கே.பி. நீலமணி
கே.பி. நீலமணி (K.P. Neelamoney) (1925-1999) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், இசைக் கலைஞர். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், சிறார்களுக்கான பல படைப்புகளையும் தந்தார். சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது மற்றும் பாரதிதாசன் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
கே.பி. நீலமணி, 1925-ல் மதுரையில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். புதுமுக வகுப்புப் படித்தார். இசை பயின்று பட்டயம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கே.பி. நீலமணி. இதழாளராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி ஜானகி எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
இசை வாழ்க்கை
கே.பி. நீலமணி கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி இருவரிடமும் குருகுல வாசம் செய்து ஏழு ஆண்டுகள் இசை கற்றார். வயலின் கச்சேரிகள் சிலவற்றை நிகழ்த்தினார். இதழ்களில் இசை விமர்சனங்களை எழுதினார்.
இலக்கிய வாழ்க்கை
கே.பி. நீலமணி தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அவர்கள் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். ஆனந்த விகடன், கல்கி, குமுதம், அமுதசுரபி, கலைமகள், தினமணி கதிர், தினமணி சுடர் போன்ற இதழ்களில் எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல சிறார் நாவல்கள், வானொலி நாடகங்களை எழுதினார். காயத்ரி, ஜானகிநாதன் போன்ற புனை பெயர்களிலும் எழுதினார்.
நீலமணியின் ‘புல்லின் இதழ்கள்’ இசையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். கலைமகளில் தொடர்கதையாக வெளியானது. சென்னை வானொலியில் இருமுறை நாடகமாக்கம் செய்யப்பட்டு ஒலிபரப்பானது. நீலமணி 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
இதழியல்
கே.பி. நீலமணி, தினமணி இதழில் 35 ஆண்டுகளுக்கும் மேல் துணை, இணை ஆசிரியராகப் பணியாற்றினார். ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். ’அம்பலம்’ இணைய இதழில் இசை விமர்சனக் கட்டுரைகளை எழுதினார்.
பதிப்பு
கே.பி. நீலமணி, 'காயத்ரி பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம் தனது நூல்களையும் பிறர் நூல்களையும் வெளியிட்டார். சென்னை மந்தைவெளியில் ‘லியோ நூலகம்’ என்ற பெயரில் வாடகை நூல் நிலையம் ஒன்றை நடத்தினார். ‘லியோ பதிப்பகம்’ என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை மனைவி ஜானகியுடன் இணைந்து நடத்தினார்.
ஊடகம்
கே.பி. நீலமணி அகில இந்திய வானொலியில் சிறார்களுக்கு ‘பாப்பாவுக்கு ஒரு கதை’ என்ற தலைப்பில் பல கதைகளைச் சொன்னார். வானொலியில் இவரது சிறார் படைப்புகள் பல ஒலிபரப்பாகின.
கே.பி. நீலமணியின் ’மாஸ்டர் ராஜா’ என்ற சிறார் நாவல், 13 வாரத் தொலைக்காட்சித் தொடராகச் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
விருதுகள்/பரிசுகள்
- குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் ’அன்புப் பணிக்கு அன்னை தெரசா’ நூலுக்கு முதல் பரிசு; ஏவி.எம்மின் தங்கப் பதக்கம் (1978)
- ’தென்னை மரத்தீவினிலே…’ நாவலுக்கு ஏவி.எம்மின் வெள்ளிப் பதக்கப்பரிசு (1983)
- கவிமணியின் கதை – நூலுக்கு சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு.
- இலக்கியச் சிந்தனை பரிசு – சுப்பு கான்வெண்டுக்குப் போகிறான் சிறுகதை.
- இலக்கியச் சிந்தனை பரிசு – நீருக்கு நிறமில்லை சிறுகதை
- தமிழக அரசின் பாரதிதாசன் விருது (1991)
ஆவணம்
கே.பி. நீலமணியின் நூல்களில் சில தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
கே.பி. நீலமணி, பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை நூல்களை எழுதியிருந்தாலும், சிறார் படைப்பாளியாகவே அறியப்படுகிறார். கே.பி. நீலமணியின் ’புல்லின் இதழ்கள்’ நூல் குறித்து விமர்சகர் ஆர்.வி., தனது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் “பழைய பழகிய பாதையிலேயே சரளமாக போகும் நாவல். மானுட தரிசனம், இலக்கியத்தரம் என்றெல்லாம் சொல்ல எதுவுமில்லை. அறுபதுகளின் சமூகக் கற்பனை வணிக நாவலுக்கு (social romance) நல்ல எடுத்துக்காட்டு.” என்கிறார்.
மறைவு
கே.பி. நீலமணி, 1999-ல், தனது 75-ம் வயதில் காலமானார்.
நாட்டுடைமை
தமிழக அரசு கே.பி. நீலமணியின் நூல்களை 2010-ல் நாட்டுடைமை ஆக்கியது.
நூல்கள்
- அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்
- அன்புப் பணிக்கு அன்னை தெரசா
- காப்டன் குமார்
- சுப்பு கான்வெண்டுக்குப் போகிறான் (சிறுகதைத் தொகுப்பு)
- ஜேம்ஸ் பாண்ட் சங்கர்
- மகாத்மா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை
- மலருக்கு மது ஊட்டிய வண்டு
- மயக்கம் தெளிந்தது
- ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்
- பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்
- பிள்ளையார் சிரித்தார்
- புல்லின் இதழ்கள்
- தந்தை பெரியார்
- தென்னைமரத் தீவினிலே
- காற்று சொன்ன கதைகள்
- மங்களபுரி வீரன்
- நாடோடி இளவரசன்
- மாஸ்டர் ராஜா
- சில தாகங்கள் தணிவதில்லை
- அகதி
- கவிமணியின் கதை
உசாத்துணை
- கே.பி. நீலமணி நூல்கள்: தமிழ் இணைய மின்னூலகம்
- கே.பி. நீலமணி, ஆர்.வி, சிலிகான்ஷெல்ஃப் தளம்
- ஒரு ஊர்ல ஒரு பாட்டி: தினமலர் இதழ் கட்டுரை
- லியோ நூலகம்: தி ஹிந்து இதழ் கட்டுரை
- மந்தைவெளி நூலகம்: இந்து இதழ் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 09:12:37 IST