under review

வில்லியம் மில்லர்

From Tamil Wiki
மில்லர்
மில்லர் நூல்
மில்லர் சிலை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி
மில்லர் சென்னை பல்கலை கௌரவிப்பு

வில்லியம் மில்லர் (William Miller) (ஜனவரி 13, 1838 – ஜுலை 1923) கல்வியாளர், மதப்பிரச்சாரகர், தமிழ்நாட்டில் நவீனக்கல்விக்கும் நவீன இலக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்த முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழ் ஆய்வின் தொடக்கப்புள்ளியும் கூட. ஸ்காட்லாந்துக்காரரான வில்லியம் மில்லர் ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து (Free Church of Scotland) அமைப்பின் பிரச்சாரகர். மதராஸ் மாகாணச் சட்டச்சபையில் 1893, 1895, 1899 மற்றும் 1902-ல் நான்குமுறை உறுப்பினராக இருந்தார். வில்லியம் மில்லர் இங்கிலாந்து மன்னர் வழங்கிய கைசர் இ ஹிந்த் விருதைப் பெற்றவர்.

வில்லியம் மில்லர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தோற்றத்திற்குக் காரணமானவர். ஆன்மநிறைவு இறையியல் (Fulfilment theology) என்னும் மதக்கொள்கையை முன்வைத்தவர். இந்துமதத்துடனான உரையாடலின் விளைவான இக்கொள்கை கிறிஸ்தவ மதம் சொல்லும் மீட்பு என்பது ஆன்மா அடையும் முழுநிறைவே என்று வாதிடுகிறது.

பிறப்பு, கல்வி.

வில்லியம் மில்லர் ஸ்காட்லாந்தின் வடகோடியில் கெய்த்னஸ் [Caithness] மாகாணத்தில் துர் ஸோ[Thurso] என்னும் ஊரில்ஜனவரி 13, 1838-ல் பிறந்தார். மில்லர் நார்வே கொடிவழியினர் என்றும், தன் குலம் பற்றிய பெருமிதம் வில்லியம் அவருக்கு இருந்தது என்றும் ஓ.கந்தசாமி குறிப்பிடுகிறார். குறிப்பாக கடற்கொள்ளையராக இருந்து பிடிபட்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசரால் தலை துண்டிக்கப்பட்ட தன் முன்னோர் ஒருவரைப்பற்றி ஊக்கத்துடன் வில்லியம் மில்லர் பேசுவார் என ஓ.கந்தசாமி நினைவுகூர்கிறார். நார்ஸ்மென் என்று சொல்லப்பட்டு நார்மன் எனச் சுருங்கிய தன் கொடிவழி பற்றிச் சொல்லும் வில்லியம் மில்லர் "கெல்ட் இனத்தவர் கனவு காண்பர், சாக்ஸன்கள் தூங்குவர், நார்மன்கள் உழைப்பார்கள்’ என்று ஓர் உரையில் வேடிக்கையாகச் சொன்னதைகந்தசாமி குறிப்பிடுகிறார்

மில்லர் ஊழியர்களுடன்

தன் மரபிலிருந்து சாகசத்தன்மையை பெற்றுக்கொண்டதாக வில்லியம் மில்லர் சொல்வதுண்டு. வில்லியம் மோரிஸ் என்னும் ஆங்கிலக் கவிஞர் [William Morris] எழுதிய Sigurd The Volsung என்னும் கவிதை பிரிட்டிஷ் இலக்கியத்தில் ஓர் உச்சம் என்று வில்லியம் மில்லர் கருதினார். தம்புசெட்டித் தெருவில் இருந்த எஸ்பிளனேட் முனையில் நிகழ்ந்த ஓர் இலக்கியக்கூட்டத்தில் வில்லியம் மில்லர் அக்கவிதையை மிகுந்த உணர்ச்சிவேகத்துடன் சொன்னார் என கந்தசாமி நினைவுகூர்கிறார். வில்லியம் மோரிஸின் உயிர்த்துடிப்பு நார்ஸ் இனத்தவருக்கு அணியாக அமைவது என்று கருதிய வில்லியம் மில்லர் அது தன்னுடைய இலட்சிய வாழ்க்கைச் சித்திரம் என்று எண்ணினார்.

வில்லியம் மில்லர் அபெர்தீன் பல்கலையிலும் (Aberdeen University) எடின்பரோ பல்கலையிலும் (Edinburgh University) பயின்றார்.

