under review

பெரியசாமித் தூரன்: Difference between revisions

From Tamil Wiki
m (Reverted edits by Thiru (talk) to last revision by Ganesh.Periasamy)
Tag: Rollback
m (seo change)
Line 1: Line 1:
{{#seo:
|title=பெரியசாமித் தூரன்
|title_mode=append
|keywords=பெரியசாமித் தூரன்
|description=தமிழறிஞர், தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர். முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். நவீனத்தமிழ் அறிவியக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் தமிழின் முதல் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர் எனும் வகையில் தமிழ் நவீன அறிவியக்கத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் முக்கியமானவர்.
|image=/images/og/wiki-thuran.png
|image_alt=பெரியசாமித் தூரன்
}}
{{Read English|Name of target article=Periyasamy Thooran|Title of target article=Periyasamy Thooran}}
{{Read English|Name of target article=Periyasamy Thooran|Title of target article=Periyasamy Thooran}}
[[File:PeriasamyThooran.jpg|thumb|பெரியசாமித் தூரன்]]
[[File:PeriasamyThooran.jpg|thumb|பெரியசாமித் தூரன்]]

Revision as of 13:38, 10 May 2022

To read the article in English: Periyasamy Thooran. ‎

பெரியசாமித் தூரன்
பெரியசாமித் தூரன்
பெரியசாமித் தூரன்
பெரியசாமித் தூரன் ரா.கி.ரங்கராஜன்
தூரன் அஞ்சலி கல்கி
தூரன்

பெரியசாமித் தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) (ம. ப. பெரியசாமித் தூரன். பெ.தூரன்). தமிழறிஞர், தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர். முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். நவீனத்தமிழ் அறிவியக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் தமிழின் முதல் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர் எனும் வகையில் தமிழ் நவீன அறிவியக்கத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் முக்கியமானவர்.

பிறப்பு, கல்வி

பெரியசாமித் தூரன் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி அருகே மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பழனி வேலப்பக் கவுண்டருக்கும், பாவாத்தாளுக்கும் செப்டம்பர் 26, 1908-ல் பிறந்தார். தூரன் என்பது கொங்கு கவுண்டர்களில் ஓரு துணைப்பிரிவு (கூட்டம் எனப்படுகிறது). தூரன் சிறு வயதில் தாயாரை இழந்தவர். இவரது இயற்பெயர் மஞ்சக்காட்டு வலசு பழனியப்பக்கவுண்டர் பெரியசாமி.

சொந்த ஊரான மொடக்குறிச்சியில் தொடக்கக் கல்வி பயின்றார். அப்போது ஆசிரியராக இருந்த திருமலைச்சாமி அய்யங்காரால் அவருக்கு தமிழார்வம் உருவானது. ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்தில் தொடர்ந்து நூல்களை வாசித்து வந்தார். உயர்நிலைக் கல்வியை ஈரோடு மகாஜனசபா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 1927-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் அறிவியல் பாடங்களில் இண்டர்மிடியட் முடித்தபின் 1929-ல் கணிதத்தில் எல்.டி (ஆசிரியர் பயிற்சி ) பட்டம் பெற்றார்.

1930-ல் பட்டப்படிப்புக்கு சேர்ந்தபோதிலும் இந்திய விடுதலைப் போராட்ட நாயகர்களான பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகியோர் 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் தூக்கிலிடப்பட்டபோது அதை எதிர்த்து நிகழ்ந்த மாணவர் கிளர்ச்சியில் கலந்து கொண்டமையால் இளங்கலை இறுதி ஆண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார். இறுதிவரை பட்டப்படிப்பை முடிக்கவில்லை.

தனிவாழ்க்கை

தூரன் மே 01, 1939-ல் காளியம்மாளை மணம் செய்து சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி ஆகிய பெண்மக்களுக்கும் சுதந்திரக்குமார் என்ற மகனுக்கும் தந்தையானார். சுதந்திரக்குமாரின் மனைவி செண்பகத்திலகம்.

1929 முதல் ஆசிரியராக பணியாற்றிய தூரன் சென்னையில் 1948-1968 வரை தமிழ்க் கலைக்களஞ்சியப் பணியில் முதன்மை ஆசிரியராகவும் 1968 முதல் 1976 வரை குழந்தைகள் கலைக்களஞ்சியப் பணி முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றி 1976-க்குப்பின் ஓய்வுபெற்று முழுநேர எழுத்தாளரானார். கோவையில் வாழ்ந்து மறைந்தார்.

