under review

கடுவன் மள்ளனார்

From Tamil Wiki

கடுவன் மள்ளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் நான்கு. குறுந்தொகை ஒரு பாடலும் அகநானூறில் மூன்று பாடல்களும் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கடுவன் மள்ளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கடுவன் என்னும் ஊரை சேர்ந்தவர். மள்ளன் என்னும் இயற்பெயர் கொண்டவர். ஏடுகளில் இவர் பெயர் மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் என்றும் காணப்படுகிறது. தமிழ் கூத்தன் என்ற பெயரை தொழிலால் வந்த சிறப்பு அடையாளமாக கொண்டால் மதுரையில் கூத்தாடும் தொழில் செய்யும் கடுவன் என்னும் ஊரை சேர்ந்த மள்ளனார் என்று பொருள்படும். இயற்பெயராக கொண்டால் மதுரை தமிழ் கூத்தன் என்பாரின் மகன் என்று பொருள்படுகிறது. மள்ளனார் என்ற பெயரை கொண்டு இவரை அரசியல் தொடர்புற்ற படைத்தலைவர் என்று கருத இடமிருப்பதாக உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கடுவன் மள்ளனார் பாடிய நான்கு பாடல்கள் குறுந்தொகையில் 82-ம் பாடலாகவும் அகநானூறில் முறையே 70, 256, 354 -ம் பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 82-ம் பாடல் குறிஞ்சித் திணையில் கார்க்காலத்தே பிரிந்து சென்ற தலைவன் முன்பனிக்காலத்திலும் வராதது கண்டு தன் துயரைத் தோழியிடம் தலைவி கூறுவதாக உள்ளது. அகநானூறு 70-ம் பாடல் முறைப்படி மணம்புரிய வந்த தலைவனின் செயலை கண்டு தோழியிடம் தலைவி கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 256-ம் பாடல் பரத்தையிடம் சென்று வந்த தலைவனை வீட்டிற்குள் அனுமதிக்காது, அவனது செயலின் இழிவைத் தோழி உரைப்பதாக மருதத் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 354-ம் பாடல் போர் முடிந்து பாசறையில் இருக்கும் தலைவனிடம் அவன் தோழன் கூறுவதாக முல்லைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 82
  • முன்பனிக்காலத்தில் மலைப்பக்கத்தில் உள்ள தினைவயலை அறுவடை செய்வர். அறுவடை செய்த நிலத்தில் பயிர்களின் இடைவெளியில் அவரை கொடி வளர்ந்து பூ பூக்கும்.
  • காதலுற்ற மகளிர் கண்ணீர் விடுகையில் அவர்தம் கூந்தலைத் தடவி கண்ணீரைத் துடைத்து அழ வேண்டாம் என்று அவர் தம் காதலர் ஆறுதல் கூறும் மனநிலையும் காட்டப்பட்டுள்ளது.
அகநானூறு 70, 256, 354
  • மீன் பிடிக்கும் பரதவ மக்கள் வளைந்த படகில் குறுகிய சிறு கண்ணிகளுடைய வலையுடன் கடலுக்கு சென்று சுறா மீன் வேட்டையில் ஈடுபடுவர். மீன்பிடி வேட்டையில் கிடைத்த மீன்களைத் தம் குலத்தாருடன் பகிர்ந்துண்டு மகிழ்வர்.
  • கடற்கரையோரத்தில் புன்னை மரங்கள் வளர்ந்து அவற்றின் பொன்னிற பூக்கள் உதிர்ந்து காணப்படும். விழவு காலத்தில் மகளிர் புன்னையின் பொன்னிற பூக்களையும் தழையாடையும் அணிந்து கொண்டாடுவர். பாண்டிய நாட்டின் கடற்துறையில் இக்காட்சியை பார்க்கலாம்.
