under review

சுந்தர சண்முகனார்

From Tamil Wiki
சுந்தர சண்முகனார்

சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922, அக்டோபர் 30, 1997), தமிழில் புதிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர், கவிஞர், எழுத்தாளர்.தமிழில் பண்பாட்டு ஆய்வுகளைத் தொடங்கி வைத்த முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

கடலூர் மாவட்டத்திலுள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் சிற்றூரில், ஜூலை13, 1922-ல் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சண்முகம். தன் தந்தையாரின் பெயரான சுந்தரம் என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு சுந்தர சண்முகம் ஆனார்.

சுந்தர சண்முகனார் கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தூய வளனார் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். அதேவேளையில் திருப்பாதிரிப்புலியயூர் சிவத்திரு ஞானியார் மடலாயத்தில் ஐந்தாம் பட்டத்து அடிகளுக்கு மாணவராகச் சேர்ந்தார். அவ்வடிகளின் அறிவுரையின்படி 1936-ம் ஆண்டில் தனது பதினான்காம் அகவையில் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் சேர்ந்தார். 1939-ம் ஆண்டில் வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர் தனியே படித்து இடைநிலை வகுப்பையும் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.

1952-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார்.தமிழக பொதுக்கல்வித்துறை நடத்திய முதியோர் இலக்கியப்பண்ணைச் சான்றிதழ், சென்னை சைவ சிந்தாந்தப் பெருமன்றத்தின் சைவ சித்தாந்தச் சான்றிதழ், தருமபுர ஆதீனம் வழங்கிய சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ், புதுச்சேரி பிரஞ்சு இன்ஸ்டிடியூட் வழங்கிய பிரஞ்சு பட்டயம் போன்ற கல்விச் சான்றிதழ்களையும் பெற்றார் .

கெடிலக்கரை நாகரீகம்

தனிவாழ்க்கை

சுந்தர சண்முகனார் மே 26,1944-ல்தனது இருபத்திரண்டாவது வயதில் விருத்தாம்பிகை அம்மையாரை மணந்தார். மகன்சு ச. அறவணன், மகள்அங்கயற்கண்ணி.

1940-ல் ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தனது பதினெட்டாம் வயதில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். 1946-ல் கல்லூரியின் துணை முதல்வராகப் பணியாற்றிய நிலையில் தனக்கு ஏற்பட்ட மூளைக்கட்டியின் (Brain Tumor ) காரணமாகப் பணியிலிருந்து விலகினார்.

1947-ல் புதுச்சேரியில் தன் மனைவியின் சகோதரி கணவர் சிங்கார குமரேசன் உதவியுடன் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் 1997-ம் ஆண்டு வரை செயல்பட்டது.

1948-லிருந்து 1958 -ம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1958-1980 ஆண்டுகளில் புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.

தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982-ம் ஆண்டில் அழைப்புவிடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய் காரணமாக 1983-ம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப்பணிகளில் ஈடுபட்டார்

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராகப் பணியாற்றினார்.

இலக்கியப் பங்களிப்பு

1949-ல் தொடங்கி சில ஆண்டுகள் திருக்குறள் தெளிவு என்னும் மாதமிருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறள்கள் சிலவற்றிற்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார். இவ்வுரை இதழ்கள் தொகுக்கப்பட்டு 1963-ல் வள்ளுவர் இல்லம் என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இவ்விதழில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கள் பேறு ஆகிய மூன்று அதிகாரங்களில் உள்ள முப்பது குறட்பாக்களுக்கு எழுதிய ஆராய்ச்சி விரிவுரைகள் முழுமையாக பேராசிரியர் சு. ச. அறவணனால் தொகுக்கப்பட்டு 2004-ல்வள்ளுவர் கண்ட மனையறம் என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. 1958-ல் தொடங்கி சில ஆண்டுகள் தெவிட்டாத திருக்குறள் என்னும் மாதமிருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறளின் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்னும் வைப்புமுறையில் ஒவ்வொரு பாலிலும் உள்ள சில குறள்களுக்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார். அவ்வாறு எழுத்தப்பட்ட உரைகளில் 51 குறள்களுக்கான உரைகளைத் தொகுத்து 1991-ல் ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் என்னும் நூலாக வெளியிட்டார்.1966-ல் திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பின் வழியே திருக்குறள், யாப்பிலக்கண வகுப்புகளை நடத்தினார். அவ்வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.1949-ல் திருச்சி வானொலி நிலையத்தில் குற்றாலக் குறவஞ்சி என்ற நிகழ்ச்சியின் பெயரில் இலக்கியப் பேருரை ஆற்றினார்.