கல்விப்பணி

தூரன் பள்ளி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கினார். 1929 முதல் கோபிசெட்டிப்பாளையம் வைரவிழா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பட்டப்படிப்பை கைவிட்டபின் 1931 முதல் போத்தனூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் இயங்கிய ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தேசிய கல்வி இயக்கத்தை ஒட்டி காந்தியக் கல்விக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் ராமகிருஷ்ணா வித்யாலயா நிறுவனங்கள் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கி நடத்தியவை. அங்கு பணியாற்றும்போது கல்வி நிலையங்கள் குறைவான செலவில் நடத்தப்படவேண்டும் என்னும் கொள்கையின்படி தூரன் மிகக்குறைந்த ஊதியமே பெற்றுக் கொண்டு துறவி போல வாழ்ந்தார் என்று அவினாசிலிங்கம் செட்டியார் தன் நினைவுக் குறிப்புகளில் குறிப்பிடுகிறார். 1934-ல் ஹரிஜன நிதி திரட்டும் பொருட்டு காந்தி கோவை வந்தபோது ராமகிருஷ்ணா பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது காந்திக்கு வரவேற்புரை ஆற்றி அவர் உரையை மொழிபெயர்த்தவர் பெ.தூரன். 1948 வரை ராமகிருஷ்ணா பள்ளிகளில் பணியாற்றினார்.

அரசியல்

பெரியசாமித் தூரன் 1931-ல் காங்கிரஸ் இளைஞர் அமைப்பு நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு கல்வியை துறந்தவர். காங்கிரஸ் முன்வைத்த கிராம நிர்மாணச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆசிரியப் பணி ஆற்றும்போதே கோபிசெட்டிப்பாளையம், போத்தனூர் பகுதிகளில் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டார். கதர்ப்பிரச்சாரம் போன்றவற்றில் கோவை ஐயாமுத்துவுடன் இணைந்து பணியாற்றினார். தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாருக்கு அணுக்கமானவராக இருந்த தூரன் இறுதிவரை காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்டிருந்தார்.

ஆன்மிகம்

பெரியசாமித் தூரன் குடும்பமே முருக பக்தர்கள். சென்னிமலை முருகன் மேல் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பெரியசாமித் தூரன் முருகன் மீது சிறந்த பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழக முருகபக்திப் பாடல்களில் முதன்மையானது என்று கருதப்படும் ’முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’[1] பெரியசாமித் தூரனால் பாடப்பட்டது. இறுதிக்காலத்தில் திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் மீது பற்று கொண்டிருந்தார். யோகி ராம்சுரத் குமார் குறித்தும் இசைப்பாடல் இயற்றியிருக்கிறார்.

இதழியல்

பெரியசாமித் தூரன் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ மாணவராக இருந்தபோது சி. சுப்பிரமணியம், நெ.து. சுந்தரவடிவேலு, ஓ.வி. அளகேசன், இல.கி. முத்துசாமி, கே.எம். இராமசாமி, கே.எஸ். பெரியசாமி, கே.எஸ். பழனிசாமி போன்ற கல்லூரித் தோழர்களுடன் இணைந்து ‘வனமலர்ச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் ‘பித்தன்’ என்ற இதழை நடத்தினார். திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் நடத்திய சாது அச்சுக் கூடத்தில் பித்தன் இதழ் அச்சிடப்பட்டது.

ஆங்கிலத்தில் வெளிவந்த "டைம்" இதழ் தோற்ற அமைப்பில் "காலச்சக்கரம்" என்ற இதழை பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் தந்தையார் ப. நாச்சிமுத்துக்கவுண்டர் ஆதரவுடன் தொடங்கிப் பல்சுவை இதழாக நடத்தினார். அதில் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் துணையுடன் காளமேகப் புலவரின் சித்திரமடல், வடிவேல் பிள்ளையின் மோகினிவிலாச நாட்டிய நாடகம், அவிநாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம், சாமிநாதக் கவிஞரின் கொன்றைவேந்தன் வெண்பா ஆகியவற்றை பதிப்பித்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

தூரன் வகித்த பொறுப்புகள்

  • தமிழ் வளர்ச்சிக் கழகச் செயலர்
  • குழந்தை எழுத்தாளர் சங்கச் செயலர்
  • தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
  • பண்ணாராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர்

