under review

எஸ். பொன்னுத்துரை

From Tamil Wiki
எஸ். பொன்னுத்துரை
எஸ். பொன்னுத்துரை

எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ) (மே 24, 1932 - நவம்பர் 26, 2014) ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவர். இதழாசிரியர், பதிப்பாசிரியர். ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் இலங்கையிலும், நைஜீரியாவிலும் பணியாற்றினார். புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தார். அவரது படைப்புகளில் நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல், வரலாறு ஆகியவை அடங்கும். ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு எதிராக உணர்வுகளையும், அழகியலையும் முன்வைக்கும் நற்போக்கு இலக்கியத்தை ஆரம்பித்து புதிய படைப்பாளிகள் நடுவே அலைகளை உருவாக்கினார்.

தனி வாழ்க்கை

எஸ். பொன்னுத்துரை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூரில் பண்டாரக்குளம் பகுதியில் மே 24, 1932-ல் பிறந்தார். தந்தை சண்முகம். தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார்.

எஸ். பொன்னுத்துரை ஈஸ்பரம் என்பவரை தன் இருபத்து நான்காம் வயதில் திருமணம் செய்துகொண்டார். ஈஸ்பரம் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களது பிள்ளைகள் மேகலா, அநுர, மித்ர, புத்ர, இந்ர. மகன் மித்ர (மித்திரா) அர்ச்சுனா என்ற பெயரில் கடற்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஈழப்போரில் பங்குபெற்றார், 1986-ல் மரணமடைந்தார். மகன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். புத்ர ஒரு விபத்தில் மரணமடைந்தார். பொன்னுத்துரை 1989-ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புலம் பெயர்ந்தார். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றார்.

ஆசிரியப்பணி

எஸ். பொன்னுத்துரை

பொன்னுத்துரை 1956-ல் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து இலங்கை மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். இங்கு ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றினார். 1982-ல் ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் ஆசிரியராகவும், ஆங்கில மொழியியல் துறையின் தலைவராகவும், பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இதழியல்

  • கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய 'இளம்பிறை' இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் பொன்னுத்துரை.
  • ஆஸ்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த 'அக்கினிக்குஞ்சு' என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார்.

பதிப்பியல்

பொன்னுத்துரை சென்னையில் ’மித்ர’ பதிப்பகத்தின் மூலம் நூல்களை வெளியிட்டார்.

நாடக வாழ்க்கை

பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறின. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ்.பொன்னுத்துரை

எஸ். பொன்னுத்துரை தன் மூத்த சகோதரர் தம்பையா நடத்திய 'ஞானோதயம்' என்ற கையெழுத்து இதழில் 1940 முதல் எழுத ஆரம்பித்தார். 1947 முதல் த. ராஜகோபால் மூலம் தீவிர இலக்கியம் அறிமுகமானது. 'புரட்சிப்பித்தன்', 'பழமைதாசன்' போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார். இவரின் முதல் கவிதை வீரகேசரியில் வெளியானது. முதல் சிறுகதை 1948-ல் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான 'காதல்', பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய இதழ்களிலும் எழுதினார். இலங்கையில் பல மூத்த எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழகத்தின் பாதிப்பினால் தமது கதைகளின் பின்புலமாக மெரீனா பீச்சையும் மவுண்ட் ரோட்டையும் மையமாகக் கொண்டிருந்தபொழுது, ஈழத்து மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டார். முழுமையான கற்பனாவாதத்தை தவிர்த்து யதார்த்த இலக்கிய மரபினைத் தோற்றுவித்து சிறுகதையில், உருவம், உள்ளடக்கம் உத்திகள் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களில் ஒருவர்.

சி. ரவீந்திரன், ராமானுஜம், எஸ். பொ, இளங்கோவன் (நன்றி: மு.அ.மு.முர்சித்)

எஸ். பொன்னுத்துரை சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகியவை எழுதினார். இவர் எழுதிய முதல் நாவல் 'தீ' ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய வ. விஜயபாஸ்கரனின் முயற்சியால் இந்நூல் வெளியானது. எஸ்.பொவின் இரு கட்டுரை நூல்கள் முக்கியமானவை. 'நனவிடைதோய்தல்' என்ற நூல் யாழ்ப்பாணத்தின் அக்கால வாழ்க்கையை நுணுக்கமான தகவல்கள் வழியாக சித்தரிப்பது. ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்லும் சுயசரிதையான ‘வரலாற்றில் வாழ்தல்’ ஓர் ஆவணக்களஞ்சியமாகக் கருதப்படுகிறது,

'சடங்கு', 'தீ', 'ஆண்மை', 'வீ', 'நனைவிடைதோய்தல்', 'இனி ஒரு விதி செய்வோம்' எனப் பல நாவல்களை எழுதினார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் 'தீதும் நன்றும் பிறர்தர வரா' என்ற தலைப்பில் 2007-ல் நூலாக வெளியானது. இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய நூல் 'இனி ஒரு விதி செய்வோம். 1924 பக்கங்களில் 'வரலாற்றில் வாழ்தல்' என்ற தமது தன்வரலாற்று நூலையும் எழுதினார்.

