under review

தோப்பில் முகமது மீரான்

From Tamil Wiki
Revision as of 23:55, 18 August 2023 by Jeyamohan (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நன்றி: jeyamohan.in
தோப்பில் மனைவியுடன் (நன்றி விகடன்)
தோப்பில்
தோப்பில், தேங்காய்ப்பட்டினத்தில்
தோப்பில்
தோப்பில் மனைவியுடன்

தோப்பில் முகமது மீரான் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019) தமிழ் எழுத்தாளர். இஸ்லாமிய வாழ்க்கையைச் சித்தரிக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவராகக் கணிக்கப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர மண் சார்ந்த இஸ்லாமியக் கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும், வட்டார வழக்கையும் தன் படைப்புகளில் எழுதினார்.

பிறப்பு, கல்வி

குமரி மாவட்டத்தின் கடலோரக் கிராமமான தேங்காய்ப்பட்டிணத்தில் முஹம்மது அப்துல் காதர்-ஃபாத்திமா இணையருக்கு செப்டம்பர் 26, 1944 அன்று பிறந்தார். தேங்காய்ப்பட்டணம் அம்சி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு நாகர்கோயில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முகம்மது மீரான் கல்வி பயின்றது மலையாள மொழியில்.

தனி வாழ்க்கை

தோப்பில் முகமது மீரானின் மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவருக்கு ஷமீம் அகமது, மிர்ஷாத் அகமது என்று இரு மகன்கள்.

மலையாளத்தில் எழுதியபோது மீரான் கேரளவழக்கப்படி தன்னுடைய தாயின் குடும்பப்பெயரான தோப்பில் என்பதைத் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார். ஆனால், தேங்காய்ப்பட்டிணத்தில் அவரது வீட்டு மதிலுக்குப் பின்பக்கம் தோப்பு என்னும் பெயரால் ஒரு சுடுகாடு இருந்தது என்றும் ஒடுக்கப்பட்டவர்களை எழுதுபவர் என்பதால் தன் பெயரைத் தோப்பில் முகமது மீரான் என்று வைத்துக் கொண்டதாகவும் மீரான் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

தோப்பில் முகமது மீரான் நெல்லை மாவட்டத்தில் விளையும் வத்தல் மிளகை விவசாயிகளிடமிருந்து வாங்கி குமரிமாவட்டம், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் பகுதிகளிலுள்ள மளிகை வணிகர்களுக்கு மொத்தமாக விற்கும் வணிகம் செய்துவந்தார். 2007 ல் பக்கவாதத் தாக்குதலுக்குப் பின் வணிகம் செய்வதை நிறுத்திக்கொண்டார். திருநெல்வேலியில் வாழ்ந்தார். நெல்லையில் தி.க.சிவசங்கரன் போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார்.

இலக்கியப் பணி

jeyamohan.in
நாவல்கள்

முகம்மது மீரான் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் எழுத்துக்களால் மிகவும் கவரப்பட்டார். அவரது எழுத்துப் பணி மலையாளத்தில் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் வசித்த எழுத்தாளர் ஆ. மாதவனுடன் ஏற்பட்ட நட்பால் தமிழ் நூல்களைப் படிக்கத் தொடங்கி, விரைவில் தமிழில் எழுதவும் தொடங்கினார்.

மீரான் முதன் முதலில் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை யில் இஸ்லாமியச் சமூகத்தின் பழமையான அதிகாரக் கட்டமைப்பைக் காட்டி,பொருளியல் அதிகாரமும் மதமும் ஒன்றுக்கொன்று கருவியாகி எளிய மக்களைச் சுரண்டுவதைச் சித்தரித்தார். அவரது தந்தை எம்.ஓ. முகமது அப்துல் காதர், கடலோர கிராமங்களைப் பற்றிச் சொன்ன கதைகளே ஒரு கடலோர கிராமத்தின் கதையாக விரிந்ததாக ஓர் நேர்காணலில் குறிப்பிட்டார். இந்நாவலை எம்.சிவசுப்ரமணியம் மொழிச்செம்மை செய்து உதவினார்.

1977-ல் முஸ்லீம் முரசு பத்திரிகையில் வெளிவந்த இந்த நாவல் இலக்கியச்சூழலில் கவனிக்கப்படவில்லை. 1988-ம் ஆண்டு தானே அதைப் பதிப்பித்தார். ஒரு கடலோர கிராமத்தின் கதை இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்றது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி அதைத் தமிழின் ஒரு முக்கியமான நாவலாகக் கருதினார்.

குமரி மாவட்டத்தில், இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களைப் பிணைத்து கடலை நம்பி வாழ்ந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் வாழ்வை அந்த காலகட்டத்தினூடாகச் சித்தரித்த நாவல் துறைமுகம்.