இலக்கிய வாழ்க்கை

பெரியசாமித் தூரனின் இலக்கிய ஆர்வம் திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரின் செல்வாக்கில் இருந்து உருவானது. உருவாகி வந்த இந்திய தேசிய இலக்கியத்தை இளமையிலேயே கூர்ந்து கற்றார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் விரிவாக வாசிக்கும் வழக்கம் இருந்தமையால் ஐரோப்பிய இலக்கியமும், இந்திய இலக்கியமும் அவருக்கு அறிமுகமாயின. தூரனின் இலக்கியச் செயல்பாடுகள் மரபுக்கவிதை, வசனகவிதை, சிறுகதைகள், நாடகங்கள், சிறுவர் இலக்கியம், பாரதி ஆய்வுகள், பல்துறை அறிமுக நூல்கள், மொழியாக்கங்கள் என அறிவுச் செயல்பாட்டின் எல்லா களங்களிலும் பரவியிருந்தன.

மரபுக்கவிதை

பெரியசாமித் தூரன் தமிழில் இருபதாம் நூற்றாண்டில் மறுவடிவம் பெற்ற மரபுக்கவிதையில் முதன்மையாக ஈடுபாடு கொண்டிருந்தார். சி.சுப்ரமணிய பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை ஆகியோரை அவருடைய முன்னோடிகள் என்றும், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையை அவருடைய இணைகாலத்தவர் என்றும் சொல்லலாம். பழமையான செய்யுள்நடைக்கு பதிலாக அன்றாடப்பேச்சுக்கு அண்மையான மொழியில் ஆசிரியப்பா, சிந்து போன்ற எளிய யாப்பில் அமைந்தவை இக்கவிதைகள்.

தூரன் எழுதிய கவிதைகள் இளந்தமிழா, மின்னல் பூ, நிலாப் பிஞ்சு, பட்டிப் பறவைகள் முதலிய கவிதை நூல்கள் பின்னாளில் ‘தூரன் கவிதைகள்’ என்ற பெயரில் ஒரே நூலாக வெளிவந்தன. அவற்றைப் பாரி நிலையம் வெளியிட்டுள்ளது. தூரன் கவிதைகளில் வெவ்வேறு வடிவங்களை பயன்படுத்தியிருக்கிறார். நாட்டார் பாடல்களின் வடிவில் அமைந்த ’கைவளம்’ போன்ற கவிதைகள், ‘வீரன் குமரன்’, ‘கிழவியும் ராணாவும்’, ‘பிருதிவி ராஜ் - சம்யுக்தை’ போன்ற சிறிய கதைக் கவிதைகள், ‘காதலி கடிதம்’ ‘பதில்’, ‘கடிதம்’ போன்ற கடித வடிவக் கவிதைகள், உரையாடல் வடிவில் அமைந்த ‘ஓடக்காரன்’ போன்ற பாடல்கள் இவருடைய தொகுதிகளில் உள்ளன.

வசனகவிதை

தூரன் பாரதியாரின் வசனக் கவிதைகளின் பாணியில் ‘இருளும் ஒளியும்’, ‘அறிவாய் நீ’, ‘மேலே பற’, ‘மானிடா எழுக’ ‘யாரது?’ ‘வாழ்க்கைப் பயணம்’, ‘சந்திப்பு’, ‘நமது வழி’ முதலிய வசன கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தூரனுக்கு அன்று எழுத்து இதழ் வழியாக உருவாகி வந்துகொண்டிருந்த நவீன புதுக்கவிதை இயக்கத்துடன் தொடர்பு இருக்கவில்லை.

சிறுவர் இலக்கியம்

தூரன் எழுதிய நூல்களில் அதிக எண்ணிக்கையில் அமைந்தவை குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள். சிறுவர்களுக்காக 16 புத்தகங்களை எழுதினார். இவற்றில் கதை நூல்கள் 6, நாவல்கள் 5, அறிவியல் கதைகள் 2, கவிதை நூல்கள் 3 ஆகியன அடங்கும். இந்த நூல்களை எல்லாம் சென்னை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

