under review

கெடிலக்கரை நாகரிகம்

From Tamil Wiki

To read the article in English: Kedilakkarai Naagarigam. ‎

கெடிலம்

பேராசிரியர் புலவர் சுந்தர சண்முகனார் எழுதிய பண்பாட்டு வரலாற்று ஆய்வுநூல். 1975-ல் இந்த நூல் வெளிவந்தது. இன்றைய விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கெடில ஆறு வளர்த்த நாகரிகம் பற்றிய மிகச்சிறந்த ஆவணமாக இந்த ஆய்வுநூல் இருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆசிரியர்

புலவர் சுந்தர சண்முகனார் பண்பாட்டு ஆய்வுகளைத் தொடங்கி வைத்த முன்னோடி. 1975-ல் தமிழ்ச் சூழலில் முறையாக எழுதப்பட்ட ஆய்வு நூல்.

பதிப்பு

அரிய ஆய்வு நூல்களை வெளியிட்ட பேராசிரியர் ச. மெய்யப்பனால் 1975-ல் கொண்டுவரப்பட்டது. பின்னர் இதன் மறுபதிப்பு டிசம்பர் 2001-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.

நூல்சுருக்கம்

கெடிலக்கரை நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை நாகரிகம் படிப்படியாக வளர்ந்து முதிர்ந்து நின்று நிலைத்து நிறைவுபெற்ற நிலை இந்த இந்நூலில் பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆற்றோரம் உள்ள ஊர்களையும், அது வளர்த்த நாகரிகங்கள் பற்றியும் இந்நூலில் பேசப்படுகிறது. இந்நூல் பல்வேறு சூழ்நிலைகளால் வெளியுலகிற்கு தெரியாதபடி அமைந்திருக்கும் இடங்களின் நாகரிகங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டுள்ளது

உருவாக்கம்

கெடில நதி வளர்த்த நாகரிகம் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. ஆசிரியர் சுந்தர சண்முகனார் ஆற்றோரத்தில் பயணம் செய்து நேரில் பார்த்த செய்திகளையும், வழிவழியாக வழங்கி வரும் செவி வழிச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். மிகச் சரியான திட்டத்துடன் ஆற்றோரத்தில் நீண்ட பயணம் செய்து பல ஆண்டுகள் உழைத்து வரலாற்றுக்காலம் முதல் பிரிட்டிஷ்காலனியாதிக்ககாலம் வரையிலான நிகழ்வுகளைக்கொண்டு கெடில நதி நாகரிகத்தின் தனிச்சிறப்புகளைத் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

நூல் பின்புலம்

கடலூர் மாவட்டத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாயும் ஆறும், அதன் சுற்றியுள்ள பகுதிகளும் இந்நூலில் கெடில நதிக்கரை எனப்படுகிறது. இந்நூலில் கெடில நாகரிகத்தைத் தெரிந்து கொள்ள உதவும் தொல்பொருள்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், கலைகள், பழக்கவழக்க பண்பாடுகள், வரலாற்றுக்கு குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் தொகுக்கப்பட்டது என புலவர் சுந்தர சண்முகனார் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மதிப்பீடு

புலவர் சுந்தர சண்முகனார் ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி அதன் பின்னணியின் இந்நூலை பண்பாட்டு ஆய்வு நூலாக எழுதியிருக்கிறார். இந்நூலில் 51 விளக்கப்படங்கள் உள்ளன. அதில் 9 படங்களை ' புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ' நிறுவனத்தால் அளிக்கப்பட்டவை. மீதமுள்ள அப்படங்கள் அவரே நேரில் சென்று ஆய்வு செய்து எடுத்தவை.ஒரு சிறு ஆற்றின் கரையிலுள்ள பண்பாட்டை கற்காலம் முதல் நிகழ்காலம் வரை நுட்பமாகச் சொல்லிச்செல்கிறது. கெடில ஆற்றின் இரு மருங்கிலும் உருவான நாகரிகம், அங்கு குடியேறிய மக்களின் தொழில்கள், சாதிப்பின்புலம், பழக்கவழக்கம் போன்றவற்றை தகுந்த ஆய்வுகளோடு ஒரு அடிப்படை செவ்விலக்கியத்திற்கு உள்ள கூறுகளுடன் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அந்ததந்த பகுதிகளுக்கான பண்பாட்டு ஆய்வுகளுக்கு ஒரு முன்னோடி நூல் எனலாம். புலவர் சுந்தர சண்முகனார் மிகத்தெளிவான நடையில் மிகையே இல்லாமல் வரலாற்றுச் சித்திரத்தை அறிவியல் நோக்குடன் அளித்திருக்கிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:46 IST