நற்போக்கு

ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்திற்கு மாற்றாக 'நற்போக்கு' எழுத்தை புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அறிமுகப்படுத்தினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960-களில் அதிலிருந்து விலகி 'நற்போக்கு'அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ.அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.

மொழிபெயர்ப்பு

எஸ். பொன்னுத்துரை ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால'(Xala) என்ற குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் கூகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் 'Weep Not Child' என்ற நாவலை தமிழில் 'தேம்பி அழாதே பாப்பா' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

மறைவு

எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014-ல் ஆஸ்திரேலியாவில் சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்.

விருதுகள்

  • 2010-ல் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

எஸ்.பொன்னுத்துரைக்கு இயல் விருதை ஜெயமோகன் வழங்குகிறார்

”எஸ்.பொவின் முதன்மையான ஆக்கம் என்பது மெல்லிய கேலியுடன் யாழ்ப்பாணத்து நடுத்தர வாழ்க்கையைப் பார்க்கும் 'சடங்கு' என்ற குறுநாவல்தான். தனிமனித வாதத்தைத் தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலைநிறுத்த முயன்ற படைப்பாளி.

ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ களைக் கொண்டு அடித்து நொறுக்கப்பட்டன. மறுபக்கமாக ஒலித்த குரல் மு.தளையசிங்கத்துடையது. ஆனால் அவர் விரைவிலேயே இலக்கியத்தில் இருந்து விலகி சர்வோதயம், தீண்டாமை ஒழிப்பு, ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். அத்தருணத்தில் எழுந்த படைப்பாளியின் குரல் என எஸ்.பொவை சொல்லலாம். இடதுசாரிகள் இலக்கியத்தை அரசியல்பிரச்சாரமாக ஆக்க முயன்றதற்கும் அவர்களின் அரசியல்சரி சார்ந்த ‘ரேஷன்கார்டு விமர்சனத்துக்கும்’ எதிராக எஸ்.பொ தீவிரமாகப் பேசினார். புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அலைகளை உருவாக்கினார்.” என ஜெயமோகன் எஸ்.பொன்னுத்துரையை மதிப்பிடுகிறார்.

”எஸ். பொன்னுத்துரை 1960-களில் ஈழத்து இலக்கிய உலகில் தீவிரமான இயக்கம் கொண்டிருந்தார். தமிழ் மொழிச் சொல்லாடல்களில் ஒரு புதுமையை வேண்டி நின்றார். அதில் வெற்றியும் பெற்றார். டானியல், டொமினிக் ஜீவா போன்ற சமகாலப் படைப்பாளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நடையை, கதை சொல்லலை, இலக்கிய உணர்திறனை, அலங்காரம் சார்ந்த எழுத்து நடையை, மொழிதலை தனக்கென வரித்துக் கொண்டார்.” என தெ. மதுசூதனன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 2010-ல் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

மறைவு

எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014-ல் ஆஸ்திரேலியாவில் சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்.

நூல் பட்டியல்

நாவல்
  • தீ
  • சடங்கு
சிறுகதைத் தொகுப்பு
  • வீ
  • ஆண்மை
பிற
  • அப்பையா
  • எஸ்.பொ கதைகள்
  • கீதை நிழலில்
  • அப்பாவும் மகனும்
  • வலை + முள்
  • பூ
  • தேடல்
  • முறுவல்
  • இஸ்லாமும் தமிழும்
  • பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
  • மத்தாப்பு + சதுரங்கம்
  • ?
  • நனவிடை தோய்தல்
  • நீலாவணன் நினைவுகள்
  • இனி ஒரு விதி செய்வோம்
  • வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
  • ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
  • மாயினி
  • மணிமகுடம்
  • தீதும் நன்றும்
  • காந்தீயக் கதைகள்
  • காந்தி தரிசனம்
  • மகாவம்ச (மொழிபெயர்ப்பு)
  • நற்போக்கு இலக்கியம்

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jul-2024, 21:40:06 IST