தூரன் சிறுவர்களுக்காக எழுதிய பாடல்கள் குழந்தைகளின் வெவ்வேறு வயதுகளை கருத்தில் கொண்டு அமைந்தவை. மிக இளவயதுக் குழந்தைகளுக்கான மழலைப் பாடல்கள் முதல் பள்ளி மாணவர்களுக்கான கதைநூல்கள் வரை அவை பல தரங்களில் உள்ளன. ‘ஆனையும் பூனையும்’, ‘நல்ல நல்ல பாட்டு’ ‘மழலை அமுதம்’ போன்ற மழலைப்பாடல்கள் வானொலி வழியாக பரவலாக சென்றடைந்தவை. ‘ஓலைக்கிளி’, ‘தம்பியின் திறமை’, ‘நாட்டியராணி’, ‘மஞ்சள் முட்டை’, ‘நிலாப்பாட்டி’ முதலிய குழந்தைக் கதைகள் புகழ்பெறறவை. சாகசத்தன்மையும் அறிவியல் தகவல்களும் கொண்ட குழந்தை நாவல்களான ‘மாயக்கள்ளன்’, ‘சூரப் புலி’, ‘கொல்லிமலைக் கள்ளன்’, ‘சங்ககிரிக் கோட்டை மர்மம்’, ‘தரங்கம்பாடித் தங்கப்புதையல்’ முதலியவை சிறுவர்களால் விரும்பி வாசிக்கப்பட்டவை.

கல்வியியல்

அறிவியல் கருத்துக்களை எளியமுறையில் அறிமுகம் செய்யும் சிறுவர் நூல்களை தூரன் எழுதியிருக்கிறார். தூரனின் குழந்தைகள் கலைக்களஞ்சியம் தமிழ் கல்வித்துறையின் அடிப்படை நூலாக இன்றும் திகழ்கிறது. குழந்தைகளின் உளவியலை பெற்றோரும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளும் பொருட்டு எழுதப்பட்டவை ‘மனமும் அதன் விளக்கமும்’, ‘கருவில் வளரும் குழந்தை’, ‘பாரம்பரியம்’, ‘அடிமனம்’, ‘பெற்றோர் கொடுத்த பெருங்கொடை’, ‘குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்’ ஆகிய நூல்கள்.

தமிழ்ச் சூழலில் பள்ளிக் கல்வி பரவலாகி வந்த காலகட்டத்தில் வெளிவந்த இந்நூல்கள் மிக அடிப்படையான பார்வை மாற்றங்களை உருவாக்கியவை. மரபான திண்ணைப் பள்ளிகளிலும், குலக்கல்விமுறையிலும் குழந்தைகளை கடுமையான தண்டனைகள் வழியாகக் கற்பிக்கும் முறையே இருந்து வந்தது. குழந்தைகளை பெரியவர்களின் உலகுக்குள் இழுத்துச் செல்லும் தன்மை கொண்டவை அக்கல்விமுறைகள். தூரன் குழந்தைகளின் உலகுக்குள் ஆசிரியரும் பெற்றோரும் சென்று கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கோணத்தை முன்வைத்தார். அவருடைய கல்வி நூல்கள் தமிழக ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் விரிவாக பயன்படுத்தப்பட்டன.

பாரதியும் தமிழகமும்
மொழிபெயர்ப்புகள்

தூரன் சிறந்த மொழிபெயர்ப்பாளர். கலைக்களஞ்சியத்திற்கு பெறப்பட்ட ஆங்கிலக் கட்டுரைகளை அவரே மொழியாக்கம் செய்தார். இரவீந்திரர் குழந்தை இலக்கியம் (1903), நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்திற்காக ஜமால் ஆரா எழுதிய பறவைகளைப் பார் (1970) ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்தார். ஜாக் லண்டன் எழுதிய The Call of the wild நாவலை கானகத்தின் குரல் என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். தமிழ் நவீன இலக்கியச் சூழலில் செல்வாக்கைச் செலுத்திய நூல் கானகத்தின் குரல்.

நாடகங்கள்

தூரன் அழகு மயக்கம் (1955), சூழ்ச்சி (1955), பொன்னாச்சியின் தியாகம் (1955), ஆதி அத்தி (1958), காதலும் கடமையும் (1957), மனக்குகை (1960), இளந்துறவி (1961) ஆகிய நாடகங்களை எழுதினார். இவரது நாடகங்களில் உள்ள முகவுரைகளில் நாடகவியல் என்னும் அறிவுத்துறை பற்றிய கருத்துக்களை விரிவாக எழுதியிருக்கிறார்.

