being created

மணிக்கொடி (இதழ்)

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


This page is being created by User: muthu_kalimuthu

'மணிக்கொடி' செப்டம்பர் 17, 1933 ல் அரசியல் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வார இதழாக செயல்பட்டது. கே.சீனிவாசன், வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் செயல்பட்டு வந்தது. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு 'மணிக்கொடி' இதழ் முக்கிய பங்கு வகித்தது.

இதழ் வரலாறு

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. வ.ரா., டி.எஸ். சொக்கலிங்கம், சீனிவாசன் கட்டுரைகள் புது சிந்தனையாக அமைந்தன. தமிழில் புது முயற்சியான 'நடைச்சித்திரம்' என்பதை வ.ரா. இதில் தொடர்ந்து எழுதினார்.

சிட்டி, ந. ராமரத்னம், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி ஆகியோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். பின்னர் ‘மணிக் கொடி' வார இதழில் சிறுகதைகளும் வெளியாகின. மணிக்கொடி வார இதழ் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தது.

அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்கும், கட்டுரைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்த 'மணிக்கொடி' வாரப் பதிப்பு 1935 ஜனவரி யில் நின்று விட்டது. பி.எஸ். ராமையா தீவிரமாக முயன்று, 1935 மார்ச் மாதம் முதல் 'மணிக்கொடி'யை மாதம் இருமுறை பத்திரிகையாகக் கொண்டு வந்தார்.

மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைப் பத்திரி இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது.

இந்த முதல் இதழில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி’, சி.சு. செல்லப்பாவின் 'ஸரஸாவின் பொம்மை', பி.எஸ். ராமையாவின் 'புலியின் பெண்டாட்டி', சங்கு சுப்பிரமணியனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலியன பிரசுரம் பெற்றன.

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். மணிக்கொடி சீனிவாசன், பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன், கு.ப. ரா., இவர்கள் ஒரு பிரிவு. க.நா.சு., சி.சு. செல்லப்பா, தி.ஜா., சிட்டி, மௌனி, லா.ச.ரா., நா. சிதம்பர சுப்பிரமணியன் இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.

முதல் பிரிவினர், மணிக்கொடியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்றவர்கள். சிறுகதையின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள்.

தொடக்க கால மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் சிறுகதை, நாவல், கவிதை என்ற பிரிவுகளில் சோதனை முயற்சிகள் செய்தவர்கள். பிறநாட்டு சாத்திரங்களைப் படித்து அதுபோலவே எழுத முன் வந்தவர்கள்.

புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், பி.எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி.சு. செல்லப்பா, மௌனி ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி.ரா., எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா.ச. ராமாமிர்தம் முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு.

இலக்கிய அழகியல்

தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும், 'மணிக்கொடி' தோன்றியுள்ளது என்று பி.எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சாதனையை மணிக்கொடியின் பிந்திய இதழ்கள் செய்து காட்டின.

‘பிச்சமூர்த்தியின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம்ம. மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது ('மணிக்கொடி காலம்').

மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.

இது குறித்துப் புதுமைப்பித்தன் 'ஆண்மை' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்

'மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய இடம் தொடுக்கும்- உற்காகம் ஊட்டும்- வரவேற்கும் பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.

உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி அளித்தது.

மணிக்கொடியில் எழுதியவர்கள் ஒரே விதமான இலக்கியக் கொள்கையோ, நோக்கும் போக்குமோ கொண்டிருந்தவர்கள் அல்லர். ஒரே தரத்தினரும் இல்லை. அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை அதிகமாகவே இருந்தது. அதை வேகத்தோடு வெளியிடவும் அவர்கள் தயங்கியதில்லை. ஆனால், அவர்கள் உலக இலக்கியத்தின் சிறுகதை வளத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள். அதே தரத்தில் தமிழிலும் சிறுகதைகள் வரவேண்டும் என்ற தீவிர வேட்கை கொண்டவர்கள். ஆர்வமும் எழுத்து அனுபவமும் இலக்கிய ருசியும் உடையவர்கள். தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்காக உற்சாகமாக உழைப்பதிலும் அவர்கள் ஒத்த மனம் உடையவர்களாக இருந்தார்கள்.

மணிக்கொடியின் பிற்காலம்

மணிக்கொடி இலக்கியத் தரத்துடன் சிறுகதைத் துறையில் அரிய சாதனைகள் புரிந்து கொண்டிருந்த போதிலும், பொருளாதார வெற்றி காண முடிந்ததில்லை.

கூட்டு ஸ்தாபனம் 'நவயுகப் பிரசுராலயம் லிமிடெட்' என்ற பெயரில் இயங்கியது. அது முதலாவதாக, ஏ. என். சிவராமன் எழுதிய ‘மாகாண சுயாட்சி' என்ற நூலை எட்டணா விலையில் பிரசுரித்தது. தொடர்ந்து, ப.ராமஸ்வாமி எழுதிய 'மைக்கேல் காலின்ஸ்', கி. ரா. வின் 'தேய்ந்த கனவு' (சார்லஸ் டிக்கன்சின் ‘இரு நகரங்களின் கதை' மொழிபெயர்ப்பு), கு. பா. ரா. வின் 'இரட்டை மனிதன்' (டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் மொழிபெயர்ப்பு ) போன்றவற்றை வெளியிட்டது. எட்டணா விலையில், அதிகப் பக்கங்களுடன் பிரசுரமான இவ்வெளியீடுகள் வாசகர்களின் வரவேற்பை மிகுதியாகப் பெற்றன.