கல்விப்பணிகள்

மில்லர் இளமையில்

வில்லியம் மில்லர் தன் இருபதாம் அகவையிலேயே சீர்திருத்த கிறிஸ்தவச் சபையின் ஊழியராக ஆகிவிட்டிருந்தார். தன் சொந்த ஊரில் பல புகழ்பெற்ற சொற்பொழிவுகளை அவர் செய்தார். சென்னையில் ஜான் ஆண்டர்சன் தொடங்கிய கிறிஸ்தவசேவை – கல்விப்பணியில் தொய்வு ஏற்பட்டபோது அவருக்கு டாக்டர் கேண்ட்லிஷ் என்பவர் இளைஞரான மில்லரை பரிந்துரைத்தார். அவ்வாறுதான் வில்லியம் மில்லர் 1862-ல் ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து அமைப்பின் (Free Church of Scotland) மதப்பரப்புநராக தன் 24-வது வயதில் இந்தியாவுக்கு வந்தார். வில்லியம் மில்லர் தொடக்கத்தில் தெருமுனைப்பிரச்சாரம், மருத்துவப்பணிகள் ஆகியவற்றை மேற்கொண்டார்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி

சென்னையின் சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை ஏற்கனவே ஜெனரல் அசெம்ப்ளி ஸ்கூல் (General Assembly School) என்றபேரில் ஒரு பள்ளியை நடத்தி வந்தது. அது ஏப்ரல் 3, 1837 அன்று ஜான் ஆண்டர்ஸன் (John Anderson) என்னும் ஸ்காட்லாந்து மதப்பரப்புநரால் உருவாக்கப்பட்டது. சென்னையில் ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து அமைப்பின் நிறுவனராக இருந்தவர் ஜான் ஆண்டர்ஸன். மில்லரின் முயற்சியால் 1864-ல் எஃப் ஏ (First examination in Arts) தேர்வுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1865-ல் ஆறு மாணவர்கள் பள்ளிநிறைவு தேர்வுக்கான வகுப்புகளுக்காக சேர்ந்தனர். 1867-ல் பி.ஏ வகுப்புகள் தொடங்கின. ஆங்கிலிகன் ,வேல்ஸியன் ,பிரிஸ்பேனியன் மிஷன்கள் ஒன்றாக்கப்பட்டு ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனவரி 1, 1877-ல் இன்றைய மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் கல்விநிறுவனம் நடைமுறைக்கு வந்தது.

வில்லியம் மில்லர் தன் செல்வத்தாலும் தன் உடன்பிறந்தவரான அலக்ஸாண்டர் மில்லரின் (Alexander Miller) உதவியாலும் பலவகை நிதிக்கொடைகளாலும் கல்லூரிக்கான கட்டிடங்களை கட்டினார். தென்னிந்தியாவில் முதல்முறையாக தங்கிப்படிக்கும் விடுதிகளை வில்லியம் மில்லர் அமைத்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பலவகையான கலாச்சார, இலக்கிய அமைப்புக்களை உருவாக்கினார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் முதல்வராக வில்லியம் மில்லர் 45 ஆண்டுக்காலம் பணியாற்றினார். கௌரவ முதல்வராக மேலும் 16 ஆண்டுகள் பணியாற்றினார்.

பிற கல்விப்பணிகள்

வில்லியம் மில்லர் சென்னை மாகாண அரசு கல்விமுறையை திட்டமிடவும் பாடங்களை வகுக்கவும் முதன்மையான வழிகாட்டியாகத் திகழ்ந்தார். வில்லியம் மில்லர் சென்னை பல்கலைக் கழக சிண்டிக்கேட்டில் உறுப்பினராக இருந்தார்.

வில்லியம் மில்லர் 1901-ல் சென்னை பல்கலையின் துணைவேந்தராகப் பதவியேற்றார்

பொறுப்புகள்

வில்லியம் மில்லர் மெட்ராஸ் சட்டசபை (Madras Legislative Council) அமைப்பில் 1891 முதல் 1909 வரை தொடர்ச்சியாக நான்குமுறை உறுப்பினராக இருந்தார். (1893, 1895, 1899 மற்றும் 1902) ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்தின் மாடரேட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதுகள்/சிறப்புகள்

  • பிரித்தானிய மன்னர்/அரசி இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு [1]அளித்த கைசர்- இ- ஹிந்த்(உருது மொழியில் இந்தியாவின் மன்னர் என்று பொருள்படும்) உயரிய விருதைப் வில்லியம் மில்லர் பெற்றார்.
  • சென்னைப் பல்கலைக்கழகம் Legum Doctor' என்ற முனைவர் பட்டத்தை அளித்து கௌரவித்தது.
  • எடின்பரோ பல்கலைகழகம் அபெர்தீன் பல்கலைகழகம் ஆகியவையும் அவரை கௌரவித்தன.
  • 1926-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வில்லியம் மில்லர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுகள் தொடங்கப்பட்டன. இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலும் இருந்து பல புகழ் பெற்ற அறிஞர்கள் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளனர்.

