under review

கிஃப்ட் சிரோமணி

From Tamil Wiki
கிஃப்ட் சிரோமணி

கிஃப்ட் சிரோமணி (கிஃப்ட்; டாக்டர் கிஃப்ட்; டாக்டர் கிஃப்ட் சிரோமணி; டாக்டர் ஜி. சிரோமணி; Dr Gift Siromoney) (ஜூலை 30, 1932 - மார்ச் 21, 1988) ஒரு பன்முக ஆய்வாளர். சுற்றுச்சூழல், வரலாறு, புள்ளியியல் மற்றும் கணிதத் துறை அறிஞர். சிற்ப ஆராய்ச்சி வல்லுநர். கோலங்களில் இருக்கும் கணக்கு, வகைமுறை பற்றிய ஆய்வினை நிகழ்த்தினார். சிந்துவெளிக் குறியீடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். வரலாற்றாய்வுகள் பலவற்றை முன்னெடுத்துப் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். கிஃப்ட் சிரோமணி, ஆபிரகாம் பண்டிதரின் தம்பி பேரன்.

பிறப்பு, கல்வி

கிஃப்ட் சிரோமணி, தஞ்சாவூரில், ஜூலை 30, 1932-ல், டேனியல் சிரோமணி - டல்சி இணையருக்குப் பிறந்தார். தந்தை தமிழக அரசின் வருவாய்த் துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். கிஃப்ட் சிரோமணி தஞ்சாவூரில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இடை நிலை வகுப்பு பயின்றார்.

1950-53-ல், சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று கணிதத்தில் இளநிலை (BA Hons.) பட்டம் பெற்றார். 1955-ல், முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். புள்ளியியல் பயின்று 1959-ல் முதுநிலை (M.Sc. Statistics) பட்டம் பெற்றார். 1958-59-ல், நியூயார்க்கில் உள்ள யூனியன் இறையியல் பயிற்சிக் கல்லூரியில் ’எக்யூமெனிகல் ஃபெல்லோ’ (இறையியல்) (Ecumenical Fellow - Religion) பட்டம் பெற்றார். அதே ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ’எக்யூமெனிகல் ஃபெல்லோ’(தகவல் கோட்பாடு) (Ecumenical Fellow - Information Theory) பட்டம் பெற்றார். 1964-ல், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தகவல் கோட்பாடு பற்றிய ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் ஹோமி பாபா நல்கை (Homi Bhabha Fellowship - Computer Science) பெற்றார்.

தனி வாழ்க்கை

கிஃப்ட் சிரோமணி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1953-54 வரை கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1954-67 வரை, சென்னை கிறித்தவக் கல்லூரியில், கணித விரிவுரையாளராகப் பணி செய்தார். 1967-70 வரை, கணிதம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். 1970 முதல் 1988 வரை புள்ளியியல் துறைத் தலைவராகப் பணிபுரிந்தார்.

கிஃப்ட் சிரோமணி மணமானவர். மனைவி ராணி பாலியா. கல்லூரிப் பேராசிரியர். ஒரே மகன், அருள் சிரோமணி இசைக் கலைஞர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறள்

இலக்கிய வாழ்க்கை

கிஃப்ட் சிரோமணி, பள்ளியில் படிக்கும்போதே எழுதத் தொடங்கினார். சிறந்த கட்டுரைகளுக்கான பல பரிசுகளைப் பெற்றார். சுற்றுச்சூழல், வரலாறு, சிற்பங்கள், பல்லவத் தொல்லியல் சின்னங்களைப் பற்றி ஆய்வு செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதினார். கோலங்களின் தன்மை பற்றி ஆய்வு செய்து ஆங்கில இதழ்களில் எழுதினார். நரிக்குறவர் பற்றி ஆராய்ந்து அவர்களது மொழியான ‘வாக்ரிபோலி’ குறித்த நூல் ஒன்றை எழுதினார். வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் மொழி எப்படி இருந்தது என்பதை, திருக்குறள் எழுத்துக்களை அடிப்படையாக வைத்து, எஸ். கோவிந்தராஜு, எம். சந்திரசேகரன் ஆகியோருடன் இணைந்து கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் என்ற நூலை வெளியிட்டார். ஆங்கில ஆய்விதழ்களில் கணிதம், புள்ளியியல், கணினி இயல் சார்ந்து பல்வெறு கட்டுரைகளை எழுதினார்.

