under review

பி.எஸ். ராமையா

From Tamil Wiki
Revision as of 10:12, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பி. எஸ். இராமையா (1905 - 1983) (நன்றி: அழியாச்சுடர்கள்)
பி.எஸ்.ராமையா
பஞ்சாட்சரம்

பி. எஸ். ராமையா (மார்ச் 24, 1905 - மே 18, 1983) சிறுகதை எழுத்தாளர், மணிக்கொடி இதழை நடத்திய ஆசிரியர், திரைப்பட எழுத்தாளர். தமிழில் சிறுகதை மலர்ச்சிக்கு காரணமான முன்னோடி.

பிறப்பு, கல்வி

பி. எஸ். ராமையா என்று அழைக்கப்படும் வத்தலகுண்டு ராமையா தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் சுப்பிரமணிய ஐயர்,மீனாட்சியம்மாள் இணையரின் இளைய மகனாக மார்ச் 24, 1905-ல் பிறந்தார். வறுமைச் சூழலால் பள்ளியில் நான்காவது படிவம் (ஒன்பதாம் வகுப்பு) வரை மட்டுமே படித்தார்.

அரசியல்

பள்ளிப்படிப்பை நிறுத்திய பின் ராமையா பத்தாண்டுகளாக துணிக்கடை விற்பனையாளர், உணவு விடுதிப் பணியாளர், கதர் விற்பனைப் பிரதிநிதி என பல வேலைகள் செய்தார். சங்கு சுப்ரமணியம் நடத்திவந்த சுதந்திரச் சங்கு இதழில் வெளியான கட்டுரைகள் மூலமாக சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் கொண்டு 1930 வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். ஆறுமாதம் திருச்சி சிறையில் இருந்தவருக்கு ஏ.என். சிவராமன், வ.ராமசாமி ஐயங்கார், டி.வி. சுப்பிரமணியம் ஆகியோரின் நட்பு கிடைத்தது. சிறையில் ஹிந்தி கற்றுக்கொண்டார்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் காந்தியின் தொண்டர் படை முகாமில் பயிற்றுநராக பணியாற்றினார். கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்றும் சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்றும் இயக்கப்பணி செய்தார். தூத்துக்குடி, இராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களில் மகாத்மாவின் தொண்டர் படை முகாம்கள் அமைத்தார். 1932 முதல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட ராமையா இந்திய சுதந்திரத்திற்குப் பின் இலக்கியத்தில் மட்டும் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

சங்கு சுப்ரமணியத்தின் தூண்டுதலால் ராமையா 18-வது வயதில் தனது முதல் கதையை 1933-ல் எழுதினார். "மலரும் மணமும்" என்ற அந்தக்கதை ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப்பரிசாக பத்து ரூபாய் பெற்றது. 1933ல் ஆனந்த விகடன் நடத்திய இந்தச் சிறுகதைப்போட்டியே தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைப்போட்டி. இதில் பி.எஸ்.ராமையாவின் கதை ஆறுதல்பரிசு மட்டுமே பெற்றது. றாலி [எம்.ஜெ.ராமலிங்கம்] எழுதிய ஊமைச்சிக்காதல் என்ற சிறுகதைக்குத்தான் முதல்பரிசு கிடைத்தது. இதைச் சுட்டிக்காட்டும் சி.சு.செல்லப்பா றாலியின் கதை மகிழ்வூட்டும் நோக்கம் மட்டுமே கொண்டது என்றும்,ராமையாவின் கதை இலக்கிய முயற்சி என்றும் குறிப்பிட்டு; அந்நிகழ்வில் இருந்துதான் தமிழிலக்கியத்தில் வணிக எழுத்து- இலக்கியம் என்னும் பிரிவினை உருவானது என்று கூறுகிறார். வைவஸ்வதன், ஸ்ரீமதி சௌபாக்கியம் ஆகியவை ராமையாவின் புனைபெயர்கள்.

சிறுகதைகள்

பி.எஸ்.ராமையா தமிழில் சிறுகதை இலக்கியம் உருவான தொடக்ககாலத்தில் எழுதிய முன்னோடியாகக் கருதப்படுகிறார்.கல்கி, ஏ. என். சிவராமன், வ.ரா. ஆகியோரின் ஊக்குவிப்பால் தொடந்து எழுதினார். ஆனந்த விகடன் (வாக்குரிமை, கூப்பாடிட்டான் கோவில்), சுதேசமித்திரன், காந்தி (கடைசித் தலைமுறை, மாஜிக்கணவர்), கலைமகள் (நட்சத்திரக் குழந்தைகள்) ஆகிய இதழ்களில் ராமையாவின் சிறுகதைகள் வெளிவந்தன.