அதே சமயம், பெரிய புத்தகங்களாக, வெவ்வேறு விலை விகிதங்களில், 'புதுமைப்பித்தன் கதைகள்', 'உலகத்துச் சிறுகதைகள்' ( பு. பி. மொழி பெயர்த்தவை ), 'பாஸிஸ்ட் ஜடாமுனி' ( சொ. விருத்தாசலம் என்ற பெயரில் பு. பி. எழுதியது. சர்வாதிகாரி முசோலினியின் வரலாறு), 'கப்சிப் தர்பார்' ( புதுமைப்பித்தனும் ந. ராமரத்னமும் சேர்ந்து எழுதிய ஹிட்லர் வரலாறு) போன்றவற்றையும் வெளியிட்டது.

'மணிக்கொடி' பத்திரிகை சுயமான சிறுகதைப் படைப்புகளுடன், உலக இலக்கியங்களின் சிறந்த கதைகளையும், இந்திய மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளாக வழங்கிக் கொண்டிருந்தது.

சிந்தனைக்கு வேலை கொடுக்கும் பகுதியாக இலக்கியங்களிலிருந்து வாசகர்களின் ‘தெரிந்ததும் தெரியாததும்' அமைந்திருந்தது. இலக்கியங்களிலிருந்து தொகுக்கப்பட்ட கேள்விகளும், வேறு பல வினாக்களும் இப்பகுதியில் இடம் பெற்றன. அவற்றுக்கு உரிய விடைகள் விரிவாக மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன.

பிற்காலத்தில், வாசகர்களை வசீகரிப்பதற்காக சினிமா நடிகைகள், நடிகர்கள், படக்காட்சிகளின் படங்களும், திரைப்பட விமர்சனங்களும் மணிக்கொடியில் சேர்க்கப்பட்டன.

பத்திரிகை லிமிடெட் கம்பெனியின் நிர்வாகத்துக்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு பி. எஸ். ராமையா ஆசிரியப் பொறுப்பை விட்டு விட நேரிட்டது. மணிக்கொடி நிர்வாகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1938 ஜனவரி 27-ம் நாளுடன், மணிக்கொடியோடு ராமையாவுக்கு இருந்த தொடர்பு முடிந்தது.

ப. ராமஸ்வாமி ( ப.ரா. ) அதன் ஆசிரியரானார். அவருடைய பொறுப்பில், மணிக்கொடியில் அரசியல் விவகாரங்களும் மிகுந்த கவனிப்பைப் பெற்றன. ஏ. ஜி. வெங்கடாச்சாரியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் பல பக்கங்களை எடுத்துக் கொண்டன. அரசியல் கார்ட்டூன்கள் வெளியிடப் பெற்றன.

ராமையா காலத்தில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் மணிக்கொடிக்குக் கதைகள் எழுதி, அதற்குத் தனிச்சிறப்பு அளித்துவந்த படைப்பாளிகள் சிறிது சிறிதாகத் தங்கள் தொடர்பைக் குறைத்து, அப்புறம் எழுதாமலே இருந்துவிட்டார்கள். புது எழுத்தாளர்களின் கதைகள் அதிகம் வந்துள்ளன. உலகத்துக் கதைகளின் மொழிபெயர்ப்புகள் வேறு சிலரால் ( முக்கியமாக, ப. ரா. வின் தம்பி 'சஞ்சீவி' யால்) செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த விதமாக ‘மணிக்கொடி' 1930 கடைசிவரை வெளிவந்திருக்கிறது. பிறகு நின்றுவிட்டது. நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் நிறுவனத்தினர் புத்தகப் பிரசுரத்தில் மட்டுமே கருத்துச் செலுத்தலாயினர்.

'மணிக்கொடி' ஒரு வரலாறு ஆகிவிட்டது. இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை அது அமைத்துக் கொண்டது.

பின்வந்த இலக்கியவாதிகள் மணிக்கொடி எழுத்தாளர்களைத் தங்கள் முன்னோடிகளாகக் கொண்டார்கள். பின்னர் இலக்கியப் பத்திரிகை நடத்த விரும்பியவர்கள் ‘மணிக்கொடி' மாதிரி பத்திரிகை நடத்த வேண்டும்' என்று ஆசைப்பட்டார்கள். அந்த அளவுக்கு மணிக்கொடி ஒரு 'முன்மாதிரி' ஆகத் திகழ்ந்தது.

சிறுகதைக்குச் சீரிய பணி ஆற்றியதோடு, மணிக்கொடி, யாப்பில்லாக் கவிதையான 'வசனகவிதை'க்கும் அரங்கம் அமைத்துக் கொடுத்தது. ந.பிச்சமூர்த்தியும், கு. ப. ராஜகோபாலனும் தங்கள் கவிதை முயற்சிகளை இப்பத்திரிகையில் வெளியிட்டார்கள்.

உசாத்துணை