இலக்கியப் பணிகள்

வில்லியம் மில்லர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து நடத்திய மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாகஸீன் (Madras Christian College Magazine) தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தது. இதில் பி.ஆர். ராஜம் ஐயர், அ. மாதவையா, கா.சி.வேங்கடரமணி , கிருபா சத்தியநாதன் உட்பட தமிழின் தொடக்ககால ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் எழுதினர். அந்த இதழைச்சார்ந்து உருவான வாசிப்பும் விவாதமும் அவர்களை தமிழிலும் எழுதச்செய்தது. தமிழ் தலித் இயக்கத்தின் முன்னோடிகளான எம்.சி.ராஜா எம்.சி.மதுரைப் பிள்ளை போன்றவர்கள் மில்லரின் அன்புக்குரிய மாணவர்கள்.

மறைவு

1907-ல் வில்லியம் மில்லர் உடல்நலம் குன்றி, கண்பார்வை பாதிக்கப்பட்டு ஸ்காட்லாந்தில் எடின்பரோவுக்கு திரும்பிச்சென்றார். ஜூலை 1923-ல் தன் எண்பத்தைந்தாம் வயதில் மறைந்தார்.

மில்லர் ஓவியம்

வாழ்க்கை வரலாறு,நினைவகம்

  • வில்லியம் மில்லர் அ. மாதவையா எழுதிய தமிழின் இரண்டாவது நாவலான பத்மாவதி சரித்திரத்தில் தன்பெயரில் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.
  • டாக்டர் வில்லியம் மில்லர் (Dr. William Miller )என்னும் வாழ்க்கை வரலாறு ஓ.கந்தசாமி என்னும் (O.Kandaswami Chetty) அவருடைய மாணவரால் 1924-ல் எழுதப்பட்டது. இது யோ ஞானசந்திர ஜான்சனால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • ஜோஷுவா கல்பாத்தி (Joshua Kalapati) மற்றும் அம்புரோஸ் ஜெயசேகரன் (Ambrose Jeyasekaran) எழுதிய Life and Legacy of Madras Christian College என்னும் நூலிலும் வில்லியம் மில்லர் நினைவுகூரப்படுகிறார்.
  • வில்லியம் மில்லரின் சிலை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் உள்ளது.
  • சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் நூலகம் 'வில்லியம் மில்லர் நினைவு நூலகம் (Miller Memorial Library) என்று அழைக்கப்படுகிறது.

இறையியல்

வில்லியம் மில்லர் தொடர்ச்சியாக இறையியல் விவாதங்களில் ஈடுபட்டு வந்தார். கிறிஸ்தவத்தின் பாவமீட்பு கொள்கையை இந்திய ஆன்மிகச்சிந்தனைகளுடன் விரிவுபடுத்தி ஆன்மநிறைவுக்கொள்கையை உருவாக்கினார் வில்லியம் மில்லர் . அதைச்சார்ந்து எழுதினார். மீட்பு என்பது ஓர் ஆன்மா பிறவியிலேயே உணரும் நிறைவின்மையை அகற்றிக்கொள்வது, அகநிறைவை அடைவது என வில்லியம் மில்லர் வாதிட்டார். அன்றைய இறையியலாளர் நடுவே ஆதிக்கம் சார்ந்த மதமாற்றம் சார்ந்தும், அகமாற்றத்தின் விளைவான மதமாற்றம் சார்ந்தும் இரண்டு தரப்புகள் இருந்தன. வில்லியம் மில்லர் ஆடம்பரம், ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து கிறிஸ்தவ எளிமை என்னும் கருத்தை முன்வைப்பவராக இருந்தார்.

வில்லியம் மில்லர் தன் கடைசிக்காலக் கடிதங்கள் ஒன்றில் ஒரு கவிதையை மேற்கோள்காட்டி எழுதினார்

நம்மைப்போன்றதே அதன் வெளித்தோற்றம்
அதன் தலையோ உண்மையானது,
செல்வம் மிக்க ஆடைகள், பல ஆடம்பரங்கள்,
அதன் செயல் ஊக்கம் கொண்டிருந்தது.
பருத்த கைகள், எலும்புகள் ஒவ்வொன்றும் உறுதியானவை.
ஆனால் ஐயகோ அதன் உள்ளம் கல்லால் ஆனது.
ஆகவே அது உயிர்வாழமுடியவில்லை.

வில்லியம் மில்லர் எழுதினார் "இக்கவிதையின் மையக்கருத்தை மனதில்கொண்டு வரலாற்றுப் பாடங்களை கற்று அறிந்து நாம் செயல்படவேண்டும் . இந்தியா போன்ற பெரிய மக்கள்கூட்டத்திற்கும் இது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இந்தச் சமுதாயத்தில் வாழும் பலரின் உள்ளம் கல்லாகக் காணப்படுகின்றது. இத்தகைய கல்லுள்ளங்கள் மாறினால்தான் முன்னேற்றங்கள் ஏற்படும்" இவ்வரிகளில் அவருடைய ஆன்மிக நோக்கு வெளிப்படுகிறது.