304- சிறுகதைகளை எழுதியுள்ளார் என சி.சி.செல்லப்பா பட்டியலிட்டிருக்கிறார். அவற்றில் நட்சத்திரக் குழந்தைகள் அவருடைய மிகச்சிறந்த சிறுகதையாகக் கருதப்படுகிறது. விமர்சகரான சி.சு. செல்லப்பா அவரை தமிழ்ச்சிறுகதையின் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதுகிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

துப்பறியும் தொடர்

பி.எஸ்.ராமையா குங்குமப்பொட்டு குமாரசாமி என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கி அவரை மையமாக்கி பல கதைகள் எழுதியிருக்கிறார். தமிழில் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட துப்பறியும் கதாபாத்திரங்களில் ஒன்று அது.

நாவல்கள்

ராமையா 7 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் பிரேமஹாரம் என்னும் நாவல் மட்டுமே வாசகர்களால் கவனிக்கப்பட்டது. நந்தாவிளக்கு நாவலும் சில விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடகங்கள்

பி.எஸ்.ராமையா 7 நாடகங்கள் 5 வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். 1957ல் அவர் எழுதிய அவர் எழுதிய முதல் நாடகம் பிரசிடெண்ட் பஞ்சாட்சரம். போலீஸ்காரன் மகள், பிரசிடென்ட் பஞ்சாட்சரம் ஆகிய நாடகங்கள் திரைப்படமாக வெளிவந்தன.

திரைப்படம்

ராமையா திரைப்படங்களில் கதைவசனம் எழுதுபவராக பணியாற்றினார். 1940ல் பூலோக ரம்பை என்னும் படைப்பு அவருடைய முதல் திரைப்படம்.ராமானுஜர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ராமானுஜர் திரைப்படத்தில் ந. பிச்சமூர்த்தி நடித்தார் என எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடுகிறார். 1943-ல் குபேர குசேலா என்ற திரைப்படத்தை ஆர். எஸ். மணியுடன் இணைந்து தயாரித்தார்.

இதழியல்

பி.எஸ்.ராமையா மூன்று மாதங்கள் ’ஜயபாரதி’ இதழில் இருபது ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மணிக்கொடி இதழுக்கு விளம்பர சேகரிப்பாளராக வேலை செய்தார். மணிக்கொடியில் மொழிபெயர்ப்புக் கதைகளையும், பல சிறுகதைகளையும் எழுதினார்.

ராமையா மார்ச் 1935 முதல் ஜனவரி 27, 1938 வரை மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்தார். சமூக, அரசியல் இதழாக இருந்த மணிகொடியை சிறுகதைகளுக்கென்று வெளியாகும் மாதமிருமுறை இதழாக மாற்றினார். மணிக்கொடி எழுத்தாளர்கள் என அறியப்படும் அணி ராமையாவின் முன்னெடுப்பில் உருவாகியது. அது தமிழ்ச்சிறுகதையில் மறுமலர்ச்சியை உருவாக்கியது. புதுமைப்பித்தன் எழுதிய புகழ்பெற்ற கதைகள் மணிக்கொண்டியில் வெளிவந்தன. ராமையா பிறருடைய சிறுகதைகளை செம்மையாக்குவதில் திறன்மிக்கவர் என்றும், மணிக்கொடி கதைகளின் மொழி, வடிவம் ஆகியவற்றை அவர் உருவாக்கினார் என்றும் எம்.வி. வெங்கட்ராம் குறிப்பிடுகிறார். 'மெளனி'க்கு அந்த புனைபெயரை சூட்டி எழுத வைத்தவர் பி.எஸ்.ராமையா.

மணிகொடி காலம் (1933-1939) என்ற பெயரில் தன் மணிக்கொடி அனுபவங்களை எழுதியிருக்கிறார். தீபம் இதழில் தொடராக வெளிவந்தது இந்நூல

விருது

பி.எஸ். ராமையா மணிக்கொடி கால அனுபவங்கள் பற்றி எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

ராமையா பற்றிய நூல்கள்

ஆய்வு

சி.சு.செல்லப்பா 'ராமையாவின் சிறுகதைப்பாணி' என்ற நூலில் ராமையாவின் சிறுகதைகளை விரிவாக ஆராய்ந்துள்ளார்

வாழ்க்கை வரலாறுகள்

பி.எஸ்.ராமையா: மு.பழனி இராகுலதாசன்

விவாதங்கள்

க.நா.சுப்ரமணியம் பி.எஸ்.ராமையாவுக்குச் சிறுகதை வடிவம் கைவரவில்லை என்றும் அவர் எழுதிய எந்தக் கதையும் சிறுகதை என்று சொல்லத்தக்கது அல்ல என்றும் விமர்சித்தார். அதற்கு பி.எஸ்.ராமையா எழுத்து இதழுக்கு (ஜூன், 1965) வழங்கிய பேட்டியில் " சிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. கதை எழுதும்போது வாசகனைப் பற்றிய பிரக்ஞை கூட இருக்காது. எழுத்தாளன் தன் வாழ்க்கை அனுபவத்தில் தனக்கான தளத்தைத் தேர்ந்தெடுக்கிறான்" என்று பதிலளித்தார்

க.நா.சுவின் கருத்தை நிராகரித்து சி.சு.செல்லப்பா மௌனி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா ஆகியோரை முக்கிய சிறுகதையாசிரியர்களாக முன்னிறுத்துகிறார்.