பல அறிஞர் பெருமக்களுடன் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். பாரதிதாச னுடன் நெருங்கிப் பழகிய இவர், அவரோடு இணைந்து பல ஆண்டுகள் என்னும் நூலை எழுதியுள்ளார்.

சுந்தர சண்முகனார்

இலக்கிய இடம்

சுந்தர சண்முகனார் முன்னோடி தமிழறிஞர்களில் ஒருவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். 1980-ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, நூல்கள் எழுதும் பணியைத் தொடர்ந்தார். 1985-க்குள் தமிழ் அகராதிக்கலை, கெடிலக்கரை நாகரிகம், தமிழ் இலத்தீன் பாலம், தமிழ் நூல் தொகுப்புக்கலை முதலிய நூல்களை எழுதி வெளியிட்டுத் தமிழ் அறிவுலகில் புகழ் பெற்றார்.

இவருடைய நூல்கள் தமிழக அரசால் 2010-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சுந்தர சண்முகனார் நினைவாக இவருடைய மாணாக்கர்கள் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இவருடைய நூல்களில் கெடிலக்கரை நாகரீகம் முதன்மையானது. ஓர் ஆற்றை முன்வைத்து வரலாற்றைக் குறுக்குவெட்டாக ஆராயும் இந்நூல் முன்னோடியான முயற்சி.

நினைவு நூல்கள்

சுந்தர சண்முகனாரின் மாணாக்கர்களும், மகன் சு.ச. அறவணனும் இணைந்து சுந்தர சண்முகனார் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி புதுச்சேரியில் திங்கள்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சுந்தர சண்முகனார் நினைவுக் குறுந்தகடு ஒன்றினை நம்பர் 12, 2009-ல் இந்த அறக்கட்டளையினர் புதுச்சேரியில் வெளியிட்டனர்.

மறைவு

1946-ம் ஆண்டிலிருந்து மூளைக்கட்டி நோயால் அவதிப்பட்டார். அக்டோபர் 30, 1997 அன்று புதுச்சேரியில் காலமானார்.

விருதுகள்

  • புதுவைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய செந்தமிழ்ச் செம்மல் விருது
  • தமிழ்நூல் தொகுப்புக் கலை வெளியீட்டுவிழாவில் அன்றைய புதுவை ஆளுநரைக்கொண்டு திரு. கு. கா. இராசமாணிக்கம் வழங்கிய புதுப்படைப்புக் கலைஞர் விருது (1972)
  • திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலயம் வழங்கிய ஆராய்ச்சி அறிஞர் பட்டம்.
  • சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழ்ச் சான்றோர் விருது
  • தமிழக அரசு வழங்கிய திருக்குறள் நெறித்தென்றல் விருது
  • 'தமிழ் அகராதிகலை’ நூலுக்கு தமிழக அரசின் விருது.
  • 'பணக்காரர் ஆகும் வழி’ நூலுக்கு மத்திய அரசின் பரிசு.

