under review

சாய்வு நாற்காலி(நாவல்)

From Tamil Wiki
jeyamohan.in
jeyamohan.in

சாய்வு நாற்காலி எழுத்தாளர் ( 1995) தோப்பில் முகமது மீரான் எழுதிய நாவல். சாகித்ய அகாதெமி விருது பெற்றது. தென் தமிழக அரபிக் கடலோர கிராமமொன்றில் இஸ்லாமிய வீட்டில், நிலவுடைமை சமூகத்தின் கடைசி ஜமீன்தாரான, செல்வமெல்லாம் தேய்ந்து போன பின்பும் அதிகார மமதையிலும் இந்திரிய சுகங்களிலும் மூழ்கும் முஸ்தபாக்கண்ணுவின், அவரது குடும்பத்தின் விழ்ச்சியைச் சொல்வதன் ஊடே இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய திருவிதாங்கூர் அரசை, அக்கால சமூகத்தைச் சித்தரிக்கும் நாவல்.

எழுத்து,பதிப்பு

தோப்பில் முகமது மீரான் எழுதியது இந்நாவல் .1995-ல் எழுதி முடிக்கப்பட்ட சாய்வு நாற்காலி டிசம்பர், 1995-ல் அவரால் தன் ஜமீலா பதிப்பக வெளியீடாகப் திப்பிக்கப்பட்டது. காலச்சுவடு முதல் செம்பதிப்பை நவம்பர், 2006 -ல் வெளியிட்டது.

கதைச் சுருக்கம்

தென்பத்தன் என்னும் கடலோர கிராமத்தின் இரண்டரை நூற்றாண்டுக்கால கதைக்கு அதன் காரணவர்கள் சாய்ந்து அமரும் சாய்வு நாற்காலி மௌன சாட்சியாய் நிற்கிறது.நாயகன் முஸ்தபாக்கண்ணுவின் முப்பாட்டன் பவுரீன் பிள்ளை அரசர் மார்த்தாண்ட வர்மாவின் நன்மதிப்பாலும், அணுக்கத்தாலும் மாளிகையும்,நிலபுலன்களும். தருணங்களில் மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களும் கிடைக்கப் பெற்றவர். பவுரீன் பிள்ளைக்குப் பின் அவர் தலைமுறை அபுல்ஹசன், காசிம் பிள்ளை,நூர்முகம்மது, முஸ்தஃபாக்கண்ணு என்று நீள்கிறது. கூடவே பெண்களை அடித்துத் துவைக்கும் அதபுப் பிரம்பும்,

காசிம் பிள்ளையின் நான்காவது மனைவி சவுதாயியின் மகன் நூர் முகம்மது. முஸ்தபாக்கண்ணுவும் தங்கை ஆசியாவும் நூர் முகம்மதுவின் மூன்றாவது மனைவி பெற்ற மக்கள். பழைய வீட்டிலிருந்த மரம், உத்தரங்களைப் பயன்படுத்தி நூர்முகம்மது சவுதா மன்சில் என்ற உயரமான மாளிகையைக் கட்டுகிறார். அவரது காலம் வரை செல்வம் தங்கி இருக்கிறது. .திருமணமான ஆசியா பொன்னரைஞாணத்துக்கான தன் கோரிக்கை நிறைவேறாமல் கணவனுடன் சவுதா மன்சிலில் தங்கி விடுகிறாள்.

கடைசி விழுதான முஸ்தபாகக்கண்ணு பெண் சுகம், வெட்டி கௌரவம், ருசி கொண்டு அடங்காத நாக்கு, எளியவர்களையும் பெண்களையும் காலடியில் நசுக்கும் வன்முறை இவற்றின் மொத்த உருவம். ஒரே மகன் சகிக்காமல் வீட்டை விட்டுச் சென்று விடுகிறான். சக்கோலி தின்பதற்காகவும் குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் வேலைப்பாடு மிக்க புகழ்பெற்ற சப்பரமஞ்சக் கட்டிலும், ஜன்னல், கதவுகளும் ,காரணவரின் அடையாளமான வாளும், தாம்பாளமும். தரவாட்டின் கௌரவமான சந்தன அலமாரியும் விலை போகின்றன..

