under review

சரளா இராசகோபாலன்

From Tamil Wiki
சரளா இராசகோபாலன் (படம் நன்றி: தி இந்து ஆங்கில இதழ்)

சரளா இராசகோபாலன் (முனைவர் சரளா இராசகோபாலன்; டாக்டர் சரளா இராசகோபாலன்) (பிறப்பு: ஜனவரி 21, 1942) தமிழ்ப் பேராசிரியர். ஆய்வாளர், கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அம்மா இலக்கிய விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

சரளா இராசகோபாலன், ஜனவரி 21, 1942 அன்று, சென்னையில், பூ. இராச வடிவேலு - உமைய பார்வதி இணையருக்குப் பிறந்தார். சென்னை சேத்துப்பட்டு சேவாசதனம் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை ராணி மேரி கல்லூரியில் புகுமுக வகுப்புப் பயின்றார். ராணி மேரிக் கல்லூரியில் பயின்று இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில், 'சங்க இலக்கியத்தில் தோழி' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, 1980-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சரளா இராசகோபாலன், 'மலையமான்' என்ற புனைபெயர் கொண்ட பேராசிரியர், முனைவர் நா. ராசகோபாலனை மணம் செய்துகொண்டார். மகள் தமிழொளி ;மகன் அன்பொளி.

கல்விப் பணிகள்

சரளா இராசகோபாலன், திருத்தராகத் தொடங்கி துணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராகச் சென்னை ராணி மேரி கல்லூரியில் பணியாற்றினார். தொடர்ந்து நந்தனம் அரசு கலைக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி, மதுரை மீனாட்சிக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மீண்டும் ராணி மேரிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 2000-த்தில் பணி ஓய்வு பெற்றார். பல மாணவர்களுக்கு இள முனைவர் மற்றும் முனைவர் பட்ட வழிகாட்டியாகச் செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சரளா இராசகோபாலன் நூலகங்களில் உள்ள நூல்களை வாசித்தும் தந்தை நடத்தி வந்த 'ஜனமித்திரன்', 'முன்னேற்றம்' இதழ்களை வாசித்தும் இலக்கிய ஆர்வம் பெற்றார். முன்சீப் வேதநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க. போன்றோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். சங்க இலக்கியக் கவிதைகளால் கவரப்பட்டார். சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இதழ்களிலும் மலர்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். சங்க இலக்கியங்களையும், கவிதைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல நூல்களின் திறனாய்வளராகச் செயல்பட்டார்.

திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கல்லாடம், பாரதி, பாரதிதாசன், வேதநாயகர் படைப்புகளை ஆய்வு செய்து பல்வேறு நூல்களை எழுதினார். சிறார்களுக்காகவும் சில நூல்களை எழுதினார். பெண்ணியச் சிந்தனைகள் குறித்தும் நூல் ஒன்றை எழுதினார். பொது வாசிப்புக்குரிய கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதினார். சரளா இராசகோபாலனின் நூல்களை அன்புப் பதிப்பகம் மற்றும் ஒளிப்பதிப்பகம் ஆகியன வெளியிட்டன. சரளா இராசகோபாலனின் நூல்கள் சில கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டன. சரளா இராசகோபாலன் இலக்கியம், திறனாய்வு, விமர்சனம், ஒப்பாய்வு, கவிதை, சிறுகதை, நாடகம் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

மேடையுரை

சரளா இராசகோபாலன், 150-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். கட்டுரைகள் சமர்ப்பித்தார். பல்வேறு அமைப்புகள் நடத்திய விழாக்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சரளா இராசகோபாலன், தமிழ்நாடு அரசு நடத்திய மூன்று உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்றார். தமிழக அரசு நடத்திய 'பாவேந்தர் பாரதிதாசன் விழா', 'மகளிர் கவியரங்கம்' ஆகியவற்றைத் தலைமை தாங்கி நடத்தினார்.

பொறுப்பு

  • தமிழக அரசின் தமிழ்ப் பல்கலைக் கழக இராசராசன் விருதுக்குழு உறுப்பினர்
  • தமிழக அரசின் மருத்துவத் தேர்வுக் குழு உறுப்பினர்
  • தமிழக அரசின் நூலகத் தேர்வுக் குழு உறுப்பினர்
  • சி.எல்.எஸ். நிதி நல்கைக் குழு உறுப்பினர்
  • ஞானபீடப் பரிசு பரிந்துரைக் குழு உறுப்பினர்
  • பொதிகைத் தொலைக்காட்சி - வல்லுநர் குழு உறுப்பினர்

பல்வேறு இதழ்கள், அமைப்புகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

விருதுகள்

  • 'சின்னச் சின்ன கதைகள்' சிறார் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • 'பழமொழிகளில் பெண்மை' நூலுக்கு தமிழக அரசின் பரிசு
  • 'தமிழ்த் தென்றலும் பெண்மையும்' நூலுக்கு தமிழக அரசின் பரிசு
  • 'குடும்ப விளக்கு - ஓர் ஆய்வு' நூலுக்கு கே.ஆர்.சி. அறக்கட்டளை இலக்கியப் பரிசு
  • 'பாரதியின் பாஞ்சாலி சபதம்' நூலுக்கு உரத்த சிந்தனைப் பரிசு
  • 'பாரி மகளிர்' நூலுக்கு பாரத மாநில வங்கி விருது
  • இலக்கியப் பேரவை வழங்கிய பாரதியார் விருது
  • பாவேந்தர் பாசறை வழங்கிய பாவேந்தர் பட்டம்
  • கவிதைச் சோலை வழங்கிய பாவேந்தர் விருது
  • பண்ணைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழறிஞர் விருது
  • குன்றக்குடி அடிகளார் வழங்கிய ஔவையார் விருது
  • தமிழ்நாடு அரசு வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் விருது
  • ஸ்ரீராம் நிறுவனங்கள் வழங்கிய பாரதியார் விருது
  • கம்பன் கழகம் வழங்கிய டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது
  • கம்பன் கழகம் வழங்கிய தமிழ்நிதி விருது
  • தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி விருது
  • தமிழக அரசின் அம்மா இலக்கிய விருது

