under review

சேக்கிழார்

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சேக்கிழார்
சேக்கிழார் மரச் சிற்பம் by அப்பர் லெட்சுமணன்

நாயன்மார்களின் பெருமையைக் கூறும் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார் பெருமான் (அருண்மொழித் தேவர்) இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பல்வேறு சிவாலயத் திருப்பணிகளைச் செய்த இவர், 63 நாயன்மார்களோடு சேர்த்து 64-ம் நாயன்மாராகப் போற்றப்படுகிறார். இவரது காலம் பொ.யு.பன்னிரண்டாம் நூற்றாண்டு.

பிறப்பு, கல்வி

அருண்மொழித்தேவன் என்னும் இயற்பெயரை உடைய சேக்கிழார், பொ.யு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டிலுள்ள குன்றத்தூரில் பிறந்தார். ’கிழான்’ என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்த குடியில் பிறந்தவர்களுக்கான சிறப்புப் பெயர். அந்தவகையில் இவர் ‘சேக்கிழார்’ என்று அழைக்கப்பட்டார் என்றும், ‘சேவூர்க்கிழார்’ என்பதே மருவி பின்னர் சேக்கிழார் ஆனது என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சேக்கிழார் முறைப்படி கல்வி பயின்று இலக்கண, இலக்கிய அறிவு மிக்கவரானார். புராண, இதிகாசங்கள், சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

சேக்கிழார் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். நாடெங்கும் பயணம் செய்து பல திருத்தலங்களைத் தரிசித்தார். பல சான்றோர்களின் வரலாற்றைக் கேட்டறிந்தார். ஒரு சமயம் திருநாகேஸ்வரம் சென்றவர், அவ்வாலயத்து இறைவன் மீது மிகுந்த அன்பு பூண்டவரானார். அதன் காரணமாக தான் வசிக்கும் குன்றத்தூரில் ‘திருநாகேஸ்வரம்’ என்ற பெயருடைய ஆலயம் ஒன்றை எழுப்பி, தினந்தோறும் அங்கு சென்று வழிபட்டு வந்தார்.

சோழ மன்னனின் மூன்று கேள்விகள்

“தொண்டை நாடு சான்றோருடைத்து” என்னும் கூற்று உண்மையா என்று அறிய விரும்பிய இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன், தொண்டை நாட்டின் மன்னனுக்கு, "மலையில் பெரியது எது?, கடலில் பெரியது எது?, உலகில் பெரியது எது?” - என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு தொண்டை நாட்டுச் சான்றோர்கள் மூலம் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டான்.

தொண்டை மன்னன், தக்க பதில் அளிக்குமாறு சேக்கிழார் பெருமானிடம் வேண்ட, சேக்கிழாரும், அதற்குப் பதிலாக, திருக்குறளிலிருந்து,

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலில் பெரிது
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

- என்று பதில் அளித்தார்.

அந்த பதில்களைக் கண்டு மகிழ்ந்த சோழ மன்னன், இத்தகைய அறிவுடையவர் தனக்கு அமைச்சராக இருக்கும் தகுதியுடையவர் என்றெண்ணினான். தொண்டை நாட்டு மன்னனின் அனுமதியுடன் சேக்கிழாரை வரவழைத்தான். அவரைத் தனது முதல் அமைச்சராக்கி, “உத்தமச் சோழப் பல்லவன்” என்ற பட்டத்தை அளித்தான். அவரது ஆலோசனையின் பேரில் நல்லாட்சி நடத்தி வந்தான்.

சமணமும் சைவமும்

மன்னன் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், அவைப்புலவர்கள் மூலம் ‘சீவகசிந்தாமணி’ போன்ற சிற்றின்பம் சார்ந்த நூல்களை விளக்கச் சொல்லிக் கேட்டு ரசித்து வந்தான். அதுகண்ட சேக்கிழார், மனம் வருந்தினார். மன்னனிடம் சைவத்தின் பெருமையை எடுத்துரைத்ததுடன் தான் நாடெங்கும் சுற்றி அறிந்த சைவ நாயன்மார்களின் வரலாற்றை, அவர்கள் தம் பெருமையை, சிறப்பை மன்னனுக்கு எடுத்துரைத்தார். அது கேட்டு மனம் மகிழ்ந்த மன்னன், மக்கள் பயனுற அதையே ஒரு காப்பியமாக இயற்றுமாறு சேக்கிழாரை வேண்டிக் கொண்டான். சேக்கிழாரும், “இறைவனின் திருவருள் கூட்டுவித்தால் அது நடக்கும்” என்று சொல்லி, “சிதம்பரம் தலத்தில் தங்கி, முழுக்க முழுக்க இறையுணர்வில் தோய்ந்தே அதனைப் பாட வேண்டும்” என்ற தன் விருப்பத்தைச் சொன்னார். மன்னனும் அதற்கு ஒப்புதல் தந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

உலகெலாம்

தில்லை வந்த சேக்கிழார், அம்பலக்கூத்தன் முன் நின்று, “ஐயனே, அறிவதற்கு அரிய உன்னையும், உன் அடியவர்களின் பெருமையையும் சிறியேனாகிய நான் எவ்வாறு பாடுவேன்” என்று மனமிரங்கி, கை கூப்பி வேண்டி நின்றார். அப்பொழுது அங்குள்ள பலரும் அதிசயிக்கும்படி “உலகெலாம்” என்ற அருட்சொல் அசரீரியாக வானில் முழங்கிற்று. அதனையே முதற் சொல்லாகக் கொண்டு,

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

என்று பாடினார்.