இசை

கிஃப்ட் சிரோமணி இசையில் தேர்ந்தவர். பல பாடல்களை எழுதினார். சிலவற்றுக்கு இசையமைத்தார். மேடையில் பாடல்களைப் பாடினார். மிருதங்கம் வாசிப்பதில் தேர்ந்தவர்.

நாடகம்

கிஃப்ட் சிரோமணி கல்லூரியில் பயிலும் போது பல நாடகங்களில் நடித்தார். மதுரையில் வசிக்கும்போது பல நாடகங்களில் முக்கிய வேடமேற்றார்.

ஓவியம் மற்றும் புகைப்படம்

கிஃப்ட் சிரோமணி இளம் வயது முதலே ஓவியம் வரைவதில் திறமை பெற்றிருந்தார். புகைப்படக் கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவை பல இதழ்களில் வெளியாகின. கிஃப்ட் சிரோமணி, புத்தக அட்டை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டார். பல்வேறு அமைப்புகளுக்கான சின்னங்கள் பலவற்றை உருவாக்கினார்.

டாக்டர், பேராசிரியர் கிஃப்ட் சிரோமணி (படம் நன்றி: உயிர்மை இதழ்)

ஆய்வுப் பணிகள்

கிஃப்ட் சிரோமணி மாணவர்கள் பலருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்தார். பலர் முனைவர் பட்டம் பெற உறுதுணையாக இருந்தார். கிஃப்ட் சிரோமணியின் குழந்தைகளின் பார்வை பற்றிய ஆய்வுகள், குருட்டுத் தன்மையை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை அரசாங்கத்திற்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுத்தின. இதனை அறிந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, குழந்தைகள் பார்வைத் திட்டங்களுக்காக இரண்டு லட்சம் ரூபாய் தொகையை தமிழக அரசுக்கு மானியமாக வழங்கினார்.

பள்ளி வருகையை மேம்படுத்தும் வகையில் தேவைப்படும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்திய கிஃப்டின் ஆய்வு, இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயன்பாட்டில் உள்ளது

சுற்றுச்சுழல் மற்றும் பறவையியல் ஆய்வுகள்

கிஃப்ட் சிரோமணி, சுற்றுச்சூழலில் உள்ள செடி, கொடிகளைக் கூர்ந்து கவனித்து சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட தாவரங்களை இனங்கண்டு ஆவணப்படுத்தினார். கானுயிர்கள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். சிறந்த பறவை ஆர்வலராகத் திகழ்ந்தார். பறவைக் கண்காணிப்பாளர்களுக்கான செய்தி இதழில் பல கட்டுரைகளை எழுதினார்.

பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள் குறித்து ‘புள்ளியியல் துறையின் அறிவியல் அறிக்கைகள்’ என்ற ஆய்விதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார்.

கணினி ஆய்வுகள்

கிஃப்ட் சிரோமணி, தனக்கு அளிக்கப்பட்ட ஹோமிபாபா நல்கை மூலம் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்கள் தங்கி கணினி ஆய்வில் ஈடுபட்டார். அவரது ஆய்வுகள், கணினிப் பயன்பாட்டில் முன்னோடி ஆய்வுகளாக அமைந்தன. தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டைக் கவனித்து முதன் முதலாகத் தமிழ் டெ லிபிரிண்டர் தட்டச்சுப்பலகையை (keyboard) உருவாக்கினார். கணினி ஆய்வுகளுக்காக. 1988-ல், சென்னை கிறித்தவக் கல்லூரியில், தனது ஆசான் டாக்டர் டபிள்யு. எஃப். கிப்பிள் நினைவாக, கிப்பிள் கணினி மையத்தை (Kibble Computer Centre) நிறுவினார்.

தமிழ் எழுத்துக்கள் எந்தெந்தக் காலத்தில் எவ்வகையில் பயன்பாட்டில் இருந்தன என்ற ஆய்வை பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கொண்டார். தொல்காப்பியத்தில் ‘ழ’வின் பயன்பாடு எப்படி இருந்தது என்பதையும், 1946-57 கால கட்டத்தில் எப்படி இருந்தது என்பதையும் ஆய்வு செய்து, தொல்காப்பியர் காலத்துடன் ஒப்பிடும் போது ’ழ’வின் பயன் பாதிக்கும் குறைந்து விட்டது என்பதைப் புள்ளியியல் ஆய்வுகள் மூலம் நிறுவினார் [1].

