மலையமான்
மலையமான் (முனைவர் மலையமான்; டாக்டர் மலையமான்; நா. இராசகோபாலன்) (பிறப்பு: ஜூலை 15, 1932) தமிழ்ப் பேராசிரியர். கவிஞர், எழுத்தாளர். இலக்கிய ஆய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். சிறார்களுக்காகவும் பல படைப்புகளை எழுதினார். 'செம்மொழிச் செம்மல்' உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
நா. இராசகோபாலன் என்னும் இயற்பெயரை உடைய மலையமான், ஜூலை 15, 1932 அன்று, ஆரணியில், நாராயணன், பாலகுசாம்பாள் இணையருக்குப் பிறந்தார். போளூரில் தொடக்கக் கல்வி கற்றார். செங்கம் அரசுப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். கரந்தை புலவர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். ஃப்ரெஞ்ச் மொழி பயின்று பட்டயம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
நா. இராசகோபாலன் மணமானவர். மனைவி முனைவர் சரளா இராசகோபாலன். இவர்களுக்கு தமிழொளி என்ற மகளும் அன்பொளி என்ற மகனும் உள்ளனர்.
கல்விப் பணிகள்
நா. இராசகோபாலன், செங்கம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து சென்னையில், குருசாமி முதலியார் தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் பள்ளியில் பணியாற்றினார். சிறுவை மோகன சுந்தரம் நடத்தி வந்த திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் மதிப்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றினார். கன்னிமாரா நூலகத்திலும், நெடுஞ்சாலைத் துறையிலும் நூலகராகப் பணியாற்றினார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக நூலகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
நா. இராசகோபாலன், 'மலையமான்' என்ற புனை பெயரில் எழுதினார். சிறார்களுக்கான நூல்கள், ஆய்வு நூல்கள், இலக்கிய நூல்கள், பொது வாசிப்புக்குரிய கட்டுரை நூல்கள் எனப் பல்வேறு வகை நூல்களை எழுதினார். மலையமானின் சிறார் படைப்புகள், தமிழம், அறிவுக்கூர்வாள், நன்னன் நாடு, இளம் விஞ்ஞானி, அழகர் சோலை, கோகுலம், முல்லைச்சரம், அறிவுச்சுடர், அறிவியல் பூங்கா, அறிக அறிவியல் போன்ற இதழ்களில் வெளியாகின. 'மூன்று அரும்புகள்', 'கடலுக்குள்ளே ஒரு சிறைச்சாலை' போன்ற மலையமானின் சிறார் நாவல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். இலக்கியம், தமிழாய்வு, கவிதை, அறிவியல், சிறார் இலக்கியம், நாடகம் என 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
மலையமானின் படைப்புகளை ஆய்வு செய்து ஒன்பது பேர் இள முனைவர் பட்டம் பெற்றனர். இரண்டு பேர் முனைவர் பட்டம் பெற்றனர். மலையமானின் கவிதை நாடகங்கள், பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் பாட நூல்களாக வைக்கப்பட்டன.
அமைப்புச் செயல்பாடுகள்
மலையமான், கோயம்புத்தூரில் நடைபெற்ற குழந்தை இலக்கிய மாநில மாநாட்டில் கலந்துகொண்டார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குழந்தைகளின் அறிவியல் படைப்புக்கான தேசிய கருத்தரங்கத்தில் பங்கு பெற்றார். தலைநகர் தமிழ்ச் சங்கம் தமிழின் நலனுக்காக நிகழ்த்திய போராட்டங்களில் பங்கேற்று எட்டு முறை கைதானார்.