  • முறைப்படி மணம் செய்து கொள்ளாது ஒன்றாக உலவும் ஆண் - பெண் இணையரை பற்றி ஊர் பெண்கள் வம்பு பேசுவர். அவ்விருவரும் மணம் முடித்து கொண்டால் அமைதியாகி விடுவர். அவர்களின் அமைதிக்கு இராமாயணத்தில் இருந்து ஒரு உவமை கூறப்பட்டுள்ளது. இராமன் இலங்கைக்கு போரிடச் செல்வதற்கு முன் ஆலமரத்தடியில் வேள்வி நிகழ்த்தினான். அந்த வேள்வியில் ஒலித்த மந்திர ஒலியில் மரத்தில் இருந்த பறவைகளின் ஒலிக்கு காதுகளுக்கு கேட்காமலானது. ஊர்ப் பெண்களின் வாய்பேச்சு மணப்பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் அடங்கியமை, வேள்வி ஒலியில் மறைந்த பறவைகளின் ஒலியை போன்றது என்கிறார். இராமாயணத்தில் இருந்து நாட்டார் வடிவில் புராணக் கதைகள் வழக்கில் இருந்தமைக்கான சான்றாக அகநானூறு 70-ம் பாடலும் விளங்குகிறது.
  • 256-ம் பாடல் வழியாக வைகை ஆற்றில் புனலாடி ஆடவர் பரத்தையருடன் கூடி மகிழ்வது இயல்பானதாக இருந்திருக்கிறது என்று அறிய முடிகிறது. பரத்தையர் என்போர் தனிச்சமூகமாக இருந்துள்ளனர்.
  • பரத்தையருடன் கூடிவிட்டு வருவது ஊரார், வீட்டினர் முன்னிலையில் இழுக்காக கருதப்பட்டுள்ளது. ஊரார் பரத்தையருடன் சென்ற ஆடவரை அலர் பேசி தூற்றுவதன் வழியாக சமூக மதிப்பு குறைவானவர்களாக கருதியுள்ளார்கள்.
  • பரத்தையுடன் கூடிவிட்டு இல்லம் புகும் ஆணின் செயல் வள்ளைக்கொடி நிரம்பிய குளத்தில் இருக்கும் ஆமை வயலுக்குள் புகுந்து நாசம் விளைவிப்பதற்கு ஒப்புமை கூறப்பட்டுள்ளது. அவனை குறித்து ஊரார் புறம்பேசி கேட்பது, கள்ளூரில் சிறுமி ஒருத்தியை நலம்கெட செய்த அறனில்லாத ஒருவனின் தலை மேல் சுட்ட சுண்ணாம்பு நீரை ஊற்றி தண்டித்தது போல தலைவியின் உள்ளத்தை வருத்துகிறது என்று ஒப்புமை கூறப்பட்டுள்ளது.
  • 354-ம் பாடல் முல்லை நிலத்து வாழ்க்கை முறையையும் போர் முடிந்த பிறகான வீரர்களின் உளநிலையையும் காட்டுகிறது. முல்லை நிலத்தில் கறவை மாடுகள் தம் கன்றுகளுடன் மேய்ச்சல் நிலத்தில் மகிழ்வாக வாழும். ஆயர்கள் மாலையில் புல்லாங்குழலிசைத்து மாடுகளை அணித்திரட்டி இல்லம் திரும்புவர்.
  • போர்க்களத்தில் வெற்றி பெற்ற மன்னனின் படையில் உள்ள யானைகள் மதமதப்புடன் இடி போல் பிளிறும். முதன்மை வீரர்கள் தம் ஏவலர்களுடன் குதிரை பூட்டிய தேரில் விரைந்து இல்லம் திரும்புவர். அவர்கள் உள்ளத்தில் மனைவியை சந்தித்து கூடி மகிழும் விருப்பம் நிரம்ப இருக்கும்.

பாடல் நடை

குறுந்தொகை - 82

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது

வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்
யாரா குவர்கொல் தோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாரா தோரே

அகநானூறு - 354

  • திணை: முல்லை
  • கூற்று:வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது

மத வலி யானை மறலிய பாசறை,
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து,
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2026, 21:01:43 IST