மறைவு

பி. எஸ். ராமையா, தொண்டையில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மே 18, 1983-ல் தனது 78-வது வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

பி.எஸ்.ராமையா முதன்மையாக மணிக்கொடி சிறுகதை இதழின் ஆசிரியர் என்ற வகையிலும், தமிழின் முன்னோடிச் சிறுகதையாசிரியர்களின் படைப்புகளைச் செம்மைசெய்தவர் என்ற வகையிலும் முக்கியமான இதழாளராகக் கருதப்படுகிறார். அவ்வகையில் சிறுகதை மறுமலர்ச்சியை உருவாக்கியவர் என்று மதிக்கப்படுகிறார்.

தமிழில் சிறுகதை வடிவம் உருவாகி வந்த காலகட்டத்தில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர் பி.எஸ்.ராமையா. இலக்கியநோக்குடனும், வாசிப்புச்சுவைக்காகவும் நிறைய எழுதியவர். அவற்றில் இலக்கியத்தரமான படைப்புகள் உண்டு. சிறுகதைக்கான வடிவ அமைவு கைகூடாதவை ராமையாவின் சிறுகதைகள் என்றாலும் சுருக்கமான, இயல்பான கதைசொல்லலும் யதார்த்தவாத அணுகுமுறையும் அவற்றை கலையம்சம் கொண்டவையாக ஆக்குகின்றன. தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவராகவும் அவரை நிலைநிறுத்துகின்றன.

முதல் சிறுகதைத்தொகுப்பு

நூல் பட்டியல்

சிறுகதைத்தொகுப்புகள்
  • மலரும் மணமும் - அல்லயன்ஸ் பதிப்பகம்
  • ஞானோதயம்
  • பாக்யத்தின் பாக்கியம்
  • புதுமைக்கோவில்
  • பூவும் பொன்னும்
நாவல்கள்
  • பிரேம ஹாரம்
  • நந்தா விளக்கு
  • தினை விதைத்தவன்
  • சந்தைப் பேட்டை
  • கைலாச ஐயரின் கெடுமதி
  • விதியின் விளையாட்டு
  • கோமளா
தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கிய வரலாறு
  • மணிக்கொடி காலம் - மெய்யப்பன் பதிப்பகம்
நாடகங்கள்
  • தேரோட்டி மகன்
  • மல்லியம் மங்களம்
  • பூ விலங்கு
  • பாஞ்சாலி சபதம்
  • களப்பலி
  • போலீஸ்காரன் மகள்
  • பிரசிடென்ட் பஞ்சாட்சரம் (1957) நிகோலாய் கோகோலின் "இன்ஸ்பெக்டர் ஜெனரல்" நாடகத்தை தழுவி எழுதப்பட்டது.
வானொலி நாடகங்கள் தொகுப்பு
  • பதச்சோறு
  • அரவான்
  • சாகத் துணிந்தவன்
  • வேதவதி
  • தங்கச் சங்கிலி
மற்ற நூல்கள்
  • 1943 - சினிமா - திரைப்படம் பற்றிய நூல்

பங்களித்த திரைப்படங்கள்

  • 1940 - பூலோக ரம்பை - வசனம்
  • 1940 - மணி மேகலை - வசனம்
  • 1941 - மதனகாமராஜன் - கதை, வசனம்
  • 1943 - குபேர குசேலா வசனம் (கே எஸ் மணியுடன் சேர்ந்து இயக்கம்)
  • 1945 - சாலிவாஹனன் - கதை
  • 1945 - பரஞ்சோதி - கதை, வசனம்
  • 1945 - பக்த நாரதர் - வசனம்
  • 1946 - அர்த்த நாரி - கதை, வசனம்
  • 1946 - விசித்திர வனிதா - திரைக்கதை, வசனம்
  • 1947 - தன அமராவதி - கதை, வசனம், இயக்கம்
  • 1947 - மகாத்மா உதங்கர் - கதை, வசனம்
  • 1948 - தேவதாசி - கதை, வசனம்
  • 1949 - ரத்னகுமார் - கதை
  • 1952 - மாய ரம்பை - வசனம்
  • 1959 - பிரசிடென்ட் பஞ்சாட்சரம் - கதை, வசனம்
  • 1960 - ராஜ மகுடம் - வசனம்
  • 1962 - போலீஸ்காரன் மகள் - கதை
  • 1963 - பணத்தோட்டம் - கதை
  • 1963 - மல்லியம் மங்களம் - கதை

உசாத்துணை


✅Finalised Page