யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி
யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி (ஆகஸ்ட் 26, 1933 - மே 15, 1975) ஒரு புகழ்பெற்ற தவில் கலைஞர்.
இளமை, கல்வி
தட்சிணாமூர்த்தி இலங்கை காரைத்தீவு பகுதியில் ஆகஸ்ட் 26, 1933-ல் விஸ்வலிங்கத் தவில்காரர் - ரத்தினம் அம்மாள் இணையருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவர்களது குடும்பம் தஞ்சை மாவட்டத்தில் இருந்து இலங்கையில் குடியேறி வாழ்ந்து வந்தது. பின்னர் இணுவில் பகுதிக்கு விஸ்வலிங்கத் தவில்காரர் குடியேறினார்.
விஸ்வலிங்கத் தவில்காரருக்குத் தனக்கு தவில் வாசிப்பில் போதிய அளவு புகழ் கிடைக்கவில்லை என்ற குறை இருந்தது. எனவே மகனை (தட்சிணாமூர்த்தி) குழந்தைப் பருவம் முதலே தவிலில் தானே பயிற்றுவிக்கத் தொடங்கினார். தவில் பயிற்சிக்கு பள்ளிக்கல்வி தடையாக இருக்கவே தட்சிணாமூர்த்திக்கு முதல் வகுப்போடு பள்ளிக்கல்வியை நிறுத்த நேர்ந்தது.
தட்சிணாமூர்த்திக்கு எட்டு வயதான போது இணுவில் சின்னத்தம்பி பிள்ளையிடம் தவில் கற்கத் தொடங்கினார். காலை ஐந்து மணிக்கு குரு வீட்டுக்குச் சென்று எட்டு மணி நேரம் வகுப்பில் வாசித்துவிட்டு வீடு திரும்பியதும் தந்தை எட்டு மணி நேரம் தவில் சாதகம் செய்ய வைத்தார். ஒவ்வொரு தினமும் பதினாறு மணி நேர தவிற்பயிற்சி இரண்டு வருடங்கள் நடந்தது. அதன் பின்னர் இலங்கையில் புகழ்பெற்ற காமாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தட்சிணாமூர்த்தியின் பயிற்சி தொடர்ந்தது. இது தவிர அங்கு புகழ்பெற்ற கலைஞர்களின் கச்சேரிகள் நடக்கும் போது தட்சிணாமூர்த்தியை அழைத்துச் சென்று மணிக்கணக்கில் அவர்களது வாசிப்பைக் கேட்கச் செய்து வீடு திரும்பியதும் அதில் நுட்பமான சிறப்பு அம்சங்களை வாசிக்க வைப்பார் தந்தை விஸ்வலிங்கம் பிள்ளை.
இலங்கையில் பயிற்சி பெறுவது போதாது என்று நினைத்து இந்தியா அழைத்து வந்து நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையிடம் மகன் தட்சிணாமூர்த்தியை மேற்பயிற்சிக்கு ஒப்படைத்தார் தந்தை. ஒன்றரையாண்டுகள் பயிற்சிக்குப் பிறகு தட்சிணாமூர்த்தி தவில் வாசிப்பில் சிறந்த தேர்ச்சி பெற்றுவிட்டதாக ஆசீர்வதித்து ராகவப் பிள்ளை அனுப்பிவைத்தார். பின்னர் இலங்கையின் பல்வேறு நாதஸ்வர வல்லுனர்களுக்கு தவில் வாசிக்கத் துவங்கினார் தட்சிணாமூர்த்தி.
யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி லயசம்பந்தமான நுட்பங்களில் திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளையைத் தன் மானசீகக் குருவாகக் கொண்டிருந்தார் .
தனிவாழ்க்கை
தட்சிணாமூர்த்தியின் தந்தை விஸ்வலிங்கத் தவில்காரரின் முதல் மனைவிக்கு இரு ஆண்களும் இரு பெண்களும் இருந்தனர்:
- ருத்ராபதி (நாதஸ்வரம்)
- மாசிலாமணி (நாதஸ்வரம் மற்றும் நாடகக் கலைஞர்)
- கௌரி (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் மதுரை ராஜூ)
- புவனேஸ்வரி (கணவர்: தவிற் கலைஞர் திருமெய்ஞானம் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை)
தட்சிணாமூர்த்திக்கு எட்டு உடன் பிறந்தவர்கள்.
- ராஜேஸ்வரி (கணவர்: தவிற் கலைஞர் அளவெட்டி கணேசரத்தினம் பிள்ளை)
- மகாலிங்கம்
- பவானி
- ராஜரத்தினம்
- பாலாம்பிகை
- சகுந்தலாம்பிகை
- சந்திரோதயம்
- கருணாமூர்த்தி (தவில்)
தவில் கலைஞர் அளவெட்டி செல்லதுரை பிள்ளையின் மகள் மனோன்மணியை தட்சிணாமூர்த்தி திருமணம் செய்தார். இவர்களுக்கு கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர்(தவில்), உதய செல்வி, ஞான பண்டிதன் ஆகியோர் பிறந்தனர்.