சங்ககாலக் காதலர்களான ஆதிமந்தி ஆட்டனத்தியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாரதிதாசன் ‘சேரதாண்டவம்’ என்ற தலைப்பில் ஒரு நாடகமும், கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ என்ற தலைப்பில் காவியமும், துரோணன் ‘கலங்கரைத் தெய்வம்’ என்னும் நாடகமும் எழுதினர். தூரன் இதே கதையை ‘ஆதி அத்தி’ என்ற தலைப்பில் நாடகமாக்கியுள்ளார். இதில் அத்தி - ஆதி - மருதி ஆகியோரின் முக்கோணக் காதல் கூறப்படுகிறது.

”தூரனின் நாடகங்களில் நாட்டுப்பற்று, தூய காதல், உள்ளத்து முரண்பாடுகளின் மோதல், கலை விளைவிக்கும் தடுமாற்றம், மகளிரின் தியாகம், ஆழ்மனம் நிகழ்த்தும் விளையாட்டு ஆகிய அடிப்படைகள் மிகுதியாகத் துலங்குகின்றன” என்கிறார் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய சிற்பி பாலசுப்ரமணியம்.

துறைசார் அறிமுக நூல்கள்

தூரன் தமிழில் அறிவியல் பேசப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டிருந்தார். “படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்த நமது நாட்டு விஞ்ஞானிகள் எவரும், தாங்கள் கண்டுபிடித்ததை தாய்மொழியில் நூல்களாக இயற்றாததால், ஆங்கிலம் படிக்காத பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லை” என ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். எளிய தமிழில் மாணவர்களுக்கான அறிவியல் நூல்கள் உருவாவதற்கு எழுதி வழிகாட்டினார். தமிழகத்தில் பள்ளிகளில் அறிவியல் கல்வி பரவலாக அறிமுகமான தொடக்கக் காலத்தில் எழுதப்பட்ட தூரனின் நூல்கள் பின்னர் பாடநூல்கள் எழுதப்படவும் வழிகாட்டியாக அமைந்தவை.

நினைவுக் குறிப்புகள்

தூரன் எழுதிய ஏழு அறிவியல் நூல்களும் 60களில் வந்தவை. பாரம்பரியம் (1956), அறமனம் (1957), குமரப்பருவம் (1962), மனமும் அதன் விளக்கமும் (1960), குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (1953) ஆகியன குழந்தைகளுக்கான உளவியல் நூல்கள். கருவில் வளரும் குழந்தை (1962) என்ற நூலின் பின்னிணைப்பில் கலைச்சொற்கள் சிலவற்றைத் தந்திருக்கிறார். தூரனின் அறிவியல் பங்களிப்புகளில் முக்கியமானது கலைச்சொல்லாக்கம். உதாரணமாக அண்டம் (Ovary), நிறக்கோல் (Chromosome), கருத்தடை (Placenta), பூரித்த அண்டம் (Fertilised Egg) என்பனவற்றைக் கூறலாம். அவை பள்ளிப்பாடநூல்களில் இடம்பெற்று புழக்கத்திற்கு வந்தன.

சிறுகதைகள்

பெரியசாமித் தூரன் ‘பிள்ளைவரம்’, ‘உரிமைப் பெண்’, ‘தங்கச் சங்கிலி’, ‘காளிங்கராயன் கொடை’, ‘மாவிளக்கு’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். நவீனச் சிறுகதையின் அமைப்பு, உளநிலை ஆகியவற்றை தூரன் எய்தியிருக்கவில்லை. அவருடைய சிறுகதைகள் எளிமையான நேரடியான கருத்துப்பிரச்சார வடிவங்கள். பெரும்பாலும் சி.ராஜகோபாலாச்சாரியார் எழுதிய கதைகளுடன் ஒப்பிடத்தக்கவை.

பாரதி ஆய்வுகள்

1950-களுக்குப் பின் தமிழகத்தில் உருவான பாரதி ஆய்வுகள் ஒரு தனித்த அறிவியக்கமாகக் கொள்ளத்தக்க அளவு பல படிநிலைகளும், பற்பல காலகட்டங்களும், பல அறிஞர்களின் பங்களிப்பும் கொண்டது. பெரியசாமித் தூரன் பாரதி ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். வெவ்வேறு இதழ்களிலாகச் சிதறிக் கிடந்த பாரதியின் எழுத்துக்களை தேடி தொகுத்து ஒப்பிட்டு பிழைநோக்கி பதிப்பித்தல், காலவரிசைப்படுத்துதல், வெளித்தொடர்புகளையும் பொதுச்சூழலையும் வகுத்தல் ஆகியவற்றில் அவர் முன்னோடிப் பணிகளை ஆற்றினார். ரா.அ. பத்மநாபன், சீனி விசுவநாதன், இளசை மணியன், ஆ. இரா. வேங்கடாசலபதி, ய. மணிகண்டன், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் போன்ற மூன்று தலைமுறையைச் சேர்ந்த பாரதி தொகுப்பாளர்களுக்கு முன்னோடி தூரன்தான்.

