ஜிஃப்ரி ஹாசன்
ஜிஃப்ரி ஹாசன் (பிறப்பு: ஜனவரி 9, 1983) ஈழத்துத் தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இலங்கை தமிழ் முஸ்லிம்களின் வரலாறு, பண்பாட்டு மரபுகள், சூஃபி மெய்யியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரபுத் தூய்மைவாத மைய இஸ்லாமிய இயக்கச் செயல்பாடுகளுக்கு எதிராக உள்ளூர் முஸ்லிம் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை முன்வைத்து பண்பாட்டுக் கட்டுரைகள், சிங்கள இலக்கிய சூழல் சார்ந்த கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
ஜிஃப்ரி ஹாசன் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை நகரத்தில் அபுல் ஹாசன், ஆமினா உம்மா இணையருக்கு ஜனவரி 9, 1983-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு சகோதரர்கள், இரு சகோதரிகள்.
ஜிஃப்ரி ஹாசன் மட்/ தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வி பயின்றார். மட்/ வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியில் இரண்டாம் நிலைக் கல்வி பயின்றார். இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் இளங்கலை சிறப்பு பட்டம் பெற்றார். இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இலங்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் கல்வியலில் பட்டயம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஜிஃப்ரி ஹாசன் பாத்திமா றிஸ்மினை அக்டோபர் 27, 2010-ல் மணந்தார். பிள்ளைகள் ஹயா ஹனீனா, ஹயாம் ஹாஸன், அலீனா ஹைஸம். ஜிஃப்ரி ஹாசன் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
இதழியல்
ஜிஃப்ரி ஹாசன் பள்ளிக்காலத்தில் 'கிழக்கருவி' என்ற பத்திரிகையை வெளியிட்டார். 'புதிய தொனி' என்ற இதழின் இணையாசிரியராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஜிஃப்ரி ஹாசனின் முதல் படைப்பு 'வரம்' என்ற கவிதை இலங்கையின் 'நவமணி' என்ற பத்திரிகையில் 2000-ல் வெளியானது. இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் 'அரசியல் பௌத்தம்' என்ற நூலை 2009-ல் எழுதினார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'போர்க்குணம் கொண்ட ஆடுகள்' 2017-ல் வெளியானது. ஜிஃப்ரி ஹாசனின் படைப்புகள் சொல்வனம், அகழ், வனம், கதவு, அம்ருதா, தமிழினி, தாய்வீடு, எழுநா ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஜிஃப்ரி ஹாசன் சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்புகள், இலங்கை தமிழ் முஸ்லிம்களின் வரலாறு, பண்பாட்டு மரபுகள், சூஃபி மெய்யியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரபுத் தூய்மைவாத மைய இஸ்லாமிய இயக்கச் செயல்பாடுகளுக்கு எதிராக உள்ளூர் முஸ்லிம் பண்பாட்டு மரபுகளை முன்வைத்து பண்பாட்டுக் கட்டுரைகள், ஆய்வுகள், சிங்கள இலக்கிய சூழல் தொடர்பான கட்டுரைகளையும் எழுதி வருகிறார். தன் ஆதர்ச எழுத்தாளர்களாக சுந்தர ராமசாமி, ஜெயமோகன், எஸ். பொன்னுத்துரை, ஷோபாசக்தி, இமையம், பாவண்ணன், எஸ்.ரா ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- விலங்கிடப்பட்டிருந்த நாட்கள் (2013)
சிறுகதைத் தொகுப்பு
- போர்க்குணம் கொண்ட ஆடுகள் (2017)
- அகாலத்தில் கரைந்த நிழல் (2022) (தமிழ்நாடு நன்னூல் பதிப்பகம்)
பிற
- அரசியல் பவுத்தம் (2009)
- விரியத் துவங்கும் வானம் (இலக்கிய கட்டுரைகள்)
- மூன்றாம் பாலினத்தின் நடனம் (2018, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு)
- எழுத்தின் தடம் (2023) (ஈழப்படைப்புகள் குறித்த விமர்சனக் கட்டுரைகள்)
இணைப்புகள்
- கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும் - ஜிஃப்ரி ஹாசன் - solvanam
- மத்தியாசியாவில் ஜொராஸ்ட்ரியனிசமும் இஸ்லாமும் ஆண்ட்ரூ டி. மேக்னுஸன் உடன் ஓர் உரையாடல்
- ஜிஃப்ரி ஹாசனின் கரைந்த நிழல்களை முன்னிறுத்தி : தாட்சாயணி
- மார்ட்டின் விக்ரமசிங்கவின் கலை: ஜிஃப்ரி ஹாஸன் - நவீன சிங்கள இலக்கியமும் சிந்தனையும்
- ஜிஃப்ரி ஹாஸன் கட்டுரைகள் - அகழ் மின்னிதழ்
- இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் - இன மரபும் பண்பாட்டுச் சமூகவியலும் - எழுநா
- மதமும் மரபினமும் - ஜிஃப்ரி ஹாசன் - எழுநா
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Jun-2024, 09:09:13 IST