இதழியல்
மலையமான், 'இளம் விஞ்ஞானி', 'இயற்கை', 'அறிவியல் ஒளி', 'ஐந்திணை', 'மக்கள் செங்கோல்', 'திருவள்ளுவர் அணி' போன்ற சிறார் இதழ்களில் ஆசிரியர் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
பொறுப்பு
- குழந்தை எழுத்தாளர் சங்கப் பொருளாளர். (மூன்று ஆண்டுகள்)
- குழந்தை எழுத்தாளர் சங்க ஆலோசகர். (இரண்டு ஆண்டுகள்)
- உலகக் கவிஞர் பூங்கா உறுப்பினர்
- தலைநகர் தமிழ்ச் சங்க உறுப்பினர்
- தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்
- இந்திய நூலாசிரியர் பெருமன்ற உறுப்பினர்.
- இந்தியப் பண்பாட்டு அறிவியல் மன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு பண்பாட்டு அறிவியல் நூற்றொகைத் தொகுப்புத் திட்டக் குழு உறுப்பினர்
- உலகத் திருக்குறள் பேரவை உறுப்பினர்
- தமிழ்க் கவிஞர் மன்ற உறுப்பினர்
- பதிப்பாளர் மைய உறுப்பினர்
விருதுகள்
- 'அறிவியல் சிறுகதைகள்' சிறார் நூலுக்கு தமிழ்நாடு அரசின் முதல் பரிசு (1985)
- 'அறிவியல் வெளிச்சங்கள்' நூலுக்கு குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாவது பரிசு (1990)
- 'கடலுக்குள்ளே ஒரு சிறைச்சாலை' நூலுக்கு தமிழ்நாடு அரசின் முதல் பரிசு (1993)
- 'மின்மினிக் கதைகள்' நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கி விருது (2000)
- 'மின்மினிக் கதைகள்' நூலுக்கு 'புதுச்சேரி சிறுவர் இலக்கியச் சிறகம்' அமைப்பு வழங்கிய பரிசு (2000)
- தமிழக அரசு வழங்கிய 'முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது' (2012)
- இந்திய அரசின் தேசிய அறிவியல் விருது (2014)
- அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய 'அழ. வள்ளியப்பா இலக்கிய விருது'
- என்.கே. வேலன் அறக்கட்டளை வழங்கிய 'குழந்தை இலக்கியச் சாதனையாளர்' விருது
- தேனீ இலக்கியக் கழகம் வழங்கிய 'எழுத்துச்செம்மல்' பட்டம்
- உரத்த சிந்தனை இலக்கிய அமைப்பு வழங்கிய 'அறிவியல் மாமணி' பட்டம்
- தமிழின் சீர் பரவுவார்
- திருக்குறள் பரப்புச் செம்மல்
- மொழிப்போர் மறவர்
- செம்மொழிச் செம்மல்
மதிப்பீடு
"நண்பர் மலையமான் பல கலைப் புலமைச் சான்றவர். கதை, கவிதை கட்டுரை, நாடகம், அறிவியற் கலை எனப் பன்னூல்களைத் தமிழுக்குப் படைத்துள்ளார். சிந்தனை வளத்தோடு எழுதும் நூலாசிரியர் என்ற நிலையோடு தறுகண்மை வாய்ந்த செந்தமிழ் மறவராகவும் தமிழ்க் காப்புப் போராட்டங்களிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்" என்று ஔவை நடராசன் குறிப்பிட்டார்.