பெரியசாமித் தூரன் பாரதி பற்றி 11 நூல்கள் எழுதியுள்ளார். 1930-ல் தூரன் தொகுத்த பாரதியின் படைப்புகள் ’பாரதிதமிழ்' என்ற பெயரில் 1953-ல் வெளி வந்தது. 134 தலைப்புகளில் பாரதி எழுதிய படைப்புகளை முதல்முறையாகத் தூரன் தொகுத்தார். பாரதி பற்றிய விமர்சனங்கள், பாரதிப்பாட்டு, பாரதியும் பாப்பாவும், பாரதியும் சமூகமும் என வந்த நூல்கள் 1979-1982-களில் வானதி பதிப்பகம் வழி வந்தன. 1935-ல் பாரதி பாடல்களுக்குத் தடை நீங்கிய பிறகு பாரதி பிரசுராலயம் ஒரு தொகுப்பை வெளியிட்டது. அத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் ஏற்கெனவே தூரன் தொகுத்தவை. ஆனால் தூரனின் தொகுப்பு வெளிவராததால் அவருடைய இடம் அடையாளம் காணப்படவில்லை என அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.

தமிழிசை இயக்கம்

தூரன் தமிழிசை இயக்கத்தின் முதன்மை முகங்களில் ஒருவர். தூரனுக்குக் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு ஏற்படக் காரணம் அவரது சித்தப்பா அருணாசலக் கவுண்டர் என்பதை தூரன் பதிவுசெய்துள்ளார். அவருடைய உறவினரான இன்னொரு அருணாச்சலக் கவுண்டர் இசையாசிரியராக இருந்தார். தூரன் எழுதிய இசைப்பாடல்கள் இன்றளவும் இசைமேடைகளில் பெரும்புகழ் பெற்று விளங்குகின்றன. தூரன் 1931-ல் போத்தனூரில் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் இசைப்பயிற்சியை தொடங்கினார். என். சிவராம கிருஷ்ண ஐயரிடமும் பின்னர் சென்னையில் பி.கே. கோவிந்த ராவிடமும் இசைப் பயிற்சி பெற்றார்.

இசைமணி மாலை என்னும் தூரனின் முதல் இசைப்பாடல் தொகை அல்லையன்ஸ் வெளியீடாக 1950-ல் வெளிவந்தது.. சென்னை தமிழிசைச் சங்கம் கீர்த்தனை மஞ்சரி என்னும் நூலை 1951-ல் வெளியிட்டது. 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ் இசைப்பாடல்கள் என்ற தொகுப்பை இரு தொகுதிகளாக வெளியிட்டது. தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம், தமிழிசைச் சங்கம் ஆகியவை அளித்த நிதியைப் பயன்படுத்தி பெரியசாமித் தூரன் இசைமணி மஞ்சரி (1970), முருகன் அருள்மணி மாலை (1972), கீர்த்தனை அமுதம் (1974) ஆகிய தொகுப்புகளை வெளியிட்டு இசைப் பாடகர்களுக்கு இலவசமாக வழங்கினார். நவமணி இசைமாலை என்னும் தொகுப்பு 1980-ல் தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தால் வெளியிடப்பட்டது.

இவரது கீர்த்தனைகளுக்கு முசிறி சுப்பிரமணிய அய்யரின் மாணவர் டி.கே. கோவிந்த ராவும் சில கீர்த்தனைகளுக்குத் தண்டபாணி தேசிகரும் ராக தாளங்களை அமைத்துள்ளனர். தூரனின் கீர்த்தனைகளை டைகர் வரதாச்சாரியார், சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்றோர் பாராட்டி மேடைகளில் பாடிப் புகழ்பெறச் செய்தனர். 1951-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் இசைப் பாடல்கள் என்ற தொகுப்பை வெளியிட்டது. 1972-ல் தமிழிசைச் சங்கம் தூரனுக்கு இசைப்பேரறிஞர் பட்டத்தை வழங்கியது.

