under review

கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள்

From Tamil Wiki
கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள்

கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் (1975) என்னும் நூல் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதைக் காட்ட, தமிழ்க் குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு, எஸ். கோவிந்தராஜு, எம். சந்திரசேகரன் ஆகியோருடன் இணைந்து, டாக்டர் கிஃப்ட் சிரோமணி எழுதிய நூல். இந்நூலில் விஜய நகர அரசர்கள், பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் கால எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதைத் திருக்குறள் பாக்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள்ளனர். தமிழ் பிராமி மொழியிலும் பல குறள்கள் இடம்பெற்றுள்ளன..

பதிப்பு, வெளியீடு

கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் நூலை, சென்னை கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை, அக்டோபர் 1975-ல் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு, ஜூலை 1979-ல் வெளிவந்தது. மூன்றாம் பதிப்பு, 1980-ல், வெளியானது.

இந்நூலின் சுருக்கம், டாக்டர் கிஃப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜு, எம். சந்திரசேகரன் ஆகியோரால் எழுதப்பட்டு, ‘கல்வெட்டு எழுத்துகளைக் கற்க ஒரு புது வழி’ என்ற தலைப்பில், 1980-ல், கிறித்தவக்கல்லூரி, புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்டது. நூலின் முடிவில், வெவ்வேறு காலகட்டங்களில் கடிதத்தின் வடிவங்களைக் காட்டும் விளக்கப்படங்கள் இடம் பெற்றன.

ராஜ ராஜ சோழன் கால எழுத்து.
தமிழ் பிராமி எழுத்தில் திருக்குறள்
சுந்தர பாண்டியன் எழுத்து

நூல் அமைப்பு

பல்லாண்டு காலமாகத் தமிழ் எழுத்துக்கள் எப்படி வளர்ச்சி பெற்று வந்துள்ளன என்பதை, திருக்குறளைப் பயன்படுத்தி அந்தந்த கால கட்டத்து எழுத்துக்களைக் கொண்டு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் கீழ்காணும் 15 தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.

  • விஜயநகர் மன்னர் கால எழுத்து - பொ.யு. 1400-1500
  • ஸாளுவ நரசிங்க ராயர் எழுத்து - (வண்டலூர்)
  • மல்லிகார்ஜூன ராயர் எழுத்து - (சோமங்கலம்)
  • பாண்டிய மன்னர் கால எழுத்து - பொ.யு. 1270-1290
  • சுந்தரபாண்டியன் எழுத்து - (திருக்கச்சூர்)
  • தெலுங்குச் சோழமன்னர் கால எழுத்து - பொ.யு. 150-1290
  • விஜயங் கண்ட கோபாலன் எழுத்து - (திருக்கச்சூர்)
  • சோழ மன்னர் கால எழுத்து - பொ.யு. 970-1250
  • வீர இராஜேந்திரன் எழுத்து - (மாடம்பாக்கம்)
  • முதலாம் குலோத்துங்கன் எழுத்து - (மணிமங்கலம்)
  • முதலாம் இராஜேந்திரன் எழுத்து - (திருமலை)
  • முதலாம் இராஜேந்திரன் எழுத்து - (திருவாலங்காடு செப்பேடுகள்)
  • இராஜராஜ சோழன் எழுத்து - (தஞ்சாவூர்)
  • இராஜராஜ சோழன் எழுத்து - (மகாபலிபுரம்)
  • இராஜராஜ சோழன் எழுத்து - (மேல்பாடி)
  • உத்தமசோழன் எழுத்து - (சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள்)
  • பல்லவ மன்னர் கால எழுத்து - (பொ.யு. 550-800)
  • நந்திவர்மன் எழுத்து - (பட்டக்காள் மங்கலம் செப்பேடுகள்)
  • சிம்ம விஷ்ணு எழுத்து - (பள்ளன் கோயில் செப்பேடுகள்)
  • தமிழ் பிராமி என்னும் தமிழ் எழுத்து (பொ.மு 250 - பொ.யு. 250)
  • தென்னாட்டிலுள்ள குகைக் கல்வெட்டு எழுத்து

மதிப்பீடு

தமிழ் எழுத்துக்களின் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த பல்வேறு வடிவங்களை, இந்நூலில் இடம் பெற்றிருக்கும் குறட்பாக்களின் மூலம் அறிய இயலுகிறது. ஆய்வு மாணவர்களுக்கும், கல்வெட்டு மற்றும் செப்பேடு, சுவடியியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பெருமளவில் உதவக் கூடிய நூல். கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் நூலுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, கிஃப்ட் சிரோமணி நண்பர்களுடன் இணைந்து ‘வட்டெழுத்துக்களில் திருக்குறள்’ என்ற நூலை வெளியிட்டார்.

உசாத்துணை


✅Finalised Page