தட்சிணாமூர்த்தி அளவெட்டியில் 'கலாபவனம்’ என்ற பெயரில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார். உள்ளூர் சக கலைஞர்களால் மறைமுகமான தொல்லைகளுக்கு ஆளாகி குடும்பத்தோடு இந்தியாவுக்கு வந்து தஞ்சையில் குடியேறினார்.
இசைப்பணி
யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைத்தவர் நீடாமங்கலம் ஷண்முக வடிவேல் பிள்ளை. சென்னையில் ஆண்டுதோறும் தமிழிசைச் சங்கம் நடத்தும் இசை விழாவில் காருகுறிச்சி அருணாசலத்தின் கச்சேரியில் நீடாமங்கலம் ஷண்முக வடிவேலும் தட்சிணாமூர்த்தியும் தவில் வாசித்ததை இரவு 12 மணி வரை வானொலி நிலையம் நேரடியாக ஒலிபரப்பியது.
தட்சிணாமூர்த்தி லயக்கணக்குகளிலும், உருப்படிகளிலும், கற்பனைத் திறனிலும் சிறந்து விளங்கினார். எப்பேர்ப்பட்ட லயக் கணக்குகளையும், எந்தத் தாளத்திலும், எத்தனை வேகத்தில் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் வாசிக்கக் கூடியவர்.
சங்கீர்ண கதியில் மிக விருப்பம் கொண்டிருந்த தட்சிணாமூர்த்தி பதினோரு அட்சரமுடைய ஒரு தாளஜதியை உருவாக்கி அதில் தனியாவர்த்தனம் வாசித்திருக்கிறார். அரித்துவாரமங்கலத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் இந்த ருத்ரகதியில் மூன்று மணிநேரம் தவில் வாசித்த இவரது மேதமை இன்றும் புகழப்படுகிறது. இது போல பதின்மூன்று மற்றும் பதினேழு அட்சரங்கள் கொண்ட ஜதியையும் உருவாக்கு அவற்றிலும் மிகச் சரளமாக தவில் லயவின்யாசம் செய்தவர் தட்சிணாமூர்த்தி.
தவில் வாத்தியம் யாருடையதாக இருந்தாலும் அதன் ஒசை நயம் குறைவுபட்டதாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன் வாசிப்பை மாற்றிக் கொண்டு சிறப்பானதாக ஒலிக்கச் செய்யும் வித்தையை நன்கறிந்திருந்தார்.
புகழ்மிக்க பாடகர்கள் கேட்டுக் கொண்டபோதும் கூட தவில் என்பது நாதஸ்வரத்துடன் வாசிக்கப் படவேண்டுமென்பதே மரபு என இறுதி வரை எந்தப் பாடகருக்கும் வாசிக்க மறுத்துவிட்டார். அதே போல் தனித் தவில் நிகழ்ச்சிகளுக்கு நிறைய பணம் தருவதற்கு வாய்ப்புகள் வந்த போதிலும் தவில் என்பது பக்க வாத்தியக் கருவிதான் என்று வலியுறுத்துவார்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தவில் வாசித்துப் புகழும் விருதுகளும் பெற்றிருக்கிறார் தட்சிணாமூர்த்தி.
உடன் வாசித்த இசைக்கலைஞர்கள்
யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தியுடன் தவில் வாசித்த பிற தவிற் கலைஞர்கள்:
- காமாட்சி சுந்தரம் பிள்ளை
- பி.எஸ். (விசா) ராஜகோபால் பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
- திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை
- வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை
- வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை
யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தியுடன் நாதஸ்வரம் வாசித்தவர்கள்:
- யாழ்ப்பாணம் நல்லூர் முருகய்யா பிள்ளை
- சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- காருகுறிச்சி அருணாசலம்
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை
- சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை
- திருவீழிமிழலை கோவிந்தராஜ பிள்ளை சகோதரர்கள்
- செம்பொன்னார்கோவில் முத்துகுமாரஸ்வாமி சகோதரர்கள்
- திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை
- தருமபுரம் கோவிந்தராஜ பிள்ளை
- கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை
- மதுரை சேதுராமன் சகோதரர்கள்
- அளவெட்டி பத்மநாபன்
- ஷேக் சின்ன மௌலா
- நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
- அளவெட்டி பாலகிருஷ்ணன்
- நீடாமங்கலம் ஷண்முக வடிவேல் பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
மறைவு
யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி சிறிது காலம் உடல்நலம் குன்றியிருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கு மூளாய் என்ற ஊரில் மே 15, 1975 அன்று காலமானார். அவரது மனைவியும் தட்சிணாமூர்த்தி மறைந்த முப்பதாம் நாளில் (ஜூன் 14, 1975) காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 09:39:35 IST