பெரியசாமித் தூரன் நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன் என்று கொள்ளத்தக்கவர் என்றாலும் இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டவராகவே இருக்கிறார். அவர் குன்றாத முக்கியத்துவத்துடன் இன்றும் நினைவில் வாழும் தளம் இசைமேடைகள்தான். அவருடைய இசைப்பாடல் ஒன்றேனும் பாடப்படாத இசைமேடைகள் குறைவு.

புகழ்பெற்ற இசைப்பாடல்கள்
  • முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
  • அழகு தெய்வமாக வந்து பழனிமலை மீதில் நிற்போன்
  • கொஞ்சிக் கொஞ்சி வா குகனே.
  • புண்ணியம் ஒரு கோடி நான் புரிந்தேனோ
  • கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது..
  • பச்சைக்குழந்தை பருவத்தே வந்து என்னை
  • எங்கே தேடுகின்றாய்?
  • சிறுமலரே உன்னை..
  • என்னென்ன விளையாட்டம்மா
  • எங்கு நான் செல்வேனய்யா?
  • தாயே திரிபுரசுந்தரி
  • முரளிதரா கோபாலா
  • நான் ஒரு சிறு வீணை
  • திருவடி தொழுகின்றேன்
  • அப்பா உன்னை மறவேனே

கலைக்களஞ்சியம்

கலைக்களஞ்சியம்
பெரியசாமித் தூரன் -சிற்பி

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில், கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தன்னாட்சி உரிமையுடைய ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் சார்பில் தமிழில் ‘கலைக்களஞ்சியம்’ பல தொகுதிகளாக வெளியிடத் திட்டம் வகுக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணிக்கு தூரன் முதன்மை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தொன்பது ஆண்டுகள் உழைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார். 1948-ல் தொடங்கிய இப்பணி 1968-ல் நிறைவுற்றது.

தொடர்ந்து குழந்தைகள் கலைக் களஞ்சியத்தை 1976-ஆம் ஆண்டு வெளியிட்டார். இது தூரனின் சாதனைப் பணி எனலாம். ஒரு மொழியின் முதல் பேரகராதியும், முதல் கலைக்களஞ்சியமும் என்றவகையில் தூரனின் கலைக்களஞ்சியம் நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் தொடக்கப்புள்ளி.

(பார்க்க தமிழ் கலைக்களஞ்சியம்)

இறுதிக்காலம், மறைவு

தூரன் 1980-ல் வாதநோயால் பாதிக்கப்பட்டார். தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் விளைவாக காங்கிரஸ்காரரான தூரன் கடைசிக்காலத்தில் அரசு மற்றும் பல்கலைக் கழகங்களின் புறக்கணிப்புக்கு உள்ளானார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் உதவி மட்டுமே அவருக்கு இருந்தது.

ஜனவரி 20, 1987-ல் மரணமடைந்தார்.

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள், ஆய்வுகள்

நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் தலைமை ஆளுமைகள் என்று சொல்லத்தக்க மிகச்சிலரில் ஒருவர் பெரியசாமித் தூரன். அரசியல் காரணங்களால் தூரனைப் போன்ற ஒரு மேதை உரிய முறையில் கௌரவிக்கப்படவில்லை. அவருக்கு தகுதியான நினைவுச் சின்னங்களும் அமைக்கப்படவில்லை. அவர் பிறந்த ஈரோட்டிலோ, அவர் வாழ்ந்த கோவையிலோ, தலைநகர் சென்னையிலோ அவருக்கு நினைவுச் சின்னம் என ஏதுமில்லை.

  • தூரனைப் பற்றிய தொகை நூல் ஒன்றை பாரதீய வித்யா பவன், கோவை மையம் வெளியிட்டிருக்கிறது. சிற்பி பாலசுப்ரமணியம் தொகுப்பாசிரியராகவும், பேராசிரியர் இராம இருசுப்பிள்ளை, டாக்டர் ஐ.கெ.சுப்ரமணியம் ஆகியோர் இணையாசிரியர்களாகவும் செயல்பட, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் வந்திருக்கிறது இந்த நூல்.
  • சிற்பி பாலசுப்ரமணியம் ம.ப. பெரியசாமித் தூரன்[2] என்னும் நூலை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காக எழுதினார்
  • தூரன் என்ற களஞ்சியம் ரா.கி.ரங்கராஜன் (கல்கி முன்னுரையுடன்)
  • பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் 2022 முதல் ‘தமிழ் விக்கி- தூரன் விருது’ வழங்குகிறது. இலக்கியம் -பண்பாடு துறைகளில் பங்களிப்பாற்றியவர்களுக்கான விருது இது.