படைப்புகள்

சுந்தர சண்முகனார் நூல்கள்[1]

உரைநூல்கள்
  • திருக்குறள் தெளிவுரை -1 (1948)
  • திருக்குறள் தெளிவுரை -2 (1948)
  • திருக்குறள் தெளிவுரை -3 (1949)
  • சிறுவர் செய்யுட்கோவை (1949)
  • முதுமொழிக் காஞ்சி உரை (1991)
  • திருக்குறள் தெளிவு (1966)
  • நாலடியார் நயவுரை (1970)
  • திருமுருகாற்றுப்படை தெளிவுரை (1973)
  • இனியவை நாற்பது இனியவுரை (1987)
  • நன்னெறி நயவுரை (1989)
  • முதுமொழிக்காஞ்சி உரை (1991)
  • நல்வழி உரை (1993)
  • எழுத்தாளர் துணைவன் (1954)
வாழ்வியல் நூல்கள்
  • வீடும் விளக்கும் (1947)
  • வாழ்க்கை ஓவியம் (1950)
  • வாழும் வழி (1962)
  • இன்ப வாழ்வு (1964)
கவிதை நூல்கள்
  • குழந்தைப்பாட்டு (1948)
  • தனித்தமிழ் கிளர்ச்சி (1948)
  • தமிழ்த்திருநாள் அல்லது பொங்கல்வாழ்த்து கீர்த்தனைகள் (1948)
  • செந்தமிழாற்றுப்படை (1951)
  • அண்ணா நாற்பது (1969)
  • புத்தர் பொன்மொழி நூறு (1986)
  • கௌதம புத்தர் காப்பியம் (1986)
வரலாறு
  • காந்தியின் நாகரிகம் (1948)
சிறுகதைகள்
  • ஆத்திசூடி அமிழ்தம் (1948)
திறனாய்வு
  • வள்ளுவர் கண்ட மனையறம் (1957)
  • வள்ளுவர் இல்லம் (1963)
  • பணக்காரர் ஆகும் வழி (1964)
  • சுந்தர காண்டச் சுரங்கம் (1989)
  • அயோத்யா காண்ட ஆழ்கடல் (1990)
  • ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் (1991)
  • பாலகாண்டப் பைம்பொழில் (1991)
  • கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (1992)
  • சிலம்போ சிலம்பு-தித்திக்கும் திறனாய்வு (1992)
புதினம்
  • மலர் மரணம் (1961)
  • தெய்வீகத் திருமணம் (1990)
கல்வி
  • தமிழர் கண்ட கல்வி (1964)
  • தமிழ் இலத்தீன் பாலம் (1970)
  • தொண்ணுறும் தொள்ளாயிரமும் (1971)
  • உலகு உய்ய (1987)
  • சுந்தர காண்டச் சூறாவளி (1990)
ஆய்வுக் கட்டுரைகள்
  • தைத்திங்கள் (1972)
  • கருத்துக் கண்காட்சி (1988)
  • இலக்கியத்தில் வேங்கடவேலன் (1988)
  • உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு (1988)
  • தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு (1988)
  • மக்கள் குழு ஒப்பந்தம் (1989)
  • மருந்தாகித் தப்பா மரஇனப்பெயர்கள்: மர இனப் பெயர்த்தொகுதி-1 (1989)
  • மர இனப்பெயர் வைப்புக்கலை: மரஇனப் பெயர்த்தொகுதி-2 (1990)
  • மாதவம் புரிவாள்:மர இனப் பெயர்த்தொகுதி-3 (1991)
  • இயல் தமிழ் இன்பம் (1992)
  • மனத்தின் தோற்றம் (1992)
  • தமிழ் அங்காடி (1993)
பண்பாடு
அகராதி
  • History of Tamil lexicography (1967)
  • தமிழ் நூல் தொகுப்புக் கலை (1972)
  • தமிழ் நூல் தொகுப்புக் கலைக்களஞ்சியம் (1990)
வாழ்க்கை வரலாறு
  • புலிசை ஞானியார் அடிகளார் (1973)
  • பாரதிதாசரோடு பல ஆண்டுகள் (1987)
  • ஞானியார் அடிகளார் (1993)
  • விளையும் பயிர் முளையிலே தெரியும் (1993)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page