விமர்சனங்கள்

வில்லியம் மில்லர் தலித் மக்களுக்கு எதிரான பார்வை கொண்டிருந்தார் என்று பிற்கால ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வில்லியம் மில்லர் தலித் மக்கள் இந்தியாவின் உண்மையான குடிமக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் (Separate from true inhabitants) என்று கருதினார், உயர்குடி மக்களை கல்வியின் வழியாக மதமாற்றம் செய்வதே உகந்தது என்னும் கொள்கை கொண்டிருந்தார், ஆகவே தலித் மக்களுக்கு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இடமளிக்க வில்லியம் மில்லர் மறுத்தார் என்று கூறப்படுகிறது. வில்லியம் மில்லர் மாணவர் விடுதிகளை சாதியடிப்படையில் தனித்தனியாக ஆரம்பித்தார். 1882-ல் ஆரம்பிக்கப்பட்ட முதல் மாணவர் தங்கும் விடுதி பிராமணர்கள் அல்லது வைணவர்களுக்கு மட்டுமே என்ற விதிக்குட்பட்டது. 1888-ல் கிறிஸ்தவ மாணவர்களுக்கென்று தனியே விடுதி அமைக்கப்பட்டது. அதிலும் தலித் மாணவர்கள் மிகக்குறைவாகவே இருந்தனர் என்கிறார்கள் இத்தரப்பினர். ஆய்வாளர் ரூபா விஸ்வநாத் எழுதிய The Pariah Problem: Caste, Religion and The Social in Modern India , தயானந்தன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரை, ரவி வைத்தீஸ் எழுதிய Religion, Caste, and Nation in South India: Maraimalai Adigal, the Neo-Saivite Movement and Tamil Nationalism 1876-1950 ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு அரவிந்தன் கண்ணையன் எழுதிய கட்டுரையில் இதை விரிவாக ஆராய்கிறார்[2]

வில்லியம் மில்லர் கிறிஸ்தவக் கல்லூரியின் பாடத்திட்டம் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும் என்று கருதினாலும் கிறிஸ்தவக் கல்லூரியின் செயல்பாடுகள் அவ்வாறு இருக்கவில்லை என்றும் , வில்லியம் மில்லர் சைவசமயவாதிகளுக்கு கிறிஸ்தவக் கல்லூரியில் முதன்மை இடம் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஏப்ரல் 1888-ல் ஒரு பிராமண மாணவன் கிறிஸ்தவக் கல்லூரியில் அவனுடைய பெற்றோரின் விருப்பம் இல்லாமல் மதமாற்றம் செய்யப்பட்டான் என்ற குற்றச்சாட்டு பரவி தேசியவாதிகளிடையே கடுமையான கண்டனத்தை உருவாக்கியது. இந்து நாளிதழ் போன்றவை கண்டனக்குறிப்புகளை வெளியிட்டன.

பண்பாட்டு இடம்

கல்வியாளர் எனும் வகையில் வில்லியம் மில்லர் தமிழ் பண்பாட்டின் நவீனமயமாதலை தொடங்கி வைத்தவர்களில் ஒருவர். தமிழின் முதன்மையான பல சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் அவரிடமிருந்து தொடங்கியவர்கள். சுந்தந்திர ஜனநாயக சிந்தனைகள் உருவாகவும், நவீன இலக்கிய ரசனை உருவாகவும் முன்முயற்சி எடுத்தவர் இந்து, கிறித்தவ மதங்கள் நடுவே தத்துவ உரையாடல் ஒன்றை தொடங்கி வைத்தவர்.

நூல்கள்

  • Scottish Missions in India, 1868
  • Indian Mission and How to View Them, 1878
  • Lectures for Educated Hindus, 1880
  • The Christian College for Madras, a printed memorandum to the Free Church Foreign Mission Committee (FCFMC), 1874
  • Our Scandinavian Forefathers
  • The Least of All Lands: The Topography of Palestine
  • Gideon
  • The Plan of History
  • Christianity and Education in South India
  • Shakespeare's Coriolanus and Present Day Indian Politics

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. The Kaisar-i-Hind Medal for Public Service in India was a medal awarded by the Emperor/Empress of India between 1900 and 1947, to "any person without distinction of race, occupation, position, or sex ... who shall have distinguished himself (or herself) by important and useful service in the advancement of the public interest in India.
  2. https://contrarianworld.blogspot.com/2022/03/blog-post.html

[[]] ‎


✅Finalised Page