பெரியபுராண ஓலைச்சுவடி
பெரிய புராணத் தோற்றம்

அதனையே முதற் பாடலாகவும் கடவுள் வாழ்த்தாகவும் கொண்டு, சுந்தரர் அருளிய “திருத்தொண்டத் தொகை”யினை மூல நூலாகவும், நம்பியாண்டார் நம்பி எழுதிய “திருத்தொண்டர் திருவந்தாதி”யை வழி நூலாகவும் கொண்டு, தாம் நாடெங்கும் பயணம் சென்று கண்ட, கேட்ட உண்மை வரலாறுகளையும், கல்வெட்டுகள், வரலாற்றுத் தரவுகள் மூலம் பெற்ற செய்திகளையும் இணைத்துத் தொகுத்து “மாக்கதை” எனப்படும் “திருத்தொண்டர் புராணத்தை” இயற்றினார்.

நூல் அரங்கேற்றம்

சேக்கிழார் பாடியதை அறிந்த மன்னன், அவரை நாடித் தில்லைக்கு வந்தான். அமைச்சர் தோற்றத்தில் முன்பு இருந்தவர், சிவனடியார் தோற்றத்தில் தற்போது இருப்பதைக் கண்டு அவர் பாதம் பணிந்து வணங்கினான். அப்பொழுது, இறைவன் அசரீரியாக, “மன்னனே, யாம் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழான் ‘தொண்டர் புராணம்’ பாடி முடித்தான். அதன் உரை விளக்கத்தைக் கேட்டு இன்புறுவாயாக” என்று பணித்தார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன், நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தான். சித்திரை மாதத்துத் திருவாதிரை தினத்தன்று நடராஜப் பெருமான் சன்னதியில் அப்புராணத்தை அரங்கேற்றம் செய்தார் சேக்கிழார். அதற்கு பொருள் விளக்கம் செய்ய ஆரம்பித்து, அடுத்த வருடத்துச் சித்திரை மாதத்துத் திருவாதிரை தினத்தன்று அதனை நிறைவு செய்தார்.

தொண்டர் சீர் பரவுவார்

அதைக் கேட்டு நெகிழ்ந்த அநபாய சோழன் என்னும் பெயர் கொண்ட இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன், சேக்கிழார் பெருமானையும், அவர் இயற்றிய பெரிய புராணம் நூலையும் யானை மேல் ஏற்றி, தான் அவர் பின் அமர்ந்து கவரி வீசி, நகர் உலா வந்து சிறப்புச் செய்தான். “திருத்தொண்டர் புராணம்” என்னும் அந்த நூலை பதினோரு திருமுறைகளோடு, பனிரெண்டாம் திருமுறையாகச் சேர்த்துப் பெருமைப்படுத்தினான். சேக்கிழாருக்கு, ’தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பட்டத்தினை அளித்தான்.

மறைவு

“இதுகாறும் அமைச்சர் பணி புரிந்தது போதும், இனி சிவப்பணி புரியலாம்” என்று நினைத்த சேக்கிழார், தனது சகோதரர் பாலறா வாயரை அமைச்சராக்கி விட்டு, தான் தில்லையம்பதியிலேயே தங்கி சிவத்தொண்டுகள் புரிந்து வந்தார். தலங்கள் தோறும் சென்று சிவபெருமானைத் தரிசித்து வாழ்ந்து, இறுதியில் வைகாசிப் பூச நாளில் சிவபதம் அடைந்தார். பெரியபுராணம் என்னும் பெருமைமிகு படைப்பைத் தந்ததால் 64-ஆவது நாயன்மாராக சேக்கிழார் பெருமான் போற்றப்படுகிறார்.

சேக்கிழார் பாடிய நூல்கள்

  • பெரியபுராணம்
  • திருத்தொண்டர் புராண சாரம்
  • திருப்பதிக் கோவை

சேக்கிழார் புராணம்

சேக்கிழாரின் வாழ்க்கையை ’சேக்கிழார் புராணம்' என்ற தலைப்பில் உமாபதி சிவாசாரியார் பாடியுள்ளார். சேக்கிழாரின் வரலாற்றை அறிய உதவும் நூல் இது ஒன்றே. 103 பாடல்கள் இந்த நூலில் உள்ளன. இந்நூலில்,

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி!
ஒல்லையவர் புராணக்கதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி!

- என்று சேக்கிழாரைப் புகழ்ந்துரைத்துள்ளார் உமாபதி சிவாச்சாரியார்.

உசாத்துணை


✅Finalised Page