வரலாற்று ஆய்வுகள்

கிஃப்ட் சிரோமணி, ‘வரலாற்றாய்வில் கல்வெட்டுக்கள் மட்டுமே மூலத்தரவாகப் பயன்படும்’ என்ற சில அறிஞர்களின் கூற்றை ஏற்க மறுத்தார். ‘சிலைகளின் உருவ நியதிகள் (Iconography) மூலம் காலக் கணிப்பு செய்ய முடியும்’ என்று வாதிட்டார். அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களில் தேடி எடுத்த பழங்கற்காலத் தொல்சின்னங்களைக் கணினியின் துணை கொண்டு ஆய்வு செய்து காலக் கணிப்பு செய்தார்.

இந்திய சிற்பங்களின் பெரிய அளவிலான ஐகானோமெட்ரிக் அளவீடுகளைப் பற்றி, தனது குழுவினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். சிற்பங்களைப் பற்றி மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். தனது ஆய்வு முடிவுகள் முழுவதையும் சென்னை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.

புள்ளியியல் துறை ஆய்வுகள்

கிஃப்ட் சிரோமோனி, பிரிட்டிஷ் புள்ளியியல் நிபுணர் டாக்டர். டபிள்யூ.எஃப்.கிபிளின் மாணவராக இருந்தார். கிஃப்ட் சிரோமணி, தகவல் கோட்பாடு மற்றும் அதன் பயன்பாடுகளில் முன்னோடியாகப் பணியாற்றினார். தாம்பரத்தில் இயங்கிக் கொண்டிருந்த கை ரிக்ஷாக்காரர்களைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். தேர்தல் காலங்களில் யார் தேர்தலில் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்ற ஆய்வினைத் தன் மாணவர்கள் மூலம் மேற்கொண்டு முடிவை வெளிப்படுத்தினார். பேராசிரியர் கே.ஆர்.ராஜகோபாலனுடன் இணைந்து , தென்னிந்திய இசையமைப்பாளர்களின் இசைப் பாணிகளை ஆய்வு செய்ய தகவல் கோட்பாட்டைப் பயன்படுத்தினார்.

சிந்துவெளி ஆய்வுகள்

ஐராவதம் மகாதேவனின் சிந்து வெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வால் ஈர்க்கப்பட்ட கிஃப்ட், புள்ளியியல் கோட்பாட்டின் அடிப்படையில் சிந்துச் சமவெளி சித்திர முத்திரையில் காணும் எழுத்துருவங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். சிந்து முத்திரைகளைப் புரிந்துகொள்வதற்கு கிளஸ்டர் பகுப்பாய்வு மற்றும் டைனமிக் புரோகிராமிங் போன்ற கணித நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஹரப்பா எழுத்துத் துறையில் ஆராய்ச்சியின் புதிய வழிகளை உண்டாக்கினார். அது குறித்துப் பல கட்டுரைகளை ஆய்விதழ்களில் எழுதினார்.

பொறுப்புகள்

  • ராயல் புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினர்.
  • வடிவ அங்கீகார சங்கத்தின் உறுப்பினர்.
  • இந்திய கல்வெட்டுக் குழுமத்தின் உறுப்பினர்.
  • தென்னிந்திய தொல்லியல் கழகத்தின் உறுப்பினர்.
  • இந்தியாவின் பறவைக் கண்காணிப்பாளர் கழகத்தின் உறுப்பினர்.
  • சென்னை கிறித்தவக் கல்லூரியின் கல்வி வாரிய உறுப்பினர்
  • சென்னை கிறித்தவக் கல்லூரியின் கல்விக்குழு உறுப்பினர்.
  • உறுப்பினர், பல்கலைக்கழகங்களின் கல்வி அமைப்புகள்.

விருதுகள்

மறைவு

டாக்டர் கிஃப்ட் சிரோமணி மார்ச் 21, 1988 அன்று, தனது 56-ம் வயதில் காலமானார்.