விருதுகள்

  • 1968 இந்திய குடியரசுத் தலைவர் வழங்கிய பத்ம பூஷன் விருது.
  • 1970 தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது.
  • 1972 தமிழ் சங்கம் வழங்கிய, இசைப் பேரறிஞர் விருது.
  • 1978 எம்.ஏ.சி. தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அண்ணாமலை செட்டியார் விருது.

நூல்கள்

பெரியசாமித் தூரனின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இணையநூலகத்தில்[3] அந்நூல்களை இலவசமாக வாசிக்கலாம்.

இசைப்பாடல்கள்
  • தமிழிசைப் பாடல்கள் (15-ஆம் தொகுப்பு)
  • தமிழிசைப் பாடல்கள் (7-ஆம் தொகுதி)
  • இசைமணி மஞ்சரி
  • முருகன் அருள்மணி மாலை
  • கீர்த்தனை அமுதம்
  • நவமணி இசைமாலை
மரபுக் கவிதைகள்
  • மின்னல் பூ
  • இளந்தமிழா
  • பட்டிப் பறவைகள்
  • தூரன் கவிதைகள்
  • நிலாப் பிஞ்சு
  • காற்றில் வந்த கவிதை
வசனகவிதைகள்
  • இருளும் ஒளியும்
  • அறிவாய் நீ
  • மேலே பற
  • மானிடா எழுக
  • யாரது?
  • வாழ்க்கைப் பயணம்
  • சந்திப்பு
  • நமது வழி
சிறார் இலக்கியம்
  • நல்ல நல்ல பாட்டு
  • சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
  • மழலை அமுதம்
  • நிலாப்பாட்டி
  • பறக்கும் மனிதன்
  • ஆனையும் பூனையும்
  • கடக்கிட்டி முடக்கிட்டி
  • மஞ்சள் முட்டை
  • சூரப்புலி
  • கொல்லிமலைக் குள்ளன்
  • ஓலைக்கிளி
  • தரங்கம்பாடித் தங்கப் புதையல்
  • நாட்டிய ராணி
  • மாயக்கள்ளன்
  • தம்பியின் திறமை
கட்டுரைகள்
  • கடல் கடந்த நட்பு
  • தூரன் எழுத்தோவியங்கள்
  • காலச் சக்கரம் (இதழியல்)
சிறுகதை
  • பிள்ளைவரம்
  • மா விளக்கு
  • உரிமைப் பெண்
  • காளிங்கராயன் கொடை
  • தங்கச் சங்கிலி
அறிவியல் நூல்கள்
  • பாரம்பரியம் (1956)
  • அறமனம் (1957)
  • குமரப்பருவம் (1962)
  • மனமும் அதன் விளக்கமும் (1960)
  • குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (1953)
  • பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1958)
பாரதி ஆய்வுகள்
  • பாரதியும் பாரத தேசமும்
  • பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
  • பாரதியும் பாப்பாவும்
  • பாரதித் தமிழ்
  • பாரதியும் கடவுளும்
  • பாரதியும் சமூகமும்
  • பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
  • பாரதியும் தமிழகமும்
  • பாரதியும் உலகமும்
  • பாரதியும் பாட்டும்
மொழிபெயர்ப்பு
  • இரவீந்திரர் குழந்தை இலக்கியம் (1903)
  • பறவைகளைப் பார் (1970)
  • கானகத்தின் குரல் (The Call of the wild) (1958)
  • தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
நாடகம்
  • அழகு மயக்கம் (1955)
  • சூழ்ச்சி (1955)
  • பொன்னாச்சியின் தியாகம் (1955)
  • ஆதி அத்தி (1958)
  • காதலும் கடமையும் (1957)
  • மனக்குகை (1960)
  • இளந்துறவி (1961)
பதிப்பித்த நூல்கள்
  • காளமேகப் புலவரின் சித்திரமடல்
  • வடிவேல் பிள்ளையின் மோகினி விலாச நாட்டிய நாடகம்
  • அவிநாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம்
  • சாமிநாதக் கவிஞரின் கொன்றைவேந்தன் வெண்பா

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page