மதிப்பீடு

சரளா இராசகோபலன் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் பயிற்றுவித்தார். 34 ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார். இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டுப் பல நூல்களை எழுதினார். சிறார் இலக்கியங்களுக்கும் பங்களித்தார். பேச்சாளராகவும் செயல்பட்டார். பொது வாசிப்புக்குரிய கவிதை, சிறுகதை, நாடகங்களை எழுதினார். கவிஞர், கல்வியாளர், பேச்சாளர், எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

சிறார் நூல்கள்
  • சின்னச்சின்ன கதைகள்
  • பாப்பா பாப்பா கதை கேளு
  • கதை ஒன்று சொல்வேன்
  • இன்பக்கதைகள்
  • சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்
  • உயர்த்தும் உருவகக் கதைகள்
  • தாத்தா சொன்ன கதைகள்
  • திருவள்ளுவர் சொன்ன பாடம்
ஆய்வு/கட்டுரை நூல்கள்
  • சங்க இலக்கியம் (கட்டுரைகள்)
  • புறநானூறும் திருக்குறளும் - ஒப்பாய்வு
  • குறுந்தொகையும் திருக்குறளும் - ஒப்பாய்வு
  • புறநானூற்றுக் காட்சிகள்
  • நற்றிணை ஓவியங்கள்
  • பெண்களைப் பற்றிய பழமொழிகள்
  • தமிழ்த் தென்றலும் பெண்மையும்
  • நெஞ்சக் கனல்கள் (கவிதைகள்)
  • அம்மா! அம்மா! (சிறுகதைகள்)
  • இலக்கியச் சிந்தனைகள்
  • தமிழ்ஓடையில் எழில் மலர்கள்
  • சங்கத்தமிழ் வளர்த்த நங்கையர்
  • இலக்கியச் சோலை
  • இலக்கிய விருந்து
  • இலக்கியப் பாதையில்
  • இலக்கியப் பொய்கை
  • இலக்கியச் சாரல்
  • இலக்கியக் காட்சிகள்
  • இலக்கிய அருவிகள்
  • உலகம் புகழும் பெண்கள்
  • மேகத்தின் தாகம்
  • இறைமைத் தமிழ்
  • உயர்த்தும் இலக்கியம்
  • முத்தமிழ் வளர்த்த மூவர்
  • குறுந்தொகை ஓவியங்கள்
  • காப்பிய மகளிர்
  • இலக்கியம்: ஒரு பார்வை
  • சங்க இலக்கியம்: அகம்
  • சங்க இலக்கியத்தில் தோழி
  • வழிவழிச் சிலம்பு
  • தமிழ்த்தென்றலும் பெண்மையும்
  • பழமொழிகளில் பெண்மை
  • வேதநாயகரும் பெண்மையும்
  • வேதநாயகரின் வாழ்வும் தொண்டும்
  • பாரதியின் வாழ்க்கையிலே
  • புரட்சிக் கவிஞரும் பெண்மையும்
  • பாரதிதாசனின் இலக்கியப் பெண்கள்
  • குடும்ப விளக்கும் இருண்ட வீடும்
  • குடும்ப விளக்கு - ஓர் ஆய்வு
  • பாரதிதாசன் நாடகங்கள் ஓர் பார்வை
  • பாரதியின் பாஞ்சாலி சபதம்
  • பாரி மகளிர் - உரைநடை நாடகம்
  • கம்பர் கண்ட குகன்
  • சிலம்புவழிச் சிந்தனைகள்
  • சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டம்
  • சிலப்பதிகாரச் சிந்தனைகள்
  • கண்ணகி வழிபாடு
  • இளங்கோவின் அடிச்சுவட்டில்
  • தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை
  • தனிப்பாடல் திரட்டின் இன்சுவைக் காட்சிகள்
  • சமயம் வளர்த்த மகளிர்
  • வள்ளுவர் வழிச் சிந்தனைகள்
  • வள்ளுவம் ஒரு பார்வை
  • வள்ளுவரின் காமத்துப்பால்
  • திருவள்ளுவர் வழியில் இளங்கோவடிகள்
  • திருவள்ளுவர் வழியில் பாரதியார்
  • பேராண்மையாளர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்
  • கி. வா. ஜகந்நாதனின் மலையருவி - ஒரு பார்வை
  • கல்லாடம் ஓர் ஆய்வு
  • சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டம்
  • தமிழ்ப் பூங்காவில் நறுமலர்க் குவியல்
  • தமிழ்ப்பொழிலில் பனித்துளி நிகழ்வுகள்
  • தமிழ்ச்சோலையில் தேன்மலர் நிகழ்வுகள்
  • தமிழ்க்கடலில் ஒளிமுத்துக் காட்சிகள்
  • கவிதை நிலா

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2026, 11:00:49 IST