற்றுள் 'நீதிநூல்கள்' என்னும் கையடக்கப் பதிப்பும், 'எட்வர்ட் சக்கரவர்த்தி' பற்றிய நூலும் குறிப்பிடத்தகுந்து.

நிறுத்தம்

ஜி.ஏ. நடேசனுக்கு உடல்நலமில்லாது போனதால் பதிப்பகம், அச்சகம், இதழ்கள் வெளியீடு என அனைத்துப் பொறுப்பையும் நடேசனது மகன்கள் மணியன் நடேசன், சந்திரன் நடேசன் இருவரும் ஏற்றனர். 1949-ல் ஜி.ஏ. நடேசனின் மறைவுக்குப் பின்னும் பதிப்பகம் செயல்பட்டது. சொந்த அச்சகம் என்பதால் படிப்படியாக நூல் வெளியீடுகளைக் குறைத்து இதழ் வெளியீட்டில் மட்டுமே பதிப்பகத்தார் கவனம் செலுத்தினர். 1962 வரை ஜி. ஏ. நடேசன் & கோ செயல்பட்டது.

மதிப்பீடு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கும் ஜி.ஏ. நடேசன் & கோ, 'மலிவுப் பதிப்புகளின் முன்னோடிப் பதிப்பகம்' ஆகக் கருதப்படுகிறது. பல நூற்றுக்கணக்கான நூல்களை ஆங்கிலத்தில் மலிவு விலையில் அச்சிட்டு வெளியிட்டது. ம.பொ. சிவஞானம், தனது 'விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு' நூலில், "தமிழ் நூல்களை வெளியிட முதலில் தேவைப்படுவது பணமன்று; தமிழ்ப்பற்று! அந்த மூலதனம் ஆங்கில மோகத்தில் மூழ்கிக் கிடந்த ஜி.ஏ. நடேசன் கம்பெனியாரிடம் அன்று இருக்கவில்லை." என்று விமர்சித்தார். தமிழின் முன்னோடிப் பதிப்பக நிறுவனமாக ஜி.ஏ. நடேசன் & கோ மதிப்பிடப்படுகிறது.

ஜி.ஏ. நடேசன் & கோ வெளியிட்ட நூல்கள்

ஜி.ஏ. நடேசன் & கோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்டது அவற்றில் சில:

  • Indian politics
  • The Indians of South Africa: Helots within the empire and how they are treated
  • What India wants autonomy within the empire
  • The Chronology of Ancient India First series
  • The Pallavas
  • The life and teachings of Jesus Christ
  • Agricultural Industries in India
  • Speeches of Gopal Krishna Gokhale
  • All about the war the Indian review war Book
  • Indian problems connected with education, agriculture & land revenue.
  • The Bhagavad Gita
  • Speeches and writings of Sir William Wedderburn
  • Speeches and writings of Dr Sir Rash Behari Ghose
  • Speeches and writings of M. K. Gandhi
  • Speeches and writings of Dadabhai Naoroji
  • Indian national evolution: A brief survey of the origin and progress of the Indian National Congress and the growth of Indian nationalism
  • Speeches and writings of M. K. Gandhi
  • Thillai Govindan
  • The empire in India
  • Nawab Mohsin - Ul - Mulk
  • Romesh Chunder Dutt
  • Royal Commission on Indian Finance and Currency
  • Lift irrigation
  • Speeches on Indian questions
  • His majesty king George's speeches in India
  • Prophet Muhammad and his teachings
  • Local Autonomy
  • Local Autonomy agriculture with respect to south India
  • First aid in accidents
  • The heart of Hindustan
  • Indian industrial and economic problems
  • Indian national evolution: a brief survey of the origin and progress of the Indian National Congress and the growth of Indian nationalism
  • Industrial India
  • Ramanand to Ram Tirath: lives of the saints of northern India including the sikh gurus
  • Speeches and writings of Pandit Madan Mohan Malaviya
  • The spirit and struggle of Islam
  • The Purusha sukta
  • Speeches and writings of Dr. Sir Rash Behari Ghose: an exhaustive and comprehensive collection
  • Speeches and writings of Swami Vivekananda: a comprehensive collection with four portraits
  • Speeches and writings of Sir Dinshaw Edulji Wacha
  • Studies in local self-government, education and sanitation
  • The Vaishnava reformers of India: critical sketches of their lives and writings
  • The swadeshi movement: a symposium views of representative Indians and Anglo-Indians
  • Speeches of the honourable Mr. G. K. Gokhale: with an introduction and a frontispiece
  • Aspects of the Vedanta
  • Lal Mohun Ghose
  • Henry Fawcett: a sketch of his life and his services to India
  • Allan O. Hume: a sketch of his life and his services to India
  • Rev. Dr. Miller: a sketch of his life and his services to India
  • Nammalwar: a sketch of his life and teachings
  • The Governance of India: as it is and as it may be a hand book of progressive politics
  • Freedom and culture
  • The mission of our master: Essays and discourses
  • India's sacred shrines and cities
  • Miss Mayo's Mother India a rejoinder
  • Hind Swaraj or, Indian Home Rule
  • Essays on Indian Economics: a collection of essays and speeches
  • Folk-lore of the Telugus: a collection of forty-two highly amusing and instructive tales
  • The story of the Raya & Appaji: 16 amusing and instructive stories
  • எட்வர்ட் சக்கரவர்த்தி
  • நீதி நூல்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jun-2024, 09:07:30 IST