மலையமானின் சிறார் நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பொது அறிவுக் கூறுகள் கொண்டவை. சிறுகதைகள் பொது வாசிப்புக்குரியவை. இலக்கியம், அறிவியல் சார்ந்தும் பல நூல்களை எழுதினார். கவிஞர், எழுத்தாளர், சிறார் இலக்கியச் செயல்பாட்டாளர், அறிவியல் ஆய்வாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
கவிதை நூல்கள்
- மலையமான் கவிதைகள்
- இதய வரிகள்
சிறார் நூல்கள்
- பனித்துளிக் கதைகள்
- தேன்துளிக் கதைகள்
- மழலைக் கதைகள்
- துளிர்க் கதைகள்
- அரும்புக் கதைகள்
- குட்டிக் கதைகள்
- பெரும்புகழ் எறும்புகள்
- மின்மினிக் கதைகள்
- ஒளிக் கதைகள்
- முத்துக் கதைகள்
- சின்னஞ்சிறு கதைகள்
- உருவகக் கதைகள்
- மின்னல் கதைகள்
- பண்புநெறிக் கதைகள்
- இன்பநெறிக் கதைகள்
- திருக்குறள் கதைகள்
- அறிவொளிக் கதைகள்
- மழலைக் கதைகள்
- நன்னெறிக் கதைகள்
- இந்திய நாட்டின் விந்தைக் கதைகள்
- அறிவியல் சிறுகதைகள்
- விண்வெளிக் கதைகள்
- கி.பி. 2087-ல் (அறிவியல் கதை)
- மஞ்சரி அறிவியல் புனை கதைகள்
- பிற நாட்டுச் சிறுகதைகள்
- அயலகத்து அருங்கதைகள்
- மூன்று அரும்புகள்
- கடலுக்குள்ளே ஒரு சிறைச்சாலை
- அன்னை இந்திரா
- அறிவியல் பெருமணிகள்
- சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள்
- உலக அறிவியல் விஞ்ஞானிகள்
- அறிவியல் நறுமலர்கள்
- அறிவியல் புதுமைகள்
- அறிவியல் கதை மஞ்சரி
- அறிவியல் சுவடுகள்
- உயிரியலில் ஓர் உலா
- அறிவியல் வெளிச்சங்கள்
- அறிவியல் புதுமைகள் (2 தொகுதிகள்)
- பறவைகள் பலவிதம் (2 தொகுதிகள்)
- விலங்குகள் பலவிதம்
- இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்
கட்டுரை/ஆய்வு நூல்கள்
- திருக்குறள் துளிகள்
- திருக்குறளில் ஒளி உவமைகள்
- குறளின் ஓளியில்...
- குறளின் அலைகள்
- நோபில் பரிசு பெற்ற கவிஞர்கள்
- காட்டு மலர்கள்
- நோயே டாக்டரானால்
- இருதலைப் பறவை
- உயிர்க் கொடை
- கடல் வயிறு
- தமிழ் ஆட்சி மொழி
- மொழியும் இனமும்
- மொழி இனச் சிந்தனைகள்
- தமிழும் தமிழரும்
- தமிழா! தமிழா!
- தமிழ் ஆட்சிமொழி:சிக்கல்களும் தீர்வுகளும்
- சிந்தனைக் களஞ்சியம் (மரபுத் தொடர் அகராதி)
- செவ்வியல் மொழி - தமிழ்
- செவ்வியலும் செந்தமிழும்
- தமிழ் வாழ வேண்டும்
- செந்தமிழ்ச் சிந்தனைகள்
- சமுதாயச் சிந்தனைகள்
- மொழி, இனச் சிந்தனைகள்
- மொழியும் இனமும்
- திருக்குறள் சிந்தனைகள்
- சிந்தனைக் களஞ்சியம்
- சுற்றுச்சூழல்
- தமிழா! தமிழா!
- சிரிக்க... சிந்திக்க...
- சிரிப்பே சிறப்பு
- வான் புகழ் தேனீக்கள்
சிறுகதைகள்
- உண்மை ஓர் ஊமை
நாடகம்
- உதவித் திருமணம்
- நீர் மாங்கனி (கவிதை நாடகம்)
- இருதலைப் பறவை (கவிதை நாடகம்)
- உயிர்க்கொடை (கவிதை நாடகம்)
உசாத்துணை
- முனைவர் மு. இளங்கோவன் தளக் கட்டுரை
- தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி
- நீர்மாங்கனி விமர்சனக் கட்டுரை
- மலையமான் நூல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
- 324 தமிழறிஞர்கள், தொகுப்பாசிரியர்: சூரியசந்திரன், வெளியீடு: கலைஞன் பதிப்பகம், தி.நகர், சென்னை - 17; முதல் பதிப்பு: 2023.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2026, 21:45:39 IST