மனைவி மரணப்படுக்கையில் இருக்க, ஐந்து தலைமுறைகளுக்குச் சாட்சியாக இருந்த சாய்வு நாற்காலியையும் விற்று, தன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ரைஹானத்தை பெண் கேட்டுச் செல்பவரின் மேல் காறி உமிழ்ந்த அவளது தாய் துப்பிய எச்சில் தெறிக்கிறது

கதை மாந்தர்

  • பவுரின் பிள்ளை- குடும்பத்தின் முதல் காரணவர், பெரும் வீரர். மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவர்
  • அபுல் ஹசன் - பவுரீன் பிள்ளையின் மகன்
  • காசிம் பிள்ளை - அபுல் ஹசனின் மகன்
  • சவுதாயி - காசிம் பிள்ளையின் நான்காவது மனைவி, நூர் முகம்மது வின் தாய்
  • நூர் முகம்மது - காசிம் பிள்ளையின் மகன்
  • ஆமீனா - நூர் முகம்மதுவின் மூன்றாவது மனைவி, முஸ்தபாக்கண்ணுவின் தாய்
  • முஸ்தபாக்கண்ணு - நூர் முகம்மதுவின் மகன்
  • ஆசியா - முஸ்தபாக்கண்ணுவின் தங்கை
  • செய்தகம்மது - ஆசியாவின் கணவன்
  • நபீசா - ஆசியாவின் மகள்
  • மரியம் பீவி - முஸ்தபாக்கண்ணுவின் மனைவி
  • சாகுல் ஹமீது - முஸ்தபாக்கண்ணுவின் மகன்
  • ரைஹானத் - பணிப்பெண்
  • பத்மநாபதாசன் மார்த்தாண்ட வர்மா - திருவிதாங்கூர் அரசர்
  • எட்டு வீட்டுப் பிள்ளைமார் - மருமக்கள்தாயத்தை எதித்து கலகம் செய்தவர்கள், மன்னரின் நேர் வாரிசுகள்

இலக்கிய இடம், மதிப்பீடு

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தின் கன்யாகுமரி மாவட்டத்தின் கடலோர மண் சார்ந்த இஸ்லாமியக் கலாசாரத்தையும், அன்றாட வாழ்க்கையையும், வட்டார வழக்கையும் காட்டும் நாவல். நிலவுடமைச் சமுதாயத்தின் வீழ்ச்சியை அதன் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணுவின் வாயிலாகச் சொல்லும் படைப்பு. மார்த்தாண்டவர்மா ராஜா காலத்தில் ஆரம்பித்து சுதந்திர இந்தியாவில் முடியும் கதை, முஸ்தபாக்கண்ணுவின் நனவோடை வழியாக முன் பின்னாகப் பாயும் நினைவுகளின் மீட்டலாகப் பரவுகிறது.

நாவலில் கதை நடந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலை, சூழ்ச்சிகள்,அரசாட்சி, சமூகம், கலாசாரம் பற்றிய சித்திரம் துலங்கி வருகிறது. மருமக்கள் தாயத்தை எதிர்த்து நடந்த கலவரங்கள், நாடாளும் மார்த்தாண்டவர்மா மகாராஜா, மக்கள் தாயத்துக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார், ராஜாவுக்கு துணை நின்றதால் பெரும் செல்வந்தரானவர்கள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்களை உட்படத் தின்று முடிக்கும் குடும்பத் தலைவர், பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை, ஒரு காலகட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கிறது சாய்வு நாற்காலி.

அரபுத் தொன்மங்கள்,ஜின்கள், கடலில் பாய் விரித்துத் தொழுத மடாயி பாவா என்று நாவல் முழுதும் பின்னிப் பரவி வரும் மாய யதார்த்தக் கூறுகள் இந்த நாவலுக்கு ஒரு கனவுத் தன்மையைக் கொடுக்கின்றன.

உசாத்துணை


✅Finalised Page