நினைவு

ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில், கிஃப்ட் சிரோமணி எழுதிய நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர், டாக்டர் கிஃப்ட் நினைவாக, வருடந்தோறும், ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில், கிஃப்ட் சிரோமணி அறக்கட்டளை பெயரில் பேருரை ஒன்று நிகழ்த்தப்படுகிறது.

மதிப்பீடு

டாக்டர் கிஃப்ட் சிரோமணி, சு. தியடோர் பாஸ்கரனின் நண்பர். பாஸ்கரனின் பல ஆய்வு முயற்சிகளை ஊக்குவித்தவர். கிஃப்ட் பற்றி சு. தியடோர் பாஸ்கரன், “கிஃப்ட், பன்முக ஆய்வாளர். எளிமையின் உரு. தன் மேதைமையைக் காட்டிக் கொள்ளவே மாட்டார். தொல்லியல் தடங்களைத் தேடி மோட்டார் பைகில் மாமல்லபுரம், காஞ்சிபுரம் என சுற்றி வருவார். அறிவியல் ஆய்வே தனது வாழ்வின் குவிமையம் என்று உறுதிபட நம்பிய கிஃப்ட், அக்கல்லூரியின் முதல்வராகும் வாய்ப்பு வந்த போது, அதை ஒதுக்கி விட்டு ஆய்வில் தனது கவனத்தைச் செலுத்தினார். கணினி பயன்பாட்டிற்கும் தமிழ் மொழி ஆராய்ச்சிக்கும், தமிழக கலை வரலாற்றிற்கும் இவரது பங்களிப்பு இன்னும் சரியானபடி உணரப்படவில்லை” என்கிறார்.” பல சர்வதேச இதழ்களில் கணினித் தொழில் நுட்பம் குறித்து எழுதிய முதல் இந்தியர் மற்றும் தமிழராக அறியப்படுகிறார் கிஃப்ட் சிரோமணி.

நூல்கள்

ஆங்கில நூல்கள்
  • A new Brahmi inscription from Vikramangalam, Madurai
  • A new Chola inscription from Pammal near Madras
  • A new Tamil-Brahmi inscription from Vikramangalam, Madurai
  • A Perspective in Theoretical Computer Science
  • A Tamil-Brahmi inscription from Madurai region
  • A Tamil-Brahmi inscription from Muthupatti, Madurai
  • Abstract families of matrices and picture languages
  • An application of component analysis to the study of South Indian sculpture
  • Birds of Tambaram area and water-birds of Vedantaangal
  • Butterflies of Tambaram
  • Classification of frequently occurring inscriptions of Indus civilization in relation to metropolitan centers
  • Computer analysis of a sample of stone age implements from Madras region
  • Computer analysis of early Chola and Pandya sculptures
  • Computer methods of dating medieval Tamil inscriptions
  • Computer methods of dating Tamil inscriptions
  • Computer methods of writer identification
  • Computer methods of writer identification
  • Computer recognition and transliteration of mridangam mnemonics
  • Computer recognition of printed Tamil characters
  • Computer recognition of printed Tamil characters
  • Computer techniques of image enhancement in the study of a Pallava Grantha inscription
  • Grammars for Kernel sentences in Tamil
  • Hexagonal arrays and rectangular blocks
  • List of publications of members of the facults of Madras Christian College
  • Mathematics and its application in social sciences
  • Measurement of affinity and anti affinity between signs of the indus script
  • Mood of the electorate in Tamilnadu
  • Off-print of seminar papers on Origin evolution and reform of the Tamil script
  • Perception of structure and complexity in South Indian Kolam patterns
  • Picture languages with array rewriting rules
  • Political uncertainty in Tamilnadu
  • Preventable blindness among children of Tamil Nadu
General Books
  • Rosenfeld's Cycle grammars and kolam
  • Segmentation of unusually long texts of Indus writings
  • Statistical analysis of Harappan signs and sites
  • Studies on Mahabalipuram monuments
  • The invention of the Brahmi script
தமிழ் நூல்கள்
  • கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள்
  • கல்வெட்டு எழுத்துகளைக் கற்க ஒரு புது வழி
  • வட்டெழுத்தில் திருக்குறள்
 மற்றும் பல.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page