ஒரு காலத்தில் கேரள மன்னர் ஐந்து முஸ்லீம் நெசவாளர்களை ஒரு கிராமத்தில் குடிவைக்கிறார். அவர்களால் உருவாகிய அஞ்சுவண்ணம் தெருவில் வாழும் மாறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை அதன் வரலாற்றுடன். தொன்மத்துடன் அழியா நினைவுகளுடன் பதிவு செய்திருக்கிறார் முகமது மீரான். மண்ணின் மரபான வாழ்க்கை நோக்குக்கும் புதிதாய் முளைத்துவரும், கல்வி பெற்ற உலகளாவிய நோக்குக்குமான மோதலே அஞ்சுவண்ணம் தெரு நாவல்..

1970-களில் திருவனந்தபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான பூவாற்றில் மீனவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடந்த மோதலை அடிப்படையாகக் கொண்டது கூனன் தோப்பு.சாகித்ய அகாடமி விருது பெற்ற சாய்வு நாற்காலியும் வீழ்ச்சியின் கதையே.

சிறுகதைகள்

மீரானின் சிறுகதைகளின் பேசு பொருள்கள் மனித சமூகம் முழுமைக்குமானவை. பழமை, பாரம்பரியம், மரபு இவற்றைச் சிதைத்து மாறிவரும் நவீன உலகத்தின் அகப்புற முரண்களை அவரது சிறுகதைகள் பேசுகின்றன.

மொழியாக்கங்கள்

முகமது மீரான் மலையாளத்திலிருந்து சில முக்கியமான ஆக்கங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாறு அவற்றுள் ஒன்று.

இறப்பு

தோப்பில் முகமது மீரான் சிறிய உடல் நலக் குறைவுக்குப்பின் மே 10, 2019 அன்று காலமானார்.

விருதுகள், சிறப்புகள்

  • சாகித்திய அகாதெமி விருது – சாய்வு நாற்காலி (1997)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழக அரசு விருது
  • அமுதன் அடிகள் இலக்கிய விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
  • எஸ்.ஆர்.எம், தமிழ்ப்பேராய விருது 2012-அஞ்சுவண்ணம் தெரு

இலக்கிய இடம்/மதிப்பீடு

மலையாளம், அரபி, நாகர்கோவில் வட்டார வழக்கு, இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேச்சு வழக்கு மற்றும் இஸ்லாமிய சமயத்தின் தொன்மக் குறியீடுகள் ஆகியவற்றின் கலவையான நடையில் முகமது மீரான் தமது புனைகதைகளை எழுதினார். பஷீரிலிருந்து பெற்றுக்கொண்ட உதிரிச்சொல் உரையாடல்களும் கற்பனாவாதச் சாயல்கொண்ட சூழல் விவரணைகளும் கொண்டவை அவருடைய படைப்புகள்

மீரான் அடித்தள இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை எழுதியவர். மதநம்பிக்கையின் பெயரிலான மோசடிகளை கண்டித்தார். மத அடிப்படைவாதத்துக்கும் எதிரானவர். எளியமக்களின்பால் பரிவு கொண்டவை அவருடைய நாவல்கள்.

நவீன இலக்கியத்தில் இஸ்லாமிய வாழ்க்கையை விரிவாக அறிமுகம் செய்தவர் மீரான். எழுத்தாளர்கள் சல்மா, கீரனூர் ஜாஹீர் ராஜா போன்றவர்களுக்கு அவரே முன்னோடியாவார் என மனுஷ்யபுத்திரன் குறிப்பிடுகிறார்.

ஜெயமோகன் "ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தர்காவில் ஊரை நோக்கி புன்னகைத்தபடி வாழும் சூஃபி பக்கிரி பஷீர்.அங்கே ஆர்மோனியத்துடன் வந்தமர்ந்த பாடகர் தோப்பில்" என்று அவரது நோக்கைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

புனைவுகள்
  • ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
  • துறைமுகம் (1991)
  • கூனன் தோப்பு 1993)
  • சாய்வு நாற்காலி (1997)
  • அஞ்சுவண்ணம் தெரு (2010)
சிறுகதைத் தொகுப்புகள்
  • அன்புக்கு முதுமை இல்லை
  • தங்கராசு
  • அனந்தசயனம் காலனி
  • ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
  • தோப்பில் முகமது மீரான் கதைகள்
மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்புகள்
  • தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது)
  • வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)
  • ஹுஸ்னுல் ஜமால்- (மொயின் குட்டி வைத்தியர்)
  • த்ரிகோட்டூர் பெரும-(யு.ஏ.காதர்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page